Published : 02 Oct 2017 17:57 pm

Updated : 03 Oct 2017 15:01 pm

 

Published : 02 Oct 2017 05:57 PM
Last Updated : 03 Oct 2017 03:01 PM

யானைகளின் வருகை 47: மத்திய ரிசர்வ் படை மையத்தில் அலறும் கிராமங்கள்

47

 

வன மிருகங்களுக்கு உகந்த நள்ளிரவு நேரம். வழக்கத்துக்கு மாறாக மாசி மாதத்திலேயே கோடையின் வாட்டம். மலைப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் அடிவாரப்பகுதியில் தேடி அலைந்தது அந்த யானைக்கூட்டம். அந்த கூட்டத்தில் இருந்த 10 வயது மதிக்கத்தக்க யானை துதிக்கையை தூக்கி, தூக்கி ஆட்டிப்பார்த்தது.


மோப்ப சக்தியில் தண்ணீர் இருக்கும் இடம் தனக்கு அருகாமையில் இருந்ததை உணர்ந்த அதற்கு, அது இருக்குமிடம் ஒரு 40 அடி கிணறு என்பதை அறிந்திருக்கவில்லை. தட்டுத்தடுமாறி விழுந்த வேகத்தில் ஓங்கிய குரலெடுத்து அலறியது. கூட்டத்து யானைகளுக்கு சொல்லவும் வேண்டுமா? அவையும் அந்த கிணற்றை சுற்றி, சுற்றி வந்து தம் பிளிறுகையை பலப்படுத்தின.

பிறகென்ன? வழக்கம் போல் பக்கத்தில் உள்ள தோட்டக்காரர்களும், அதையடுத்துள்ள கிராம மக்களும் அன்றிரவு தூக்கத்தை தொலைத்தனர். வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாவட்ட வன அலுவலரே அந்த இடத்திற்கு நேரில் வந்து, வனத்துறையினர் 40க்கும் மேற்பட்டோர் சுற்றி நின்ற யானைகளை விரட்டிவிட்டு இந்த யானையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். அந்த கிணறு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத கிணறு. சேறும் சகதியுமாக உள்ளே இருந்தது என்றால் வெளியே முழுக்க புதர் மண் மேடுகளாக இருந்தது.

அதை பொக்லைன் இயந்திரம் கொண்டு வந்து அகற்றி, யானையை மேலே தூக்க செயின் பிளாக்குகள் கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, குறிப்பிட்ட யானையை மீட்டெடுக்கும்போது முழுசாக ஒரு நாள் கடந்துவிட்டது. இந்த சம்பவம் நடந்தது ஆறு மாதங்களுக்கு முன்பு. கோவை பெரிய நாயக்கன்பாளையம், பாலமலை வனப்பகுதியின் அருகே உள்ள கோவனூர் கிராமத்தில்.

இதே பாலமலை அடிவாரப் பகுதியில் ஒரு வருடங்களுக்கு முன்பு மற்றொரு சம்பவம். இந்த சுற்றுப்பகுதியில் உள்ள நாயக்கன்பாளையம், திருமாலூர், அவ்வை நகர், அண்ணாநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆடு,மாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, அரிசி, பருப்பு, கோதுமை போன்றவற்றை சாப்பிட்டு வந்தது ஒற்றை யானை. மக்கள் பட்டாசு வெடித்தும், டமாரம் தட்டியும், கூச்சலிட்டும் விரட்டியடிக்க, ஒரு நாள் திருமாலூரில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான குலைதள்ளிய வாழை மரங்களை சேதப்படுத்தியது. அத்துடன் நிற்காது மூர்க்கம் மிகுந்து தோட்டத்தில் நின்ற தென்னை மரங்களையும் முட்டியும், வேரோடு பிடுங்கியும் எறிந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். அந்த யானை சென்ற பாதையின் வழியே திடீரென ஒரு வாகனம் உறுமியபடி வர, அந்த சத்தத்தை கேட்டு மிரண்ட யானை கோவனூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. அங்கு இருந்த ஒரு டீக்கடையின் கதவை உடைத்த யானை உள்ளே இருந்த அரிசி மூட்டையை அலாக்காக தும்பிக்கையால் தூக்கிச் சென்றது. அப்படி போகும்போது மாந்தோப்பு, வாழைத்தோப்பு எதுவும் அதன் கால்களுக்கு மிச்சம் ஆகவில்லை. அத்தனையும் சேதம்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. தினம் தப்பினாலும் தப்பும். இந்த பாலமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் வருகை என்பது தப்புவதேயில்லை. 'இந்த பாலமலையிலும், அதன் சுற்றுவட்டாரக் காடுகளிலும் காட்டு யானைகள் திரிவது என்பது அதிசயமில்லை. ஆனால் அவை ஊருக்குள் புகுவதுதான் அதிசயம். எப்போ இங்கே சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி படை ) பயிற்சி மையம் வந்ததோ! அதிலிருந்துதான் இப்படி!' என இங்குள்ள மக்கள் கண்ணீர் விடாத குறையாக சொல்வதையும் காணமுடிகிறது.

நாம் ஏற்கெனவே பார்த்த மாங்கரை, கணுவாய் மலைகளை கொஞ்சம் தள்ளி வடக்கே உள்ளது குருடி மலை மற்றும் பாலமலை. இந்த மலைகளின் வால் போல் நீண்டு அடிவாரப்பகுதியில் பதுங்கியிருக்கிறது குருடம்பாளையம் கிராமம். நம் கூகுள் வலைத் தேடலில் போய் கோவை குருடம்பாளையம் என டைப் செய்து பாருங்கள். ஒன்று இந்த சிஆர்பிஎப் பயிற்சி பள்ளி குறித்த விவரணைகள் நிறைய கிடைக்கும். அல்லது இந்த ஊராட்சியை மாதிரி நகரமாக மாற்றிய வைஃபை கிராமமாக, முழுமையான கோபார் கேஸ் கிராமமாக, சோலார் சக்தியை பயன்படுத்தும் கிராமமாக மாற்றியிருக்கும் சங்கதிகள் எல்லாம் கிடைக்கின்றன. ஆனால் இந்த குரும்பபாளையத்தை சுற்றியோ, அதன் அருகாமை கிராமங்களிலோ, யானைகள் ஊடுருவல், அவை படும் பாடு, அவற்றால் மக்கள் படும் பாடு குறித்த விவரணைகள் பெரிதாக இல்லை.

ஆனால் பாலமலை, குருடி மலை அடிவார கிராமங்களின் அன்றாடத் தொல்லையாக விளங்குவது யானைகளின் வருகைதான். ஏற்கெனவே முந்தைய சில அத்தியாயங்களில் கோவையில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டிருப்பது யானைகளின் வழித்தடத்தை ஒட்டியே என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

அப்படிப்பட்ட இந்த பல்கலை வளாகத்தில் மலையடிவாரப்பகுதியில் காவல்தறைக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க சமீபத்தில் அனுமதியளித்திருந்தது நிர்வாகம். அதுவும் பெரிய இடமல்ல; வெறும் 200 மீட்டர் அகலம், 400 மீட்டர் நீளம் மட்டுமே. அதுவே சூழலியாளர்களின் பெரும் சர்ச்சைக்கு ஆளானது.

இங்கே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைப்பதற்கு பணிகள் நடந்து வர, 'இந்த இடத்தை ஒட்டியே, வனத்துறை எல்லை உள்ளது. காட்டு யானைகள் ஊருடுவலைத் தடுப்பதற்காக அகழி அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே, இந்த மையம் அமைக்கப்படுகிறது. இந்த வனப்பகுதியில், யானை, சிறுத்தை, கரடி, கடமான், புள்ளி மான் உள்ளிட்ட பலவிதமான வன விலங்குகள் உள்ளன. இந்த மையம் அமைக்க, காவல்துறையினர் ஆய்வு நடத்தியவேளையில் கூட அங்கே புள்ளிமான்கள் நின்றிருந்தன. அப்படிப்பட்ட இடத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டால், விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது நிச்சயம். துப்பாக்கி சுடும் சத்தமும், கந்தக மணமும் இங்குள்ள வன விலங்குகளை வெகு தூரத்திற்கு துரத்தும்.

இதனால், மருதமலை அடிவாரத்திலுள்ள பழங்குடியினர் குடியிருப்பு, கோயில் பகுதி, அடிவாரம், வடவள்ளி ஆகிய பகுதிகளுக்குள், வன விலங்குகள் புகும். பொது மக்கள், மருதமலை பக்தர்கள் ஏற்கெனவே காட்டு யானை, காட்டுப்பன்றிகள் குறுக்கீட்டால் ஓட்டம் பிடிப்பது அடிக்கடி நடக்கிறது. அந்தப் போக்கு இன்னும் அதிகரிக்கும். எனவே இந்த மையத்தை இங்கு அனுமதிக்கக் கூடாது!' என்று போர்க்கொடி துாக்கினர் வன உயிரின ஆர்வலர்கள்.

இதையடுத்து வனத்துறை கோவை பறக்கும் படை வன அலுவலர் தலைமையிலான குழு அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தது. அப்போது, வன உயிரின ஆர்வலர்கள், சூழல் அமைப்பினர் பலரும், அவரிடம் தங்களது கோரிக்கையின் நியாயத்தை விளக்கினர். அந்த இடத்தில் வனத்துறை அதிகாரிகளிடம் அங்கே சூட்டிங் ரேஞ்ச் அமைக்கக் கூடாது என்பதற்கு மேற்கோள் காட்டப்பட்டதே குருடம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் படையின் துப்பாக்கி சுடும் பயிற்சிமையம்தான்.

'அங்கு பயிற்சி எடுப்போர், ஆரம்பத்தில் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கி வந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின், சிறிது சிறிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு, பிறகு நீளமான, உயரமான தடுப்புச்சுவர் அமைத்து, காட்டு யானைகளின் பாதையே தடுக்கப்பட்டு விட்டது. அதன் பின்பே, அப்பகுதியில் குடியிருப்புப் பகுதிகளில், காட்டு யானைகளின் படையெடுப்பு அதிகமானது. அதே நிலைமைதான் இங்கும் ஏற்படும்!' என்றெல்லாம் அதில் எடுத்துச் சொல்லப்பட்டன.

அதையடுத்து வனப் பாதுகாவலர்கள் பேசும்போது, ''இங்கு துப்பாக்கி சுடும் மையம் அமைத்தால், நிச்சயமாக வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்; கோவை மாவட்டத்தில், மனித-வன உயிரின மோதல் அதிகரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கு தீர்வு காணுமாறு, அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால், இதற்கு தரப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென்று, பல்கலை நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்படும்'' என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெறும் 2 ஏக்கர் பரப்பளவில் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைப்பதற்கே இப்படியென்றால் குருடம்பாளையத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி மையம் எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் சொல்லி விளக்க வேண்டியதில்லை. இருந்தாலும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் சொன்ன கருத்தை இங்கே அப்படியே தருகிறோம்:

''இந்த மையத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலமலையின் வால்பகுதியை குடைந்துதான் அமைத்தார்கள். யானைகள் பொதுவாக துப்பாக்கிகளை கண்டால் கூட ஒன்றும் செய்யாது. ஆனால் தோட்டாவில் உள்ள வெடிமருந்தின் சுவாசம் தெரிந்தாலே அந்த ஆளை துரத்த ஆரம்பித்து விடும். அந்த மருந்து வாசமே அந்தளவுக்கு அதுக்கு ஒவ்வாது. இவர்கள் சாதாரணமாக வெறும் துப்பாக்கி சுடும் பயிற்சி மட்டும் இங்கே நடத்துவதில்லை. நாடு முழுக்க உள்ள மாவோயிஸ்ட், நக்ஸல் தடுப்பு வேட்டைக்கான பயிற்சிகளை எல்லாம் இங்கேதான் எடுக்கிறார்கள். அதற்காக இந்த வீரர்கள் குழுக்களாக காடுகளுக்குள் ஒரு வார காலம் பிரித்து அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் காட்டுக்குள்ளேயே வாழ்ந்து, வனவிலங்குகளை விரட்டியடித்து, தங்களையும் பாதுகாத்து கடுமையான பயிற்சி பெற்றே திரும்பி வரவே இந்த ஏற்பாடு. காட்டுக்குள் எங்கே எத்தனை ரவுண்ட் இயந்திர துப்பாக்கியால் சுடுவார்கள்.

எந்த இடத்தில் கையெறி குண்டுகளை வீசி சோதனை நடத்துவார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். அது மட்டுமல்ல, இங்கே சிறிய அளவிலான ஏவுகணை சோதனைகள் நடப்பதும் உண்டு. இதற்கான ஆயுதக்கிடங்கும் உள்ளது. இங்கே ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு அவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்தாலும் கூட சிஆர்பிஎப் டிஐஜியும், பயிற்சி மைய முதல்வருமாக உள்ள அதிகாரியின் அனுமதியும், உத்திரவுமின்றி வெளியில் வராது'' என்றார்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

தவறவிடாதீர்!    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x