Published : 20 May 2019 12:01 PM
Last Updated : 20 May 2019 12:01 PM
ஜெமினி தனா
எப்போதும் வேலை வேலை என்று இயங்கிக்கொண்டிருக்கும் இல்லத்தரசிகளே. கோடை விடுமுறையில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள்? “குழந்தைகளோடு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கிறேன். உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லப் போகிறேன். எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களோடு எங் கெல்லாம் செல்லவேண்டும் என்று யோசித்து வருகிறேன். குழந்தைகளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடப் போகிறேன். குழந்தைகளோடு விளையாடப் போகிறேன். இடையில் குழந்தைகளை சம்மர் க்ளாஸில் சேர்க்கப் போகிறேன். குழந்தைகளோடு வீட்டை சுத்தம் செய்து தேவையற்ற பொருள்களை வெளியேற்றப் போகிறேன்.”
இவைதான் பிரதானமான பதிலாக இருக்கும். ஆனால் இந்த வருடம் முதல் கோடை விடுமுறையில் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உரிய காரணமில்லாமல் இல்லை. செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு செய்தாலும் கூட தொடர்ந்து நெருக்கும் வேலைகளை முடிக்க முடியாமல் நாளை செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதையே அதிகம்பேர் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமானது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது.
லேசான தலைவலிதான் என்று வலி அதிகமாகும் வரை மருத்துவரிடம் செல்வதை தள்ளிப்போடுகிறோம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நேரும் ஆரோக்கியக் குறைபாடு கூட நாளடைவில் சரியாகிவிடும் என்று நேரமின்மையால் தள்ளிப்போடும் பெற்றோர்களும் உண்டு.
தருணுக்கு 9 வயது. பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வகுப்பறையில் கரும்பலகையில் எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை என்று அழுதான். வேலைக்கு நடுவில் அவன் வகுப்பாசிரியரைச் சந்தித்து தருணின் பிரச்சினையைச் சொல்லி முதல் பெஞ்சில் உட்கார வைக்கச் செய்தும் பிரச்சினை தீரவில்லை. கண் டாக்டரிடம் காண்பிக்க வேண்டுமென்றால் ஒருநாள் அதற்கென ஒதுக்கியாகவேண்டும்.
அலுவலகத்தில் ஆடிட்டிங் நேரம் என்பதால் இருவருக்குமே லீவு கிடைப்பதில் சிரமம். முதலில் மருத்துவரை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்க வேண்டும். அவர் சொல்லும் நேரத்தில் சென்று சிகிச்சை முடியும் வரை காத்திருக்க வேண்டும். தலைபோகும் பிரச்சினை இல்லை என்பதால் இப்போதைக்கு சமாளித்துக் கொள் என்று தருணை சமாதானம் செய்து விடுமுறை விட்ட அடுத்த நாளே கண் மருத்துவரிடம் சென்றார்கள்.
தருணுக்கு மட்டுமல்ல பெரும்பாலான குழந்தைகள் இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.
குழந்தைகளுக்கு கண் கோளாறு ஏற்பட காரணங்களைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. மாறிய உணவு பழக்கத்தால் ஏற்பட்ட ஊட்டச்சத்து குறை பாடு, கண்களுக்கு ஓய்வே கொடுக்காமல் கண்களைக் கூச செய்யும் செல்ஃபோன், வீடியோ கேம்ஸ் போன்ற தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமையானது என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால்தான் தலைவலி, கண்களில் நீர் வடிதல், கண் பார்வையில் தெளிவின்மை முதலான குறைபாடுகள் பெரும்பாலான குழந்தைகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. தொடர்ந்து கிடைக்கும் விடுமுறை நாளில் கண் மருத்துவரிடம் சென்று உங்கள் குழந்தைக்கு பொதுவான கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பொதுவாக தடுப்பூசிகள் 12 வயதுவரை போடவேண்டும் என்று மருத்துவ அட்டவணை தெரிவிக்கிறது. டே கேர் பள்ளிகளிலும், மழலையர் வகுப்பிலும்தான் வளரும் குழந்தைகளின் நேரங்கள் கழிகிறது. பொதுவாக தடுப்பூசிகள் போட்டு 2 நாட்கள் வரை குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படியே இருந்தாலும் குழந்தைகள் வலியால் அடுத்த 2 நாட்கள் பள்ளிக்கு மட்டம் போடவே முயற்சிக்கிறார்கள். இதனால் தொடர்விடுமுறை சங்கடத்துக்கு உள்ளாகும் பெற்றோர்கள் உரிய காலத்தில் தடுப்பூசி போட இயலவில்லை என்றாலும் அதற்குத் தோதாக அந்த உரிய வயது இருக்கும்போது, அடுத்து வரும் விடுமுறை காலத்தில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் போட்டு விடலாம்.
பெண் குழந்தைகள் பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாததால் இயற்கை உபாதையை அடக்கிக் கொள்வார்கள் என்பதுதான் தற்போதைய உலகின் சாபக்கேடு. இதனால் நீர் சுளுக்கு, சிறுநீரகத்தில் தொற்று, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அடிக்கடி இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படும் குழந்தைகளை சிறுநீரகவியல் நிபுணரிடம் அழைத்துச்சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அவர்கள் வளர்பருவத்தில் இந்தப் பிரச்சினையால் தீவிரமாக பாதிப்புக்குள்ளாவதைத் தடுத்து விடலாம்.
இன்னும் சில குழந்தைகள் பள்ளி நாட்களில் வயிற்றுப்போக்கு, வயிறு வலி என்று அவ்வப்போது அவதிப்படுவார்கள். ஃபாஸ்ட் புட் உணவு, அரைவேக்காடு உணவு, அவசர உணவு என்று வயிற்றுக்குத் தேவையான போதிய உணவை எடுத்துக் கொள்ளாததால் இத்தகைய பிரச்னைகளைச் சந்திப்பார்கள். உங்கள் குழந்தைகள் அவ்வப்போது வயிறு வலி, வயிற்று போக்கு பிரச்சினையைச் சந்தித்தால் இந்த விடுமுறையில் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். வயிறு வலி உபாதைதான் பெரும்பாலான நோய் களின் தொடக்கமாக இருக்கிறது.
வயிற்றில் பூச்சிகள் அதிகம் இருந்தாலும் வயிறு வலி வரும். குறிப்பாக அதிக இனிப்புகள் சாப்பிடும்போது வயிற்றில் பூச்சிகள் அதிகரிக்கிறது. சாக்லெட், இனிப்புகளை அதிகம் விரும்பி சாப்பிடும் குழந்தைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றுப் பூச்சிகளை அழிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகிறார் கள். இந்த விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையோடு வயிற்றுப்பூச்சுகளை நீக்கும் மாத்திரையைக் கொடுக்கத் தவறாதீர்கள்.
வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை போல சில குழந்தைகளுக்கு வாரம் ஒருநாள் சளி, காய்ச்சல், இருமல் என மாறி மாறி வந்து பாடாய்படுத்தும். தகுந்த குழந்தை நல மருத்துவரைச் சந்தித்து அவர்களை முழுமையான பரிசோதனை செய்து காரணத்தைக் கண்டறியுங்கள். தொடர் சளியும், விடாத இருமலும் முக்கிய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு ஹீமோகுளோபின் அளவு, வைட்டமின் குறைபாடு போன்றவற்றைக் கண்டறியும் பரிசோதனைகளை செய்வதும் நல்லது. உங்கள் குழந்தை சுறுசுறுப்பின்றி மந்தமாக இருக்கவும், உடல் சோர்வு என்று சுருண்டு கொள்வதும் இத்தகைய குறைபாட்டின் அறிகுறியாகவும் கூட இருக்கலாம். குழந்தைகளோடு நீங்களும் இத்தகைய பரிசோதனை செய்து கொள்ளலாம். உடல் சோர்வும் மந்தமும் உங்களையும் பாதிக்கத்தானே செய்கிறது.
அடுத்ததுதான் மிக முக்கியமானது. பெரும்பாலான குழந்தைகள் அவதிப்பட காரணம் உடல் பருமன். அதிக அளவு பருமனை மருத்துவரின் ஆலோசனையுடனும் தகுந்த உணவுக் கட்டுப்பாட்டிலும் சரிசெய்ய உகந்த காலம் இந்த கோடை விடுமுறைதான். சற்றே பூசிய உடல் வாகு என்றாலும் அதற் கு உண்டான பயிற்சியை கோடையில் கற்றுக்கொடுத்துவிடுங்கள். நீச்சல் பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது, அதிகளவு தண்ணீர் குடிப்பது, சமச்சீர் சத்துக்கள் நிறைந்த உணவை சரியான நேரங்களில் தருவது, நவீன உணவுகளைத் தவிர்ப்பது, குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையில் உடல் பருமன் அதிக மானால் ஏற்படும் விளைவை எடுத்துச் சொல்வது என்று வருடம் முழுவதும் அவர்கள் கட்டுப்பாடாய் இருக்குமளவு கோடையிலேயே தயார்படுத்தி விடுங்கள்.
மேற்சொன்ன காரணங்கள் அனைத்துமே குழந்தைகள் சந்திக்கும் பொதுவான ஆரோக்கியக் குறைபாடுகள்தான். பெற்றோர்கள் பொறுப்பானவர்களாய் இருந்தாலும் காலமும் பணிச்சூழலும் நேரமின்மையும் உரிய நேரத்தில் குழந்தைகளின் பிரச்சினைகளைக் கவனிக்க முடியாமல் செய்துவிடுகிறது என்பதே உண்மை.
கோடை விடுமுறையில் உறவினர் வீடு, விசேஷங்கள், சுற்றுலா, வீடு பராமரிப்பு பணி என்று திட்டமிடுவது போல், குழந்தைகள் மற்றும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு திட்டமிடுங்கள். அதற்கென பிரத்யேகமாக நாட்களை ஒதுக்கி வையுங்கள். உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமானவராகவே இருக்கலாம். ஆனால் கிடைக்கும் தொடர் விடுமுறையில் குறிப்பிட்ட நாள்களை ஒதுக்கி அலைச்சலில்லாமல் பரபரப்பில்லாமல் தேவைக்கான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமே.
பெருகி வரும் புது நோய்கள் இருக்கட்டும். இருக்கும் நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT