Last Updated : 06 Dec, 2022 06:47 AM

Published : 06 Dec 2022 06:47 AM
Last Updated : 06 Dec 2022 06:47 AM

டிசம்பர் 6இன் பேசுபொருள்

மேற்கிந்தியத் தீவுகள் ஒன்றில், இந்திய வம்சாவளியில் பிறந்தவரும் 2001இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான வி.எஸ்.நைபால், 1960-களில் இந்தியாவின் வட கோடியிலிருந்து தென் கோடிவரை (ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட) பயணித்து, அங்குள்ள வாழ்க்கை நிலைமைகள், கட்டிடச் சிறப்புமிக்க கோயில்கள், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ள சாதி அமைப்பு, ஆன்மிகவாதிகள் எனக் காட்டிக்கொள்ளும் துறவிகளின் போலித்தனம், வறுமை முதலியன பற்றி, ‘இருள் சூழ்ந்த பகுதி’ (An Area of Darkness) என்ற பெயரில் பயணக் கட்டுரைகளை 1964இல் ஒரு நூலாக வெளியிட்டார்; அன்றைய மத்திய அரசு அந்நூலைத் தடைசெய்தது.

ஆனால், 1990-களிலேயே வலதுசாரிக் கொள்கை கொண்டவராக மாறிவிட்ட நைபால், டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 2004 பிப்ரவரியில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ‘பாபர் மசூதி இடிப்பு, இந்திய மக்களில் பெரும்பான்மையினராக உள்ளவர்களின் வேட்கை, அது இனி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் தொடக்கமாக இருக்கும்’ என்று கூறினார். அந்த ஆக்கபூர்வமான விளைவுகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

காங்கிரஸில் பெரும்பான்மைவாதம்: இந்துத்துவத்துக்கான மூலவேர்கள் இந்தியாவில் நீண்ட காலமாகவே இருந்துவந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் வலதுசாரிப் பெரும்பான்மைவாத ஆதரவாளர்கள் கணிசமானோர் இருந்துள்ளனர். சில இந்துப் பண்பாட்டுக் கூறுகளையும் வருண-சாதி அமைப்பையும் நியாயப்படுத்தும் வகையிலும், தனது குறிக்கோள் இந்தியாவில் ராமராஜ்யத்தை உருவாக்குவதுதான் என்றும் காந்தி சில சமயம் கூறிவந்தது, காங்கிரஸில் இந்துப் பெரும்பான்மைவாத மனப்பான்மை கொண்டிருந்தவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

எனினும் அவரால்தான் அந்தப் பெரும்பான்மைவாதத்தைக் கட்டுக்குள் வைக்கவும் முடிந்தது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் இந்தியக் குடிமக்களாகவே இருக்க விரும்பிய முஸ்லிம்களை வன்முறையிலிருந்து காப்பாற்ற அவர் முனைந்தது, காங்கிரஸுக்கு வெளியே இருந்த பெரும்பான்மைவாதச் சக்திகளைச் சேர்ந்த கோட்ஸேவின் குண்டுகளுக்கு அவரைப் பலியாக வைத்தது. பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொள்ள அவரை இசையவைத்த ராஜாஜியும், இந்தியாவில் முஸ்லிம்களுடன் எவ்வகையிலும் அதிகாரப் பகிர்வு செய்துகொள்ள விரும்பாத பெரும் இந்துத் தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரும் பிரிவினை பற்றிய சொல்லாடல்களில் இடம்பெறுவதில்லை.

சுதந்திரத்துக்குப் பிறகும் காங்கிரஸில் வலதுசாரிப் பெரும்பான்மைவாதிகள் கணிசமான செல்வாக்குச் செலுத்திவந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்தி வைப்பதில் நேருவும்கூடச் சிலசமயம் தோற்றுப்போனார். பாபர் மசூதி இருந்த இடத்தில் இரவோடு இரவாக ராமர் சிலையொன்று வைக்கப்பட்டபோது, உத்தர பிரதேச முதல்வராக இருந்தவர் காங்கிரஸைச் சேர்ந்த கோவிந்த வல்லப பந்த்.

நேருவுக்குப் பின்: நேருவின் மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானபோது, ஒரு சுதந்திர நாள் அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். குஜராத்திலும் பிஹாரிலும் ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய இயக்கத்தில் சேர்ந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, வெகுமக்கள் அரசியலில் தீவிரப் பங்கேற்புக்கான பயிற்சியைப் பெற்றது. இந்திரா காந்தி பிறப்பித்த நெருக்கடிநிலை இந்திய ஜனநாயக அமைப்புக்கான முதல் சாவுமணியை அடித்தது. அப்போது அவரது மகன் சஞ்சய் காந்தி டெல்லியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய அட்டூழியங்களை மறந்துவிடக் கூடாது.

1977இல் ஏற்பட்ட ஜனதா தள அரசாங்கத்தில் பங்கேற்ற பாரதிய ஜன சங் (பாஜகவின் முன்னோடி), தன் கொள்கைகளை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்பதை, அக்கூட்டணியில் கண்மூடித்தனமான காங்கிரஸ் எதிர்ப்புக் கொண்டிருந்த மதச்சார்பற்ற சக்திகள் அலட்சியப்படுத்தின. அந்த ஆட்சி கவிழ்ந்தவுடன் மீண்டும் பிரதமர் பதவிக்குவந்த இந்திரா காந்தியும் முஸ்லிம்களை அச்சுறுத்தும் எண்ணற்ற மேடைப்பேச்சுகளைப் பேசிவந்தார்.

அகாலி தளத்தை உடைப்பதற்காக இந்திராவால் உருவாக்கப்பட்ட பிந்தரன்வாலே, அவருக்கு எதிரான பெரும் சக்தியாகவே திரண்டு, கடைசியில் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவம் புகுந்து, அதற்கு இழுக்கேற்படுத்தும்வரை வளர்ந்தது. அதன் விளைவாக, இந்திரா காந்தி அவரது மெய்க்காப்பாளர்களான இரண்டு சீக்கியப் படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த வன்முறைத் தாக்குதல், ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பலிகொண்டது.

அந்த வன்முறையைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் முக்கியக் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இருந்தனர். அது மட்டுமல்ல, அதுவரை இந்துக்களைச் சகோதரர்களாகக் கருதிவந்த சீக்கியர்களுக்கு, இந்து மக்களில் மிகச் சாமானியர்கள்கூடத் துரிதமாக வகுப்புவாத உணர்ச்சி கொண்டவர்களாகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அடுத்து பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராஜிவ் காந்தியைப் போலவே அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவரும் அந்த வன்முறையை நியாயப்படுத்தினார்.

காங்கிரஸும் பாஜகவும்: முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, காங்கிரஸ் அந்த மதத்தைச் சேர்ந்த பழைமைவாத சக்திகளின் ஆதரவை நாடிவந்தது. சாமானிய முஸ்லிம் மக்களின் கல்வித் தரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த அதனிடம் ஒரு திட்டமும் இருக்கவில்லை. ஷா பானு விவகாரத்தில், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்த ராஜிவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல் பூஜைக்கு அனுமதி தரப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பதைத் தவிர்ப்பதாக அன்றைய உ.பி. முதல்வர் கல்யாண் சிங் தந்த போலி வாக்குறுதியைச் சாக்காகக்கொண்டு, அதைப் பாதுகாக்கத் தவறியதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடந்துகொண்டார் நரசிம்ம ராவ்.

பாஜகவின் பெரும்பான்மைவாதத்தை எதிர்கொள்வதற்காகக் காங்கிரஸும் இந்துத்துவர்களின் சொல்லாடல்களை அவ்வப்போது பயன்படுத்திவந்தது. மண்டல் குழுவின் பரிந்துரைகளை வி.பி.சிங் நடைமுறைப்படுத்தியபோது, சுயநலத்தின் பொருட்டு அவரது ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுக்கு மறைமுகமாகத் துணைபுரிந்தது. அதுவே இந்திய வரலாற்றில் பெரும்பான்மைவாதம் முழு வெற்றியடைவதற்கான தொடக்கம். மண்டலுக்கு எதிராகக் கமண்டலத்தை எடுத்துக்கொண்டவர்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரே அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

இடஒதுக்கீட்டு விஷயத்தில் அன்றிலிருந்து இன்றுவரை சரியான நிலைப்பாடுஎடுக்காமல் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் நாடாளுமன்ற இடதுசாரிகள். இவையனைத்தும் சேர்ந்து சாதி அடிப்படையிலான சமூக நீதி என்பதை அறவே ஒழித்து, உயர் சாதியினரை மட்டுமின்றி இடைநிலைச் சாதியினர், தலித்துகள்,பழங்குடி மக்கள் ஆகியோரில் பெரும்பான்மையினரையும் மத அடையாளத்துக்குள் கொண்டுவந்த பாஜக, நவதாராளவாதப் பொருளாதாரத்தையும் இணைத்துக்கொண்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளில் (directive principles) உள்ள மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் என்பதைக் காங்கிரஸ் அரசாங்கம் ஒருபோதும் செய்யவில்லை. இடதுசாரிகள் அல்லாதசில கட்சிகள் சுயநலத்தின் பொருட்டு பாஜகவுடன் கூட்டுசேரவும் தயங்கவில்லை.

இன்று!: பாஜகவின் வளர்ச்சிக்கு, பாபர் மசூதி இடிப்பை மட்டுமே ஒரே காரணமாகச் சொல்ல முடியாது; மசூதி இல்லாவிட்டால் பசுப் பாதுகாப்பு. இதைப் பெரும் பிரச்சினையாக்கிய பாஜகவின் முன்னோடியான ஜன சங்கம், பல்லாயிரம் பேரைத் திரட்டி டெல்லி நகரை முடக்கியது. அது மட்டுமல்ல... போஃபர்ஸ் ஊழல், 2ஜி ஊழல் குற்றச்சாட்டு போன்றவையும் பாஜகவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேர்க்கால் மட்டங்களில் அது பெற்றுவரும் செல்வாக்கு கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளையும் வீரியமற்றதாக்கியுள்ளது.

வாஜ்பாய் ஆட்சி தோற்கடிக்கப்பட்டதற்குக் காரணம், அதன் பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதுதான். அதைவிடப் பன்மடங்கு பொருளாதார இன்னல்களுக்கு உள்ளாகிவரும் அதே மக்களில் பெரும்பான்மையினர் பாஜகவின் வாங்கு வங்கியாகத் தொடர்ந்து இருப்பது பெரும் வியப்பு. அந்த அளவுக்கு ஒரு கருத்துநிலை, பொருளாதார நிலையைவிட வலுவானதாகியுள்ளது. சமத்துவம், சகோதரத்துவம், தன்னுரிமை ஆகியவற்றை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அம்பேத்கரை நினைவுகூர்வதைவிட, பாபர் மசூதி இடிப்பையே முக்கியப் பேசுபொருளாக்கியுள்ளது டிசம்பர் 6.

- எஸ்.வி.ராஜதுரை மூத்த மார்க்ஸிய - பெரியாரியச் சிந்தைனயாளர், தொடர்புக்கு: sagumano@gmail.com


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x