Published : 12 Oct 2017 02:26 PM
Last Updated : 12 Oct 2017 02:26 PM

யானைகளின் வருகை 54: வேலியே பாதையை மறித்த கதை!

சம்பவம்: 1. நிஜமா, சிலையா?

ஊட்டி - மேட்டுப்பாளையம் சாலை. ஓடந்துறை பகுதி. அச்சாலையின் இருமருங்கும் எப்பவும் பெரிய, பெரிய தடுப்புச்சுவர்கள்தான் நீளும். அதையொட்டி பெரிய மரங்களும் நெடித்து நிற்கும். அன்றைக்கு அச்சாலையில் வழக்கமாக வரும் வாகன ஓட்டிகள் சுவற்றையும், அதைத்தாண்டி நின்ற பெரு மரங்களையும் தாண்டி நின்ற பெரிய உருவத்தை பார்த்து மிரண்டனர். தான் காண்பது கனவா என்று ஸ்டீயரிங்கை ஒடித்து நிறுத்தி விட்டு, கைகளால் கண்களை கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தனர்.

நிச்சயம் சிலை இல்லை. பெரிய கொம்புள்ள ஒற்றை ஆண் யானைதான். எதையும் சட்டை செய்யாமல் மரத்தில் பெரிய கிளை ஒன்றை உடைத்துக் கொண்டிருந்தது. பிறகென்ன வந்த வாகனங்கள் வந்த வேகத்தில் ரிவர்ஸ் கியர் போட்டு பின்னுக்குத் தாவின. அந்த வாகனங்களின் பின்னால் நின்ற வாகன ஓட்டிகள் அலறினர். நடந்து வந்த பாதசாரிகளோ அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கிட்டத்தட்ட அரைமணிநேரம் அந்தப் பக்கம், இந்தப் பக்கம் தேங்கி நின்ற வாகனங்களை அந்த ஆண் யானை கொஞ்ச நேரம் கண்டு கொள்ளவில்லை. பிறகு, தடுப்புச்சுவரை தாண்டி இறங்கி இருபுறமும் உள்ள வாகனங்களை துரத்த ஆரம்பித்தது. அதில் அரண்டு அத்தனை வாகனங்களும் பின்னுக்குப் போக, பலர் கூவிக்கூச்சலெடுக்க, மேற்கும் கிழக்குமாக மாறி, மாறி ஓடி, ஓடி துரத்தி பயங்காட்டிய யானை பிறகு சாலையை கடந்து காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சம்பவம்: 2- ராணியின் முன்னே மூச்சிரைத்த தும்பிக்கை

ஓடந்துறை ஊமப்பாளையத்தை சேர்ந்தவர் 49 வயதான ராணி. இவருக்கு வனக்கல்லூரியில் தோட்டத்து வேலை. ஏற்கெனவே நாம் பார்த்த நீர் விளையாட்டு கேளிக்கை பூங்கா அமைந்திருக்கும் ஊட்டி பிரதான சாலையிலிருந்து, மேட்டுப்பாளையம் நோக்கி வந்து, அங்கிருக்கும் கோத்தகிரி சாலையில் பிரிந்து பணிபுரியும் இடத்திற்கு செல்வதானால் எப்படியும் 4 கிலோமீட்டர் செல்லவேண்டும். அதுவே சுருக்குவழியில் கொஞ்சம் காடு, கொஞ்சம் தோட்டம் என புகுந்து போனால் இரண்டரை கிலோமீட்டர் தூரமே குறைந்துவிடும். எனவே அந்த சுருக்குவழியில்தான் ராணி வேலைக்கு போவதும், திரும்பி வருவதும் அன்றாடம் நடந்து வந்தது. அன்றைக்கும் அப்படித்தான் நடந்து சென்று கொண்டிருந்த ராணி வனக்கல்லூரியின் பின்புறத் தோட்டப்பகுதியை எட்டி விட்டார்.

திடீரென பார்த்தால் கருமுசு என மலையாய் ஓர் உருவம். காதடைக்குது பிளிறல் சத்தம். மலைப் பாம்புபோல் தன் முன் மூச்சிரைக்க வந்தது ஒரு பெரிய காட்டானையின் துதிக்கை என்பதை உணரும் நேரம் கூட இல்லை. தூக்கி வீசப்பட்டார். முதுகு எலும்பு, கை, கால் எலும்புகள் சுக்கலாக நொறுங்க, அவரிடமிருந்து வீல் என்ற சத்தம். அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து யானையை விரட்டி விட்டு குற்றுயிராக கிடந்த ராணியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு பறந்தனர். ஆனால் போகும் வழியிலேயே ராணிக்கு மூச்சும் துடிப்பும் ஒருங்கே நின்றது.

சம்பவம்: 3 - காரைத் தாக்கிய யானை

நிறைமாத கர்ப்பணி. திடீரென்று அவருக்கு பிரசவ வேதனை வந்து விட்டது. அதிகாலை 4.30 மணிக்கு கோத்தகிரியிலிருந்து காரில் புறப்பட்டனர் அந்த 8 பேர். காலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் - கோத்தகிரி ரோட்டில் வனக்கல்லூரி முன் கார் ரோட்டில் வேகமாக வந்து கொண்டிருந்தது. பொசுக்கென்று பார்த்தால் சாலையில் கார்முன்னே பெரும்பாறை போல் கருமேகம். உற்றுப்பார்த்த பின்புதான் நின்றது பெரிய ஆண் யானை என்று காரில் உள்ள ஓட்டுநருக்கே தெரிந்தது. குலை நடுங்கிப்போன அந்த டிரைவர் சரவணன் பிரேக் போட்டார். கார் சத்தத்தைக் கேட்ட யானை திரும்பியதும், தன் உடலை எண் சாணாக குறுக்கியது.

விநாடி நேரத்தில் சிலிண்டர் கணக்கில் ஆக்ஸிஜனை உறிஞ்சியது. பிறகென்ன ராட்சஷ பலூன் பறக்கும் வேகத்தில் வந்து காரை தாக்கத் தொடங்கியது. அக்காரை தன் துதிக்கையால் தூக்கியும், தத்தத்தால் குத்தியும் சேதப்படுத்தியது. காரின் முன்பக்க கண்ணாடி யானையின் துதிக்கை வீச்சினால் சிலிரிட்டு உடைந்து நொறுங்கியது. யானையின் தாக்குதலை எதிர்பார்க்காத, காரில் இருந்த எட்டு பேரும் மரண பயத்தில் இருந்தனர். சிறிது நேரத்துக்குப் பின், யானை காட்டுக்குள் சென்ற பின்பும் காருக்குள் இருந்தவர்களுக்கு அச்சம் நீங்கவில்லை. அந்த சம்பவத்தை பார்த்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து காரில் இருந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

இந்த மூன்று சம்பவங்கள் கடந்த ஓரிரு வருடங்களில் நடந்தவை. இப்படி யானை- மனித மோதல் அடிக்கடி நிகழும் இடம் என்று சொன்னால் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையப்பகுதிதான். இந்த மையமே யானைகளின் வலசைப் பாதையில் அமைந்திருப்பதுதான். வேலியே பயிரை மேய்ந்த கதை என்று சொல்வார்களே. அது போல வேலியே பாதையை மறித்த கதை என்று இதை சொல்லலாம். இந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக இந்த வனக்கல்லூரி அமைவதற்கு முன்பு இப்படி மனிதமோதல் சம்பவங்களே ஏற்பட்டதில்லை என்பது இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களின் கூற்று. இதை 14 ஆண்டுகளுக்கு முன்பே செய்தியாக பதிவிட்டுள்ளேன்.

எப்படி?

இந்த வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற இந்த அமைப்பு தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குவதாகும். இதற்காக 1975 ஆம் ஆண்டு வாக்கில் வனவியல் துறை மாணவ மாணவியரின் ஆராய்ச்சிக்காக 500ஏக்கர் நிலத்தை சிறுமுகை வனத்துறையினரிடம் பெற்றுள்ளது. இந்த நிலத்தை ஐந்து பகுதிகளாக பிரித்து தேக்கு, மூங்கில், யூகாலிப்பட்சு, ஈட்டி உள்ளிட்ட பல வகை மரங்களை நட்டு வந்துள்ளார்கள். அதில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் வனக்கல்லூரியும் (2003ல்) அதையொட்டி பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கும் ஹாஸ்டல்களும் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியை வனவிலங்குகள் சேதம் செய்யாமல் இருப்பதற்காகவும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கோடும் இந்த மையத்தை சுற்றிலும் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு மின் வேலி அமைத்திருக்கிறார்கள் வனக்கல்லூரியினர்.

ஆனால் அதையும் துவம்சம் செய்து மரங்களை வேரோடு சாய்த்தும், கட்டிடங்களை இடித்தும் வந்தன காட்டு யானைகள். அதில் ஆராய்ச்சி மாணவர்கள் பேராசிரியர்கள் பீதியில் ஆழ்ந்தனர். யானைகளின் அழிச்சாட்டியத்தை சரிப்படுத்த உடனே போர்க்கால நடவடிக்கையில் இறங்கியது கல்லூரி நிர்வாகம். வனத்துறையிடமிருந்து பெற்ற ஐநூறு ஏக்கர் நிலத்தை சுற்றியும் எல்லையோரம் ராட்சத அகழியை வெட்ட ஆரம்பித்தது. அந்த அகழி சாதாரணமானதல்ல. பத்தடி ஆழம், பத்தடி அ்கலம், ஆழம் போகப்போக குழி சரிவாக சென்று ஆழத்தின் கடைசியில் குழியின் அகலம் ஏழடி மட்டுமே இருக்கும்.

இது சாதாரணமாக யானைக்கு வெட்டும் அகழியின் அளவீட்டிலிருந்து இரட்டிப்பு மற்றும் மூன்று மடங்கு சைசில் இருப்பதாகவும், அதனால் இங்கே திரியும் கானுயிர்களுக்கு மட்டுமல்ல; மக்களுக்கும் துன்பம்தான் என்பதை பொதுமக்கள் சுட்டிக்காட்டினர் இதைத்தடுக்க போராட்டம் எல்லாம் ந டந்தன. 'வனவிலங்குகளையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டிய வனத்துறை. அதற்கு ஆதார சுருதியாக இருக்க வேண்டியது வனக்கல்லூரி. ஆனால் அவர்களே வனவிலங்குகளையும், வனத்தையும் அச்சுறுத்தி அழிக்கும் விதமாக அகழியை வெட்டுவது என்ன நியாயம்?' என கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

அப்போது இதற்கு எதிராக கடுமையாக போராடியது மேட்டுப்பாளையம் தமிழக பசுமை இயக்கம். அதன் ஒருங்கிணைப்பாளர் ஜான் சாலமன் பேசும்போது, ''இந்தக் கல்லூரியில் தங்கிப்படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் வெறும் நூறுபேர் (2003 ஆண்டில்)தான். இவர்கள் மரம் ஆராய்ச்சி செய்யும் பகுதியும், அலுவலக ஹாஸ்டல் பகுதிகளும் கூட சுமார் நான்கு ஏக்கருக்குள்தான். இந்த நான்கு ஏக்கர் பகுதியை பாதுகாக்க வேண்டி சுமார் ஐந்நூறு ஏக்கர் காடுகளை அகழி வெட்டி அடைக்கிறார்கள். இது முழுக்க, முழுக்க யானைகள் நடமாடும் வலசைப் பகுதி.குழிக்குள் யானைக்குட்டிகள் விழுந்தால் என்ன ஆகும்? மழைக்காலத்தில் குழிக்குள் தண்ணீர் நிரம்பி விடும். அப்போது பெரிய யானைகள்கூட இடறி விழுந்தால் நிலைமை அவ்வளவுதான். இதையெல்லாம் சுட்டிக்காட்ட வனக்கல்லூரி டீனிடம் பேசினோம். அவர்கள் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தோம். ஒரு வாரம் கழித்து மாவட்ட வன அதிகாரி வந்து பார்த்தார். அவரை வனக்கல்லூரி நிர்வாகத்தினர் திசை திருப்பி அருகிலிருக்கும் ஊமப்பாளையம் கிராமத்திற்கு அழைத்து சென்று விட்டார்கள்.

இந்த வனக்கல்லூரி மட்டுமல்ல, அந்த ஊர் ஜனங்கள் எல்லாம் யானைகளால் துன்பப்படுவதாகவும், அவை இரவு நேரங்களில் வந்து வாழைத் தோட்டங்களை எல்லாம் அழித்து விடுவதாகவும், அதிலிருந்து தடுக்கவே அகழி வெட்டப்பட்டிருப்பதாகவும் விளக்கம் தந்துள்ளார்கள். எங்களை பொறுத்தவரை அந்த ஊமப்பாளையம் மக்கள் யானைகளால் துன்பப்படுவது உண்மைதான். அதற்காக அகழி வெட்டி இப்படி யானைகளை திசைதிருப்பினால் அவற்றின் மூர்க்கம் அதிகமாகும். எப்போதுமே யானைகள் தனது வலசையை மாற்றிக் கொள்ளாது. அது அடைபட்டிருந்தால் இன்னமும் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகும். முன்னைவிட ஆக்ரோஷமாக மனிதர்களை, மனிதர்களின் உடைமைகளை தாக்கும். சேதப்படுத்தும். இதனால் இதே ஊமப்பாளையம் மட்டுமல்ல, எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் பாலப்பட்டி, வேடர்காலனி, வச்சினம்பாளையம் போன்ற கிராமங்களுக்கும் வரும். வாழைகளை நாசம் செய்யும். அப்போது இவர்கள் என்ன பரிகாரம் செய்யப்போகிறார்கள்?'' என்று கோபப்பட்டார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த வன ஆராய்ச்சி கல்லூரியில் இதுவரை எத்தனையோ ஆராய்ச்சி மாணவர்கள் தங்கிப்படித்து சென்றிருக்கிறார்கள். ஐஎப்எஸ் பட்டமும் பெற்றுள்ளார்கள். அப்போதும் இதே காடுகள்தான். இதே வனவிலங்குகள்தான். அவர்களுக்கெல்லாம் இதுவரை நேராத துன்பம், இப்போது மட்டும் என்ன ஏற்பட்டு விட்டது? ஒரு முறை கூட யானை புகுந்து ஒரு ஆளை அடித்து விட்டது என்ற புகார் இங்கில்லை. அப்படியிருக்க இவ்வளவு பெரிய அகழியை ஏன் வெட்ட வேண்டும்? என்பதே அப்போது சூழலியாளர்களின் குமுறலாக வெளிப்பட்டது.

இது பற்றி அப்போதைய மாவட்ட வன அலுவலரிடம் விளக்கம் கேட்டபோது, ''இப்பிரச்சினை என் கவனத்திற்கு வந்ததும் நானே நேரில் சென்று பார்த்தேன். அந்த அகழியை வெட்டுவதால் அங்குள்ள வனவிலங்குகளுக்கு ஒரு பாதிப்பும் நேராது. குறிப்பாக யானைகள் மோப்ப சக்தி படைத்தவை. எதிரில் ஒரு ஆபத்து என்றால் பல மீட்டர் தொலைவிலேயே உணர்ந்து திசை திரும்பி விடும். மேலும் வனக்கல்லூரியை சுற்றியுள்ள கிராமங்களில் தற்போதெல்லாம் வாழை பயிரிடுகிறார்கள். அந்த வாசத்திற்குத்தான் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக யானைகள் இரவு நேரங்களில் இங்கே வருகின்றன. போகிற வழியில் வனக்கல்லூரியில் ஆய்வுக்காக நடப்பட்டிருக்கும் பல வகை மரங்களையும், பிடுங்கி எறிந்து விடுகின்றன. இப்படி சேதம் ஏற்படாமல் தடுக்கத்தான் அந்தக் குழி வெட்டப்படுவதாக சொல்கிறார் கல்லூரி டீன்.

அவர்கள் இந்த பணிகளை செய்து கொள்ள ஒப்பந்தத்திலும் வழி வகை செய்யப்பட்டிருக்கின்றது. யானைகளுககும் சேதம் நேராமலிருக்கவும், இங்கு நடப்பட்டிருக்கும் மர நாற்றுகளுக்கும் சேதம் ஏற்படாமலிருக்கவும் இதை விட பெரிய உத்தி இருக்க முடியாது. அதை போராடக்கூடிய தமிழக பசுமை இயக்கத்திடமும் சொல்லியுள்ளோம்!'' என்பதே அவரின் விளக்கமாக அப்போது இருந்தது.

அதன் தொடர்ச்சியாகத்தான் தொடர்ந்து இந்த பகுதியில் இந்த மனித- யானை மோதல். அதற்கு உதாரணமாக மேலே சமீபத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் சொல்லப்பட்டன. அது மட்டுமல்ல காட்டுக்குள் இருந்த வனவிலங்குகள் யாவும் சாலைகளிலும் உலா வர ஆரம்பித்ததது. சுற்றுப் பகுதியில் உள்ள ஊருக்குள்ளேயும் வரத்தொடங்கியது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x