Last Updated : 28 Dec, 2022 08:07 PM

1  

Published : 28 Dec 2022 08:07 PM
Last Updated : 28 Dec 2022 08:07 PM

உடன்பால் Review: ஒரு வீடு... சில கதாபாத்திரங்கள்... நேர்த்தியான ஆக்கம் தரும் நிறைவான அனுபவம்!

பொருளாதார ஆதிக்கச் சமூகத்தில் நசுக்கப்படும் உறவுகளையும், அதன் ‘பூமராங்க்’ ரியாக்‌ஷனையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் ‘உடன்பால்’ படத்தின் ஒன்லைன்.

விநாயகத்திற்கு (சார்லி) பரமா (லிங்கா), பார்த்திபன் (தீனா) ஆகிய இரண்டு மகன்களும், கண்மணி (காயத்ரி) என்ற மகளும் உள்ளனர். இதில் இளையமகனான பார்த்திபன் பிரியாணி கடையும், மூத்த மகனான பரமா சிடி கடையும் நடத்துகின்றனர். பரமாவின் தொழில் கடும் நஷ்டத்தில் இருப்பதால் பொருளாதார ரீதியாக கடன் சுமையில் சிக்குகிறார். வீட்டை விற்றால் மட்டுமே கடனிலிருந்து தப்பிக்க முடியும் என்ற சூழலில், அப்பா விநாயகத்திடம் பரமா கோரிக்கை வைக்க, அது நிராகரிக்கப்படுகிறது. இறுதியில் அவர் வீட்டை விற்றாரா? கடனிலிருந்து தப்பித்ததாரா? என்ற வழக்கமான கேள்விகளைத் தாண்டி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் திருப்பங்களுடன், அழுத்தமான மெசேஜ் சொல்லும் படம்தான் ‘உடன்பால்’. டிசம்பர் 30-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது.

ஒரே வீடு; ஆறேழு முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து அயற்சியில்லாத சுவாரஸ்யமான கதையை உருவாக்கிட முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ஸ்ரீனிவாசன். படத்தின் ஆரம்பக் காட்சியில் தொடங்கி இறுதிவரை எந்த இடத்திலும் படத்திலிருந்து விலகாமல் பார்த்துகொள்ளும் நேர்த்தி கைகூடியிருப்பது படத்தின் பலம். அடுத்தடுத்த காட்சிகளில் புதுமையைச் சேர்த்து திணிப்பிலாத நகைச்சுவைக் காட்சிகளை கதையோடு இணைத்து எழுதியிருந்த விதம் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக படத்தின் களமான வீட்டில் இடம்பெற்றிருக்கும் உடைந்த கட்டிலும், நிற்க தடுமாறும் சோஃபாவும், கால்வாசி காணாமல் போன கடிகாரத்தின் ஓரமும், பெயின்ட் உதிர்ந்த சுவரும் கலை இயக்குநர் மாதவனின் உழைப்பை பேசுகிறது.

சின்ன சின்ன முகபாவனைகளாலும், டைமிங் காமெடிகளாலும், சீரியஸ் காட்சிகளில் தனக்கேயுண்டான உடல்மொழியாலும் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும் விவேக் பிரசன்னாவுக்கு இது முக்கியமான பாத்திரமும் படமும் கூட. நடுத்தர குடும்ப தந்தைக்கான உருவை வரித்து யதார்த்தமான நடிப்பில் வாழ்ந்திருக்கிறார். விநாயகம் கதாபாத்திரத்தில் அவரது தோற்றமும் அனுபவம் வாய்ந்த நடிப்பும் பளிச்சிடுகிறது. அண்ணன், தங்கையாக லிங்கா - காயத்ரி காமினேஷன் கச்சிதமாக பொருந்தி திரையை ஆக்கிரமித்திருக்கிறது. மொத்தப் படத்தையும் நகர்த்தி செல்வதில் இருவரிம் பங்கும் முக்கியமானது. லிங்கா பிரச்சினைகளை கையாளும் விதம், காயத்ரியின் போலியான அழுகை, முகபாவனை காட்சிகளை மெருகூட்டுகிறது. ‘நக்கலைட்ஸ்’ தனம் ஒருபுறம் தனக்காக கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். குழந்தை கதாபாத்திரங்களின் நடிப்பும் தேர்கிறது.

பரிணமிக்கும் உலகின் வேகத்தை பற்றி அப்டேட்டாக வேண்டியதன் அவசியம், சமூகப் பொருளாதார சூழலுக்குள் சிக்கி ஊசலாடும் உறவுகள், யதார்த்த கள நிலவரத்தை பிரதிபலிக்கும் தந்தை - மகன் - மகள் இடையிலான உறவுகள் என தான் பேச நினைப்பதை ப்ளாக் காமெடி பாணியில் பொருத்தியிருக்கிறார் இயக்குநர். பணத்தின் தேவையை யதார்த்திற்கு நெருக்கமாக முடிந்த அளவுக்கு தர்க்கப் பிழையில்லாம் சொல்லியிருக்கும் முயற்சியும், இறுதிக்காட்சியில் முகத்தில் அறையும் உண்மையும் அழுத்தம் கூட்டுகிறது. துருத்தாக காமெடியில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தை வைத்து ‘மல்லிகாவே ஒரு காம்ப்ளக்ஸ்தான்’ போன்ற வசனம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

படத்தின் பல இடங்களில் சிங்கிள் ஷாட்ஸ்களை பயன்படுத்தி நம்மை திரையிலிருந்து விலக்காமல் பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோஃபர். அதிலும் ஒரே வீட்டில் பல்வேறு கோணங்களில் மாற்றி மாற்றி கேமரா கோணங்களை வைத்து, இறுதியாக மட்டும் லென்ஸுக்கு வெயிலை காட்டியிருக்கிறார். தேவையற்ற திணிக்கும் பாடல்களை தவிர்த்து, கதையோட்டத்துடன் கலந்து ஆங்காங்கே சுவாரஸ்யத்தையும், பதற்றத்தையும் தனது பின்னணி இசையில் செவ்வேனே கூட்டுகிறார் சக்தி பாலாஜி.

மொத்தத்தில் ‘உடன்பால்’ குறைந்த பட்ஜெட்டில் அளவான கதாபாத்திரங்களை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை வழியே சொல்ல வரும் கருத்தை தடுமாற்றமில்லாமல் பதிய வைக்கும் படைப்பு.

படத்தின் ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x