Published : 15 Apr 2019 02:36 PM
Last Updated : 15 Apr 2019 02:36 PM

ஒழுக்கம் போதிக்கும் கல்வி வருமா?

ஜெமினி தனா

கல்வி கற்றால் முழுமனிதன் ஆகிவிடுவார் என்பார்கள்.  அப்படியானால் சமூகத்தில் நடக்கும்  அவலங்களைச் செய்வது எல்லாமே படிக்காத பாமரனா? அல்லது வேற்றுகிரகவாசியா?  ஒருபக்கம் பள்ளி மாணவன் ஆசிரியை குத்திக் கொலை செய்ததாக செய்தி வருகிறது. மறுபுறம் செயின் பறிப்பில் ஈடுபட் டவர்கள் கல்லூரி மாணவர்கள் என்று செய்தி திகைக்க வைக்கிறது. ஆக, சமூகத்தின் அவலங்களில் இளைய தலைமுறையினருக்கு பெரும்பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இவை மொத்தமும் முறையான கல்விச் சூழலின்மையையே காட்டுகிறது.

மதிப்பெண்ணுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிதலுக்கு கொடுப்பதில்லை. புரியவைக்க வேண்டிய ஆசிரியர்களுக்கும் பாடச்சுமையால் அவசியமே இருப்பதில்லை. கவனிக்க வேண்டிய பெற்றோர்களுக்கோ நேரமே இருப்பதில்லை. ஆனால் எல்லோரது கவனமும் மதிப்பெண்களில் மட்டுமே இருக்கிறது.  

 குருகுலக் கல்வியில்  இளவரசனாக இருந்தாலும்  இல்லாதவனாக இருந்தாலும் எல்லோரும் மாணாக்கர்களே! குருவின் கட்டளைக்கு கீழ் படியும் மாணவனுக்கே  குருகுலம். அங்கு எல்லோரும் சமம்.  அங்கேயே இருந்து எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய வேண்டும். அங்கிருக்கும் மாணாக்கர்கள் கல்வி, கேள்வி, வீரம், பண்பு, பணிவு, ஒழுக்கம் அனைத்தையும் கற்றுச் சிறந்த மனிதனாய் வெளி வந்தார்கள்.

 மாதா, பிதா, குரு... என்பதை அச்சுபிசகாமல் காப்பாற்றி வந்தார்கள் குருகுல மாணாக்கர்கள். கல்வி என்பது  முழுமையான வாழ்க்கைப் பாடத்தைக்  கற்றுத்தந்து முழு மனிதனாய் அவர்களை உருவாக்கிய  பொற்காலம் அது.

”நாலு எழுத்து படிச்சா புள்ள நம்மள மாதிரி கஷ்டப்படாதுல்ல” என்று வெள்ளந்தியாய்  பேசிய மக்கள்  குழந்தைகளைப் படிக்க அனுப்பினார்கள். இப்போது போல் ஊருக்கு 10 பள்ளிக்கூடமெல்லாம் அப்போது கிடையாது. 10 ஊருக்கு சேர்ந்தாற்போன்று ஒரேயொரு பள்ளிக்கூடம்தான். கால்களில் செருப்பில்லாமல்... கிழிந்த போஸ்ட் பாக்ஸ் டிரவுசரைப் போட்டுக்கொண்டு படித்த குழந்தைகள் வளர்ந்த பிறகு  ஊருக்கே வழிகாட்டும் நாலும் தெரிந்தவனாய் ஆனார்கள்.

 பள்ளிக் கல்விக்குப் பிறகு வந்த தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தால் சர்கார் உத்தியோகம் என்று  பிள்ளைகளுக்கு வழி காட்டினார்கள்.  பி.காம் படிப்புகள் எல்லாம் வங்கிப்பணிகளுக்கு.. பிஏ, எம்ஏ படிப்புகள் எல்லாம்  ஆசிரியர் பணிகளுக்கு என்று பிரித்துப் படித்தார்கள்... வெற்றியும் பெற்றார்கள்.  

வாழ்க்கைதான் கல்வி:

     30 வருடங்களுக்கு முன்புவரை அன்பால் கட்டுப்பட வைத்தார்கள் ஆசிரியர்கள். தோசையம்மா தோசை  என்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பாசத்தையும் அன்பையும் குழைத்துத் தரும் ஒற்றுமையை வலியுறுத்தும் பாட்டுக்களைப் பாடியபடி ஆடியபடி கல்வியோடு குடும்ப ஒற்றுமையையும் மனதுக்குள் விதைத்தார்கள்.

அசோகர் மரம் நட்டார் என்பது  இன்று படிப்பவர்களுக்கு  வேண்டுமானால் கேலியாக இருக்கலாம்.  ஆனால் அசோகர் ஏன் மரம் நட்டார்.. மரம் நடுவதால் என்ன பயன்.. இயற்கை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வுடன் கூடிய கற்பித்தலில்தான் அன்றைய பாடங்கள் நிறைவு பெற்றன.  

  தேங்காய் சிரட்டையில் மண்ணை அள்ளி கேழ்வரகைத்  தூவி   பசுமையாய் வரும் பயிர்கள்தான் விவசாய முறை என்று உணவையும் உழைப்பையும்  சேர்த்துப் படித்த காலங்கள் இப்போது நினைத்தாலும் பசுமையாய் மனதை வருடுகிறது.  தாமஸ் ஆல்வா எடிசன் 999 முறை தோல்வியுற்று 1000வது முறை மின்விளக்கைக் கண்டறிந்தார் என்று பொத்தாம்பொதுவாக  சொல்லாமல்..  முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.. விடா முயற்சியும் மன உறுதியும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்பன போன்ற  மேற்கோள்கள் காட்டிய கல்விமுறைதான் அப்போது இருந்தது.

நீதிக்கதைகளும், போதனை வகுப்புகளும், சாரணர் இயக்கங்களும், விளையாட்டு வகுப்புகளும்   வாரம் இருமுறை வரக்கூடிய  கைவேலை வகுப்புகளும் கூட.... வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவே  இருந்தன. ஆனால் இன்றைக்கு எந்தப் பள்ளியிலும் ஸ்கெளட் முதலான விஷயங்களெல்லாம் இல்லை

கல்விதான் வாழ்க்கை:

   நவீன உலகில் கல்விதான் சிறந்த செல்வம் என்பது மாற்றி புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. படித்தால்தான் பங்களாவும் காரும் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டோம். கல்வி கற்பிக்கும் கூடங்கள் வணிகமாக்கப்பட்டன. அதிக மதிப்பெண் பெறும் மாணாக்கர்கள்தான் அதீத திறமைசாலிகளாக சமூகத்தில்  பார்க்கப்படுவார்கள்  என்ற எண்ணங்களை உருவாக்கியதில் பள்ளிகளுக்குத்தான் தொடர்பு உண்டு! முண்டியடித்து முன்தினம் இரவு  பள்ளிக்கூட வாசலில் தவமிருந்து குழந்தைகளைச் சேர்த்த பெற்றோர்களால் பள்ளிகள் பத்து மடங்கு லாபம் கண்டன. படிக்கும் குழந்தை எங்கு படித்தால் என்ன... நாமெல்லாம் அரசு பள்ளியில் படித்து  முன்னேறவில்லையா  என்று உள்மனம்  சொன்னாலும் நாகரிக மோகத்தில் சமாதானமாகவில்லை.  

 பாடங்களைப் புரிந்து நிதானமாக படிப்பதை விட மனப்பாடம்  செய்யவே நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இன்றும் இது தொடர்கதையாகவே இருக்கிறது. ’நன்றாக மார்க் எடுத்தால் பள்ளியில் சீட் உண்டு; படிப்பு வரலையா. வேற ஸ்கூல் பாத்துக்கோங்க’ என்பதில் எந்த நியாயமுமில்லை.

   பள்ளிக் கல்வித்துறை  குறிப்பிட்ட வகுப்புகள் வரை மாணாக்கர்கள் கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டும் என்று  ஆணையிட்டது கூட  மாணாக்கர்களின் அறிவு வளர்ச்சியை வளரவிடாமல் செய்துவிட்டது. இரு மாறுபட்ட சூழலில்  படித்தவர்கள் பொதுத்தேர்வுகளில்  தவித்தார்கள். .பள்ளிகளோடு பெறோர்களும்… ”நல்லா மார்க் வாங்கிடுவியா?” என்ற உறவினர்களின் அழுத்தமும் சேர்ந்து கல்வியென்றாலே மதிப்பெண்தான் போல என்று ஒருவித வெறுப்பை உண்டாக்கி விட்டன.

  மாநிலக்கல்வியை விட மத்தியக் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணாக்கர்கள் தான் திறமைமிக்கவர்கள் என்ற எண்ணங்களும் இங்கே இருக்கின்றன. இதனால் கல்வியில் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டே, கல்வி நிறுவனங்கள் தங்களை முன்னேற்றிக்கொண்டன.

10ம் வகுப்பு வரை கட்டிய கல்விக்கட்டணங்களைக் கூட்டிப் பார்த்தால்  கிராமத்தில் 10 ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கியிருக்கலாம். இப்படி அடிப்படை ஆரம்ப மேல்நிலைப் பள்ளிகள் என்றால்..  அடுத்தடுத்து முளைத்த கல்லூரிகளும்  லேசுப்பட்டதில்லை.

   ஒருபுறம் கலை அறிவியல் கல்லூரிகள், மறுபுறம் பொறியியல்  தொழில்நுட்பக் கல்லூரிகள்…என்று தடுக்கி விழுந்த இடங்களிலெல்லாம் முளைக்கத்தொடங்கின. பட்டம் பெற்ற பட்டதாரிகள் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையிலும் பொருந்தாமல் இன்றும் ஒருவித அழுத்தத்தோடு தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். 

  கல்வியில் வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக் கொடுக்காமல், பகுத்தறிவையும், அனுபவ அறிவையும் அவர்களுக்குச் சொல்லித்தரவே இல்லை. கல்வித் திட்டத்திலும் கற்றுக்கொடுக்கும் முறையிலும் மாற்றம் வந்தால் சமூகத்திலும் எல்லாமே நல்விதமாக மாறும்.

மாற்றம் தேவை:

  .  சமூகத்தில் நடக்கும் அவலங்களை சாளரம் வழியாக எட்டிப்பார்ப்பதோடு இல்லாமல்  தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை அறிவை போதிக்கும் பள்ளிகள் உணரவேண்டும்.

மன அழுத்தம் இல்லாமல் கல்வியிலும் திறமையிலும்  என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்.. என்பதை கல்வி வல்லுநர்களோடும் பெற்றோர்களுடனும்  ஆலோசனை செய்து மாற்றத்தை விதைக்கவேண்டிய கடமை, அரசுக்கு இருக்கிறது.

   மழலை வகுப்புகளிலேயே  குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை வலியுறுத்தும்  பாடத்திட்டங்கள் கொண்டுவரலாம்.. சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டிய  விஷயங்களை வாழ்க்கைக்கான பாடங்களாக்கி கல்வியோடு இணைக்க பள்ளி கல்வித்துறை முன் வரவேண்டும்.

’எப்படியாவது சம்பாதிச்சாப் போதும்’ என்கிற மிக மோசமான மனநிலை இன்றைக்கு இருக்கிறது. இதற்கெல்லாம் அடித்தளமாக இருப்பது... ஒழுக்கம் போதிக்காதுதான்.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று சொன்னதெல்லாம் போய்விட்டது. குணம் எனும் குன்றேறி... என்றொரு வார்த்தை உண்டு. ஆனால் இன்றைக்கு குணத்தை வைத்துக்கொண்டு, இ.பி.பில் கட்டமுடியுமா என்று நக்கலடிக்கும் அளவுக்குப் போய்விட்டது சமூகம். பண்பு என்பதையெல்லாம் மறந்தேவிட்டார்கள். கலாச்சாரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை உடைத்து சுக்குநூறாக்கிவிட்டார்கள். மாறிக்கொண்டே இருப்பதுதானே கலாச்சாரம் என்று மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

பெரியவர்களுக்கு மதிப்பு தருவதில்லை. பெண்களுக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. பெற்றோரிடம் உண்மையாக இருப்பதில்லை. சகோதரர்களிடம் இணக்கமாக இல்லை. அவர்களின் ஏக்கதுக்கங்களையெல்லாம் குறித்து அக்கறையே இல்லை. அக்கம்பக்கம் குறித்த பயமில்லை. சமூகம் தொடர்பான புரிதலே இல்லை. இப்படிப்பட்ட கட்டமைப்புடன் இருக்கிற இன்றைய தலைமுறையினர், பெரியவர்களையும் பெண்களையும் புரிந்துகொள்ளாமல் மிகக் கேவலமாக இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களை வெறும் போகப்பொருளாக நினைத்தைதையும் கடந்து, அவர்களின் உடலையும் உடைமைகளையும் பறித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது இருக்கிற நவீன சாதனங்களின் துணையுடன், படமெடுத்து, வீடியோ எடுத்து, ப்ளாக்மெயில் செய்து, மிரட்டி, அடித்து, உதைத்து, பெண்களை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே, வீடும் சமூகமும் பெண்களை மதிப்பது குறித்து கற்றுக்கொடுக்கவே இல்லை என்பதுதான் வேதனை.  

  மதிப்பெண்களில் ஹீரோவாக இருந்து வாழ்க்கையில் ஜீரோவாவதை விட    கற்ற கல்வியைப் புரிந்து அதன் வழி நின்று அனுபவ அறிவை பெற்று பட்டங்களின்றியே வாழ்க்கையில் ஹீரோவாகலாம்.

பண்பும் ஒழுக்கமும், நேர்மையும் உண்மையும்தான் ஒருவரை உண்மையான ஹீரோவாக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x