Published : 02 Jan 2018 12:03 PM
Last Updated : 02 Jan 2018 12:03 PM

திருக்கண்ணங்குடி விழுதுகள் சங்கமம்: வாரிசுகளை சேர்த்துவைத்த வாட்ஸ் - அப்

ரே வகுப்பில் ஒன்றாய் படித்த மாணவர்கள் எப்போதாவது எங்காவது சந்திக்க நேர்ந்தால் தங்களின் ஆரம்பகால நினைவுகளை ஆனந்தமாய் அசைபோடுகிறார்கள். அதற்காகவே இப்போதெல்லாம் முன்னாள் மாணவர்களின் சங்கமங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இப்போது நான் சொல்லப் போவது அதுவல்ல.. இது, 6 தலைமுறைச் சொந்தங்கள் கூடிக் களித்த உறவுகளின் திருவிழா!

விழுதுகளின் சங்கமம்

’திருக்கண்ணங்குடி விழுதுகளின் சங்கமம் 2017’ - வித்தியாசமான இந்தக் கையேட்டை திருவாரூர் ஹோட்டல் ஒன்றில் எதார்த்தமாகத்தான் பார்த்தேன். நிச்சயம் இதில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என்று தோன்றியது. அந்த சங்கம நாளில் நானும் அங்கு இருந்தேன்.

அந்த அரங்கத்தை நோக்கி கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டும், பெரியவர்களை மெல்லக் கைபிடித்து அழைத்துக் கொண்டும் குடும்பம் குடும்பமாக பலரும் வந்துகொண்டே இருந்தனர். இப்படி வந்தவர்களில் ஒரு குடும்பத்தினர் இன்னொரு குடும் பத்தைப் பார்த்தபோது உள்ளுக்குள் அத்தனை ஆனந்தம். அதன் வெளிப்பாடு அவர்களது கண்களில் அத்தனை பிரகாசமாய்த் தெரிந்தது.

6 தலைமுறைச் சொந்தங்கள்

அவர்களுக்குள் நடந்த வாஞ்சையான விசாரிப்புகளும், அதைத் தொடர்ந்து எழுந்த சிரிப்பொலிகளும் கூட்டுக்குத் திரும்பிய பறவைக் கூட்டத்தின் குதூ கலத்தை ஞாபகப்படுத்தின. இறைவணக்கம், வரவேற்புரை என நற்பணிமன்ற நிகழ்ச்சிகள் போல நகரத் தொடங்கியது அரங்கம். அங்கிருந்த பெண்மணி ஒருவரிடம், “நீங்களெல்லாம் யார்.. இங்கே எதற்காக கூடியிருக்கிறீர்கள்?” என்று மெல்லக் கேட்டேன்.

“இங்க கூடியிருக்கிற நாங்க எல்லாரும் 6 தலை முறைச் சொந்த பந்தங்கள். வாட்ஸ் - அப் மூலமா ஒருத்தர ஒருத்தர் கண்டுபிடிச்சு இன்னைக்கி இங்க கூடியிருக்கோம் தம்பி..” என்று சொல்லி, சங்கம குதூகலத்தில் கரைந்தார் அந்தப் பெண்மணி.

சவுந்தரம் - சம்பந்தம் முதலியார்

அந்தப் பெண்மணி என்னிடம் கொடுத்த புத்தகத்தைப் புரட்டி, அந்த அரங்கை நிறைத்திருந்த அனைவருமே திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த சம்பந்தம் முதலியார் - சவுந்தரம் தம்பதியின் வழிவந்த வாரிசுகள் என்பதை புரிந்துகொண்டேன். அரங்கில் நிகழ்ச்சியை தொகுத்த நிவேதிதா, ஒவ்வொரு குடும்பமாக மேடைக்கு வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளச் சொன்னார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் வரிசையாய் வந்து சங்கிலித் தொடர்போல தங்களது மூதாதை யர்களின் பெயர்களைச் சொல்லி தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.

திருவாரூர் தொடங்கி திருச்சி, சென்னை மட்டு மில் லாது சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என நாடு கடந்த முகவரிகளையும் சொல்லி தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள் சிலர். அங்கிருந்த மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யவும் மறக்கவில்லை.

ஆர்ப்பாட்டமானது அரங்கம்

உறவுகளுக்குள் இன்னும் நெருக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக, யாருக்கு யார் என்ன உறவு என்று கண்டுபிடிக்கும் போட்டியும் களைகட்டியது. மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் சீசன். ஆட்டம் பாட்டம் என ஆர்ப்பாட்டமானது அரங்கம். பெரியவர்களும் குழந்தைகளாய் மாறி தங்களது திறமைகளைக் காட்டி உற்சாகம் அடைந்தனர். ‘இங்கு கூடியிருக்கும் நமது உறவுகளுக்காக, 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண் டும் நான் நடனமாடுகிறேன்’ என்று சொல்லி அழகாய் அபிநயம் பிடித்தார் 43 வயது நிவேதிதா.

தனக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நடந் ததைக்கூட மறந்துவிட்டு ’ஜிமிக்கிக் கம்மலுக்கு’ ஆடினார் 53 வயது தேன்மொழி. நிறைவாக, இந்த நிகழ்வுக்கு வந்திருந்த மூத்த உறுப்பினர் (100 வயது) மன்னார்குடி வைத்தியநாதன் பாராட்டப்பட்டார். அவருக்கு ஜனவரியில் நடக்கும் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இதேபோல் சொந்தங்கள் அனைத் தும் திரளாக கலந்துகொள்வது என்ற தீர்மானத்துடன் சங்கம விழா நிறைவுக்கு வந்தது.

திருக்கண்ணங்குடி விழுதுகள்

இந்த நிகழ்வு குறித்து ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா நம்மிடம் பேசினார். ‘‘எங்க அம்மா விஜயாவுக்கு இப்ப 63 வயது. அவர் யார் வீட்டு ஃபங்ஷனுக்குப் போனாலும் யாரையாவது தேடிப்பிடிச்சு, ‘இவர் நமக்குச் சொந்தம்’ என்பார். அதுபோல நாமும் சொந்த பந்தங்களை மெனக்கெட்டு தேடிப்பிடிச்சா என்னன்னு தோணுச்சு. அதுக்கான ஆராய்ச்சியில் இறங்கினப் பத்தான், சவுந்தரம் பாட்டியைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன்.

சவுந்தரம் பாட்டி 1860-களில் வாழ்ந்தவங்க. அவங் களுக்கு ஒன்பது பெண்கள் உள்பட பத்துக் குழந் தைகள். அதுல ஒருத்தர் எங்க அம்மாவோட பாட்டின்னு தெரிஞ்சுது. அப்படியே பத்துப் பேரோட வாரிசுகளையும் கண்டுபிடிச்சா என்னன்னு தோணுச்சு. அதுக்காக நானும் அம்மாவும் சேர்ந்து, ‘திருக்கண்ணங்குடி விழுதுகள்’னு வாட்ஸ் - அப்ல ஒரு குழுவை உருவாக்கினோம்.

சீக்கிரமே கண்டுபிடிப்போம்

அதுல, எங்களுக்குத் தெரிஞ்ச எங்க உறவுக்காரங்க 50 பேரை மட்டும்தான் முதலில் சேர்த்தோம். மறுநாளே அந்த எண்ணிக்கை 150 கடந்திருச்சு. இப்ப 256 பேர் இருக்காங்க. இனிமே இன்னொரு குழுதான் ஆரம்பிக்கணும். வாட்ஸ் - அப் வசதியில்லாத சிலரது போன் நம்பர்களும் கிடைச்சுது. அவங்களயும் இது சம்பந்தமா தொடர்பு கொண்டு பேசியதும் ஏக குஷியா கிட்டாங்க. இந்த நிகழ்ச்சிக்காக 6 மாதமா திட்டமிட்டோம்.

எதிர்பார்த்ததைவிட சிறப்பாவும் நெகிழ்ச்சி யாவும் சங்கமம் நிகழ்ச்சி நடந்து முடிஞ்சிருக்கு. இன்னிய தேதிக்கு சவுந்தரம் பாட்டியோட உறவுகள் மொத்தம் 356 பேர் இருக்காங்க. அதுல முக்கால்வாசிப் பேரை கண்டுபிடிச்சாச்சு. எஞ்சியவங்களையும் சீக்கிரமே கண்டுபிடிச்சிருவோம்” என்றார் நிவேதிதா.

தொடர்ந்து பேசிய அவரது அம்மா விஜயா, “சவுந்தரம் பாட்டியின் வாரிசுகள்ல நிறையப் பேரு வெளிநாடுகள் லயும் இருக்காங்க. எங்க சொந்தக்காரங்களை ஒவ்வொருத்தரா தேடிக் கண்டுபிடிச்சப்ப தாங்க முடியாத சந்தோசம்.

vijaya.jpg விஜயா

ஆல மரத்தைத் தாங்கும் விழுதுகளாட்டம் எங்க குடும்ப விருட்சத்தைத் தாங்கும் விழுதுகளான சொந்த பந்தங்களை ஓரிடத்தில் சங்கமிக்க வைத்தததை எங்கள் முன்னோருக்குச் செய்யும் மரியாதையாவே நினைக்கிறோம்.

இனிமேல், ரெண்டு வருசத்துக்கு ஒருமுறை எங்களோட வாரிசுகள் எங்க முன்னோருக்கு மறக்காம இந்த மரியாதையைச் செலுத்துவாங்க” என்றார். சமூக வலைதளங்களை ஊடகமாக்கி சிலர் ஏதேதோ சர்ச்சைகளை கிளப்புகிறார்கள்.

சவுந்தரம் பாட்டியின் வழிவந்த வாரிசுகள் தங்களது உறவுகளைத் தேடிப் பிடிக்கும் ஊடகமாக வாட்ஸ் - அப்பை பயன்படுத்தி யிருக்கிறார்கள். அதற்காக நாமும் அவர்களை வாழ்த்துவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x