Published : 05 Jun 2019 11:13 AM
Last Updated : 05 Jun 2019 11:13 AM
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஐஎல் & எப்எஸ் நிறுவனத்தின் கணக்கு, வழக்குகளை தணிக்கை செய்த ஆடிட்டர்கள் (தணிக்கையாளர்கள்) மீது நடவடிக்கை எடுக்குமாறு தீவிர நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் (எஸ்ஐஎஃப்ஓ) மத்திய அரசு நிறுவனம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் ஏற்பட்ட இழப்புகளை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஐஎல்&எப்எஸ் நிறுவனத்தின் உள் தணிக்கை நடவடிக்கையை ரிசர்வ் வங்கியின் தலைமையின் கீழ் குழு ஒன்றை நியமித்து கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்த தணிக்கையாளர்களை கண்டு பிடிக்க வேண்டும். அத்துடன் இந்த தவறு வெகு தாமதமாக வெளி வந்ததற்கான காரணத்தை அறிய வேண்டும் என்றும் எஸ்ஐஎஃப்ஓ வலியுறுத்தியுள்ளது.
ஐஎல் & எப்எஸ் நிதி சேவை நிறுவனத்தில் தவறான கணக்குகளை காட்டி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன, இதற்கு நிறுவன சட்ட விதிகளின்கீழ் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்நிறுவனம் தொடர்பாக முதலாவது குற்றப் பத்திரிகையை எஸ்ஐஎஃப்ஓ தாக்கல் செய்துள்ளது. இதில் 9 பேரடங்கிய குழுதான் மிகப் பெரிய மோசடிக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. சில தணிக்கையாளர்கள் மற்றும் பொறுப்புகள் இல்லாத இயக்குநர்கள் ஆகியோர் கூட்டு சேர்ந்து மிகப் பெரிய மோசடியை செய்துள்ளனர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த குற்றப் பத்திரிகையானது இந்நிறுவனத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பிறகே தயாரிக்கப்பட்டுள்ளது. ஐஎல்&எப்எஸ் நிதிச் சேவை நிறுவனம் அதன் தாய் நிறுவனமான ஐஎல்&எப்எஸ் ஆகிய நிறுவனங்களில் மோசடி நிகழ்ந்ததன் மூலம் நிறுவனத்தின் வாராக் கடன் ரூ. 90 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதை விசாரித்த எஸ்ஐஎஃப்ஓ மூன்று முக்கியமான பரிந்துரைகளை அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த குறிப்புகளில் 2015-ம் ஆண்டிலிருந்தே இந்நிறுவனம் உரிய நிதி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்புகள் மிகவும் தவறாக கணக்கிடப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் எஸ்ஐஎஃப்ஓ சுட்டிக் காட்டியுள்ளது.
நிதிச்சேவை நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படவில்லை. அத்துடன் தவறுகளை திருத்தி சரியாக செயல்படுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் அது தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியிட்ட கடிதத்தில் குழும நிறுவனங்களின் நிகர சொத்து நிதி (என்ஓஎஃப்), சிஆர்ஏஆர் ஆகியன ஆர்பிஐ விதிகளுக்குட்பட்டு இல்லை என தெரிவித்து அதற்கு விளக்கம் அளிக்குமாறு ஆர்பிஐகடிதம் அனுப்பியுள்ளது. இந்த சமயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று எஸ்ஐஎஃப்ஓ சுட்டிக்காட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி தனது தணிக்கையாளர் குழுவை அனுப்பி இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் விதமாக உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
2017-18-ம் ஆண்டு வரை தணிக்கை செய்த டிலாய்ட், ஹஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ், பிஎஸ்ஆர் அண்ட் அசோசியேட்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்றும் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது.
மிகப் பெரிய நிதி மோசடி கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிறுவனம் கடனை திரும்ப செலுத்தத் தவறியதிலிருந்து நிறுவனத்தின் பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிறுவனம் வங்கி மற்றும் நிதிநிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 90 ஆயிரம்கோடியாகும். இதையடுத்து அரசு தலையிட்டு புதிய இயக்குநர் குழுவை நியமித்தது.வங்கியாளர் உதய் கோடக் நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் எஸ்ஐஎஃப்ஓ மொத்தம் 30 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட சிலர் ஏற்கெனவே நீதிமன்றக் காவலில் உள்ளனர். நிர்வாக தரப்பில் ரவி பார்த்தசாரதி, ஹரி சங்கரன், அருண் சாஹா, ரமேஷ் பாவா, விபப் கபூர், கே. ராம்சந்த் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT