Published : 06 Oct 2017 14:03 pm

Updated : 07 Oct 2017 14:49 pm

 

Published : 06 Oct 2017 02:03 PM
Last Updated : 07 Oct 2017 02:49 PM

யானைகளின் வருகை 50: அமெரிக்காவின் குப்பைத் தொட்டியான கோவை வனப்பகுதி!

50

அந்நிய நாட்டு குப்பைகளை வைத்து, அட்டைப் பெட்டி தயாரிக்கும் கம்பெனி கிணறுகளில் போட்ட கழிவுகளால் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்நிலைகள் மட்டுமல்ல, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்தக் கம்பெனிக்கு எதிராக இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் அறிவித்தனர். நீதிமன்றத்தையும் நாடினர்.


''குறிப்பிட்ட கம்பெனி இங்கிலாந்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் பேப்பர் கழிவுகளைத்தான் வாங்குவதாக சொல்லியிருக்கிறது. ஆனால் அங்கிருந்து அனைத்துக் குப்பையையும் கண்டெய்னர்களில் அள்ளி வருகிறது. அவற்றைப் பிரித்தெடுக்க இந்தக் கம்பெனிக்கு அருகிலேயே உள்ள ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தம் தந்தாங்க. அவங்க பேப்பர் வேஸ்ட்டுகளை மட்டும் பொறுக்கிட்டு மீதியுள்ள குப்பைகளை நள்ளிரவு நேரங்களில் பொட்டல்காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் கொட்ட ஆரம்பிச்சாங்க. அதுக்கு அங்கிருக்கும் விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு கிளப்பினாங்க. அதுவே அங்கே போராட்டமாகவும் மாறியது. அதனால் அந்த ஒப்பந்தக் கம்பெனி மூடப்பட்டது.

அப்புறமும் பெரிய கம்பெனி சும்மாயிருக்கவில்லை. வேறொரு கம்பெனிக்கு அதே குப்பை பிரிக்கும் வேலையை ஒப்பந்தம் போட்டாங்க. அதையும் மக்கள் எதிர்த்தாங்க. அதனால் அதுவும் மூடினாங்க. இப்ப அதே மூடப்பட்ட கம்பெனி வேற புதுப்பெயர் வைத்து மறுபடி அதே வேலையில் இறங்கிட்டாங்க. இவங்க இங்கிருக்கிற விவசாயிகளோட கிணறு, பக்கத்தில் உள்ள குட்டை ஒண்ணு விடறதில்லை. கிணற்றுக்கு சொந்தக்காரங்ககிட்ட கிணத்தை மூடித் தர்றோம். அதுக்கு இவ்வளவு தொகை தர்றோம்னு பேரம் பேசி பணம் கொடுத்துடறாங்க. குட்டைகள் இருந்தா அதை சுத்தியிருக்கிற இணக்கமான விவசாயிகளை பேரம் பேசி அவங்களுக்கு ஒரு தொகை கொடுத்திடறாங்க. இந்த வேலை 4 வருஷமா நடந்துட்டு வருது!'' என குமுறித்தள்ளினா் போராட்டக்காரர்கள்.

இந்த பிரச்சினை விஸ்வரூபமெடுத்த ஆண்டு 2008.

அப்போது இந்தப் பகுதியை சுற்றிப் பார்த்தபோது திரும்பின பக்கமெல்லாம் குப்பை மயமாக, அழுகல் நாற்றம் மயமாக காட்சியளித்தது. கெம்பாரபாளையம், கூரனூர், கணுவாய்பாளையம், என்று நான் பார்த்த ஊர்களிலெல்லாம் இதுதான் நிலைமை. மேடூர், பிளிச்சியனூர், தாயனூர் ஆகிய ஊர்களில் உள்ள பல கிணறுகள் கழிவுகளால் மூடப்பட்டு, அது தெரியாமல் இருக்க மேலே மட்டும் கற்கள் போட்டு பரப்பி மறைத்திருந்தார்கள்.

குறிப்பாக பிளிச்சியனூர் பகுதியில் ஒரு கிணறு கால்பாகம் வெளிநாட்டு குப்பையால் குவிக்கப்பட்டிருக்க, அதைப் படம் எடுக்க கேமராவை தூக்கியதுதான் தாமதம். அந்த தோட்டத்துக்காரர் ஓடி வந்தார். 'இந்த குப்பை கொட்ட எப்படி சம்மதிச்சீங்க?' எனக் கேட்டபோது, 'தண்ணியில்லா கிணறு. நாங்களே மூடித்தர்றேன்னாங்க. நானும் சரின்னேன். இதுல இந்தளவு வில்லங்கம் இருக்குன்னு தெரியாது!' என்றார்.

சம்பந்தப்பட்ட குப்பை பிரிக்கும் கம்பெனியை சேர்ந்த முன்னாள் ஊழியர் சிவசாமி என்பவரிடம் பேசியபோது, ''எங்களுக்கு எண்பது ரூபாய் தினக்கூலி. ஆனா அங்கே வேலை செஞ்சா வராத நோவு எல்லாம் வருது. ஒரு தடவை ஒரு பார்சலை பிரிச்சுப் பார்த்தபோது அதில் செத்துப்போன ஒரு குழந்தை. அழுகி நாற்றமெடுத்து. அதைப் பார்த்து ஓடி வந்தவன்தான் நான்..!'' என்றார்.

''விவசாயிகள் கூலித்தொழிலாளிகளின் அறியாமையை பயன்படுத்தித்தான் இந்த கம்பெனியிடம் ஒப்பந்தம் பெற்றவர்கள் இந்தக் காரியத்தை செய்கிறார்கள். இதில் விசாரித்த போது இன்னொரு உண்மையும் தெரிய வந்தது. இந்த கம்பெனிக்கு சென்னை, தூத்துக்குடி, கொச்சின் ஆகிய துறைமுகங்களிலிருந்துதான் பேப்பர் வேஸ்ட் என்ற பெயரில் இந்தக் கழிவுகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் 2005 ஆம் ஆண்டில் லண்டனை சேர்ந்த கம்யூனிட்டி வேஸ்ட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து இவர்கள் இறக்குமதி செய்த குப்பைக்கழிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதற்கடுத்து அதே ஆண்டு செப்டம்பரில் வேஸ்ட் பேப்பர் என்ற பெயரில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆயிரம் கண்டெய்னர்களில் 25 ஆயிரம் டன் குப்பைக் கழிவுகள் வந்திறங்கியிருக்கிறது. அதை கோவை பிரிவு உள்ளிட்ட பல்வேறு கம்பெனிகளுக்கும் இதன் அலுவலர்கள் பிரித்து அனுப்பியிருக்கிறார்கள். அதில் திடீர் சந்தேகம் வரவே சுங்கத்துறை அதிகாரிகள் கடைசியாக இருந்த நாற்பது கண்டெய்னர்களை ஆராய்ந்துள்ளார்கள். அது அமெரிக்காவின் நியூஜெர்சி நகரத்தின் முனிசிபல் கழிவுகள் என கண்டுபிடித்து தடை செய்துள்ளார்கள். அவற்றை தங்களுக்கு ஏற்றுமதி செய்த எவர்கிரீன் கம்பெனிக்கே திருப்பியனுப்பி விடுவதாக இந்த கம்பெனி சொல்லியிருக்கிறது.

ஆனால் பிறகு அமெரிக்காவுக்கு அனுப்பாமல் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அஜ்மானுக்கு அனுப்பியிருக்கிறது. அங்குள்ள சுங்க அதிகாரிகள் அதை இறக்குமதி செய்ய அனுமதிக்காததால் திரும்ப தூத்துக்குடிக்கே அனுப்பி விட்டனர். இப்போது அந்த கண்டெய்னர்களை இறக்குமதி செய்ய அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர் இந்த கம்பெனிக்காரர்கள். இது மட்டுமல்ல, 2007 அக்டோபர் மாதம் கொச்சின் துறை முகத்தில் அமெரிக்க நியூஜெர்சி நகரத்திலிருந்து வந்திறங்கிய மூன்று கண்டெய்னர்களில் அழுகிய குப்பைக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதை திருப்பியனுப்பியதுடன், இறக்குமதி செய்த நிறுவனத்தின் மீது முறைப்படி வழக்கும் தொடர்ந்துள்ளனர் அதிகாரிகள்.

ஆக, எங்களைப் பொறுத்தவரை இந்த நிறுவனத்திற்கு வேஸ்ட் பேப்பர் என்ற பெயரில் வரும் கண்டெய்னர்களில் எல்லாம் குப்பைக்கழிவுகள்தான். இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு கொஞ்ச நஞ்சமல்ல. இதனை நிறுத்த சொல்லி, கோவை என்ன குப்பைத் தொட்டியா? எனக்கேட்டு ஆட்சியருக்கு பெட்டிஷனும் கொடுத்துவிட்டோம். நடவடிக்கை எடுக்கிற மாதிரி தெரியவில்லை. இந்த குப்பைக் கழிவுகளை இறக்குமதி செய்கிற கம்பெனிக்கு ஆட்சியரையே இடம் மாற்றும் சக்தி இருக்கிறது. அதனால்தான் நாங்கள் இதற்காக பல்வேறு போராட்டங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்த கம்பெனிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளோம்!'' என்று இதற்கான போராட்டம் குறித்து விளக்கினார் அப்போதைய கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் பி.ஆர்.நடராஜன்.

இதைப் பற்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் பேசியபோது, ''நாங்கள் வெளிக் கம்பெனிக்கு பேப்பர்களுடன் வரும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது என்று நிபந்தனை விதித்துதான் தரம் பிரிப்பு பணியை குத்தகைக்கு கொடுக்கிறோம். ஆனால் அவர்கள் அந்த ஒப்பந்நத்தை மீறுகிறார்கள். எனவே அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம்!'' என்று ரொம்ப சாதாரணமாக பதில் சொன்னார்கள்.

இந்த செய்தி வெளியாகி மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் போராட்டங்கள் நடத்தின. பிறகு குப்பை பிரிக்கும் கம்பெனிக்கு தடை போட்டார்கள். கம்பெனிக்கு பூட்டு போட்டு சீலும் வைத்தார்கள். ''ஆனால் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். பார்க்க வேண்டியவர்களை பார்த்து, கவனிக்க வேண்டியவர்களை கவனித்து கம்பெனியை திரும்ப திறந்துவிட்டார்கள். என்ன, வெளிநாட்டிலிருந்து வரும் குப்பைக் கழிவுகள் மட்டும் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது!'' என்கிறார் இப்பகுதியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் மூர்த்தி.

இப்போதும் இந்த கம்பெனி அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் பணிகளில்தான் ஈடுபடுகிறது. அவற்றுக்கு கோவை மாநகராட்சி குப்பை முதற்கொண்டு எடுத்து தரம்பிரிப்பு வேலைகளும் செய்கிறது. இவர்கள் அட்டைப் பெட்டிகள் தயாரிக்க காகிதக்கூழ் உருவாக்கப்படுகிறது. இந்த கூழ் தயாரிப்பில் முழுக்க, முழுக்க பல்வேறு ரசாயனங்கள் அமிலங்களே பயன்படுகின்றன. இதில் வரும் கழிவு நீர் இங்கே உள்ள சிறு, சிறு பள்ளங்களில், குட்டைகளில் விடுகிறார்கள். அந்த தண்ணீரையே தென்னை மரத்திற்கும் பாய்ச்சுகிறார்கள். அதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இந்த கம்பெனிக்கு நிறைய ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. அதில் தண்ணீர் இல்லாத கிணறுகளிலும் இந்த கழிவுகள் விடப்படுகிறது. இதனால் இந்த கம்பெனிக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களும் கெடுகிறது. அவர்கள் புகார் கொண்டு போனால் அதிகாரிகளிடம் எடுபடுவதில்லை.

அதற்காக கட்டப் பஞ்சாயத்துகளும் நடக்கிறது. அதன் இறுதியில் சம்பந்தப்பட்ட விவசாயி அடிமாட்டு விலைக்கு அந்த கம்பெனிக்கே தன் நிலத்தையும் விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையை விவசாயிகளுக்கு உருவாக்கியே கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்களை தனக்கே தனக்கு என வாங்கிக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தை மீறி யாரும் இங்கே இயங்கிட முடியாது. அந்த அளவுக்கு அரசியல், அதிகார செல்வாக்கும் உள்ளது. இங்கே இந்த கம்பெனி மட்டுமல்ல, இதைச்சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திலேயே டவல் இம்பொர்ட், எக்ஸ்போர்ட் கம்பெனி, சலவைப் பாக்டரி, டெரின் கிளாத் தயாரிக்கும் கம்பெனிகள் இயங்குகின்றன. இவை இந்த கம்பெனி அளவிற்கு ராட்சஷ அளவில் இல்லாவிட்டாலும், அதில் ஒரு பகுதியை உள்வாங்கக்கூடிய அளவிலேயே உள்ளது!'' என்றெல்லாம் கவலையோடு விவரிக்கிறார்கள் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் இயற்கையின்பால் அக்கறை கொண்டவர்கள்.

அதுவெல்லாம் சரிதான். இந்த கம்பெனிகளால் சூழல் கெடுகிறது; நிலத்தடி நீர் கெடுகிறது. காட்டுயானைகளுக்கு என்ன பங்கம் ஏற்படுகிறது என்பதுதானே நம் கேள்வி.

இந்த கம்பெனிகள் இருக்கும் இடத்திற்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில்தான் பவானி நதிக்கரையோரம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் கோயில் யானைகள் முகாம் நடந்துள்ளது. அங்கே ஏராளமான காட்டு யானைகளும் வலசை வந்துள்ளன. அவை கோயில் யானைகளை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட கம்பெனி நேரடியாக ஆற்றுக்குள் கழிவு நீரை விடவில்லை என்றாலும் கூட நிலத்தில் தேக்கி நிலத்தடி நீர் பாழ்படுவதால் அதன் மூலம் வரும் அசாதாரண நோய்த் தொற்றுகள் இங்குள்ள நீர்நிலைகளில் நீர் அருந்தும் யானைகளுக்கு ஏற்பட்டிருக்காது என்பது என்ன நிச்சயம்? அதற்கு வயிற்றில் குடற்புழுக்கள் போன்ற விஷயங்களை ஏற்படுத்தி அதன் உயிருக்கே உலை வைத்திருக்காது என்று சொல்ல முடியுமா? என்பதுதான் சூழலியாளர்களின் கருத்து. நியாயந்தானே?

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

தவறவிடாதீர்!    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x