Published : 05 Sep 2022 09:08 AM
Last Updated : 05 Sep 2022 09:08 AM

இலவசங்கள்: ஒரு பொருளியல் பார்வை

இலவசங்கள் பற்றிய விவாதங்களில் நலத்திட்டங்கள், இலவசங்களை வகைப்படுத்துவதில் உள்ள சிக்கலே தலையாய பிரச்சினை. பொருளியலைப் பொறுத்தவரை, எதுவுமே இலவசம் இல்லை. மதிய உணவை ஒருவர் இலவசமாகப் பெறுகிறார் என்றால், அதற்கான செலவை வேறு யாரோ ஏற்றுக்கொண்டுள்ளார் என்று அர்த்தம். பொருளியலில் இது ‘There Is No Free Lunch’ என்று கூறப்படுகிறது.

இருப்பினும், ஒருவரிடமிருந்து மற்றவர்க்குச் செல்வத்தையோ, பொருளையோ மறுபகிர்வு செய்வது என்பது அரசாங்கத்தின் முதன்மைக் கடமை. இதன்மூலமே சமூகத்திலுள்ள வறுமை, ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும்.

‘செல்வப் பகிர்மானம் ஒருவருக்குப் பயனைத் தரும் அதே நேரத்தில், மற்ற எவருக்கும் பயனிழப்பை ஏற்படுத்தக் கூடாது’ என ஓர் உன்னதச் செல்வப் பகிர்மானம் குறித்துப் பொருளாதார அறிஞர் வில் பரேதோ வரையறுத்துள்ளார். ஆனால், நடைமுறையில் ஒருவருக்கு நன்மை விளைவிக்கும் எந்தப் பகிர்மான நடவடிக்கையும் மற்றவர்க்குப் பயனிழப்பை ஏற்படுத்தியே தீரும்.

உதாரணமாக, வரி வசூல் மூலமே மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரேதோவின் கருத்தைக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும், அதை நடைமுறைப்படுத்த ஜான் ஹிக்ஸ், நிகோலஸ் கல்தோர் போன்ற பொருளியல் அறிஞர்கள் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர்.

இதன்படி, ‘ஒரு பகிர்மானம் என்பது கொள்கையளவில் அதிலிருந்து கிடைக்கப்பெறும் மொத்தப் பயன்கள், அதன் பயனாளிகளுக்குப் பயனளிப்பது மட்டுமின்றி, வரி செலுத்துவோரின் பயனிழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு இருக்குமானால், அதுவே ஒரு உன்னதப் பகிர்மானமாக அமையும்.

ஆக, ஒவ்வொரு திட்டமும் பயனாளிகளுக்கு எவ்வளவு பயன்களை விளைவிக்கிறது, அத்திட்டங்களால் மற்றவர்க்கு ஏற்படும் பயனிழப்பைவிட மேற்கண்ட பயன்கள் அதிகமாக இருக்கின்றனவா என்பதைப் பொறுத்தே செயல்படுத்தப்பட வேண்டும் என்பது பொருளியலின் விதி.

சுதிப்தோ முண்டல் என்ற இந்தியப் பொருளியல் வல்லுநர், அனுபவம், அனுமானங்கள் அடிப்படையில் இலவசங்களைத் ‘தகுதிவாய்ந்த’, ‘தகுதியற்ற’ இலவசங்கள் என்று பிரித்து, உணவுப் பாதுகாப்பு, முதன்மை-இடைநிலைக் கல்வி, மருத்துவம், குடிநீர்-சுகாதாரம் ஆகியவற்றுக்கான செலவுகளைத் தகுதிவாய்ந்த செலவுகளாகவும், மற்ற செலவுகள் தகுதியற்ற செலவுகளாகவும் கருதப்பட வேண்டும் என்கிறார்.

தகுதியற்ற செலவுகள் சமூகத்தில் விளைவிக்கும் பயனைவிட அதிகமாக இழப்பை ஏற்படுத்துவதாகவும், மக்கள் உழைப்பதற்கு ஊக்கம் அளிக்காததாகவும், உற்பத்தியை ஊக்குவிக்காததாகவும், விலை நிலவரங்களில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்துபவையாகவும், பொதுக்கடனை அதிகரித்து, நிகழ்காலத்தில் மட்டுமின்றி எதிர்காலச் சந்ததியினருக்கும் கடன் சுமையை அதிகரிப்பதாகவும் கருதப்படுகின்றன.

பயன்களின் அடிப்படையில் இலவசங்களைப் பகுப்பதில் சில நடைமுறை அளவீட்டுச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஏழைகளே அதிகம் பயன்பெறுவர் என்பது தெரிந்ததே. ஏழைகளை இனங்காண முடியாத காரணத்தினால், பொது விநியோகம் ஏழை-பணக்காரர் என்ற அனைவருக்குமான திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.

வாங்கும் சக்தி படைத்தவருக்குச் செல்லும் செலவு தகுதியற்ற செலவே. ஏழை-பணக்காரர்களுக்குக் கிடைக்கும் பயன்களின் அளவு என்ன என்று தெரிந்தால், பணக்காரர்களைத் தவிர்த்து, ஏழைகளுக்கு இன்னும் அதிகப் பயனளிக்குமாறு இத்திட்டத்தை மாற்ற முடியும். ஆனால், இது அனைவருக்குமான திட்டம் என்பதால், திட்டத்தினால் பயன்பெறுபவர், இத்திட்டம் இல்லாவிடினும் நன்றாகவே வாழ்பவர் என்று பிரித்தறிவது மிகக் கடினமாகும்.

மேலும், பல்வேறு வகைப்பட்ட நலன் அல்லது இலவசத் திட்டங்களை ஒருசேர நடைமுறைப்படுத்தும்போது, எந்தக் குறிப்பிட்ட திட்டம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிவதும் கடினம்.

இவ்வாறான பிரச்சினைகளால், எது தகுதியுடைய அல்லது தகுதியற்ற செலவு என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தக்கவாறு பயனுள்ள திட்டங்களை மட்டும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதையே சாதகமாக்கி, எல்லாவித இலவசங்களையும் ‘பயனுள்ள இலவசங்கள்’ என்ற முடிவுக்கு வரக்கூடிய சாத்தியக்கூறு ஏற்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை அறிவித்து, அரசுக்குத் தகுதியற்ற செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

திட்டங்களைப் பொருளாதார மதிப்பீடு செய்யும் ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், அவ்வாறான ஆராய்ச்சியை ஊக்குவித்து, தரவுகள் சார்ந்த ஆதாரத்தின் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், அரசின் அரிய நிதி ஆதாரங்களை உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

கட்சிகளின் நிலைப்பாடும் முரண்பாடும்: இலவசங்கள் கொடுப்பது பொருளாதாரரீதியாகச் சாத்தியமல்ல என்று தெரிந்திருந்தும் அரசியல் கட்சிகள் இலவசங்களைத் தொடர்ந்து ஆதரிக்கவே செய்கின்றன. ஏனென்றால், களத்தில் உள்ள மற்ற கட்சிகளின் இலவசங்கள் பற்றிய நிலைப்பாடு தெளிவுறத் தெரியாதபட்சத்தில், ஒரு கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெறுவதற்கான மிகச் சிறந்த அரசியல் உத்தி, தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிப்பதே ஆகும்.

உதாரணமாக, ஒரு கட்சி இலவசங்களை ஆதரிக்காத நிலையில், தேர்தல் களத்திலுள்ள மற்ற கட்சிகள் இலவசத்தை ஆதரிக்கும் பட்சத்தில், தனக்கு விழக்கூடிய பெருவாரியான ஓட்டுக்கள் மற்ற கட்சிகளுக்கு விழுந்துவிடக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதால், ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ள கட்சியும்கூட இலவசங்களை ஆதரிக்கக்கூடிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறது. நடைமுறையில், இலவசங்களை எதிர்க்கும் ஒரு சில கட்சிகளுக்கு விழும் குறைந்த அளவு ஓட்டுக்களைக்கொண்டே மற்ற கட்சிகள் இலவசங்களை ஆதரிக்கும் மனநிலையைத் தழுவுகின்றன.

மற்ற கட்சிகளின் இலவசங்கள் பற்றிய நிலைப்பாடு தெளிவாகத் தெரியும்பட்சத்தில், ஒரு கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதை ‘மந்தைப் போக்கு’க் கோட்பாடு தெளிவுபடுத்துகிறது. இக்கோட்பாட்டின்படி, தனது தனிப்பட்ட முடிவு மற்ற கட்சிகளிடமிருந்து வேறுபட்டாலும், பெருவாரியான கட்சிகள் இலவசங்களைப் பற்றி என்ன முடிவு எடுக்கின்றனவோ அதே முடிவை நாமும் எடுப்போம் என்ற மனநிலையே கட்சிகளிடம் நிலவுகின்றது.

இது அடுத்தடுத்த கட்சிகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது. இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் மந்தையைப் பின்பற்றி இலவசங்களுக்குப் பச்சைக்கொடி காட்டுவதால், களத்தில் உள்ள பெருவாரியான கட்சிகள் இலவசங்களை ஆதரிக்கும் முடிவையே எடுக்கின்றன.

இடைநிலை வாக்காளர் கோட்பாடு (Median Voter Theorem) அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை விளக்க இன்னொரு பரிமாணத்தை முன்னிலைப்படுத்துகிறது. எளிமையாகப் புரிந்துகொள்ள, தேர்தல் களத்தில் இரண்டு அரசியல் கட்சிகளும் (இலவசங்களுக்கு ஒன்று ஆதரவும், மற்றொன்று எதிர்ப்பும்) மூன்று வாக்காளர்களும் இருப்பதாக அனுமானிக்கலாம்.

முதலாம் வாக்காளர் இலவசத்தை ஆதரிப்பவராகவும், இரண்டாமவர் அதை எதிர்ப்பவராகவும் இருந்தால், தேர்தல் வெற்றி மூன்றாமவரின் (இடைநிலை) முடிவைப் பொறுத்தே அமையும். மூன்றாமவர் இலவசத்தை ஆதரிப்பவரெனில், எந்தக் கட்சி இலவசத்தை ஆதரிக்கிறதோ அந்தக் கட்சியே வெற்றிவாய்ப்பைப் பெறும் நடைமுறையில், இடைநிலையிலுள்ள பெருவாரியான வாக்காளர்கள் இலவசங்களை ஆதரிப்பதாக நம்பப்படுவதால் பெருவாரியான கட்சிகள் இடைநிலை வாக்காளர்களின் எதிர்பார்ப்பின்படி இலவசங்களை ஆதரிக்க ஆட்படுத்தப்படுகின்றன.

பூனைக்கு மணி?: இலவசங்களைப் பொறுத்தவரை மேற்சொன்ன கோட்பாடுகளின் அடிப்படையிலேயே பெருவாரியான கட்சிகள் செயல்படுவதால், ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் இலவசங்கள் என்ற ஒரு வட்டத்துக்குள் சிக்கி கடைசியில், பூனைக்கு யாரும் மணி கட்ட முடியாமலே போய்விடுகிறது.

மேற்கண்ட கோட்பாடுகள்மூலம் நாம் அறிய வேண்டியது என்னவெனில், பெருவாரியான கட்சிகளிடம் தகுதியற்ற இலவசங்களுக்கு எதிரான ஒருமித்த கருத்தைக் கொண்டுவந்தாலொழிய இலவசங்களை ஒழிப்பது சாத்தியமன்று. எனவே, அரசியல் கட்சிகளிடம் ஒருமித்த கருத்தைக் கொண்டுவரத் தேவையான முயற்சிகளைச் சீரிய முறையில் மேற்கொள்வது சிறந்த பயனைத் தரும்.

பன்னெடுங்காலமாக இலவசங்களுக்குப் பழக்கப்பட்ட மக்கள் திடீரென்று அவற்றை விட்டுக்கொடுப்பார்கள் என்றுஎதிர்பார்க்க முடியாது. இதற்கு சமூக-தனிமனித மனநிலையில் உள்ள தேக்கமே காரணம். பெருவாரியான மக்கள்இலவசங்களுக்கான நிதி ஆதாரங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வற்றவர்களாக உள்ளனர்.

மக்களிடம் இலவசங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், வசதி படைத்தவர்கள் இலவசங்களை விட்டுக்கொடுப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதன் மூலமும், இலவசங்கள் தேவைப்படும் மக்களைப் பஞ்சாயத்துகள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அரசுசாரா நிறுவனங்கள் - பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அடையாளம் காணுவதன்மூலமும், தரவுகள் சார்ந்த ஆதாரத்துடன் கூடிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள் மூலமும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதன் மூலமும் தகுதியற்ற இலவசங்களை வெகுவாகக் குறைக்க முடியும்.

- லி.வெங்கடாசலம், பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் | தொடர்புக்கு: venkat@mids.ac.in

To Read this in English: Freebies: An economic overview

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x