Published : 01 Jul 2019 08:08 am

Updated : 01 Jul 2019 08:08 am

 

Published : 01 Jul 2019 08:08 AM
Last Updated : 01 Jul 2019 08:08 AM

360: கலக்கல் நுஸ்ரத் ஜஹான்!

360

போரிஸ் ஜான்ஸன்... பிரிட்டனின் அடுத்த தலைவர்!

அலெக்ஸாண்டர் போரிஸ் டி ப்ஃபெஃபெல் ஜான்ஸன். இவர்தான் பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்குப் பிரகாசமான வாய்ப்புள்ளவர். இந்த நீளமான பெயரை ‘போரிஸ்’ என்று சுருக்கி அழைத்து, உச்சரிப்புச் சிக்கலிலிருந்து பிரிட்டன் மக்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.


நியூயார்க்கில் பிறந்த போரிஸ் ஜான்ஸன் பிரிட்டனின் மிக உயர்ந்த பள்ளி ஒன்றில் படித்தார். பிறகு, ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள பேலியோல் கல்லூரியில் படித்தார். என்ன காரணத்தாலோ இதழியல் துறை பக்கம் அவரது ஆர்வம் திரும்பியது. ‘டைம்ஸ்’, பிறகு ‘தி டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகைகளில் வேலை பார்த்தவர், பிரச்சினைகளைப் பேசுவதைக் காட்டிலும் அரசியலில் இறங்குவதே நேரடியாகத் தீர்வு காண்பதற்கான வழி என்றெண்ணி, கன்சர்வேட்டிவ் கட்சியில் சேர்ந்தார். திருமணத்துக்கு வெளியிலான உறவு தொடர்பான விவகாரம் ஒன்றில் கட்சியின் கொள்கை வகுத்தல் அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும், அவரது பேச்சாற்றல் காரணமாகவும் தன்னம்பிக்கை மிகுந்த இயல்பு காரணமாகவும் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அலட்சியமாகக் கடந்து அரசியலில் ஆழக் கால்பதித்தார். லண்டன் மேயர் தேர்தலில் இரு முறை வென்றவர் ஜான்ஸன்.

2008-லிருந்து 2016 வரை லண்டனின் மேயராக இருந்த காலகட்டத்தில் சமூகநீதிக்குக் குறிப்பிடத்தகுந்த பணிகளை ஆற்றியிருக்கிறார் ஜான்ஸன். லண்டனை சைக்கிள் ஓட்டிகளுக்கு ஏற்ற நகராக மாற்றியதில் ஜான்ஸனின் பங்களிப்பு முக்கியமானது. லண்டன் நகரத்தில் இன்று ஜனசந்தடி மிக்க 70 இடங்களில் சைக்கிள் நிறுத்தகங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நிறுத்தகங்களில் எங்கு வேண்டுமானாலும் வண்டியை எடுக்கலாம், விடலாம். பத்தாயிரம் சைக்கிள்கள் இப்படி ஓடுகின்றன. நாள் வாடகை இரண்டு பவுண்டுகள். முதல் அரை மணிப் பயன்பாட்டுக்கு வாடகை ஏதும் கிடையாது. பத்தாண்டுகளில் 7.35 கோடிப் பயணங்கள் நடந்திருக்கின்றன என்கிறார்கள். இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ஜான்ஸன்தான். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் பெரும் அக்கறை காட்டியவர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, பிரிட்டன் தனித்துவமாகச் செயல்பட வேண்டும் என்ற ‘பிரெக்ஸிட்’ ஆதரவு முகங்களுள் ஜான்ஸனும் ஒருவர். சொல்லப்போனால், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கோரும் ‘பிரெக்ஸிட்’டுக்கு போரிஸ் ஜான்ஸன் காட்டிய ஆதரவு நிலைப்பாடுதான் இவரை இன்று பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

கலக்கல் நுஸ்ரத் ஜஹான்!

வங்கத்தைச் சேர்ந்த நடிகை நுஸ்ரத் ஜஹானுக்கு திரிணமூல் காங்கிரஸின் சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோதே பலருடைய புருவங்களையும் அவர் உயரச்செய்தார்; 3.5 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியும் பெற்றவர், திரிணமூல் காங்கிரஸின் மற்றொரு இளம் பெண் எம்.பி.யுமான மிமி சக்ரவர்த்தியுடன் முதல் முறை நாடாளுமன்றத்துக்கு வந்தபோது நவீன உடை அணிந்திருந்ததைச் சர்ச்சையாக்கினார்கள். அதை ஊதித் தள்ளினார் நுஸ்ரத் ஜஹான். பதவியேற்கும் நாளில், “அஸ்லாமு அலைக்கும்” என்று தன் உறுதிமொழியைத் தொடங்கியவர் “ஜெய்ஹிந்த், ஜெய்பங்கா” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். அன்றைய தினம் கை நிறைய வளையல், நெற்றிப் பொட்டு, நிறைந்த குங்குமத்துடன் நுஸ்ரத் ஜஹான் வந்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் தொழிலதிபர் நிகில் ஜெயினை அவர் திருமணம் செய்துகொண்டதை அவர் பகிர்ந்துகொண்டபோது, இதற்கான பின்னணி தெரியவந்தது. இதற்காக அவரைக் கண்டிக்கும் வகையில் ஃபத்வா பிறப்பித்தது தர்-உல்-உலூம் தேவ்பந்த் அமைப்பு.

“எந்த மதத்தையும் வெறித்தனமாகப் பின்பற்றுபவர்களின் பேச்சுகளை நாம் கேட்பதோ அவற்றுக்கு எதிர்வினை ஆற்றுவதோ, வெறுப்பையும் வன்முறையையும் மட்டுமே தோற்றுவிக்கும். எல்லோரையும் உள்ளடக்கும் இந்தியாவின் பிரதிநிதி நான். எல்லா மதங்கள் மீதும் மதிப்பு கொண்டிருக்கும் அதே வேளையில், நான் ஒரு முஸ்லிமாகவே இருக்கிறேன். நான் என்ன அணிகிறேன் என்பதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. மதநம்பிக்கை என்பது ஒருவர் அணியும் ஆடைக்கு அப்பாற்பட்டது. எல்லா மதங்களின் மதிப்பு மிகுந்த கருத்துகளின் மீது நம்பிக்கை கொள்வதிலும் அவற்றைப் பின்பற்றுவதிலும்தான் இருக்கிறது” என்று இதற்குக் காட்டமாகப் பதில் கூறியிருக்கிறார் நுஸ்ரத் ஜஹான். ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா தனது கன்னிப் பேச்சில் அனல் பறக்கவிட்டிருக்கும் சூழலில், நுஸ்ரத் ஜஹானின் இந்த அனல் பேச்சு திரிணமூல் காங்கிரஸ் மீது தேசிய அளவில் கவனம் குவித்திருக்கிறது!


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x