

‘இந்து தமிழ் திசை’யில் (23.04.2022) வெளியான ‘ஆசிரியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்’ என்ற கட்டுரை மூலம் அரசுப் பள்ளிகளில் வாசிப்புக்கான முன்னெடுப்புக்குக் கோரிக்கை விடுத்திருந்தோம். அது தற்போது நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரிடமிருந்து வந்திருக்கும் சுற்றறிக்கை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காகப் பள்ளி நூலகம் சார்ந்த செயல்பாடுகளைப் பரிந்துரைத்துள்ளது. ஆகஸ்ட் 17 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கிவைத்த வாசிப்பு இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பைப் பார்க்கலாம்.
வாசிப்புச் செயல்பாடு: அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்புச் செயல்பாடுகளுக்காக வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சுழற்சிமுறையில் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்; புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து வர வேண்டும். வாசித்த புத்தகம் சார்ந்து ஆசிரியர் அறிமுகம், புத்தக அறிமுகம், புத்தக ஒப்பீடு, புத்தக மதிப்புரை, மேற்கோள்களைக் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல், ஓவியம், பேச்சு, கட்டுரை, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. நூலகச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் பொறுப்பு வட்டாரக் கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அளவில் பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆர்வம் சார்ந்த புத்தகங்களை வாசிக்க ஊக்கப்படுத்துவது, பள்ளிக்கு அருகில் உள்ள எழுத்தாளர்களை அழைத்து மாணவர்களிடம் உரையாடச் செய்வது, நூலகத்தில் உள்ள புத்தகங்களிலிருந்து புதிய சொற்களைப் பட்டியலிடுதல், பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை வகைப்படுத்துதல் என மாணவர்களுக்கும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்தகங்களைத் தொலைத்துவிட்டால், பள்ளி நூலகத்துக்கு ஒரு புத்தகத்தைப் புதிதாக வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கோரலாம். மாணவர் புத்தகத்தைக் கிழித்துவிட்டால், அறிவுரை கூறி எச்சரித்து, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாம். ஒவ்வொரு வாரமும் புத்தகம் வழங்கப்பட்டு, மாணவர்கள் வாசிக்க வேண்டும் என்பதே இலக்கு. ஏறக்குறைய 40,000 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த முன்னெடுப்பு முறையாகச் செயல்படுத்தப்பட்டால் விளைவு அளப்பரியதாக இருக்கும். எதிர்காலச் சமுதாயம் விரும்பத்தக்கதாக மாறும்.
ஆசிரியர் பங்களிப்பு: சுற்றறிக்கைகளாலும் புத்தகங்கள் வழங்குவதாலும் வாசிப்பது பெரிதாக வளர்ந்துவிடாது. வகுப்பறையில் அன்றாட உரையாடலிலிருந்து மாணவர்களின் வாசிப்பு தொடங்க வேண்டும். புத்தகத்துடன் தொடர்புடைய விஷயங்களை அன்றாடம் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் கட்டாயம் வாசிப்பில் ஈடுபட வேண்டும். ஆம், ஆசிரியர்களிடமும் இந்த வாசிப்பு இயக்கம் பரவ வேண்டும். ஆசிரியர்களைப் பின்பற்றி மாணவர்களும் இயல்பாக வாசிப்பில் இறங்குவார்கள். அரசு இத்தனை சீரிய பரிந்துரைகளை வழங்கியிருந்தாலும், திட்டமிடலும் செயல்படுத்துதலும் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளன. இதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் வாசிப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த முன்வர வேண்டும். பள்ளிகளில் நூலகச் செயல்பாடு வெறும் பதிவேடுகளாகச் சுருங்கிவிடக் கூடாது. - சு.உமாமகேஸ்வரி, கல்விச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: ma2015scert@gmail.com