Published : 01 May 2015 10:19 AM
Last Updated : 01 May 2015 10:19 AM

அரங்கேறுகிறது இமயப் படுகொலை

இமயமலையின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

நீர்மின்உற்பத்தி நிறுவனங்களுக்கும் உத்தராகண்ட் மக்களுக்கும் இடையிலான பெரும் போராட்டம் இப்போது உச்சத்தை எட்டியிருக்கிறது. அலகநந்தா நீர்மின்உற்பத்தி நிறுவன வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரமாதமான தீர்ப்புதான் இந்த விவகாரத்தின் தொடக்கப் புள்ளி. பெருகிவரும் நீர்மின்உற்பத்தித் திட்டங்களால் அலகநந்தா, பாகீரதி ஆகிய நதிகளின் படுகைகளில் ஏற்படும் பாதிப்புகுறித்து அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது.

அணைகள், குடைவுப் பாதைகள், பாறைகளை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் வழிமுறைகள், மின்உற்பத்தியகங்களின் கட்டுமானம், குப்பை உருவாக்கம், சுரங்கப் பணிகள், காடழிப்பு போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கும் கூட்டுப் பாதிப்பு குறித்து இதுவரை ஆய்வுமேற்கொள்ளப்படவில்லை. உத்தராகண்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் 2013-ல் ஏற்பட்ட பேரழிவில் ஆயிரக் கணக்கானோர் பலியானார்கள். பெருமளவில் உடமைகளும் சேதமாயின. அந்தப் பேரழிவுதான் வளர்ச்சி/தொழில் திட்டங்கள்குறித்து மறுபரிசீலனை செய்யத் தூண்டியது.

இமயமலையில் அருகருகே செயல்படும் திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த மதிப்பாய்வு என்பது மிகவும் அவசியம் என்று இப்போது கருதப்படுகிறது. இந்தத் திட்டங்களால் இமயமலை நதிகள் தங்களின் வழக்கமான பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டுக் குடைவுப்பாதை வழியாகச் செலுத்தப்படுகின்றன. அடிவாரங்களில் நீர் விழும்படி செய்யப்பட்டு, வேறொரு குழாய்ப் பாதை மூலமாகச் செலுத்தப்படுகிறது. இதனால், அந்த நதிகளின் வழக்கமான பாதையில் நீரே இல்லாமல் போகிறது. எல்லாத் திட்டங்களாலும் ஏற்படும் பாதிப்புகளைச் சேர்த்துவைத்து மதிப்பிடாமல் தனித்தனியாகச் செய்த தவறான மதிப்பீடுகள் இப்போது உச்ச நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, சுற்றுச்சூழல், இமயமலையின் சூழல், அங்குள்ள நதிகள் ஆகியவற்றின்மீது இதுபோன்ற திட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு மதிப்பாய்வு செய்வதற்காக ‘நிபுணர் குழு’ ஒன்றைச் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

நிபுணர் குழு அறிக்கை

இமயமலையின் சூழல்குறித்து உருவாக்கப்பட்ட மிகச் சிறப்பான அறிக்கைகளில் ஒன்றுதான் அந்த ‘நிபுணர் குழு’ உருவாக்கிய அறிக்கை. ‘சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்வு’(ஈ.ஐ.ஏ.) வழங்கிய அனுமதிகளெல்லாம் நம்பகத்தன்மையற்றவை; தவறாகத் தயாரிக்கப்பட்டவை; நீர்மின்உற்பத்தியாளர்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு பாரபட்சமாக உருவாக்கப்பட்டவை என்பதையெல்லாம் நிபுணர் குழு கண்டறிந்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பாய்வு அறிக்கைகளெல்லாம் சார்புநிலையற்ற சுயேச்சையான அமைப்புகளால்தான் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, திட்ட முன்மொழி வாளர்களால் நடத்தப்படக் கூடாது என்ற முடிவுக்கு நிபுணர் குழு வந்தது.

தற்போது மறுபடியும் ஆய்வுக்குள்ளாகியிருக்கும் ஆறு திட்டங்களில், ஐந்து திட்டங்கள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பனியாறுகள் பகுதியில் அமைந் திருக்கின்றன. இதனால் மிகவும் தீங்குவிளைவிக்கக் கூடிய திட்டங்கள் இவை என்பது தெளிவாகிறது. கட்டு மானப் பணிகள் காரணமாகப் பனியாறுகள் பின்வாங்கி னால் தோலுரிக்கப்படும் அந்தப் நிலப்பரப்பின் நிலை மிகவும் மோசமாகிவிடும். அசாதாரணமான மேகவெடிப்புகள் காரணமாக மறுபடியும் பெரும் துயரம் ஏற்பட்டுவிடும். நதிகள், நீரின் தரம், வனங்கள், உயிரிப் பல்வகைமை (பயோடைவர்சிட்டி) போன்றவற்றில் ஏற்படக்கூடிய எதிர் மறை விளைவுகள் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.

வேறு வழியே இல்லை

தேசியப் பூங்காக்களுக்கும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் அருகில் அமைந்திருக்கும் நீர்மின் திட்டங்கள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த அறிக்கையின் அத்தியாயம் ஒன்று விவரிக்கிறது. திட்ட முன்மொழிவாளர்கள் தங்கள் தரப்புக்கு வலுசேர்ப்பதற்காக வழக்கமாக ஒரு ஆதாரத்தைக் கூறுவார்கள். திட்டங்களால் ஏற்படும் பாதிப்புக்கு ஈடுகட்டும் வகையில் வனங்களைத் தாங்கள் மறுஉருவாக்கம் செய்கிறோம் என்ற வாதம்தான் அது. மறுஉருவாக்கம் மிக மோசமான முறையில் செய்யப்படுகிறது என்றே இந்த அறிக்கை தெரிவிக்கிறது. நீர்மின் திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்யவே முடியாது என்பதே நிபுணர் குழுவின் கருத்து. வெடிகுண்டு வைத்துப் பாறைகளைத் தகர்த்தல், குப்பைகளை உருவாக்கிவிடுதல், பனியாறுகள் பின்வாங்குதல் போன்றவற்றையும் இமயமலையில் நடக்கும் தொழில்சார் நடவடிக்கைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. இமயமலையும் கங்கையும் காப்பாற்றப்பட வேண்டுமானால், இதுபோன்ற பகாசுரத் திட்டங்களையெல்லாம் கைவிடுவதைத் தவிர, வேறு வழியேதும் இல்லை.

தன் பங்குக்கு இந்திய அரசு ஆரம்பத்தில் ‘நிபுணர் குழு அறிக்கை’க்கு ஆதரவு அளித்தது. இந்த அறிக்கைக்கும் முன்னதாக, ‘அமைச்சகங்களுக்கு இடையிலான பி.கே. சதுர்வேதி குழு’, திட்டக் குழு, ஜி.பி. முகர்ஜி சிறப்புப் பணிப் படையின் அறிக்கை, தலைமைக் கணக்குத் தணிக்கை யாளர் அறிக்கை, நீரி அறிக்கை, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கை போன்றவையெல்லாம் சுற்றுச்சூழலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் நீர்மின் திட்டங் களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றே பரிந்துரைத் திருக்கின்றன. இதையும் இந்திய அரசு சுட்டிக்காட்டியது.

கங்கோத்ரியும், பூக்களின் பள்ளத்தாக்கும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என்பதையும் இந்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்திய ஆறுகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அது ஒப்புக்கொண்டுள்ளது. இமயமலைப் பகுதியின் சுற்றுச்சூழல் மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பதையும், நதிகள் வற்றிக்கொண்டிருக்கின்றன என்பதையும் அது ஒப்புக்கொண்டது.

முன்பு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையின்மை அனுமதிகள் மறுபடியும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அரசு கூறியது. சுற்றுச்சூழல் மீதான ஒட்டுமொத்த பாதிப்புகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ளும் அணுகுமுறை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், இமயமலையில் எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அரசு கருத்து தெரிவித்திருந்தது. இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, கங்கை வடிநிலம் முழுவதும் நிலநடுக்க அபாயப் பகுதிகள் வரையறையில் நான்காவது, ஐந்தாவது பிரிவுக்குள் வருகின்றன; அதிக அளவில் அழிவுகள் ஏற்படக்கூடியது இந்தப் பிரிவில்தான் என்றும் அரசு சொல்லியிருக்கிறது.

ஜவடேகரின் வாழ்நாள் லட்சியம்

இந்திய அரசு இப்படிப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் வனங்களுக்கான அமைச்சராக இருக்கும் பிரகாஷ் ஜவடேகர் இதையெல்லாம் ஒப்புக்கொள்வதில்லை. எல்லாத் திட்டங்களுக்கும் - சுற்றுச்சூழலுக்கு அவை எந்த அளவு தீங்கு செய்பவையாக இருந்தாலும் - அனுமதி வழங்கித்தள்ளுவதையே அவர் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார். நச்சு ஆறுகள், அழிக்கப்பட்ட வனங்கள், வற்றும் நிலத்தடி நீராதாரங்கள், உலகிலேயே அதிக அளவிலான காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கொண்ட நாடாக இந்தியாவை ஆக்குவது மேற்கண்ட அணுகுமுறைதான். நிபுணர் குழுவின் பரிந்துரைகள் முழுவதையும் இந்திய அரசு ஆதரித்து நிலைப்பாடு எடுத்த பிறகு ஜவடேகர் எல்லாத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கும் படலத்தைத் தொடங்கியிருக்கிறார். நிபுணர் குழுவின் அறிக்கையைப் பற்றிய அறிக்கையை உருவாக்க நான்கு பேரை உள்ளடக்கிய நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. எனினும், எதை எதிர்பார்த்து அந்தக் குழு உருவாக்கப்பட்டதோ அதற்கேற்ப அந்தக் குழு செயல்படவில்லை. சுற்றுச்சூழல் தடையின்மை அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அந்த ஆறு திட்டங்களால் நீர், நில உயிர்சூழலிலும், நதியின் போக்கிலும் ஏற்பட்ட பாதிப்புகளை அந்தக் குழு சுட்டிக்காட்டியது.

நந்தாதேவி தேசியப் பூங்கா மற்றும் உயிர்க்கோளக் காப்புக்காடு, பூக்களின் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (உலகப் பாரம்பரியச் சின்னம்), கேதார்நாத் வனஉயிர்ச் சரணாலயம், அலகாநந்தா-3, வளமான உயிர்ப் பல்வகைமையைக் கொண்டிருக்கும் பையுந்தர் மற்றும் தௌலி கங்கா வடிநிலங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்தத் திட்டங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். நிலத்தடிப் பாதைவழியே நதி நீரைத் திருப்பிவிடுவது நீர்வாழ் உயிர் வளத்துக்குப் பெரும் ஆபத்தை விளைவித்துவிடும். சுற்றுச்சூழல் அனுமதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அனுமதி வழங்கப்பட்ட ஆறு திட்டங்களும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடும் என்பதால் அவற்றை முடக்க வேண்டும் என்றும் ‘நிபுணர் குழு’ ஒருமனதாகப் பரிந்துரைத்திருக்கிறது.

இமயமலையின் எதிர்காலமும் அதன் நதிகளின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாயிருக்கிறது. சொல்லப் போனால், இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி யிருக்கிறது. அரசுக்குள்ளும் நல்ல நோக்கம் கொண்ட அதிகாரிகளும் உமா பாரதியும் கங்கையைச் சுத்தம் செய்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜவடேகரும் அவரது தொழில்நிறுவன நண்பர் களும் இமயமலையில் எஞ்சியிருப்பதையும், அதன் நதிகள், பனியாறுகள் போன்றவற்றையும் ஒழித்துக்கட்டுவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் எந்தப் பக்கத்தில் தான் நிற்கப் போகிறேன் என்பதை இந்தியப் பிரதமர்தான் முடிவு செய்ய வேண்டும்.

- காலின் கொன்சால்வெஸ், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களுள் ஒருவர்,

மனித உரிமைகள் சட்டத்துக்கான வலைப்பின்னலின் நிறுவனர்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x