Published : 11 Oct 2017 02:14 PM
Last Updated : 11 Oct 2017 02:14 PM

யானைகளின் வருகை 53: பத்தாண்டுகளில் நான்கு மடங்கு மரணங்கள்

சம்பவம்: 1

கல்லாறுக்கு அப்பால் உள்ள நெல்லிமலை வனப்பகுதி. அது ஒரு நவம்பர் மாதம். நடு இரவு நேரம். கோடை வர நான்கைந்து மாதங்கள் இருக்கும் நிலையிலேயே காடுகளில் உள்ள குட்டைகள் வறண்டு காய்ந்தன. தீரா தாகம். தூரத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியை தனது நீண்டு தொங்கும் மூக்கின் மூலம் அறிந்து கொண்டன அந்த மூன்று யானைகள். தன்னுடன் உள்ள குட்டியையும் அழைத்துக் கொண்டு வெகுவேகமாக புறப்பட்டுவிட்டன. முதலில் அவற்றுக்கு தென்பட்டது குரும்பனூர் கிராமத்தில் இருந்த வாழைத் தோட்டம். அதன் மையத்தில் அமைந்திருந்த தண்ணீர் தொட்டி. மூச்சு முட்ட தண்ணீரை உறிஞ்சிக் குடித்த யானைகள், பசிக்கு வளர்ந்து நின்ற வாழையை சாப்பிட ஆரம்பித்தன. யானை புக்க புலம் வாயில் போடுவதை விட காலில் மிதிபடுவதுதானே அதிகம் ஆகும்? அது அங்கும் நடந்தேறியது.

மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்ட ஆரம்பித்தனர். அஞ்சி நடுங்கிய யானைகள் மூலைக்கு ஒன்றாய் ஓட்டம் பிடிக்க, அதில் ஒரு யானை மட்டும் வழிதவறியது. அந்த இரவு முழுக்க பக்கத்தில் உள்ள ஆண்டிக்காடு பகுதியில் சுற்றியது. தன் குடும்பத்தை காட்டாத வெறி. மனிதர்கள் பட்டாசு வெடித்து துரத்தின கோபம். எல்லாம் தேக்கி வைத்துக் கொண்டிருந்த அந்த யானை தாசம்பாளையம் பகுதிக்குள் நகரும்போது சூரியன் கீழ்வானில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நேரம். அந்த மங்கலான வெளிச்ச வெளியில் ஒரு மனிதர். தட்டுத் தடுமாற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தார். பிறகென்ன?

தனக்கான மூர்க்கம். தும்பிக்கையால் அவரை வளைத்து பிடித்தது. ஒரே வீசு. ஓடிப்போய் ஒரே மிதி. மக்கள் கூச்சல் போட மறுபடி காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டது யானை. ஊரே கல்லோலம். நகரப்பகுதியில் காலையில் வாக்கிங் சென்ற ஓய்வு பெற்ற 70 வயது தலைமை ஆசிரியரை காட்டு யானை கொன்று விட்டது. மக்கள் பொங்கினர். யானைகளிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் எல்லாம் இறங்கினர். இந்த சம்பவம் நடந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.

சம்பவம்: 2

அன்று கடும் மழை. சூறைக்காற்றும் கடுமை காட்டியதால் ஆங்காங்கே இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. அதில் கல்லாறு பகுதியில் அமைந்திருந்த அந்த பாக்குத்தோப்பில் ஊடுருவிச் செல்லும் மின் கம்பத்தின் மின்கம்பிகள் அறுந்து மூலைக்கொன்றாய் தேங்கிக்கிடந்த நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சியது. அது தெரியாத 18 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று இவ்வழியே வந்தது. மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. அதே சமயம் 5 வயதுள்ள புள்ளி மான் ஒன்றும் அங்கே மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தது. அடுத்தநாள் அதை வனத்துறையினர் வந்து பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் நடந்தது ஒன்றரை வருடங்கள் முன்பு.

சம்பவம்: 3.

மேட்டுப்பாளையம், நெல்லிமலை காட்டில் இருந்து வெளியேறிய 32 காட்டு யானைகள் சமயபுரம், தாசம்பாளையம் கிராமங்களுக்குள் புகுந்தது. இவை இங்குள்ள வாழை தோட்டகளுக்குள் புகுந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை அடியோடு நாசப்படுத்தியது. மக்கள் புகாரில் வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டி மீண்டும் மலையடிவாரப்பகுதிக்கு அனுப்பினர். இந்த யானைக்கூட்டம் காடுகளுக்குள் செல்லாமல் ஊரை அடுத்துள்ள புதர்காடுகளுக்குள்ளேயே முகாமிட்டிருந்தன.

இந்நிலையில் அடுத்தநாள் அதிகாலை மீண்டும் தாசம்பாளையம் கிராமத்தினுள் இந்த யானைக்கூட்டம் புகுந்தது. அங்கே பழனிசாமி என்பவரது தென்னம் தோப்பிற்குள் யானைகள் நுழைய, அங்கிருந்த உயரழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த தோட்டத்து வேலியில் சிக்கின இரண்டு பெண் காட்டு யானைகள். அவை அந்த இடத்திலேயே உயிரிழக்க, அவற்றுடன் வந்த மூன்று வயது மதிக்கத்தக்க குட்டி யானை இதே மின்வேலியை தொட்டதில் அதன் துதிக்கையில் பலத்த காயமடைந்தது. அது வலி பொறுக்க முடியாமல் அதே பகுதியில் ஓலமிட்டு சுற்றி வர, காடே அதிர்ந்தது. இதனை பிடித்து சிகிச்சையளிக்க வனத்துறையினர் முயன்றனர்.

ஆனால், தனது தாயை பிரிந்த துக்கத்திலும், யானையின் நுண்ணிய உடல் பாகமாக கருதப்படும் துதிக்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான வெட்டு காயத்தின் வலி காரணமாகவும் மிகுந்த கோபத்துடன் இருந்த யானை பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் விரட்டியது. இதனையடுத்து புலி மற்றும் சிறுத்தைகளை பிடிக்க பயன்படுத்தப்படும் நீளமான வலை கொண்டு வரப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் உதவியுடன் காயம்பட்ட குட்டி யானை சோளக்காட்டிற்குள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, வனத்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் 16.01.2017 அன்று நடந்தது.

இப்படி மேட்டுப்பாளையத்தை சுற்றிலும் நடந்த யானை மதித்து மனிதன் பலி, மின்சாரம் தாக்கி, அகழியில் விழுந்து யானை சாவு போன்ற செய்திச் சம்பவங்களை ஏராளமாக சொல்ல முடியும். இதற்கெல்லாம் காரணம் யானைகளின் முக்கிய வலசை மறிக்கப்பட்டதே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில்தான் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதும், மனித மிருக மோதல் அதிகம் நடப்பதும், அதன் பலனாய் யானை, மனிதன் பலியாவதும் அதிகம் நடக்கிறது என்பதை சமீபத்தில் சமூக ஆர்வலர்கள் நடத்திய கணக்கெடுப்பு சொல்கிறது. அந்த கோவை மாவட்டத்திலும் அதிகமான சம்பவங்கள் உள்ள பகுதி இந்த மேட்டுப்பாளையம் வனப்பகுதி என்பதுதான். கேரள மாநிலம் அமைதிப் பள்ளத்தாக்கில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் யானைகள் கோவை மாவட்ட வனப்பகுதி வழியாகத்தான் நீலகிரி, சத்தியமங்கலம், பந்திப்பூர் என கர்நாடகா வனப்பகுதிக்குள் செல்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் 599 முறை மேட்டுப்பாளையம் வனத்திலிருந்து மட்டும் வெளியே ஊருக்குள் வந்துள்ளன காட்டு யானைகள் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மேட்டுப்பாளையத்தை உள்ளடக்கி, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகி வனச்சரகங்களில் கடந்த ஆண்டில் 1, 726 முறை காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இப்படி வெளியேறிய யானைகள் 1994 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 23 பேரை மிதித்தும், அடித்தும் கொன்றுள்ளன. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் (2004 முதல் 2014 வரை) இறந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. அது போல நான்கு மடங்கு காயம் அடைந்துள்ளனர்.

இப்படி காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டே இரண்டு. ஒன்று வனத்தில் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாதது. யானைகளின் வலசைப் பாதைகள் மறிக்கப்பட்டிருப்பது. யானைகள் ஓரிடத்தில் தங்கி வாழாதது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம் பெயர்ந்து கொண்டே இருப்பவை. பருவ காலம் மாறாது அதே பாதையில் திரும்ப வருபவை. தான் செல்லும் பாதையில் வீடுகள் இருந்தாலும், தோட்டங்காடுகள் இருந்தாலும் அவை தன் பாதையை மாற்றிக் கொள்வதில்லை.

ஆனால் இங்கே வீடுகள், தோட்டங்கள் மட்டுமா இருக்கிறது? அதிலும் கல்லாறு வலசையில் வரிந்து கட்டி நிற்கும் கட்டிடங்கள், ரிசார்ட்டுகள், கல்வி மையங்கள், கேளிக்கை அரங்குகள், ராட்சஷ சுவர்கள், பிரம்மாண்ட அகழிகள், யானையாலும் அசைக்க முடியாத மின் வேலிகள். இவையெல்லாம் இவ்வளவு அசுரத்தனமாய் உருவானதே கடந்த பதினைந்து ஆண்டுகளில்தான் என்கிறார்கள் மேட்டுப்பாளையம் பூர்வீக மக்கள்.

''முன்பெல்லாம் இந்த பகுதியில் காட்டு விலங்குகள் ஏராளமாய் சுற்றித் திரிந்தது. இந்த கேளிக்கை பூங்கா அமைந்திருக்கும் இடம் 80 சதவீதம் பாக்குத் தோப்புகள்தான். அதனால் காட்டு மிருகங்கள் எல்லாமே பாக்குமரங்களுக்கு இடையே நுழைந்து காட்டுக்குள் சென்றுவிடும். விவசாயிகளும் அதை பொருட்படுத்தாமலே காடோடும், கானுயிர்களோடும் இரண்டற கலந்தே வாழ்ந்தனர்.

ஆனால் இப்போதெல்லாம் இந்த வழியில் வரும் யானைகள் தனக்கான நுழைவுப்பாதை இல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அல்லது சாலையிலேயே நிற்கின்றன. இந்த கேளிக்கை பூங்காவின் பகுதியாவது யானை வழித்தடத்தினை 20 சதவீதத்தைதான் தன்னகத்தே வைத்திருக்கிறது. ஆனால் இதையடுத்து அமைந்துள்ள பள்ளியோ 90 சதவீதம் இந்திய முக்கியத்துவம் வாய்ந்த 'கல்லாறு கெத்தனாரி பீட்' வலசைப் பகுதியிலேயே அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை சுற்றிலும் பெரிய அகழிகளும், சோலார் மின்வேலிகளும் பக்காவாக அமைக்கப்பட்டிருப்பதால் யானைகள் தன் வழியை மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தப் பள்ளிக்கு பின்புறம் 2 தண்ணீர் தொட்டிகளும் வனவிலங்குகளுக்காக அமைக்கப் பட்டிருக்கிறது.

இதை சுற்றிலும் அடிக்கடி 4 யானைகள், 5 யானைகள் தென்படுவது சகஜமான ஒன்று. யானைகளின் வலசைப் பாதையில்தான் இந்தப் பள்ளி அமைந்துள்ளது என்பது இதை அமைத்தவர்களுக்கே தெரியும். ஆனால் இங்கு படிக்கும் பிள்ளைகள் எல்லாம் மத்திய, மாநில அரசுகளில் உயர்பதவியில் உள்ளவர்களின் குழந்தைகள். இந்தப் பகுதிகள் எல்லாம் மலையிடப் பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பின் கீழ் வருகிறது. அப்படியான நிலத்தில் கூட 2 ஆயிரம் சதுர அடி வீதம் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க சில வனத்துறை அதிகாரிகள் முயற்சி செய்ததில் தோல்வியே கண்டுள்ளனர்.

இப்பவும் இந்த விதி மீறலுக்கு அவ்வப்போது நோட்டீஸ் வனத்துறை சார்பில் பறக்கும். அதையே அனுப்பியவர்கள், 'இது எங்களோட பார்மாலிட்டி நோட்டீஸ். பொருட்படுத்தாதீங்க!' என்று சமாளிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!'' என்று விலாவாரியாக விவரித்தார் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சூழலியாளர் ஒருவர்.

இப்பகுதியில் சாலையின் இருமருங்கும், ''இது மலையிடப் பாதுகாப்புக்குள் வரும் பகுதி. வீடுகள், தோட்டங்கள் வாங்குவது செல்லத்தக்கதல்ல!'' என ஓடந்துறை ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பை மூலைக்கு மூலை காண முடிகிறது. ஆனால் பெரிய, பெரிய ரிசார்ட்டுகள் எப்படி உருவாயின என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இப்போதும் இங்கே பிரம்மாண்ட கேளிக்கை விடுதிகள் உருவாக கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

சாதாரண வீடுகள், பெட்டிக்கடைகளுக்கு மட்டும்தான் மலையிடப் பாதுகாப்பு மற்றும் பஞ்சாயத்து சட்டங்கள், அறிவிப்பு பலகைகளின் அறிவிப்பும் பொருந்தும் போலிருக்கிறது. செல்வந்தர்களுக்கு அது நிச்சயம் இல்லை என்பதையே பறைசாற்றுகின்றன இங்கு அணிவகுக்கும் இந்த விஷயங்கள்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x