Last Updated : 08 Nov, 2015 11:42 AM

 

Published : 08 Nov 2015 11:42 AM
Last Updated : 08 Nov 2015 11:42 AM

பிஹார் தேர்தலில் முன்னேற்றம்!

பிஹாரில் தேர்தல் களைகட்டத் தொடங்கியதிலிருந்து அத்தனை அரசியல் கட்சிகளும் உச்சரித்த, இந்தத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக முன்னிறுத்திய வார்த்தை: முன்னேற்றம்!

இரு தரப்புக்கும் ஒரே வார்த்தை

ஆரம்பத்தில் சாலை, மின்சாரம், கல்வி என வளர்ச்சித் திட்டங்களைத்தான் முன்னேற்றம் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதுபோலத்தான் ஆட்டம் தொடங்கியது. அப்புறம் அது மாறிவிட்டது. எந்த விளக்கமும் இன்றி ‘முன்னேற்றம்’ என்ற ஒற்றை வார்த்தையை வெவ்வேறு சாதியினர், வெவ்வேறு காரணங்களுக்காகச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். சொல்லப்போனால் சாதியச் சமூகங்களின் முன்னேற்றம்தான் முன்னிறுத்தப்படுவதாக மாறிவிட்டது.

மக்களின் பார்வையில் முன்னேற்றம்

முன்னேற்றம் எனும் வார்த்தையே பிஹாரில் வெவ்வேறு சமூகங்கள் சார்ந்து வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டதாக மாறிவிட்டது. பிஹாரின் நகரவாசிகள், உயர் சாதியினரைப் பொறுத்த அளவில் ‘முன்னேற்றத்தின் உருவம்’ பிரதமர் மோடி. நிதிஷ்குமார் சிறந்த முதல்வர் என்றாலும் முன்னேற்றம் என்றால் அது மோடிதான் என்பது இவர்கள் நிலைப்பாடாகத் தெரிந்தது. மறுபுறம், தாழ்த்தப்பட்ட மக்களுடைய அரசியல் பார்வையும் முஸ்லிம் சமூகத்தினரின் எதிர்பார்ப்புகளும் வேறு. முஸ்லிம்களைத் தவிர, பெருவாரியான கிராம மக்கள் மோடியின் வெளியுறவுக் கொள்கைகளை வளர்ச்சிக்கான சமிக்ஞையாகத்தான் பார்க்கின்றனர். அதேசமயம், அவர்களுடைய ஆதர்சத் தலைவர் நிதிஷ்குமார். அவர் ஆட்சியில் போடப்பட்ட செம்மையான சாலைகள், அளிக்கப்பட்ட உதவித்தொகை, சிறப்பான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகம் இப்படிப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஏராளமானோர் பாராட்டினார்கள். இதுதான் முன்னேற்றம் என்பது அவர்கள் நிலைப்பாடு.

நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆரம்பத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்பு மோடி அதை விலக்கிக்கொண்டதும் அதுகுறித்த பயம் குறைந்துவிட்டது. மேலும், பிஹார் விவசாயிகள் பலர் இன்றைக்குத் தொழிற்சாலைகளின் வரவுக்காகவும் காத்திருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

ஓட்டுக் கணக்கு

நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஐ.ஜ.த.), லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ரா.ஜ.த.), சோனியா தலைமையிலான இந்தியத் தேசிய காங்கிரஸ் (இ.தே.கா.) கட்சிகளின் மகா கூட்டணி பின்வரும் ஓட்டுக் கணக்கைக் குறிவைத்தது. பிஹாரின் மக்கள்தொகையில் 16.9% முஸ்லிம்கள், 14% யாதவர்கள், 3.5% குர்மிகள். ஆக, 34%-35% கணக்கு இவர்களுடையது.

பாஜக ராம் விலாஸ் பாஸ்வான், ஜித்தன் ராம் மாஞ்சி ஆகியோருடனான கூட்டணிக்குப் பின் இப்படிக் கணக்குப் போடுகிறது: பிஹாரின் மக்கள்தொகையில் 13.6% உயர்சாதியினர், 6% பனியாக்கள். தவிர, பட்டியல் சாதியினர். அதில் துசாத்துகள் 5%, முசாகர்கள் 4%. இப்படி 32% கணக்கு இவர்களுடையது.

சீமாஞ்சலம் தீர்மானிக்கும்?

இப்படிச் சமூக அடிப்படையில் தலைகளை எண்ணினால் மோடி கூட்டணிக்கும் நிதிஷ் கூட்டணிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், பாஜகவை அச்சுறுத்துவது முஸ்லிம் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சீமாஞ்சலம். ஆனால், பயப்பட வேண்டியதில்லை. சீமாஞ்சலத்தில் 25 தொகுதிகள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டார்கள் பாஜகவினர். ஆனால், இந்த சீமாஞ்சலத்தைத்தான் நிதிஷ் கூட்டணி பெரிதும் நம்பியிருந்தது என்பதையும் சொல்ல வேண்டியது இல்லை.

மந்திரச் சொல் என்னவானது?

சரி, மந்திரச் சொல்லான ‘முன்னேற்றம்’ இங்கு எப்படி வந்தது? மோடி, நிதிஷ் இந்த இருவரின் பிம்பங்களுக்கும் அதில் முக்கிய இடம் இருக்கிறது. எனினும், பிஹாரில் மக்களின் மனநிலையை ஆராய்ந்தால், சமூகப் பின்னணியுடன் பின்னிப்பிணைந்ததுதான் முன்னேற்றம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களால் பெண்களின் வாக்குகள் நிதிஷுக்கு வரும் என்றால், பிஹாரிலிருந்து புலம்பெயர்ந்து அல்லாடும் தொழிலாளர்களுடைய குடும்பங்களின் வாக்குகள் பாஜகவுக்குப் போய்ச் சேரும். இப்படி ஒவ்வொரு பிரிவின் மனதிலும் முன்னேற்றம் என்ற சொல் ஏற்படுத்தப்போகும் விளைவைத்தான் தேர்தல் முடிவுகளில் பார்க்கப்போகிறோம். எந்த ‘முன்னேற்றம்’ முன்னணிக்கு வரும்? இன்றைக்கு மாலை தெரிந்துவிடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x