Published : 26 Aug 2015 10:39 AM
Last Updated : 26 Aug 2015 10:39 AM

மாணவரைத் தண்டிப்பது கூடாது

கல்வி உரிமைச் சட்டத்தில் தண்டனை ஒழிப்பு, எட்டாம் வகுப்பு வரை தக்கவைக்கத் தடை ஆகியவை பெரும்பான்மையான பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவை. அச்சம் ஒன்றே ஒரு மாணவரைக் கற்கத் தூண்டும் என்ற கருத்து அனைவரிடமும் ஊறிக்கிடக்கின்ற எண்ணத்தின் அடிப்படையே.

இந்த வழிமுறைகள் ஒரு மாணவரது கற்றலை மேம்படுத்தும் என்று எந்த ஆய்வும் கூறவில்லை. மாறாக, பள்ளி விலகலுக்கும் முரட்டுத்தன்மைக்கும் வழிவகுக்கும் என்பதே உண்மை. தன் வயதுக்கும் குறைந்த மாணவரோடு கற்க வைப்பது உளவியல்ரீதியாக அந்த மாணவரிடம் பள்ளி அமைப்பின் மீதே சலிப்பையும் உள்ளார்ந்த கோபத்தையும் ஏற்படுத்தும்.

ஒரு மாணவர் தினமும் பள்ளிக்கு வந்து 35 மதிப்பெண்கூடப் பெற இயலவில்லையென்றால், குறை எங்கிருக்கிறது என்று காண்பதுதானே முறை. கற்பிக்கிற ஆசிரியர்களுக்கும் பொறுப்பு வேண்டும்தானே? பாடத்திட்டமும் தேர்வு முறையும் மாணவர் சார்பாக அல்லவா இருக்க வேண்டும். படித்த நடுத்தரக் குடும்பங்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இன்றைய கல்விமுறை அமைந்துள்ளது.

பள்ளிப் பருவத்தில் சாதாரணமாக இருந்த பலரும் பின்னர் கற்றலில் தேர்ந்தவராவது இயற்கை. மேலும் அனைத்து மாணவரும் ஒரே வீட்டுச் சூழலில் இருப்பார்கள் என்ற அடிப்படையிலேயே கற்பித்தல் நடைபெறுகிறது.

வீடே இல்லாத மாணவர், வீட்டில் பெற்றோர்க்குத் துணையாக இருக்கும் மாணவர், பெற்றோரது கற்றல் நிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்படாது பள்ளி முறை செயல்படுகிறது. போதிய ஆசிரியர் இன்மையும் மாணவரது கற்றலைப் பாதிக்கும். நிர்வாகத்தின் போதாமைக்கு மாணவரைத் தண்டிப்பது ஏற்புடையதல்ல.

- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x