Published : 25 Jun 2015 08:42 AM
Last Updated : 25 Jun 2015 08:42 AM

மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்

குழந்தைகளை நோயில் வீழ்த்தும் அளவுக்கு மாசுபட்ட மிகவும் மோசமான நகரம் டெல்லி

என்னுடைய எட்டு வயது மகன் பிராம், மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டான். இன்ஹேலர் இல்லாமல் அவனால் ஒரு நிமிடம்கூடச் சுவாசிக்க முடியாது என்றாகிவிட்டது. டெல்லிக்கு நாங்கள் வந்து ஒன்பது மாதங்களான பிறகு, ஒரு நாள் இரவு இன்ஹேலர்கூட அவனுக்கு உதவவில்லை. மூச்சுத் திணறல் கடுமையாகியது. நாங்கள் பீதியில் ஆழ்ந்தோம். என் மனைவி உடனே ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்டாள். சில மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடனே செல்லுமாறு நண்பர் கூறினார். அனைவரும் காரில் புறப்பட்டோம்.

இந்தியாவின் வாகனப் போக்குவரத்து உலகிலேயே மிகவும் ஆபத்தானது. சிக்னல் விளக்குகள் எல்லாம் அலங்காரத்துக்காகத்தான். ஓட்டுநர்கள் தங்கள் விருப்பப்படிதான் போவார்கள். புதுடெல்லியில் இரவில் சாலைகள் முழுக்க லாரிகளின் ஆதிக்கம்தான். மயிர்க்கூச்செரிய வைக்கும் பயணம் அது. மருத்துவமனையில் நுழைந்ததுமே டாக்டர்கள் ஸ்டெராய்ட்களை உள்செலுத்தினார்கள். அதன் பிறகு, மேல் சிகிச்சைக்கு 1,000 டாலர்களை (சுமார் ரூ. 63,000) கொடுத்தால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடித்தார்கள். எப்படியோ ஒரு வாரம் கழித்து உடல் தேறி பிராம் வீடு திரும்பினான்.

உண்மையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என்னைத் தெற்காசிய நிருபராக ‘நியூயார்க் டைம்ஸ்’ நிர்வாகம் அறிவித்தபோது நானும் என் மனைவியும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தோம். இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற அத்தனை ஆசையாக இருந்தது அப்போது. காசு போடாவிட்டால் நகர மறுக்கும் பிச்சைக்காரர்கள், 120 டிகிரி வரை அடிக்கும் வெயில் என்று நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்ட எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தோம். ஆனால், குழந்தைகளை நோயில் வீழ்த்தும் அளவுக்கு மாசுபட்ட நகரமாக டெல்லி இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. டெல்லிக்கு ஆபத்து என்பது நிலம், நீர், காற்று, உணவு, ஈக்கள் என்று எல்லாவற்றாலும் வருகிறது என்பதைப் பிறகுதான் புரிந்துகொண்டோம். இவையனைத்தும் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான இந்தியர்களைக் கொல்கின்றன. உலகிலேயே மிகவும் மோசமான சுகாதாரம் நிலவும் நகரங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநகரின் சுமார் 44 லட்சம் குழந்தைகளில் சரிபாதிப் பேருக்கு நச்சுக் காற்று காரணமாக, கடுமையான நுரையீரல் நோய்கள் வருகின்றன என்று பின்னர் அறிந்துகொண்டேன்.

தலைநகரின் தலைவிதி

மக்கள் தொகை அதிகமுள்ள, மிகப் பெரிய மாநகரங்களில் மோசமானது டெல்லிதான். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைப்படி, பெய்ஜிங் நகரத்தைவிட டெல்லி நகரக் காற்று இரண்டு மடங்கு அசுத்தப்பட்டிருக்கிறது. உலகில் மாசு அதிகமாக உள்ள 25 நகரங்களில் ஒன்று டெல்லி. பி.எம். 2.5 என்ற துகள்தான் காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம். அது மிகவும் மாசுபட்ட நகரமான பெய்ஜிங்கிலேயே 500 என்ற கணக்கில்தான் இருக்கிறது. ஆனால், டெல்லியிலோ 1,000 (இரண்டு மடங்கு) என்ற அளவில் இருக்கிறது. என்னுடன் பழகிய அமெரிக்க நண்பர்களில் கணிசமானவர்கள் தங்களுடைய குழந்தைகளை டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பள்ளியிலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டனர். அடுத்த ஆண்டு இந்தப் பள்ளிக்கூடத்தில் சரிபாதிக்கும் மேல் காலியிடமாகத்தான் இருக்கும்.

காற்று மாசுபட்ட நகரில் வாழும் குழந்தைகளின் நுரையீரல் நிரந்தரமாகவே பாதிப்புக்குள்ளாகிறது. பாதிப்பு குறைவான நகரங்களுக்கு அவர்கள் குடிமாறினாலும் முதலில் ஏற்பட்ட பாதிப்பு அகல மறுக்கிறது. நுரையீரல் முழுச் செயல்பாட்டை இழந்தவர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படுகிறது. ஊனமடையவும் வாய்ப்பு அதிகம். ரத்த அழுத்தமும் ரத்தத்தில் வேண்டாத கொழுப்புச் சத்தின் அளவும்கூட அதிகரிக்கிறது. நுரையீரல் பாதிப்புக்குள்ளாகிய குழந்தைகள் அதிக நாட்களுக்கு வாழ்வது கடினம். காற்று மாசடைவதால் குழந்தைகளின் அறிவுத்திறன் குறைகிறது. மூளை வளர்ச்சிக் குறைவு, வலிப்பு நோய், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால்கூட கர்நாடகத்துக்குச் சென்று இயற்கை சிகிச்சை செய்துகொண்டார்.

சாக்கடை நீர்க் குளியல்!

டெல்லியின் மாசுக்குக் காற்று மட்டும் காரணம் அல்ல. சுமார் 60 கோடி இந்தியர்கள் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள். இந்தக் கழிவுகளில் பெரும்பாலானவை எந்த விதச் சுத்திகரிப்பும் இல்லாமல் அப்படியே ஆற்றிலும் வாய்க்கால்களிலும் கலக்கின்றன. இது எங்கள் குடியிருப்புக்குள்ளேயே வரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாங்கள் குடிவந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டுக் குழாயில் சாக்கடைத் தண்ணீர் வருவதாகக் கூச்சல் போட்டார். அந்தத் துர்நாற்றம் வீடு வீடாகப் பரவியது. வீட்டுக் கழிவுநீர்க் குழாய் அடைத்துக்கொண்டபோது வீட்டைக் கட்டியவர் குழாய்களைத் திறந்துபார்த்து அடைப்பை நீக்கியிருக்கிறார். அப்போது கழிவுநீர் குட்டையாகத் தேங்கி, அப்படியே ஊறிக் குடிநீர் குழாயில் சேர்ந்து வீடுகளுக்கு வரத் தொடங்கிவிட்டது பின்னர் தெரியவந்தது. அந்த நேரம் பார்த்து நான் குளித்துக்கொண்டிருந்தேன். உடல் முழுக்கத் துர்வாடை. உடனே, குளிப்பதை நிறுத்திவிட்டு துண்டால் உடலைத் துவட்டிக்கொண்டு வெளியேறினேன்.

அலட்டிக்கொள்ளாத இந்தியர்கள்

ஆண்டின் பெரும்பாலான நாட்களில் யமுனை நதி ஓடாது. சாக்கடை நீர் தேங்கியபடியே இருக்கும். அத்துடன் திடக் கழிவுகளும் சேர்ந்து மிதக்கும். இறந்துபோன தெரு நாய்கள், குரங்குகள், பூனைகள், கால்நடைகளின் எச்சங்களும் யமுனையில்தான் தூக்கி வீசப்படும். இந்தக் கழிவுகளை ஈக்களும் கொசுக்களும் இதர பூச்சிகளும் மொய்த்துக்கொண்டேயிருக்கும். போதாததற்கு மனிதக் கழிவுகளும் அப்படியே நேரடியாக இதில் கலக்கவிடப்படும். இதில் மேயும் பூச்சிகள் அப்படியே மனிதர்களையும், வீட்டில் சமைத்து மூடாமல் வைக்கும் உணவுகளையும் மொய்க்கும். டெல்லி மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்குக் குழாயில் வரும் நீரே துர்நாற்றம் அடிக்கும். இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவுக்குக் காரணமே பொதுச் சுகாதாரமின்மைதான். இந்தச் சுகாதார நிலைகளையெல்லாம் வரிசைப்படுத்திப் பார்த்தால், இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பது புரியும். ஆனால், மக்கள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஒரு நாள் பிற்பகல் எங்களுடைய குடியிருப்பின் ஒரு பகுதியில் பழைய குப்பைகளுடன் ரப்பர், தார், பிளாஸ்டிக் போன்றவற்றைப் போட்டு யாரோ எரிக்கத் தொடங்கினார்கள். நச்சுத்தன்மையுள்ள அந்தக் கனமான காற்று அப்படியே படர்ந்து எல்லா வீடுகளுக்குள்ளும் பரவியது. தனது சிநேகிதியுடன் நடைப் பயிற்சியில் இருந்த என் மனைவிக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டு நீர் சுரந்தது. நெஞ்சு வறண்டு கடும் இருமல் தொடங்கியது. அவர்கள் வேகமாக வீட்டுக்குள் வந்து கதவை உள்பக்கமாகத் தாளிட்டுக்கொண்டார்கள். அப்போது பிராமுக்கு மீண்டும் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

பிராமை நோயாளியாக்கிய டெல்லி

அடுத்த ஐந்து நாட்களுக்கு பிராம் வீட்டிலேயே படுத்திருந்தான். என் மனைவி ஸ்டெராய்டு மருந்துகளைக் கொடுத்துவந்தாள். தன்னுடைய அண்ணன், நண்பர்களைவிட தான் பூஞ்சையாக இருக்கிறோமே என்று பிராம் வருத்தப்பட்டான். டெல்லிக்கு வருவதற்கு முன்னால் அமெரிக்காவில் அவனுக்கு ஓரிரு முறை மூச்சுத் திணறல் லேசாக இருந்தது. போகப்போகச் சரியாகிவிடும் என்று அமெரிக்க டாக்டர்கள் கூறினர். ஆனால், டெல்லிக்கு வந்த பிறகு அவன் முழு ஆஸ்துமா நோயாளியாகிவிட்டான். அமெரிக்காவிலேயே தங்கியிருந்தால் ஆஸ்துமா அவனுக்கு வந்திருக்குமா? டெல்லியில் கால்பந்து, ஹாக்கி விளையாடும் மைதானங்களின் பக்கவாட்டில் நடந்து போனால் ஏராளமான இன்ஹேலர்களைப் பார்ப்பீர்கள். குழந்தைகள் ஏதும் அறியாதவர்கள், நல்லது செய்வோம் என்று அவர்கள் நம்மைத்தான் நம்பியிருக்கிறார்கள். சுகாதாரக் கேடான ஊர்களில் அவர்கள் வாழுமாறு செய்வது நம் அனைவருடைய தவறு. சிறு வயதில் ஏற்படும் சாதாரண பாதிப்பு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையே பறித்துவிடும். நாங்கள் மீண்டும் வாஷிங்டன் திரும்புகிறோம். இதைச் சொன்னவுடன் இரு மகன்களுக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சி. மூத்த மகன் ஏடென் தனக்கு ஒரு சைக்கிளும் ஸ்கேட்டிங் பலகையும் வாங்கித் தர வேண்டும் என்று இப்போதே கேட்டுவிட்டான். வாஷிங்டன் போனால், என்னுடைய ஆஸ்துமாவும் போய்விடும் என்று உற்சாகமாகக் கூவினான் பிராம்.

-கார்டினர் ஹாரிஸ்,

நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் தெற்காசிய நிருபராக டெல்லியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x