Published : 19 Sep 2015 08:34 AM
Last Updated : 19 Sep 2015 08:34 AM

மோடிக்குப் பேச்சுவார்த்தை பிடிக்காதா?

காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி காண வரலாறு தரும் வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது.

சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை ரத்தானது மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது. பேச்சுவார்த்தை முறிந்ததை ஹுரியத் மாநாட்டுக் கட்சியினர் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள் எனவும் அவர்களுடைய நோக்கமே அமைதியைக் குலைப்பதுதான் எனவும் பிதற்றும் இந்திய ஊடகங்களுக்கு என்னுடைய இந்தக் கூற்று அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், அப்பட்டமான உண்மை யாதெனில், இத்தகைய மோதலால் பெருமளவு இழப்பு, இழிவு, வலி, அநீதியை அனுபவிப்பவர்கள் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த எங்கள் மக்களே!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த் தையை மீண்டும் துவங்குவோம் என உஃபா நகரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அறிவித்தபோது நாங்கள் அதற்கு முழுமனதாக வரவேற்பு அளித்தோம். அதிலும் “அமைதியை நிலைநாட்டி வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கும் பொறுப்பை இரு நாடுகளும் சமமாக ஏற்க வேண்டும். அதற்காக அத்தனை பிரச்சினைகளையும் வெளிப்படையாகப் பேச நாங்கள் தயார்” என இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டபோது பெரிதும் பாராட்டினோம். ஆனால், இவை அத்தனையும் சாத்தியப்பட முதலில் காஷ்மீர் விவகாரத்தில் சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான அமைதி, சமநிலை, நேர்மறையான உறவுநிலை மற்றும் வளமான எதிர்காலம் இதைப் பொறுத்ததே!

ஊடகங்களுக்குத் தெரியாதபடி சில ரகசியக் கூட்டங்கள்கூட இவர்களிடையே நடக்கும் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டபோதும், எப்படியோ பேச்சுவார்த்தை நடந்தால் நல்லதுதானே என்றோம். மொத்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களோடு இணைந்து பகைமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என ஜம்மு - காஷ்மீர் மக்கள் கனவு கண்டோம்.

ஆனால், இப்போது பேச்சுவார்த்தை முறிந்ததால் அதன் பயங்கர விளைவுகளை நாங்கள்தான் நேரடியாகச் சந்தித்துவருகிறோம். இதுபோதாதென்று எங்களுடைய ஹுரியத் மாநாட்டுக் கட்சியையும் சந்தித்துப் பேச மறுக்கிறது இந்திய அரசு. இந்தப் போக்கு மோடி அரசின் குறுகிய மனப்பான்மையைத்தான் பிரதிபலிக்கிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு உண்மையிலேயே தீர்வுகாணும் எண்ணம் இவர்களுக்கு உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. இரு தரப்புச் சிக்கல்களைக் களைய வேண்டிய நேரத்தில் எதற்காகப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டைகள் போட்டுக்கொண்டிருக்கிறது இந்திய அரசு?

கடந்த ஓராண்டு ஆட்சியில் பிரதமர் மோடியின் அரசு காஷ்மீர் விவகாரத்தில் வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கும் சுமுகத் தீர்வுக்கும் வழிவகை செய்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, எல்லைக்கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு, ஜம்மு - காஷ்மீரின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது, “இப்போது பேச வேண்டியது வாய் அல்ல; துப்பாக்கிக் குண்டுகள்” என வீர வசனம் பேசினார் மோடி. ஏதோ ஒரு முறை இப்படிப் பேசிவிட்டார் என்று நினைத்தால், வன்முறைச் சவடாலே வழக்கமாகிவிட்டது. இது அழிவுக்குத்தான் இட்டுச்செல்லும்.

மோடியை நம்பினோம்

மோடியின் தேர்தல் வாக்குறுதியைக் கேட்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போலவே இவரும் அமைதி, பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிப்பார் என நம்பினோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, காஷ்மீர் பிரச்சினைக்குச் சுமுகத் தீர்வு காண்பதே தன் கனவு என லாகூரில் அறிவித்தார். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை அவர் முன்னிறுத்தினார். மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நிகழ வேண்டும் என பாகிஸ்தானிடமும் எங்களிடமும் வலியுறுத்தினார். பாகிஸ்தான் - காஷ்மீர் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும்போதே டெல்லி-இஸ்லாமாபாத், நகர்-டெல்லி, நகர்-இஸ்லாமாபாத், ஸ்ரீநகர் முசாபராபாத் இடையிலான உரையாடலும் அவசியம் என்றார். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நட்புப் பாலமாக காஷ்மீர் தலைமை செயல்பட முடியும் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார். அன்றைய பாகிஸ்தான் பிரதமர் முஷாரப்புடன் நாங்கள் நேரடியாகக் கலந்துரையாட ஏற்பாடு செய்தார். அத்தனை சுலபமாகத் தீர்க்கக்கூடியதல்ல காஷ்மீர் பிரச்சினை என்றாலும், அனைத்துக் கட்சியினரும் கூடிப்பேசி ஒரு தீர்வு காணும் சூழலை வாஜ்பாய் ஏற்படுத்திக்கொடுத்தார்.

எல்லைக்கோட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களுக்குள் சகஜமாகப் பேசிக்கொள்ளவும் போரின் அபாயத்தைக் குறைக்கவும் வாஜ்பாயின் நடவடிக்கைகள் பெருமளவு கைகொடுத்தன. தீர்வை நோக்கிச் சில நடைமுறை திட்டங்களும் வகுக்கப்பட்டன. இன்றும்கூட அதே திட்டங்களை முன்வைத்து மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம். இன்றுபோல அன்று பாஜக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வென்ற கட்சி அல்ல. இருந்தபோதும் அன்று வாஜ்பாய் துணிச்சலாகத் தன் முழு ஒத்துழைப்பை அளித்தார். காஷ்மீர் பிரச்சினையானது அரசியல் தீர்வுக்காகக் காத்திருக்கும் மனிதர்களின் பிரச்சினை என்பதை அவர் மனிதாபிமானத்தோடு பார்த்தார்.

ஆனால், தற்போது வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜின் நடவடிக்கைகள் அதற்கு நேர்மாறாக இருக்கின்றன. எங்களைச் சந்திக்க மறுப்பது, எங்களைக் கைது செய்வது, எங்கள் வாயை அடைக்க முயற்சிப்பது போன்ற காரியங்கள்தான் இன்று ஏகபோகமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மனிதநேயத்துக்கு இடம் எங்கே உள்ளது? எங்களைத் தனிமைப்படுத்துவது என்பது இழிவுபடுத்தும் செயல்தானே?

இரு வழிகள்

காஷ்மீர் திட்டத்தில் தன் நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது. கடந்த 60 ஆண்டுகளாக நீடித்ததைப் போலவே காஷ்மீர் விவகாரத்தை இழுபறியில் வைத்திருக்கலாம். அல்லது முதலும் கடைசியுமாக இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தைச் சிதைக்காமல் அவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்காமல் தெற்கு ஆசியாவின் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தட்டிக்கழிப்பதல்ல; தீர்வு காண்பதே உண்மையான தலைமைப் பண்பு என்பதை உணர வேண்டும்.

ஆயுதம் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது; பேச்சுவார்த்தையால் மட்டுமே சுமுகத் தீர்வு காண முடியும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவேதான் பிரதமர் ஷெரீப்பை இந்தியாவுக்குப் பிரதமர் மோடி அழைத்தபோதும், உஃபாவில் பேச்சுவார்த்தைக்கான முடிவெடுத்தபோதும் இருவரையும் ஆதரித்தோம்.

மோடி எதற்காகக் காத்திருக்கிறார்?

மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி உட்பட காஷ்மீரைச் சேர்ந்த அத்தனை கட்சியினரும் பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என உறுதியாக நம்புகின்றனர். அதை புது டெல்லி முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் எல்லைக்கோட்டுப் பகுதி மக்கள் உட்பட ஜம்மு - காஷ்மீரின் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுக்கும் கருத்துக்கும் இடமளிக்க வேண்டும். பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜம்மு - காஷ்மீர் தலைவர்களுக்கு இடையில் தீர்வு காணும் நோக்கில் தொடர் சந்திப்புகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக ஊடகங்கள் கண்டபடி மூக்கு நுழைப்பதைத் தடுக்க வேண்டும். அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி அமைதி எனும் இலக்கை அடையத் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

அமைதி காண வரலாறு தரும் வாய்ப்புகளை ஒருபோதும் தவறவிடக் கூடாது. பிரதமர் மோடி எதற்காகக் காத்திருக்கிறார்? அமைதி காணும் விருப்பம் இருக்கிறதா அவருக்கு?

தமிழில்: ம.சுசித்ரா

©: தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x