Published : 09 Nov 2017 10:32 am

Updated : 09 Nov 2017 10:34 am

 

Published : 09 Nov 2017 10:32 AM
Last Updated : 09 Nov 2017 10:34 AM

கும்பகோணம் கோபால் ராவ் நூலகம்: ஆசானுக்கு மாணவர்கள் செய்த மரியாதை


சிரியர்களுக்கு மாணாக்கர்கள் குரு காணிக்கை செய்வது அந்தக் காலத்தில் ஒரு மரபாகவே இருந்தது. அப்படி, தங்களது ஆசிரியர் ஒருவருக்காக மாணவர்கள் குரு காணிக்கையாக எழுப்பியதுதான் கும்பகோணத்தில் உள்ள கோபால் ராவ் நூலகம்.

கோபால் ராவின் தனிப்புலமை

மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட கோபால் ராவ் குடும்பம் வணிகம் செய்வதற்காக கும்பகோணத்துக்கு வந்தது. இந்தக் குடும்பத்துப் பிள்ளையான டி.கோபால் ராவ் ஆங்கிலத்திலும் சமஸ் கிருதத்திலும் தனிப்புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். இவரது ஆங்கிலத் திறமையை அறிந்து வியந்த ஆங்கிலேயர்கள், தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இவரை ஆசிரியராக நியமனம் செய்தனர். இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கோபால் ராவ், பொறுப்பு முதல்வராக இருந்து ஓய்வுபெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகும் கல்லூரி யுடன் தொடர்பில் இருந்த ராவ், இறுதிவரை மாணவர்கள் மத்தியில் செல்வாக்கான மனிதராக திகழ்ந்தார்.

கோபால் ராவ் மறைந்த பிறகு, அவரிடம் பயின்ற மாணவர்கள் தங்களது ஆசானுக்கு சிறப்புச் செய்ய நினைத்தனர். காலத்துக்கும் அவரது பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவரது பெயரில் நூலகம் ஒன்றைத் தொடங்கினார்கள் அந்த மாண வர்கள். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வாழைத் தோட்டத்தில் 1895-ம் ஆண்டு மே மாதம் கோபால் ராவ் நூலகம் உதயமானது. 122 ஆண்டுகள் கடந்தும் குன்றாத வளர்ச்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நூலகத்தில் இல்லாத நூல்களே அரிது. அந்தளவுக்கு புத்தகங்களைக் குவித்து வைத்து அறிவுக் கண்ணை திறந்து கொண்டிருக்கிறார்கள்.

10 ஆயிரம் சதுர அடியில்..

நம்மிடம் கோபால் ராவ் நூலகத்தின் பெருமைகளை அடுக்கிய அதன் செயலாளர் ஜி.கே.பாலசுப்பிரமணியன், “சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் இந்த நூலகத்தில் 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இதில் சமஸ்கிருத புத்தகங்கள் மட்டுமே ஆறாயிரம் இருக்கும். தற்போது, எங்களது நூலகத்தில் 2 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நூலக உறுப்பினர்கள் மட்டுமில்லாது உறுப்பினர் இல்லாத வர்களும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்குத் தேவையான தரவுகளை இங்கிருந்து திரட்டிச் செல்கின்றனர்.

இங்குள்ள புத்தகங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ‘பார்கோடு’ முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நூலகத்தின் வளர்ச்சிக்கு ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த சி.வி.நரசிம்மன் பெரும் பங்காற்றி இருக்கிறார். அவரைப் போற்றிக் கவுரவிக்கும் விதமாக இந்த நூலகத்தில் சி.வி.நரசிம்மன் ஹால் என்ற அரங்கையும் அமைத்து நிர்வகித்து வருகிறோம்.

சிட்டியூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் என். நாராயணன், இந்த நூலகத்தின் முன்னாள் அறங் காவலர் ஜி.கே.மூப்பனார், ஹஸ்முக்லால் மேத்தா உள்ளிட்டோரும் இந்த நூலக வளர்ச்சிக்காக பெரும் உதவிகளைச் செய்துள்ளனர். வாசிப்பு மட்டுமில்லாது, இசை உள்ளிட்ட பிற கலைகளையும் போற்றி வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை உள்ளிட்டவையும் இங்கு தினமும் கற்றுத் தரப்படுகிறது. தவிர, மாதந்தோறும் இசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் நான்கு நாட்கள் பெரிய அளவிலான இசை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன” என்று சொன்னார்.

வாழும் காலத்தில் கும்பகோணம் பகுதி மாணாக்கர்களுக்கு தலைசிறந்த ஆசானாக இருந்து கோபால் ராவ் பணி செய்தார். அவரது பெயரால் அவரது மாணாக்கர்கள் உருவாக்கிய இந்த நூலகம் அவர் விட்டுச்சென்ற பணியை 122 ஆண்டுகள் கடந்தும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x