Published : 02 Jul 2019 08:58 AM
Last Updated : 02 Jul 2019 08:58 AM

அன்பில் மலர்ந்த ஆதீனம்!- அறம் வளர்ப்பும், சமூக மேம்பாடுமே இரு கண்கள்

அறம் வளர்ப்பும், சமூக மேம்பாட்டுப் பணிகளையுமே இரு கண்களாகப் போற்றுகிறது திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி பேரூர் ஆதீனம். கொங்கு மண்டலத்தில் சைவ நெறியைத் தழைத்தோங்கச் செய்யும் பேரூர் ஆதீனம், சமயம், மொழி மட்டுமின்றி சமுதாயப் பணிகளிலும் முழுமையாய் ஈடுபட்டு, உலக அமைதி என்ற இலக்கை நோக்கி சப்தமின்றிப் பயணித்து வருகிறது.

ஈசனால் நந்தி தேவருக்கு உரைக்கப்பட்ட நெறிமுறைகள், நந்தியம்பெருமானால்  சனற்குமாரர், சத்தியஞான தர்சினிக்கு அருளப்படுகிறது. அவர், பரஞ்ஜோதி முனிவருக்கு எடுத்துரைக்கிறார்.  இவர்கள் நால்வரும் அகச்சந்தான குரவர்கள் எனப் போற்றப்படுகின்றனர். இவர்களுக்கு பின்னர் திருக்கயிலாய மரபுகளை முன்னிறுத்தி சமயப் பணியாற்றிய மெய்கண்டார், அருள்நந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர் புறச்சந்தான குரவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் அருளிய நெறியே சித்தாந்த சைவநெறியாகும். இந்த நெறி நமச்சிவாய சித்தர், சிவப்பிரகாச சித்தர், நமச்சிவாய மூர்த்திகள் என வழிவழியாகப் பரவியுள்ளது. பட்டீஸ்வரத்தில் தோன்றிய சிவப்பிரகாசர், திருவாடுதுறை நமச்சிவாய மூர்த்திகளை தேடி வந்துள்ளார். அவரும் பல்வேறு நெறிகளை அருளி, தனது சீடராக ஏற்றுக் கொண்டார். இந்த சமயத்தில் சிதம்பரத்தில் சைவ-வைணவ மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரம் சிவப்பிரகாசருக்கு கவலை அளித்ததால், அவர் நமச்சிவாய மூர்த்திகளிடம் முறையிட்டார். அவரது ஆணைப்படி தில்லை சென்ற சிவப்பிரகாசர், இந்த விவகாரத்தை தீர்க்க முயன்றுள்ளார். எனினும், பிரச்சினை தீரவில்லை. இதையடுத்து, வேலூர், திருவண்ணாமலை சென்று சைவப் பணி மேற்கொண்டார்.  திருவண்ணாமலையில் சிவப்பிரகாசருடன் இணைந்த சாந்தலிங்கர், பல்வேறு சமயப் பணிகளில் ஈடுபட்டார்.

17-ம் நூற்றாண்டில்...

பின்னர் சிவப்பிரகாசரிடம் உத்தரவுபெற்று, பேரூர் வந்துள்ளார். மேலைச்சிதம்பரம் என்று புகழப்படும் பேரூரில் 17-ம் நூற்றாண்டில் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனத்தை நிறுவினார் சாந்தலிங்கர். பல்வேறு அருள் செயல்களைப் புரிந்த சாந்தலிங்கர், பல நூல்களையும் எழுதியுள்ளார். தொடர்ந்து, மாணிக்க சுவாமிகள், மௌன சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள், நாச்சிமுத்து சுவாமிகள் ஆகியோர் ஆதீன குருமுதல்வர்களாக அருளாட்சி புரிந்துள்ளனர். ஏறத்தாழ 500 ஆண்டுகால பழமையான மடம்,  கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. 1900-ம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார ரீதியிலும் மடம் வலுவடையத் தொடங்கியது. இந்த  நிலையில், சத்வித்ய சன்மார்க்க சங்கம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சான்றோர்களையும் அழைத்துவந்து, மிகப் பெரிய அளவில் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பேரூர் மடத்தின் பெயர் பிரபலமடையத் தொடங்கியது. பல்வேறு நூல்களிலும் பேரூர் மடம் குறித்த தகவல்கள் இடம்பெற்றன.

சாந்தலிங்க ராமசாமி அடிகளார்!

அதன் மரபுவழியில் ஆறுமுக சுவாமிகள், குருமகா சந்நிதானமாக இருந்தபோது  இளையபட்டமாக பொறுப்பேற்றார் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். அன்னூர் அருகேயுள்ள முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த இவர், இளவயதிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். 1950-ல் இளையபட்டமாகப் பொறுப்பேற்ற இவர், திருமட வளர்ச்சிக்கு மட்டுமின்றி, கல்வி, சமயம், சமுதாய வளர்ச்சியுடன், தமிழ் வளர்ச்சிக்கும் அயராது உழைத்தார். 1967-ல் குருமுதல்வரானார் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்.

அந்த சமயத்தில் மக்களிடம் கல்வியறிவு குறைந்திருந்ததால், அரசின் உதவியுடன் 6-ம் வகுப்பு வரையுள்ள பள்ளியைத் தொடங்கினார். படிப்படியாக இது மேல்நிலைப் பள்ளியாக உருவெடுத்தது. 1977-ல் மெட்ரிக். பள்ளியும், 1999-ல் தாய்த் தமிழ்ப் பள்ளியும் தொடங்கப்பட்டன.

தமிழில் வழிபாடு, குடமுழுக்கு...

கோயில்களில் தமிழில் வழிபாடு என்பது சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நோக்கமாக இருந்தது. அதேபோல, தமிழ்க் கல்லூரி தொடங்க வேண்டுமென்றும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். 1953-ல் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தமிழில் வழிபாடு செய்யப்பட்டு, திருமடம் சார்பில் தமிழ்க் கல்லூரி தொடங்கப்பட்டது. அதுவரை தமிழகத்தில் வழிபாடுகளில் வடமொழி கொடிகட்டிப் பறந்த நிலையில், தமிழில் அர்ச்சனை முறை தொடங்கியதற்கான விதை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குன்றக்குடி அடிகளார், மறைமலை அடிகளார் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். இந்த நிலையில், தமிழில் திருமணம், தமிழில் குடமுழுக்கு என்பதை வலியுறுத்திக் கொண்டிருந்தார் குன்றக்குடி அடிகளார். இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், 1954-ல் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், கௌமார

மடம் சுந்தர சுவாமிகள் ஆகியோர் சேர்ந்து, முதல்முறையாக கணபதியில் உள்ள ஆதிவிநாயகர் கோயிலில் தமிழில் திருக்குடநீராட்டுத்திருவிழாவை நடத்தினர். இது தொடர்ந்து பரவியது. நாம் சொல்லும் மந்திரம் மக்களுக்குப் புரிய வேண்டுமென்பதும், மக்களை வேள்விச் சாலையில் பங்கேற்கச் செய்ய வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். அதேபோல, குடமுழுக்கை எளிமையான முறையில், சிக்கனமாக செய்ய வழிவகுத்ததும் அடிகளார்தான். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழ் வழியில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றுள்ளது.

3 ஆயிரம் பேருக்கு சமயப் பயிற்சி!

மேலும், ஜாதி பேதமின்றி, எல்லோரும் குடமுழுக்கை நடத்திவைக்க வேண்டுமென்று விரும்பிய அடிகளார், எல்லோருக்கும் அதற்கான பயிற்சி அளிக்கத் தொடங்கினார். பாலினம், இனம், பொருளாதாரம் என எவ்வித பேதமும் இல்லாமல், குடமுழுக்கை நடத்திவைப்பதற்கான பயிற்சி தரப்பட்டது. இதுவரை  3 ஆயிரம் பேருக்கு மேல் இந்த பயிற்சியைப் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கை நடத்திவைத்தல், புதுமனைப் புகுவிழா, திருமணம், நன்னீராட்டு விழா, மணி விழா உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழுவாக இருந்த சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முயற்சியால், புலவர் பட்டம் படித்தவர்களின் தரம் உயர்த்தப்பட்டு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையான ஊதியம், பதவி உயர்வு ஆகியவை கிடைத்தன. தமிழகப் புலவர் குழு என்ற அமைப்பு மூலம்,  தமிழ் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டார் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். ஆட்சி மொழியாக, அலுவலக மொழியாக தமிழ் இருக்க வேண்டும், தமிழ்ப் பெயர்கள் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தினார்.

தமிழ்க் கல்லூரி!

பேரூர் தமிழ்க் கல்லூரியில் 1974-75 வரை புலவர் வகுப்பு நடைபெற்றது. 1975-76-ல் நான்காண்டு பட்டப் படிப்பு தொடங்கப்பட்டு, 1980-81-ல் பி.எல். மூன்றாண்டு படிப்பாக மாறியது. தொடர்ந்து, தமிழ் எம்.ஏ., தமிழ் எம்.ஃபில், பி.ஹெச்டி, பி.காம், பி.எஸ்சி. கணணி அறிவியல், பி.ஏ. நிறுமச் செயலாண்மை, எம்.காம்., பி.எஸ்சி. கணிதம், பி.காம். (சி.ஏ.), எம்.எஸ்சி. கணிப்பொறி அறிவியல் என எண்ணற்ற படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் இங்கு பயின்று, பட்டம் பெற்றுள்ளனர்.  தமிழாசிரியர்களாக மட்டுமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போது 800-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.

அப்துல்கலாம் தலைமையில் நடந்த கல்லூரியின் 60-வது ஆண்டு விழாவில், அனைத்து இடங்களிலும் தமிழை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும், கல்வி, அலுவலகம், ஆன்மிக மையங்கள் என அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் வளர் தமிழ் இயக்கம் உருவாக்கப்பட்டது. தமிழுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போதெல்லாம், வளர் தமிழ் இயக்கம் களத்தில் இறங்கிப் போராடி வருகிறது.

அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட குழுவில், சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உறுப்பினராக இருந்தார்.  இதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்பட்டது.

தொடரும் சமுதாயப் பணிகள்...

இதேபோல, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக பல்வேறு மேம்பாட்டுப்  பணிகளை ஆதீனம் மேற்கொண்டு வருகிறது. நிறைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இயற்கைச் சீற்றத்தாலும், பராமரிப்பின்மையாலும் பழுதடைந்த 10-க்கும் மேற்பட்ட கோயில்கள் திருமடத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு நடத்திவைக்கப்பட்டுள்ளது. சிறைவாசிகள் பயனடையும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

திருவிளக்கு வழிபாடு!

மலைவாழ் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில், திருமடம் சார்பில் விளக்குகள் கொண்டுசெல்லப்பட்டு,  ஞானாம்பிகை வழிபாட்டுக் குழுவினரால் `திருவிளக்கு வழிபாடுகள்'  நடத்தப்படுகின்றன. இறைவனை வழிபட எவ்வித பேதமும் தேவையில்லை, அன்பு மட்டுமே போதும் என்பதை வலியுறுத்தவே திருவிளக்கு வழிபாடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது குடும்ப உறுப்பினர்களிடம் இணைப்பு இல்லாமல் உள்ளது. இதை மாற்றவும் இந்த வழிபாடு உதவுகிறது. அதேபோல, தமிழ்நாடு தெய்வீகப்பேரவை, அருள்நெறி திருக்கூட்டம், சாந்தலிங்கர் அருள்நெறி மன்றங்கள் மூலம் கூட்டு வழிபாடு, உழவாரப் பணி, நூல் வெளியீடு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை வழங்குதல், மலைவாழ் மக்களுக்கு புத்தாடைகளும், பொங்கல் வைபவத்தின்போது பொங்கல் வைப்பதற்கான பொருட்களும் வழங்கப்படுகின்றன. சாந்தலிங்கர் கோசாலை அறக்கட்டளை மூலம் 40 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மழை வேண்டி பூண்டி, வெள்ளியங்கிரி மலை உச்சியில், உழவர்களுடன் இணைந்து வேள்விகள் நடத்தப்படுகின்றன. 1960-ல் தொடங்கிய அன்பு இல்லம் மூலம் ஆதரவற்றக் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, இருப்பிட வசதி தந்து, நன்னெறி போதிக்கப்படுகிறது. மகளிருக்கு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல் பயிற்சிகளும், ஆண்களுக்கு மின்சாதனப் பொருட்கள் பழுதுபார்ப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

அடிகளார் வனம் அமைப்பு சார்பில் 5 கிராமங்களில் 50 ஆயிரம் மரங்களும், பள்ளி மாணவர்கள் மூலம் 2.50 லட்சம் மரக்கன்றுகளும் நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் சித்த, அலோபதி மருத்துவ முகாம்கள், மூலிகைக் கண்காட்சி, கண், பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், இதய அறுவைசிகிச்சை உள்ளிட்டவற்றுக்கும் உதவப்படுகிறது.

முனைவர் மருதாசல அடிகளார்!

தற்போது பேரூர் ஆதீனத்தின் குருமகா சன்னிதானமாக சாந்தலிங்க மருதாசல அடிகளார் பொறுப்பு வகிக்கிறார். பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள இவர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 27 நூல்களைப் பதிப்பித்து, மொழி வளர்ச்சிக்கு துணை நிற்கும் இவர், ஓலைச் சுவடிகள், அரிய நூல்களைப் பாதுகாத்து, மின்னூலாக்கும் பணிகளிலும்  ஈடுபட்டுள்ளார். உலக தாய்மொழி தினத்தையொட்டி கருத்தரங்கம், பயிலரங்கம், பேரணிகளை நடத்தி வருகிறார். மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில், பேரூர் ஆதீனக் கிளைகளை நிறுவி, தமிழ் மொழி, சமயம், சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பல நாடுகளுக்குச் சென்று உரையாற்றியும் உள்ளார்.

அகில பாரதிய துறவியர் சங்கத்தின் தலைவராக இருந்து, கும்பமேளா, மயிலாடுதுறை காவிரி புஷ்கரம், தாமிரபரணி புஷ்கர நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மாநில மரமான பனை மரத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக இருமுறை உலகப் பனைப் பொருளாதார மாநாட்டை நடத்தியுள்ளார். அவரிடம் பேசினோம்.

"அனைத்து தரப்பினரின் வீடுகளுக்கும் சென்று, பதிகங்களை ஓதி, அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்னம்பிக்கையை வளர்த்து வருகிறோம். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமிடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான `பெற்றோர் வழிபாடு' நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக கற்பித்து வருகிறோம்.

பல்நோக்கு மருத்துவமனை திட்டம்!

சித்த மருத்துவம், இயற்கை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும், மகப்பேறு மருத்துவ மையம் அமைக்க வேண்டுமென சாந்தலிங்க அடிகளார் விரும்பினார். அவரது பெயரால் அறக்கட்டளை நிறுவி, அவர் பிறந்த

ஊரான முதலிபாளையத்தில் பல்நோக்கு வசதிகளுடன் கூடிய `சாந்தலிங்கர் மருத்துவமனை' அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஏறத்தாழ ரூ.50 கோடி மதிப்பில், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு உன்னத மருத்துவ வசதி வழங்கும், உலகத் தரமான மருத்துவ மையமாக இது திகழும். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, வெளிநாடுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், இங்கு வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க இசைவு தெரிவித்துள்ளனர். வரும் மார்ச் மாதத்தில் முதல்கட்ட மருத்துவ செயல்பாடுகள் தொடங்கும்.

உலகம் முழுக்க சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்பதே பேரூர் ஆதீனத்தின் நோக்கம். அன்போடு வழிபாட்டால் இறைவனை அடையலாம்.  அன்பின் மூலம் உலக சமாதானத்தை எட்டுவதே எங்கள் இலக்கு. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை தடுக்க முடியாது. அந்த தொழில்நுட்பத்தைக் கையாளக் கூடியவர்களை தரப்படுத்திவிட்டால், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். சரியான முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இளைய தலைமுறையைப் பக்குவப்படுத்த முடியும். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இளமையில் இருந்தே குழந்தைகளைப் பக்குவப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தையும், ஒழுக்கக் கல்வியையும் போதிக்க வேண்டும். இளைய தலைமுறையை சமுதாய, தேச நலன் சார்ந்த பாதைக்குத் திருப்ப இது உதவும்" என்றார் நம்பிக்கையுடன் மருதாசல அடிகளார்.

சமயம், கல்வி, மொழி, சமூக நலன் என வாழையடி வாழையாக தொடரும் குருமரபை போற்றிப் பாதுகாக்கும் பேரூர் ஆதீனம், மகேசன் சேவையுடன், மக்கள் சேவையையும் மேற்கொள்வதுடன், அடுத்த தலைமுறையை நன்னெறி சார்ந்த சமூகமாக மாற்றுவதற்கும் முயற்சித்துவருவது, மதம், சமயம், ஜாதி பேதமின்றி அனைவராலும் போற்றப்படுகிறது!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x