Last Updated : 03 Sep, 2017 12:20 PM

 

Published : 03 Sep 2017 12:20 PM
Last Updated : 03 Sep 2017 12:20 PM

மோதகமும் அதிரசமும் செய்யலாம்!

ம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தைப் போல் ஆவணியிலும் பண்டிகைகள் வரிசைகட்டும். யானை முகம் கொண்ட விநாயகர், மோதகப் பிரியர் என்பதால் விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை தவறாமல் படையலில் இடம்பிடித்துவிடும். அது தவிர சுண்டல், அப்பம், அதிரசம் என வீடே மணக்கும். விநாயகர் சதுர்த்தியன்று செய்யக்கூடிய பலகாரங்களைப் பாரம்பரிய சுவை மாறாமல் புதுவிதமாகச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த எஸ்.ராஜகுமாரி.

முழுப் பயறு பாயசம்

என்னென்ன தேவை?

முழுப் பயறு - ஒரு கப்

துருவிய வெல்லம் - ஒன்றரை கப்

துருவிய தேங்காய் - கால் கப்

ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்

முந்திரித் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை - ஒரு டேபிள் ஸ்பூன்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் முழுப் பயறைப் போட்டுச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். அதை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். பிறகு குழைந்துவிடாமல் வேகவையுங்கள். அடி கனமான பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு, கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வையுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி கல், மண் போக வடிகட்டி மீண்டும் அடுப்பில் வையுங்கள்.

பின்பு ஒரு கொதி வந்ததும் வெந்த முழுப் பயறை அதில் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் தேங்காய், முந்திரி இரண்டையும் தண்ணீர்விட்டுக் கெட்டியாக அரைத்துச் சேருங்கள். ஏலக்காய்ப் பொடி தூவி ஒரு கொதி வந்ததும் நெய்யில் திராட்சையை வறுத்துச் சேர்த்து இறக்கிவையுங்கள்.

அன்னாசிப்பழ மோதகம்

என்னென்ன தேவை?

அரிசி மாவு - ஒரு கப்

பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழத்

துண்டுகள் - கால் கப்

கடலைப் பருப்பு - அரை கப்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

துருவிய வெல்லம் - ஒன்றரை கப்

ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் கடலைப் பருப்பைச் சிவக்க வறுத்து, அரை வேக்காடு வேகவிடுங்கள். வேகவைத்த கடலைப் பருப்புடன் அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். அடி கனமான பாத்திரமொன்றில் துருவிய வெல்லம், தேங்காய்த் துருவல், கடலைப் பருப்பு - அன்னாசிப் பழக் கலவை ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள். அன்னாசிப் பழக் கலவையில் உள்ள நீரே போதுமானது.

கலவை கொதித்ததும் இறக்கிவைத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் விடாமல் அரையுங்கள். அரைத்த விழுதை ஒரு வாணலியில் நெய்விட்டுக் கிளறுங்கள். இரண்டு நிமிடங்களில் வெந்துவிடும். இறக்கிவைத்து ஆறவிட்டால் பூரணம் தயார்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீர், ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அரிசிமாவை அதில் கொட்டிக் கிளறுங்கள். மாவு வெந்ததும் இறக்கி, கைபொறுக்கும் சூட்டில் பிசைந்து, சொப்பு செய்து அதனுள் பூரணத்தை வைத்து மூடுங்கள். இட்லித் தட்டில் வைத்து ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் அன்னாசிப் பழக் கொழுக்கட்டை தயார்.

மிக்ஸர் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

அரிசி மாவு - ஒரு கப்

உப்பு - தேவைக்கு

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

அரைக்க

தேங்காய்த் துருவல் - கல் கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மல்லித் தழை - அரை கப்

உப்பு - தேவைக்கு

அலங்கரிக்க

வறுத்த பச்சைப் பட்டாணி - 4 டேபிள் ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 4 டேபிள் ஸ்பூன்

மாங்காய்த் துண்டுகள் - 3 டேபிள் ஸ்பூன்

துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரம் ஒன்றில் இரண்டு கப் நீர்விட்டு நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன்விட்டு, உப்பு போட்டுக் கொதித்ததும் அரிசிமாவைக் கொட்டிக் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கி கை பொறுக்கும் சூட்டில் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லித் தட்டில் ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

அரைக்கக் கொடுத்த பொருட்களை நீர்விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு அரைத்து விழுதைப் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதில் வெந்த கொழுக்கட்டையைப் போட்டுப் புரட்டி இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளறி அதன்மேல் அலங்கரிக்கக் கொடுத்த பொருட்களைத் தூவி அலங்கரித்தால் மிக்ஸர் கொழுக்கட்டை தயார்.

வெள்ளைக்கடலை சுண்டல்

என்னென்ன தேவை

வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

ராகி சேமியா - கால் கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

வறுத்து பொடிக்க

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

வரமிளகாய் - 3

வெந்தயம் - கால் டீஸ்பூன்

எள் - 3 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எப்படிச் செய்வது

வெள்ளைக் கொண்டைக் கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவிடவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடித்துத் தனியே வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து வெந்த கொண்டைக் கடலையும் சேர்த்து வதக்கி புளிக்கரைசல் ஊற்றி வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து இறக்கிவிடவும். ஒரு வாணலியில் நெய்விட்டு ராகி சேமியாவை வறுத்து இறக்கி வைத்துள்ள சுண்டலில் தூவி அலங்கரிக்கவும்.

நட்ஸ் அப்பம்

என்னென்ன தேவை

புழுங்கல் அரிசி - அரை கப்

பச்சரிசி - அரை கப்

முந்திரி பருப்பு - கால் கப்

பாதாம் பருப்பு - 15

துருவிய தேங்காய் - ஐந்து டேபிள் ஸ்பூன்

பால் - கால் கப்

எண்ணெய் - பொரிப்பதற்கு

சர்க்கரை - ஒன்றரை கப்

எப்படிச் செய்வது

புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவிடவும். பாதாமை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்துத் தோல் உரித்து வைக்கவும். அரிசி இரண்டையும் நீர்விட்டுக் கெட்டியாக அரைத்துத் தனியே வைக்கவும். முந்திரி, பாதாம், தேங்காய் துருவல், சர்க்கரை இவற்றைப் பாலுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.

அதில் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள அரிசி மாவையும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றவும். அப்பம் உப்பி மேலே எழும்போது திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும். அப்பம் மெத்தென்று தாள் போல் இருக்க வேண்டும். முறுகலாக இருக்கக் கூடாது. எண்ணெய் அதிகம் சேர்க்காதவர்கள் குழிப்பணியாரக் கல்லிலும் மாவை ஊற்றிச் செய்யலாம்.

சர்க்கரை அதிரசம்

என்னென்ன தேவை

பச்சரிசி - 2 கப்

சர்க்கரை - ஒரு கப்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

எப்படிச் செய்வது

பச்சரிசியை நன்றாகக் கழுவி நீர் வடித்து ஒரு மணி நேரம் நீர்விட்டு ஊறவிடவும். ஊறியதும் நீரை வடித்துவிட்டுத் துணியில் ஊறவைத்து நிழலில் பாதியளவு உலர்ந்ததும் மிக்ஸியில் ஓரளவு நைஸாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை கப் நீர்விட்டு பாகுபதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டி கிளறவும்.

மாவு கெட்டிப்பதம் வந்ததும் வாணலியில் எண்ணெய் காயவைத்து காய்ந்ததும் மாவை அதிரசமாகத் தட்டிப் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடிந்தபின்பு டபராவின் பின்புறத்தில் நன்கு அழுத்தி விடவும். அதிரசம் மெலிதாக நன்றாக இருக்கும். அழுத்தாவிட்டால் உப்பலாக இருக்கும். மாவு தளர்த்தியாக இருந்தால் மட்டும் மூன்று ஸ்பூன் மைதாமாவு சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x