Published : 27 Oct 2017 10:31 am

Updated : 27 Oct 2017 10:46 am

 

Published : 27 Oct 2017 10:31 AM
Last Updated : 27 Oct 2017 10:46 AM

பொள்ளாச்சியை புறக்கணித்த சினிமா கம்பெனிகள்: புலம்பித் தவிக்கும் உழைப்பாளிகள்!


சுமை படர்ந்த வயல்கள், பிரம்மாண்டம் சொல்லும் ஆதிகாலத்து அரண்மனைகள், எட்டிப் பிடிக்கும் தொலைவில் அணைகள், சலசலக்கும் நீரோடைகள் கொட்டித் தீர்க்கும் அருவிகள் என ஒரு காலத்தில் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு வரும் சினிமா கம்பெனிகளுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்த பொள்ளாச்சி இன்றைக்கு சினிமா கம்பெனிகளின் அரவமின்றிக் கிடக்கிறது!

பொள்ளாச்சியில் முன்பெல்லாம் தினமும் மூன்று நான்கு இடங்களிலாவது சினிமா படப்பிடிப்புகள் நடக்கும். இதனால், இங்கிருக்கிற பெரும்பாலான ஓட்டல்கள் சினிமா கம்பெனிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கும். வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு இது அசவுகரியமாகத் தெரிந்தாலும் உள்ளூர்க்காரர்களுக்கு இது வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் அம்சமாக இருந்தது.

வருமானம் பாதிப்பு

ஆனால் இப்போது கேட்டால், மளிகைக்கடை தொடங்கி சலவைத் தொழிலாளர் வரை புலம்புகிறார்கள். முன்புபோல சினிமா கம்பெனிகள் வராமல் போனதால் தங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு வரு மானம் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் இவர்கள். ஓட்டல் சர்வர்கள் மற்றும் ரூம் பாய்களிடம் பேசினால், “முன்னணி நடிகர்கள் வந்து தங்குற சம யங்கள்ல வளமா டிப்ஸ் கிடைக்கும். இப்ப அதுவும் போயே போச்சு” என்கிறார்கள். சினிமா கம்பெனிகள் பொள்ளாச்சியை புறக்கணித்ததால் இங்குள்ள வாடகைக் கார் ஓட்டுநர்களுக்குத்தான் பெருத்த அடி

இதுகுறித்து நம்மிடம் பேசிய வாடகைக் கார் ஓட்டுநர் ஆர்.தண்டபாணி, “கடந்த அம்பது வருசமா வாடகைக் கார் ஓட்டறேன். நாகேஷ், ரவிச்சந்திரன் நடிச்ச காத லிக்க நேரமில்லை ஷூட்டிங் ஆழியாறுல தான் நடந் துச்சு. ரவிச்சந்திரனுக்கு நான்தான் கார் ஓட்டினேன். அதுக்கப்புறமும் பல படங்களுக்கு கார் ஓட்டி யிருக்கேன். சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், அழுக்கு சாமியார் கோயில், ஆனைமலை மாசாணி யம்மன் கோயில், சிங்காநல்லூர், சமத்தூர், புரவிப்பாளையம், சிங்கராம்பாளையம் அரண்மனைகள்ன்னு இந்தப் பகுதிகள்ல சினிமா ஷூட்டிங்கிற்கு நான் கார் ஓட்டாத இடமே கிடையாது.

வருடத்தில் பத்து நாள்

அப்பெல்லாம் நித்தமும் இந்தப் பகுதியில ஷூட்டிங் நடக்கும். ஆனா இப்ப, வருசத்துல பத்து நாள் ஷூட்டிங் நடக்கிறதே அபூர்வமா இருக்கு. பெரும்பாலும் இப்ப மலையாள படம் எடுக்கிறவங்க தான் பொள்ளாச்சிக்கு வர்றாங்க. அதுவும் ரெண்டு நாள்ல வேலைய முடிச்சுட்டுப் போயிடுறாங்க. தாராளமா செலவழிக்கிற சினிமாக்காரங்க கிட்டயும் இப்ப பணப் புழக்கம் இல்லைன்றாங்க. அதனால, சென்னைப் பக்கமே செட்டுகளைப் போட்டு வேலைய முடிச்சுக்கிறாங்க” என்றார்.

இன்னொரு ஓட்டுநரான கன்னையன், “நாலஞ்சு வருஷமாகவே பொள்ளாச்சி சுத்துவட்டாரத்துல முன்ன மாதிரி மழை மாரி இல்லை; கடும் வறட்சி. முந்தியெல்லாம் எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியா வயக்காடா இருக்கும். இங்க இருக்கிற அணைகள்லயும் தண்ணி ரொம்பி இருக்கும். ஆனா இப்ப, அணைகள்லயும் தண்ணி வத்திப் போயி வயக்காடுகளும் வறண்டு கிடக்கு. ஆடி மாசத்துலயே சுட்டெரிக்குது வெயில். மொத்தத்துல, பொள்ளாச்சியோட பழைய க்ளைமேட்டே மாறிப் போச்சு. படப்பிடிப்புக்கு இடம் பார்க்க வரும் லொக்கேஷன் மேனேஜருங்க இதைத்தான் சொல்லிப் புலம்புறாங்க.

பொள்ளாச்சி வெளிப்புறப் படப்பிடிப்புக்கான இடம்கிறதை உள்ளூர் மக்களே மறந்துட்டு வர்றாங்க. படப்பிடிப்புகளை நம்பி வண்டி ஓட்டிட்டு இருந்த டாக்ஸி டிரைவர்கள் பலர் தொழிலை மாத்திக்கிட்டுப் போயிட்டாங்க. எஞ்சி இருக்கிறவங்க ஏதோ கிடைச்ச வாடகைக்கு வண்டி ஓட்டிட்டு இருக்கோம்” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x