Published : 18 Sep 2015 09:54 AM
Last Updated : 18 Sep 2015 09:54 AM

கருப்பு நிற ரத்தத்தின் இளம் துளி

கடந்த ஜூன் மாதம், ‘கருப்பினத்தவர்கள் எங்கள் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்’ என்று குற்றம்சாட்டி, தெற்கு கரோலினா மாகாணத்தின் சார்லெஸ்டனில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை டைலான் ரூஃப் சுட்டிக்கொன்ற சம்பவத்தைப் பற்றி நான் இவ்வாறு எழுதினேன்: “வெள்ளையின பெண்ணினத்தைக் காப்பது; இன்னும் சொன்னால், வெள்ளையினத்தின் புனிதத்தைக் காப்பது எனும் பெயரில் எத்தனையோ கருப்பு ரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது; எத்தனையோ கருப்பு நிற கழுத்துகள் சுருக்கிடப்பட்டிருக்கின்றன.”

வெள்ளையின வெறி

சிகாகோவைச் சேர்ந்த 14 வயது கருப்பினச் சிறுவனான எம்மெட் டில், 1955 கோடைகாலத்தில் மிசிசிப்பியில் உள்ள தனது தாத்தாவைப் பார்க்கச் சென்றிருந்தான். வெள்ளை யினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அந்தப் பையன் ஏதோ சொல்லியிருக்கிறான்; அவளைப் பார்த்து விசிலடித்தான் என்று சொல்லப்படுகிறது.

அன்று அதிகாலை இரண்டு வெள்ளையின ஆண்கள் எம்மெட்டை அவனது வீட்டிலிருந்து கடத்தினார்கள். அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள். தல்லாஹட்சி ஆற்றின் கரைக்கு அவனைக் கொண்டு சென்று அவனது தலையில் துப்பாக்கியால் சுட்டார்கள். பின்னர் பஞ்சு தயாரிக்கும் இயந்திரத்தின் உலோக விசிறியை ஒரு வேலிக் கம்பியால் அவனது கழுத்தில் சுற்றி ஆற்றில் தள்ளிவிட்டனர்.

மூன்று நாட்கள் கழித்து எம்மெட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது அது ஏற்கெனவே அழுகத் தொடங்கியிருந்தது. அடையாளமே தெரியவில்லை. அவனது தந்தையின் மோதிரத்தை அணிந்திருந்ததை வைத்துத்தான் அது அவனது உடல் என்று அடையாளம் காணப்பட்டது. இறுதிச் சடங்குக்காக அவனது உடல் சிகாகோவுக்கு அனுப்பப் பட்டது. சவப்பெட்டியைப் பார்த்தவுடன் அவனுடைய அம்மா மாமீ மயங்கி விழுந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் தன் மகனுக்கு அன்பு முத்தமிட்டு வழியனுப்பியிருந்தார்.

கொடூரத்தின் உச்சம்

தனது மகனைப் பார்க்க வேண்டும் என்று சவப்பெட்டியைத் திறக்க வற்புறுத்தினார் அவர். “என் மகனின் நாக்கு பிடுங்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். வலது கண், அவனது கன்னத்துக்கு இறங்கியிருந்ததைக் கவனித்தேன். அவனது மூக்கு பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அவன் கண்ணில் ஒரு துளை இருந்தது. துப்பாக்கி ரவை பாய்ந்ததில் ஏற்பட்ட துளையாக இருக்க வேண்டும்” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

தனது பிள்ளைக்கு என்ன நேர்ந்தது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணிய அந்தத் தாய், சவப்பெட்டியைத் திறந்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.எம்மெட் பற்றி இம்மாதம் வெளிவந்த டெவெரி எஸ். ஆண்டர்ஸனின் புத்தகத்தின்படி, அந்த இரவில் மட்டும் சுமார் 10,000 முதல் 50,000 வரையிலான மக்கள் கண்ணாடியால் மூடப்பட்ட அந்தச் சவபெட்டியில் வைக்கப் பட்டிருந்த எம்மெட்டின் சிதைந்த முகத்தைப் பார்த்துச் சென்றனர். அவன் புதைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவனைக் கொன்றவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். வெறும் 67 நிமிடங்களில் வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இடைவேளை நேரத்தில் நீதிபதிகள் குளிர்பானம் அருந்தியிருக்காவிட்டால், அத்தனை நேரம் கூட ஆகியிருக்காது என்று செய்தியாளர் ஒருவரிடம் ஒரு நீதிபதி கூறியதாகச் சொல்லப்படுகிறது.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அந்தக் கொலை யாளிகள் தங்கள் மனைவிகளை முத்தமிட்டனர். வாயில் சிகரெட்டுடன் புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தனர்.

தொடரும் வன்மம்

துரதிருஷ்டவசமாக எம்மெட் சம்பவம் தனிப்பட்ட ஏதோ ஒரு சம்பவம் அல்ல. 1930 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் நடந்த இன வன்முறையில் நூற்றுக்கணக்கான கருப்பின மக்கள் காணாமல் போயினர் என்று சட்டப் பேராசிரியர்கள் மார்கரெட் ஏ. பர்ன்ஹாம் மற்றும் மார்கரெட் எம். ரஸ்ஸால் கடந்த வாரம் ‘தி டைம்ஸ்’ இதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆனால் எம்மெட் விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. கருப்பின இளைஞர்களிடம் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அவனது மரணம். அவனது மரணம் அவர்களைத் தூண்டியது; ஒன்றிணைத்தது. அந்தச் சூழல் இன்றைய நிலையிலிருந்து பெரிய அளவில் மாறுபட்டிருக்கவில்லை.

சமூக உரிமை இயக்கத்தின் பெரு வெடிப்பு நிகழ்வாக எம்மெட்டின் கொலை அமைந்ததாக ஜெஸ்ஸி ஜாக்ஸன் குறிப்பிட்டிருக்கிறார். இம்மாதம் பிரசுரமான நேர்காணல் ஒன்றில் ‘டெத் ஆஃப் இன்னொஸன்ஸ்’ (2003) நூலின் துணை ஆசிரியரும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியருமான கிறிஸ்டோபர் பென்ஸன் இன்னும் நேரடியான ஒப்புமை ஒன்றை வெளியிட்டார்.

”ட்ரேவ்யான் மார்ட்டினுக்கும் முன்னர், மைக்கேல் பிரவுனுக்கும் முன்னர், டாமிர் ரைஸுக்கும் முன்னர் எம்மெட் டில் வருகிறான். ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (கருப்பினத் தவர்களின் உயிர் முக்கியம்) எனும் கதையின் முதல் அத்தியாயம் அவன்தான். அதன்பிறகு, அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் நிராயுதபாணி கருப்பின இளைஞர்கள் தெருக்களில் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்படும் ஒவ்வொரு சம்பவத்தின்போதும் எம்மெட் டில்லின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. இந்த நாட்டில் இனவெறி நம் மீது ஏற்படுத்திய பாதிப்பு எத்தகையது என்பதை எம்மெட்டின் இழப்பு உணர்த்தியது. இன்றும் துறுதுறுப்பான, திறமை நிறைந்த எத்தனையோ கருப்பின சிறார்களின் இழப்புக்குக் காரணம் அந்த இனவெறிதான்.”

அமெரிக்காவின் கதை

பென்ஸன் தொடர்கிறார்: “எம்மெட் டில்லின் கதையை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கும்போது, இனவெறியிடம் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்கிறோம். மேலும் நாம் அனைவரும் இந்தத் தடைகளைத் தாண்டி எதையோ பெற வேண்டும் என்பதையும் பார்க்கிறோம். எனவே, எம்மெட் டில்லின் கதை அமெரிக்காவின் மிக முக்கியமான கதை” என்கிறார் அவர்.

ஆம். எம்மெட்டின் கதை அமெரிக்காவின் மிக முக்கியமான கதைதான். இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கும் கதை அது. இளம் உயிர்கள் பறிக்கப்படுகின்றன; அமைப்பே மோசமாகியிருக்கிறது அல்லது கண்டுகொள்ள மறுக்கிறது; கொலைகாரர்கள், வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் அல்லது நீதியின் முன் நிறுத்தப்படுவதேயில்லை. பயங்கரம் மற்றும் அநீதி தொடர்பான உணர்வின் தாக்கம், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இளம் தலைமுறையை எழுச்சிபெற வைக்கிறது.

© நியூயார்க் டைம்ஸ்

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x