Last Updated : 09 Aug, 2016 09:32 AM

 

Published : 09 Aug 2016 09:32 AM
Last Updated : 09 Aug 2016 09:32 AM

நெகிழட்டும் இடதுசாரிகளின் உத்தி!

வகுப்புவாதத் திட்டங்களுக்கு எதிராக இடதுசாரிகள் மட்டும் தனியாகப் போராட முடியாது



மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் இணைந்து பணியாற்றினார்கள். அரசியலிலும் சித்தாந்தத்திலும் அவர்கள் பழைய எதிரிகள். அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத இந்தக் கூட்டணி மார்க்சிஸ்ட் கட்சியிலும் இடதுமுன்னணியிலும் அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்டதாக இல்லை. இந்தக் கூட்டணி இடதுசாரிகளுக்குப் பயன்தரவில்லை என்பது எதிர்பாராத விஷயம்தான்.

தேர்தல் உத்திகள் தொடர்பாகத் தீவிரமான கருத்து வேறுபாடுகள் அந்தக் கட்சிக்குள் உருவாகியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியோடு வைத்துக்கொள்ள வேண்டிய அணுகுமுறை என்பது இந்திய இடதுசாரிகளின் வரலாற்றில் மிகவும் வேதனை தரும் பிரச்சினையாகப் பல நேரங்களில் இருந்துவந்துள்ளது. அது தொடர்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரிகள் அவர்களின் உத்திகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான ஒரு நெருக்கடியில் சிக்கியிருக்கின்றனர்.

கூட்டணிகளின் பிரச்சினை

மேற்கு வங்கத் தேர்தல் தோல்வியைக் கணக்கில் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய கூட்டணிகளை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டுமா, அல்லது அதனால் கிடைக்கும் நீண்டகாலப் பயனை மனதில்கொண்டு அத்தகைய கூட்டணிகளைத் தொடர்ந்து அமைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை விரிவான அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

பெரும்பான்மைவாதத்தைப் பேசுகிற அரசியல் தற்போது ஆதிக்க நிலையில் இருக்கிறது. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கல்வி மற்றும் பண்பாட்டு அமைப்புகள் காவிமயமாகின்றன. பிரதமரின் அலுவலகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் 2017-ல் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே முஸாபர்நகர், தாத்ரி சம்பவங்களை வைத்து மதவாத அரசியல் கிளப்பப்படுகிறது. கைய்ரானா பகுதியிலிருந்து இந்துக்கள் வெளியேறுகிறார்கள் என்று பீதி கிளப்பப்படுகிறது. இவையெல்லாம் உத்தரப்பிரதேசத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காகக் கிளப்பப்படுபவை. நாட்டில் உள்ள சமூக நல்லிணக்கத்துக்கு இது பெரிய தீமையை உருவாக்கும்.

இடதுசாரிகள் எவ்வளவுதான் குறைபாடுகளோடு இருந்தாலும் முற்போக்கான, பரந்த மனப்பான்மையுள்ள, சமூக அக்கறையுள்ள அரசியல் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சமூகத்தைப் பிளக்கிற போக்கை எதிர்கொள்வதற்கான விரிவான ஐக்கிய முன்னணி இப்போதைய தேவை.

செயலில் இல்லாத எதிர்ப்பு

அத்தகைய விரிவான ஐக்கிய முன்னணியைக் கட்டுவதற்கான உத்தி இடதுசாரிகளிடம் இருக்கிறதா அல்லது காங்கிரஸுக்கும் எதிர்ப்பு, பாஜகவுக்கும் எதிர்ப்பு என்னும் தங்களின் பழைய உத்திக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கப் போகிறார்களா என்பதுதான் தற்போதைய பிரச்சினை.

வலதுசாரிகள் தற்போது மேலும் வலிமையான சக்தியாக வளர்ந்துள்ளனர். புதிய இடங்களில் வளர்ச்சியடையவும் அவர்கள் முயற்சி செய்கின்றனர். மற்ற முதலாளித்துவ அரசாங்கங்களைப் போல சாதாரணமானதாக பாஜக தலைமையிலான அரசாங்கத்தைப் பார்க்கக் கூடாது. அதனால், இந்த நேரத்தில் வலதுசாரிகளுக்கும் வகுப்புவாதம் மற்றும் புதிய தாராளமயத்துக்கும் எதிராகத் திரட்டப்படும் இயக்கத்தின் முன்னணியில் இடதுசாரிகள் இருக்க வேண்டும்.

ஆனால், இடதுசாரிகளின் செயலில் இது காணப்படவில்லை. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இடதுசாரிகளின் செயல்பாடுகளில் வகுப்புவாதத்தை எதிர்ப்பதிலும் நவீன தாராளமயத்தை எதிர்ப்பதிலும் தேவையான அழுத்தம் இல்லை. உதாரணமாக, சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான தேசிய விவாதத்தைக் கிளப்பிய தலையீடு அறிவாளிகளிடமிருந்துதான் வந்தது. இடதுசாரி களிடமிருந்து வரவில்லை.

இந்துத்வா கொள்கையை மத்திய அரசாங்கம் திணிப்பதற்கு எதிராக எழுந்த எதிர்ப்பின் மையம், கல்வி மற்றும் பண்பாட்டு நிறுவனங்களைச் சுற்றித்தான் இருந்தது. அதுதான் பிரதமரை வெறுப்படைய வைத்தது. கல்வி வளாகங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுவதற்குக் காரணமாக இருந்தார் என்பதுதான் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வேறு துறைக்கு மாற்ற வைத்தது. பாஜக - ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்துவதற்குக் காங்கிரஸையும் பாஜகவையும் சமமான தூரத்தில் வைத்துப் பார்க்கும் மனநிலை உதவுமா என்பது இடதுசாரிகள் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சினை.

பாஜகவின் கொள்கைகளை எதிர்த்து மக்களின் கருத்தைத் திரட்ட வேண்டும் என்பதுதான் முக்கியமான பணி என்றால், அதற்காக அமைக்கப்படுகிற ஐக்கிய முன்னணிக்கு வெளியே காங்கிரஸ் கட்சியை நிறுத்துவது நடைமுறைக்குப் பொருந்தாது. மக்களைப் பிளவுபடுத்தும் வகுப்புவாதத் திட்டங்களுக்கு எதிராக இடதுசாரிகள் மட்டும் தனியாகப் போராட முடியாது.

அசாமிலும் கேரளத்திலும் தோல்வியடைந்த பிறகு, தற்போது காங்கிரஸ் எட்டு மாநிலங்களிலும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக 13 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகளைக் கவிழ்க்க முயன்றுகொண்டிருக்கிறது. பாஜகவின் வளரும் ஆதிக்கத்தால், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் பன்மைத்துவத்துக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துதான் இடதுசாரிகளின் கவலைக்குரிய விவகாரமாக இருக்க வேண்டும்; காங்கிரஸ் அல்ல.

ஐக்கிய முன்னணி

இடதுசாரிகள் வலுவாக இருக்கிற மாநிலங்களைப் பொறுத்தவரையில், பாஜக ஒரு உடனடி அபாயம் இல்லை என்பது உண்மைதான். சமீபத்துத் தேர்தல்களுக்குப் பிறகும் கேரளத்தில் பாஜக குறைவான அளவிலேயே இருக்கிறது. வட இந்தியாவுக்கும் மேற்கு இந்தியாவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. மேற்கில், பாஜக தேர்தல்களின் மூலமாகவும் தனது சித்தாந்தத்தைப் பரப்புவது மூலமாகவும் வேகமாகப் பரவியுள்ளது. அங்கே பாஜகவை எதிர்க்கும் சக்திகள் பிரிந்து கிடக்கின்றன.

ஒன்று தெளிவு. இந்திய அரசியலில், தீர்மானிக்கிற சக்தியை இழந்துவரும் காங்கிரஸை எதிர்ப்பதன் மூலம், இந்திய அரசியலின் மையத்துக்கு இடதுசாரிகள் வர முடியாது.

மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் செயல்படும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சவாலை எதிர்கொள்வதற்கான போராட்டத்தில் வகுப்புவாத அரசியலை எதிர்க்கும் எந்தவொரு சக்தியையும் புறக்கணிக்க முடியாது. காங்கிரஸும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

இன்றைய நிலைமைக்கேற்ப இடதுசாரிகள் தங்களின் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும். அவர்கள் புதிய சூழல்களுக்கேற்ப நெகிழ்வான உத்திகளை ஏற்க வேண்டும். வலதுசாரிகளோடு முரண்படும் ஜனநாயகச் சக்திகளோடு களத்தில் இணைந்து மக்களின் எதிர்ப்பை வளர்த்தெடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் ஒரு ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும்.

இடதுசாரிகளின் முன்பாக உள்ளது கடினமான பாதை. அதில் அவர்கள் முன்னேறுவதற்கு விரிவான எதிர்ப்பு முன்னணியை உருவாக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட காங்கிரஸ் - இடதுசாரிகள் அணி அத்தகைய ஒரு நடவடிக்கைதான். அது வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், பாஜகவுக்கு எதிராகவும் மோடியை 2019-ல் எதிர்கொள்ளவும் ஒரு பெரிய இயக்கம் தேவைப்படுமே? அதன் மையக்கருவாக அமையப்போகிற மக்களை அணிதிரட்டுவதற்கான தேவையை அது குறைத்துவிடவில்லை.

ஜோயா ஹஸன், பேராசிரியர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

© ‘தி இந்து’ ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x