Published : 06 Dec 2022 07:22 AM
Last Updated : 06 Dec 2022 07:22 AM

உலகளவில் இந்தியாவின் உத்தரவாதங்களை காப்பாற்ற உறுதுணையாக இருப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும், உலகளவிலான உத்தரவாதங்களை காப்பாற்றவும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி-20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நாட்டிலேயே முன்னோடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ போன்றவை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஜி20-யின் தலைமையை ஏற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

‘அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி’ ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழகம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.

பசுமை காலநிலை நிறுவனம்: காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் ‘தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்’ என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம்.

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழகம் உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x