Published : 17 Apr 2016 09:36 AM
Last Updated : 17 Apr 2016 09:36 AM

ஆப்பிரிக்காவை விட்டுவிடுதலையாகி...

அன்று திங்கள் கிழமை. மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அகதேஸ் பாலைவன சாலைச் சந்திப்பைப் பொறுத்தவரை, திங்கள் கிழமை என்றால் ஐரோப்பாவை நோக்கி அகதிகள் வெளியேறும் நாள். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள், தங்கள் நாட்டின் உருக்குலைந்துவிட்ட விவசாயம், அதிகரிக்கும் மக்கள் தொகை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைவிட்டுத் தப்பித்துச் செல்ல ஒவ்வொரு திங்கள் கிழமை இரவும் இங்கு கூடுகிறார்கள். சஹாரா பாலைவனம் வழியாக லிபியாவுக்குச் சென்று, அங்கிருந்து மத்தியத் தரைக்கடல் வழியாக எப்படியாவது ஐரோப்பாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையில், இங்கிருந்து வேக வேகமாகக் கிளம்புகிறார்கள்.

வாகனங்கள் இங்கு கூடும் காட்சி அழகானது. பிறை நிலவு அந்த இரவுக்கு ஒளியூட்டுகிறது. திடீரென்று அந்தப் பாலைவனம் உயிர்த்தெழுகிறது. வாட்ஸ்-அப்பைப் பயன்படுத்தி, நகரின் வீடுகளிலும், அடித்தளங்களிலும் பதுங்கியிருக்கும் அகதிகளை ஒருங்கிணைக்கிறார்கள் உள்ளூர் கடத்தல்காரர்கள். செனகல், சியர்ரா லியோன் போன்ற நாடுகளிலிருந்தும், நைஜரின் பிற பகுதிகளிலிருந்தும் அந்த வாரம் முழுவதும் வந்து சேர்கிறார்கள் அகதிகள்.

ஒவ்வொரு டொயோட்டா வேனிலும், 15 அல்லது 20 ஆண்கள் (பெண்கள் இல்லை) ஒருவரையொருவர் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். வேனில் இருபுறங்களிலும் அவர்களின் கை,கால்கள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. நகரின் குறுகிய சந்துகளிலிருந்து வெளிவருகின்றன வாகனங்கள். அவற்றுக்கு முன்னே பாதுகாப்பு வாகனங்கள் செல்கின்றன, காசு பிடுங்க காத்திருக்கும் போலீஸாரோ எல்லைப் பாதுகாப்பு வீரர்களோ எதிர்ப்பட்டால் கவனித்துக்கொள்ள.

ஏதோ சிம்பனி இசை நிகழ்ச்சியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. ஆனால் இசை நிகழ்ச்சியின் ‘கண்டக்டர்’ எங்கிருக்கிறார் என்றுதான் புரியவில்லை. இறுதியில், நகரின் வடக்குப் பகுதியில் உள்ள சந்திப்பு முனையில் எல்லா வாகனங்களும் கூடித் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. 100 முதல் 200 வாகனங்களைக் கொண்ட குழுவாகச் செல்கின்றன. பாலைவனக் கொள்ளைக்காரர்களைத் தவிர்க்க இத்தனை பெரிய எண்ணிக்கை தேவையாக இருக்கிறது.

வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட களிமண் சுவர் கட்டிடங்கள் நிறைந்த அகதேஸ் நகரம், யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று. ஆனால், அருகில் உள்ள பகுதிகளில் போகோ ஹராம் மற்றும் ஜிகாதி குழுக்கள் நடத்தும் தாக்குதல்களால் சுற்றுலாப் பயணிகள் அந்நகரைக் கைவிட்டுவிட்டனர். சுற்றுலாவுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்களும் பேருந்துகளும் தற்போது அகதிகளைக் கொண்டுசெல்லும் பணிக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று என்னிடம் சொல்கிறார் ஒரு கடத்தல்காரர்.

புழுதியைக் கிளப்பியபடி என்னைக் கடந்து விரைந்துசெல்லும் டொயோட்டோ வாகனங்களின் பின்னால் அசைவற்று நின்றுகொண்டு பயணிக்கும் இளைஞர்களின் உருவங்கள் அந்த இரவில் நிலவொளியின் பின்னணியில் சில்-ஹவுட் காட்சியாக ஒரு சித்திரத்தைக் கொடுக்கின்றன. தங்களுக்கு வாழ்வளிக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் செல்லும் லிபியா, ஏற்கெனவே உள்நாட்டுப் போரால் சிதைந்துபோன நாடு. எனில், தங்கள் சொந்த நாடுகளில் எத்தனை மோசமான நிலையிலிருந்து தப்பிக்க இவர்கள் துடிக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

லிபியா நோக்கிச் சென்ற அகதிகள், அங்கிருந்து கூட்டம்கூட்டமாகத் திரும்பிவருகிறார்கள். முறையான நிர்வாகம் இல்லாத லிபியாவில், இழிவுபடுத்தப்படுவதாலும், குறைந்தபட்ச மரியாதையை வழங்கும் பணிகள்கூட இல்லாததாலும் வேறு வழியில்லாமல் திரும்பிவருகிறார்கள்.

வறட்சியின் கொடுங்கரம்

சிரியாவின் நவீன வரலாற்றில் நான்கு ஆண்டுகள் வாட்டி எடுத்த வறட்சியும், அதிகரித்த மக்கள்தொகையும், பருவநிலை அழுத்தங்களும், இணையமும் அந்நாட்டில் புரட்சி வெடிக்கக் காரணமாக இருந்தன. ஆப்பிரிக்காவில் எழுந்திருக்கும் அகதிகள் அலைக்கும் இதேபோன்ற காரணங்கள்தான். சண்டை நிறுத்தத்துக்கான ஐநா அமைப்பின் தலைவர் மொனிக் பார்பட், நைஜரின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அடமாவு சாய்ஃபோ ஆகியோருடன் பயணம் செய்கிறேன்.

மேற்கு ஆப்பிரிக்கா கடந்த இரண்டு தசாப்தங்களில் வருவதும் போவதுமாக இருக்கும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதை சாய்ஃபோ என்னிடம் விளக்குகிறார். அந்நாட்டின் வளமான நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் பாலைவனமாகிக்கொண்டே வருகின்றன. “வறட்சி நிலைமையைச் சீரழிக்கிறது என்றால், பருவநிலை மாற்றம் அதை இன்னும் மோசமாக்குகிறது. பிழைப்புத் தேடி இடம்பெயரும் நிலை, இனக்குழுக்களுக்குள் சண்டை, பயங்கரவாதம் போன்றவற்றுக்கு இவை காரணமாகின்றன” என்கிறார் மொனிக் பார்பட். ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் துருக்கியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. அதன்படி, துருக்கிக்கு வரும் அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பதிலாக, துருக்கிக்கு வரும் அகதிகளைச் சமாளிப்பதற்குத் தேவையான நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும்.

எழும்பும் சுவர்கள்

“அந்தத் தொகையில் ஒரு பகுதியைக் கொடுத்தாலே, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறட்சியைச் சமாளிக்கவும், சுகாதாரம், கல்வி, விவசாயத்தை மேம்படுத்தவும் முடியும்” என்கிறார் பார்பட். ஒவ்வொரு நாடும் எல்லைச் சுவர் எழுப்ப விரும்புகிறது. அந்தச் சுவர் பசுமைச் சுவராக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்கிறார் அவர்.

அகதேஸ் நகரில் உள்ள அகதிகளுக்கான சர்வதேச உதவி மையத்தில் நான் சுமார் 10 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பேசினேன். அனைவரும் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக லிபியா சென்று, எதுவும் நடக்காததால் திரும்பி வந்தவர்கள். கையில் காசு இல்லாததால் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்ப முடியாதவர்கள். “ஐரோப்பாவுக்குச் செல்ல சட்டபூர்வ அனுமதி கிடைத்தால், உங்களில் எத்தனை பேர் அங்கு செல்லத் தயார்?” என்று அவர்களிடம் கேட்டேன்.

அனைவரும் கைகளை உயர்த்தி ஒரே குரலில், ‘டு லெ மோண்ட்’ என்றனர் பிரெஞ்சில். எனக்கு பிரெஞ்சு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், சொன்னதன் அர்த்தம் ‘எல்லோருமே’ என்றே நினைக்கிறேன்.

தி நியூயார்க் டைம்ஸ், தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x