Published : 07 Jun 2019 09:24 am

Updated : 07 Jun 2019 09:24 am

 

Published : 07 Jun 2019 09:24 AM
Last Updated : 07 Jun 2019 09:24 AM

இப்படிக்கு இவர்கள்: அறிவியல் எழுத்தறிவில் நமது நிலை

அறிவியல் எழுத்தறிவில் நமது நிலை

நமது இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக, அறிவியல் அறிவை வளர்ப்பதை வரையறுக்கிறது. செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்தன, புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்வு, மூளை மாற்று அறுவைசிகிச்சையில் வெற்றி, விண்கலம் விண்ணில் சீறிப் பாய்ந்தது என அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

ஆனால், அச்செய்திகளின் பின்னணியில் உள்ள அறிவியல் அடிப்படை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாம் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலான அறிவியல் மாணவர்களே இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது பெருந்துயரம். வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் இதே நிலைதான். அறிவியல்சார் எழுத்தறிவு என்பது அறிவியல் அறிஞர்களும் மாணவர்களும் மட்டுமே பெற வேண்டிய ஒன்றல்ல. அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையான ஒவ்வொரு விஷயமும் எளிய வடிவில் அனைவரையும் சென்றடைய வேண்டும்.

அறிவியல்சார் எழுத்தறிவு நம் சமூக வாழ்வை முழுமையாக்க வழிவகுக்கும். நாம் அறிவியல் பார்வையோடு விவாதிக்கத் தொடங்கும்போது, அது பரந்த அளவில் சமூக அரசியல் தளத்தில் தெளிவான முடிவுகள் எடுக்க உதவும். தனிமனித அறிவியல் ஞானம் என்பது கண்டுபிடிப்புகளைத் தாண்டி, சமூகத்தைப் பண்படுத்த உதவும். அறிவியல் அறிவைப் பெறுவதே ஒரு சுகானுபவம். இலக்கியங்கள் காட்டிய அழகில் திளைத்த நாம், அறிவியல் காட்டும் அழகையும் ரசிப்போமே!

- பெ.மகேந்திரன், காவல் துறைக் கண்காணிப்பாளர், சென்னை.

இந்து தமிழின் செய்தியைப் பரவலாக்குவோம்

தண்ணீர் தொடர்பாகத் தொடர்ந்து வெளிவரும் தரவுகளும் செய்தித் தொகுப்புகளும், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவை. தண்ணீர்ப் பஞ்சத்தில் அல்லாடும் நாம் இதுபோன்ற செய்திகளால் விழிப்புணர்வு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். சமூக அக்கறையோடு தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை எளிமையாகவும் அடர்த்தியான விஷயங்களோடும் மக்களிடம் கொண்டுசேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இச்செய்திகளைப் பரவலாகக் கொண்டுசேர்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் செய்தியைக் கொண்டுசெல்லும் பணியை நான் தொடங்கிவிட்டேன். நீங்கள்?

- இரா.முத்துக்குமரன், தஞ்சாவூர்.

இப்படியும் தண்ணீர் சேமிக்கலாம்

வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து, அதன் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கிணற்றுக்குள் விடலாம். கிணற்றுத் தண்ணீரைத் தொட்டிகளில் ஏற்றிப் பயன்படுத்தும்போது சமையல் அறையிலிருந்து வெளியேறும் நீரை மரங்களுக்குப் பாய்ச்சலாம். குளியலறையில் பயன்படுத்தும் நீரை வடிகட்டி கழிப்பறையில் பயன்படுத்தலாம்.

வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சாக்கடையில் கலக்கவிடாமல் கழிவுநீர்க் குழிகள் அமைத்து அதனுள் விடலாம். அதனால், பெரும்பான்மையான நீரை நிலம் உறிஞ்சிவிடும். இதுபோல, அதிகபட்ச அளவில் நீர்ப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் விழித்துக்கொள்ள வழிவகுக்க வேண்டும்.

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.


இப்படிக்கு இவர்கள்அறிவியல் எழுத்தறிவுஇந்திய அரசமைப்புச் சட்டம்இந்தியக் குடிமக்கள்தண்ணீர் சேமிக்கலாம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author