Published : 04 Oct 2022 06:55 AM
Last Updated : 04 Oct 2022 06:55 AM

புதிய சாத்தியங்களைத் திறக்கும் ‘டார்ட்’

‘டீப் இம்பாக்ட்’, ‘அர்மகெடன்’ போன்ற அறிவியல்புனைவு ஹாலிவுட் திரைப்படங்களின் கிளைமாக்ஸ் காட்சிபோல, 500 கோடி கிலோ எடையும் 160 மீட்டர் விட்டமும் உள்ள ‘டிமார்போஸ்’ எனும் சிறுகோளின் மீது வெறும் 600 கிலோ எடை கொண்ட ‘டார்ட்’ எனும் விண்கலம் மூலம் மோதி திசைதிருப்பிவிட்டுள்ளது. ‘ஜோடி சிறுகோள்களைத் திசைமாற்றும் பரிசோதனை’ எனப் பொருள்படும் Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே DART (டார்ட்).

பூமியிலிருந்து சுமார் 11 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியனைச்சுற்றிவரும் ஒரு சிறுகோள் டிமார்போஸ். 780 மீ. விட்டமும் 5,000 கோடி கிலோ நிறையும் (Mass) கொண்ட டிடிமோஸ் எனும் முதன்மைச் சிறுகோளை 11 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு ஒருமுறை என டிமார்போஸ் சுற்றிவருகிறது. இந்த‘ஜோடி சிறுகோள்கள்’ ஒருங்கே 770 நாட்களுக்கு ஒருமுறைசூரியனைச் சுற்றிவருகின்றன. டிமார்போஸ் சிறுகோளின் மையத்திலிருந்து சுமார் 17 மீ. தொலைவில் நெத்தியடிபோல் டார்ட் விண்கலம் நேருக்கு நேர் மோதியது. அதன் விளைவாகடிமார்போஸ் சிறுகோளின் சுழலும் வேகம் சற்றேகுறைந்து, அதன் சுற்றுப்பாதை சுருங்கிவிட்டது. இதன் தொடர்ச்சியாக முதன்மைச் சிறுகோள் டிடிமோஸ் மீதும் தாக்கம்ஏற்பட்டு, ஜோடி சிறுகோள்கள் சூரியனை வலம்வரும் பாதையில்திசைதிருப்பம் ஏற்பட்டுள்ளது.

‘கிக்’ தொழில்நுட்பம்: மணிக்கு 23,760 கி.மீ. வேகத்தில் பயணித்த டார்ட் விண்கலம், டிமார்போஸில் மோதி அதன் சுழல்வேகத்தை மிக நுண்ணிய அளவு குறைத்துவிடப் போதுமானது. சுழல்வேகம் குறைந்தால், செல்லும் திசைவேகம் கூடும். எனவே, அதன் சுற்றுப்பாதையின் விட்டம் குறைந்துபோகும். அதாவது, முதன்மைச்சிறுகோளைச் சுற்றிவர அது எடுக்கும் காலம் சொற்ப அளவில் குறையும். எவ்வளவு குறையும் என்பது ஒவ்வொரு சிறுகோளின் தன்மையைப் பொறுத்தது.

மோதலின் தாக்கம்: மோதலின்போது விண்கலத்திலிருந்த ஒளிப்படக் கருவி எடுத்த படங்களைக் கொண்டு, இந்தச் சிறுகோள்பற்பல கற்களின் தொகுப்பு என விஞ்ஞானிகள் அனுமானிக்கிறார்கள். கியூப்சாட் எனும் நுண்விண்கலம் எடுத்த ஒளிப்படங்களையும் ஆராய்ந்து மோதலின் விளைவாகப் பாதையில் எந்தளவுக்குத் திசைமாற்றம் ஏற்பட்டுள்ளது என அடுத்துவரும் மாதங்களில் கணிக்கப்படும்.

அச்சுறுத்தும் சிறுகோள்கள்: சுமார் 660 லட்சம் ஆண்டுகளுக்கு முன் 10, 15 கி.மீ. விட்டம் கொண்ட சிறுகோள் மோதி பூமியில் பேரழிவு ஏற்பட்டது. அன்று புவியிலிருந்த டைனசோர்கள் உட்பட, மூன்றில் ஒருபகுதி உயிரினங்கள் மொத்தமாக அற்றுப்போய்விட்டன. பூமியை நெருங்கிச் சுமார் 20,000 சிறுகோள்கள் வலம்வருகின்றன. இவற்றில் சில ஆயிரம் சிறுகோள்கள் அச்சுறுத்தும் அளவில் நம்மை நெருங்கிச் சென்றுவருகின்றன. பூமியில் அழிவு ஏற்படுத்தும் வாய்ப்புள்ள பாதையில் செல்லும் சிறுகோள்களை இனம்கண்டு அதன் பாதையைத் திசைதிருப்பிவிட்டால் மனித இனம் உட்படப் புவியின் பல்வேறு உயிரிகள் தப்பிவிடலாம். சிறுகோள்களைத் திசைதிருப்பும் தொழில்நுட்ப உருவாக்கத்தின் ஒரு பகுதியே டார்ட் பரிசோதனை.

விண்வெளி வணிகம்: இது விண்வெளி வணிகத்துக்கு வழிவகுக்கும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கும் திட்டம்தான் என்கிறார்கள் அறிஞர்கள். யிட்ரியம், நியோபியம், ரோடியம், பல்லேடியம், ஆஸ்மியம், இரிடியம், ஸ்காண்டியம் போன்ற அருமன் தனிமங்கள், மின்னணுக் கருவிகள், கணினிகள், மின்வாகனங்கள், மின்தேக்கிகள், சூரியத் தகடுகள், காற்றாலைகள் போன்ற நான்காம் தொழிற்புரட்சித் தொழில்நுட்பங்களுக்கு அத்தியாவசியம். புவியில் இவை அரிதாகவே கிடைக்கும்; இவற்றை வெட்டியெடுப்பது பெரும் சூழல் மாசு ஏற்படுத்தும் செயல்பாடு. இந்தச் சிறுகோள்களில் இவ்வகைத் தனிமங்கள் செறிவாக உள்ளன. ஒரே ஒரு சிறுகோளிலிருந்து வெட்டியெடுக்கும் அருமன் தனிமம் நீண்ட காலத் தேவைகளை நிறைவுசெய்யும். புவியைத் தாக்கவரும் சிறுகோளின் பாதையைத் திசைமாற்றும் அதே ‘கிக்’ தொழில்நுட்பத்தைக் கொண்டு வேண்டிய இடத்துக்குத் திசைமாற்றம் செய்து அருமன் செறிவாக உள்ள சிறுகோளை எடுத்து வந்துவிடலாம். டார்ட் தொழில்நுட்பம் திறந்துவிடவுள்ள புதிய பாதை இது!

த.வி.வெங்கடேஸ்வரன்
விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின்
முதுநிலை விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x