Last Updated : 03 Nov, 2017 10:29 AM

 

Published : 03 Nov 2017 10:29 AM
Last Updated : 03 Nov 2017 10:29 AM

ஆட்டை பல்லால் கடித்துத் தூக்கும் ஆக்ரோஷ புலி!- இது மங்காபுரத்து புலியாட்டம்

பு

லி வேஷம் கட்டுனவங்க ஆட்டம் போட்டுப் பார்த்திருப்பீங்க, பல்டி அடிச்சிப் பார்த்திருப்பீங்க. உயிருள்ள ஆட்டை வேட்டையாடிப் பார்த்திருக்கீங்களா?

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கிறது மங்காபுரம். இங்குள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில் திரு விழாக்களுக்குப் போனால் ரெட்டைவால் புலி, ஆட்டை வேட்டையாடுவதை ‘லைவ்’வாகப் பார்க்கலாம்! கையைப் பின்னால் கட்டிக்கொண்டு, 15 கிலோ எடைகொண்ட செம்மறி ஆட்டை, பல்லால் கடித்துத் தூக்கி தலைக்குப் பின்னால் பறக்கவிடுகிறார் புலி வீரர். இந்த சாகசத்தை நிகழ்த்துபவர் புலியாட்டக் கலைஞர் கிடையாது; சிலம்பாட்ட வீரர்!

சிலம்பம் கிராமம்

விருதுநகர் மாவட்டத்திலேயே சிலம்பாட்ட வீரர்கள் அதிகமுள்ள கிராமம் இது. வாத்தியார்களே ஆறு பேர் இருக்கிறார்கள். கம்பு சுற்றத் தெரிந்தவர்கள் ஒரு 300 பேராவது இருப்பார்கள். இவர்களில் யார் சகல வித்தைகளையும் கற்றுத்தேர்ந்தவரோ அவர்தான் அந்த ஆண்டுக்கான புலி. புரட்டாசியில் திருவிழா என்றால் அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே இன்னார்தான் புலி என்று தீர்மானித்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

“எந்தப் பையனைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அவன் அன்று முதல் விரதம். அசைவம் சாப்பிடக்கூடாது. செருப்பு அணியக் கூடாது. வேட்டையாடப் போகும் ஆட்டின் எடை 15 கிலோவுக்கு குறையாமல் இருக்கும். அதை பல்லால் கடித்துத் தூக்குறப்ப காலை உதையும் என்பதால், கூடுலாக 10 கிலோ எடை இருப்பது போலத் தெரியும். எனவே, 30 கிலோ எடையை அநாயசமாக கவ்வி எறியுமளவுக்கு புலிக்கு பயிற்சி கொடுப்போம்.

சாக்குப் பையில் மணல் நிரப்பி..

சாக்குப்பையில், ஈரமணலை நிரப்பி அதைப் பல்லால் கடித்துத் தூக்குவதுதான் பயிற்சி. முதலில் 3 படி மணலில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அளவைக் கூட்டி கடைசியில் பதினோரு படி மணலில் கொண்டு வந்து நிறுத்துவோம். அந்தளவு எடைகொண்ட மணல் மூட்டையைக் கவ்வி தலைக்குமேல் ஏறியுமளவுக்குப் பயிற்சி கொடுத்துருவோம். இருந்தாலும் சிலபேரு கசாப்புக்கடைக்குப் போய், வெட்டப்போகும் ஆட்டைக் கடித்துத் தூக்கி எறிந்து ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள்.

வாத்தியார்கள் குளத்தூரும் கோவிந்தராஜும் பேசிக் கொண்டே சிலம்பத்துக்காக புதிய கல் மூங்கில் குச்சிகளைச் செதுக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பெருமாள் என்ற 21 வயது இளைஞருக்கு புலி வேஷம் போடும் வேலை ஜரூராய் நடக்கிறது. ஜட்டியோடு நிற்கும் பெருமாளுக்கு உடல் முழுக்க மஞ்சள் மற்றும் வெள்ளி நிறப் பெயின்ட்டை அடிக்கிறார்கள். பெயின்ட் உலரும் வரையில், அசையாமல் கையைத் தூக்கிக்கொண்டு நிற்பது சிரமம் என்பதால், ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு சிலையாய் நிற்கிறார் பெருமாள்.

“மதியம் 2 மணிக்கே பெயின்டிங் வேலையை ஆரம்பிச்சிட்டோம். முன்னாடியும் பின்னாடியும் ஃபேன் போட்டு காயவெச்சிட்டு, நான் சாப்பிடப் போயிட்டேன். தம்பி வெறும் வாழைப்பழம் மட்டும் தின் னுட்டு கம்பா நிக்கிறாப்ல. அடுத்தடுத்த கோட்டிங் முடிய சாயந்திரம் 6 மணி ஆகிடும். அப்புறமும் இவன் உட்காரக்கூடாது. ராத்திரி 12 மணிக்கு ஆட்டைத் தூக்கிப்போட்டப் பிறகும் இவன் நின்னுக்கிட்டேதான் இருக்கணும். காலையில மண்ணெண்ணெய்யில குளிச்சிட்டுத்தான், இவனால தூங்கவே முடியும்” என்று சிரித்தார் பெயின்டர் ராஜ்.

ஒருவழியாக மாலை 6 மணிக்கு பள்ளிக்கூட மைதானத்தில் இருந்து சிலம்பாட்ட ஊர்வலம் தொடங்குகிறது. வழியில் தென்படும் கோயில்களில் எல்லாம் புலி விழுந்து கும்பிடுகிறது. மாரியம்மன் காளியம்மன் கோயிலிலும் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு, புலி மைதானத்துக்கு வர, ஆட்டம் களை கட்டுகிறது. சினிமாவில் அடியாட்கள் எல்லாம் சாய்ந்த பிறகுதானே பிரதான வில்லன் களத்துக்கு வருவார். அப்படித்தான் இங்கேயும்! மிஸ்டர் புலியை ஒரு டிராக்டரில் ஏற்றி நிறுத்திவிடுகிறார்கள். அது கூண்டுக்குள் அடைபட்ட புலி போல சுற்றிச் சுற்றி வருகிறது.

ஆட்டை பல்லால் கடித்து..

சிறியவர் முதல் பெரியவர் வரை சிலம்பு, கத்திச் சண்டை, சுருள் வாள் வீச்சு, தீப்பந்த ஆட்டம் என்று தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி முடித்தபிறகு ஏக பில்டப்புடன் களமிறங்குகிறது புலி. ஒரிஜினல் செம்மறி ஆடும் களத்துக்கு கொண்டுவரப்பட, ஆக்ரோஷமாகிறது புலி. களத்தைச் சுற்றிச்சுற்றி வந்து ஆட்டைப் பல்லால் கடித்துப் பந்தாடுகிறது. மொத்தம் 4 முறை தூக்கி எறிந்துவிட்டு, 5-வது முறை ஆட்டைக் கவ்வியபடி அங்குமிங்கும் ஓடுகிறது புலி. அவ்வளவு தான், மொத்தக் கூட்டமும் புலியைச் சூழ்ந்து விடுகிறது. தாய், தந்தையர் முத்தமிட, நண்பர்கள் தலைக்கு மேல் தூக்கிவைத்து ஆட, முறை பெண்கள், யாருக்கும் தெரியாமல் பறக்கும் முத்தம் தர உற்சாகத்துடன் புலி ஓய்வுபெறுகிறது.

அடுத்தாண்டு இன்னொரு இளைஞருக்குத்தான் இந்த வாய்ப்பு. எப்போதோ புலி வேஷம் கட்டிய எக்ஸ் புலி அய்யனார் இப்போதும் கம்பீரமாக கம்பு சுத்துகிறார். அவரிடம் பேசினேன்.

போலீஸ் அனுமதியில்லை

”தம்பி இதென்ன பிரமாதம். நாங்க இளந்தாரிகளா இருந்தப்ப இந்த ஆட்டம் வெறித்தனமா நடக்கும். புலி வேஷக்காரன் ரெட்டை வால் கட்டினால், என்னை எதிர்க்க எவனுமில்லைன்னு அர்த்தம். மாட்டு வண்டி யில் அந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஊர்வலம் போவோம். சில ஊருக்காரங்களுக்கு இது கவுரவ பிரச்சினையா போயிரும். ‘எங்க ஊருக்காரங்கள ஜெயிச்சுட்டு இந்த எல்லையைத் தாண்டட்டும்’னு சொல்வாங்க. அப்படியும் சில நேரங்கள்ல கம்புச் சண்டை நடந்திருக்கு” என்கிறார் அய்யனார்.

தொடர்ந்து பேசிய ஜெயராஜ், “அப்படித்தான் ஒரு முறை வீம்புக்குன்னே, 25 கிலோ எடையுள்ள வெள்ளாட்டுக் கிடாவை நிறுத்தி, ‘இதைத் தூக்கிப் போட்டுட்டுப் போகட்டும் உங்க புலி’ன்னு சொல் லிருக்காங்க. அதையும் எங்க ஊர்க்காரர் ஜெயிச்சதா சொல்வாங்க. தோத்துட்டா, பொட்டைப்புலின்னு சொல்லி கேலி பேசுவாங்க. இதனால, பல பிரச்சினைகள் வருதுன்னு இப்ப அடுத்த ஊர்களுக்கு புலிய ஊர்வலமா அழைச்சுட்டுப் போக போலீஸ் அனுமதிக்கிறதில்லை” என்றார்.

அங்கிருந்து கிளம்புகிற சமயத்தில், “ஜல்லிக்கட்டு தடையின்போது, இந்த விளையாட்டுக்கு எதிர்ப்பு வந்ததா?” என்று கேட்டேன். “இதுவரைக்கு வரலை. தம்பி நீங்க (நிருபர்) வந்திட்டீங்கள்ல, இனிமே வந்தாலும் வரும்” என்று முறைத்தார் ஒரு பெருசு. அதற்கு மேல் அங்கு நிற்காமல் மொத்தமாய் ஒரு கும்பிடைப் போட்டுவிட்டு ஜூட் விட்டேன்.

படங்கள் உதவி: ஆர்.ராஜேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x