Published : 26 Aug 2015 10:38 AM
Last Updated : 26 Aug 2015 10:38 AM

மக்களைக் கவர்வதற்கே நிதி

யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டியது ‘பிரதமரா, கட்சித் தலைவரா?’ என்கிற தலையங்கம். தேர்தலை மனதில்கொண்டு பிஹார் மக்களைக் கவர்வதற்காகவே 1.65 லட்சம் கோடி ரூபாய் அளிக்க முன்வருகிறார் என்பதே உண்மை.

பிஹாரில் நிதிஷ்குமாரோடு இணைந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் பாஜகவினர். பிஹாரின் வளர்ச்சியின்மைக்குக் காரணம் ஏதோ நிதிஷ்குமார் மட்டுமே எனச் சொல்வது வேடிக்கையானது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸின் ஊழல் காரணமாகவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பாஜக, தற்போது ஊழலைப் பற்றிப் பேச தகுதியற்றதாகிவிட்டது. மேலும், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன.

எனவேதான், பிஹாரின் வளர்ச்சி எங்களது கையில்தான் என்கிற பிம்பத்தை நிலைநிறுத்த பாஜக முயற்சிக்கிறது. எனவே, இந்த நிதியை வழங்குவதன் மூலமாக மோடி கட்சித் தலைவராகவே தெரிகிறார்.

- வ.சேதுராமன்,மன்னார்குடி.

***

மோடியின் நடவடிக்கையைப் பார்க்கும்போது ‘ஆடு மேய்த்த மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு’என்ற கிராமத்துப் பழமொழியே நினைவுக்கு வருகிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள, நம் மாநிலத்தின் மேல் அக்கறைகொள்ளப் பிரதமர் இருக்கிறார் என்பதைக் காட்டி, மக்களின் ஆதரவைப் பெறும் முயற் சியே இந்தச் சிறப்பு நிதி வழங்கல். பிரதமரின் கவனம், தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறது.

கட்சியின் மாநில அமைப்புகள் இருக்கும்போது மோடி பிஹார் தேர்தலில் நேரடியாகத் தலையிடுவது, மத்திய ஆட்சியில் காணப்படும் மோடியின் ஆக்கிரமிப்பு, மாநில நிர்வாகத்திலும் கால்பதிக்கத் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x