Published : 22 Jun 2015 09:01 AM
Last Updated : 22 Jun 2015 09:01 AM

இணையத்தைக் கண்டு அஞ்சும் கியூபா

உலகெங்கிலும் உள்ள நகரவாசிகளில் பெரும்பாலோர் இரவும் பகலும் இணையவாசிகளாகவே வாழ்ந்து வரும் காலகட்டத்தில், இணையச் சேவையைத் தடையின்றித் தன் நாட்டுக்குள் அனுமதிக்கலாமா, கூடாதா, என்று இப்போதுதான் விவாதித்துக் கொண்டிருக்கிறது கியூபா.

கியூபாவின் ஹவானா தீவில் 35 இடங்களில் கூகுள் நிறுவனம் அளிக்கும் வைஃபை இணைப்பை ஏற்படுத்த கியூபா அரசு அமெரிக்க அரசுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது. Nauta.cu எனும் சர்வர் மூலம் மொபைல் போன், டாப்லெட், லேப்டாப்களில் வயர்லெஸ் வலைத்தளச் சேவையை அளிப்பதற்கான வேலைகளைத் துரிதப்படுத்தும்படி கியூபா அரசின் தொலைத் தொடர்பு இயக்குநர் கூறியுள்ளார். இணையதளச் சேவையின் விலையையும் ஒரு மணி நேரத்துக்கு 4.50 டாலர்களிலிருந்து 2 டாலர்களாகக் குறைக்க வேண்டும் எனும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. கியூபாவைப் பொறுத்தவரை இணையதளம் என்பதே ஒரு புதிய வரவுதான் என்பதை இச்செய்திகள் காட்டுகின்றன. மறுபுறம் ‘கூகுளைக் கியூபாவுக்குள் அனுமதிக்கக்கூடாது; வெகுஜன ஊடகங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சில தொலைக்காட்சி தொடர்களை, திரைப்படங்களை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளை, தடை செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட எதிர்ப்புக் குரல்களும் குவாந்தநாமோ பகுதியில் எதிரொலிக்கின்றன.

அதே நேரம் கியூபா அதிபரின் கலாச்சார ஆலோசகரான அபேல் ப்ரீடோ, “நாங்கள் எதையும் தடை செய்யப்போவதில்லை. ஏனெனில். தடை செய்யும்போதுதான் மோகம் அதிகரிக்கும். இளைய தலைமுறையினருக்கு எத்தகைய கலாச்சாரம் சென்றடைய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும் என நினைப்பதே சிறுபிள்ளைத் தனம். தங்களுக்கு எது தேவை என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்” என அறிவித்துள்ளார். ஆனால் இத்தகைய ஜனநாயகப் பார்வை குவாந்த நாமோவை சென்றடைந்ததாகத் தோன்றவில்லை. குவாந்தநாமோவில் மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. உள்ளூர் பத்திரிகைகளும், சமூக மாற்றத்தைக் கோரி செயல்படும் அரசாங்கமும் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன.

சமீபத்தில் ‘டிஜிட்டல் காலகட்டத்தில் அரசியல் தொடர்பு’ எனும் தலைப்பில் ஒரு பிரம்மாண்டமான கருத்தரங்கம் கியூபாவில் நடத்தப்பட்டது. அதில் அரசாங்கம் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டாலும் அவற்றை மக்களுக்குக் கொண்டு சேர்க்க ஊடகங்கள் தேவை என ஒருபுறம் விவாதிக்கப்பட்டது. மறுபுறம், ஊடகங்கள் ஏழை எளிய மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்று எதிர்ப்புக்குரல்களும் கேட்டன. தெளிவாகச் சொன்னால், ஊடகங்களை இரும்புப் பிடியில் வைத்துக்கொள்ள வேண்டும் எனும் எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாது, வட அமெரிக்க நிறுவனமான கூகுள், கியூபாவில் இணையதளச் சேவையை பரவலாக்கும் முயற்சி தந்திரம் மிகுந்தது எனப் பேசப்படுகிறது. இதுவரை கியூபா அரசைத் தகர்க்க கியூபா மக்களை வயிற்றில் அடித்த அமெரிக்க அரசு தற்போது இணையதளம் எனும் புதிய அஸ்திரம் கொண்டு அதைச் செய்ய முயற்சிக்கிறது எனும் பீதி கிளம்பியுள்ளது.

எதுவாக இருந்தாலும் இப்போது கியூபாவில் நில நடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ உடனடியாக அச்செய்திகளை கியூப ஊடகங்களால் வெளியிட முடியாது. கியூப அரசிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே அச்செய்திகளை வெளியிடும் நிலையில் இங்கு ஊடகங்கள் உள்ளன. கியூபாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் உச்சபட்சக் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்ட இதைவிட வேறு சான்றுகள் தேவையா என்ன?

கியூபா இணையச் செய்தி இதழ்

தமிழில்: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x