Last Updated : 19 Dec, 2018 09:31 AM

 

Published : 19 Dec 2018 09:31 AM
Last Updated : 19 Dec 2018 09:31 AM

2 மினிட்ஸ் ஒன்லி 22: அறியாமை ஒரு வரம்

‘இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் ஒரு மூத்த மனிதர், ‘‘இதில் வர்ற சம்பவங்கள், மனிதர் கள் எல்லோருமே பாசிட்டிவ் விஷயங்கள் சொல்ற நல்லவங்களாகவே வர்றாங்க. ஏம்பா... பாலாஜி, உலகத்துல கெட்டவங் களே இல்லையா? அவங்களையும் சொன் னாத்தானே தொடர் ஒரு ஏற்ற இறக்கமா இருக்கும்!’னு சொன்னார். ‘‘கண்டிப்பா சொல் றேன்’’னு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டேன்.

வாராவாரம் ஏற்றம், இறக்கம் இருக் கணும். புதுபுது கதாபாத்திரங்கள் சேர்க் கணும்னு நான் இதை எழுதவில்லை. இந்த மாதிரி சிலர் கேட்பதையும் கடந்து ஒரு விஷயம் இருக்கணும் என்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இன்றைக்கு இருக்குற சமுதாயத்தில் நல்லவர்களைப் பற்றி மட்டுமே பேசுவது போர் அடிக்கிற விஷயமா ஆகிடுச்சு.

சினிமாவையே எடுத்துக்கோங்க. கடந்த 15 வருஷங்களில், படங்களில் நடித்த பெரிய ஹீரோக்கள் பலரும் ரவுடியா நடிச்சிருப் பாங்க. இல்லைன்னா போலீஸா நடிச்சிருப்பாங்க. அப்படியும் இல்லையா பொறுக்கின்னு தன்னை அடையாளப்படுத்திட்டு நடிச்சிருப் பாங்க. சாதாரண மிடில் கிளாஸ் வீட்டு பையன் அல்லது ஒரு பொறுப்பான அப்பா இந்த மாதிரியெல்லாம் அவர்கள் நடிச்சு பார்த்திருக்கவே முடியாது. ஏன்னா, நல்லவர்களைப் பற்றி பேசினா போர் அடிச்சுடும்னு நினைப்பாங்க.

நான் பார்த்த மனிதரை பார்த்த கணத்தில் என்ன தோணுச்சோ, அதை அப்படியே பதிவு செய்கிறேன். கடந்த இருபதுக்கும் மேலான வாரங்களில் இப்படி பதிவு செய்த மனிதர்களில் யாராவது ஒருவர் உங்களைக் கவர்ந்திருந்தால் போதும். அதுதான் இந்தத் தொடரின் வெற்றி. தொடர்ந்து நல்லவர் களையும், நல்லவற்றையும் மட்டுமே இந்தத் தொடர் பேசும்.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த நேரத் துல நடந்த நிகழ்வு இது. தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டுக்காக மக்கள் களத்தில் இறங்

கினப்போ, ‘இப்படியும் செய்ய முடி யுமா?’ என்று உலகமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம். தொடக்கத்தில் இப்படி எல்லோரையும் நினைக்க வைத்த போராட்டம் இலக்கு முடியும்தருவாயில் வருத்தத்தோடு நிறைவுற்றது.

பெரிய ஈடுபாட்டோடு இறங்கி வேலை பார்த்த எனக்கும் போராட்டம் முடியும் தருவாயில் அதைப் பற்றிப் பேச திராணி இல்லாதவனாகவே நின்றேன். மனசு ரொம்பவே சரியில்லாமல் இருந்தேன். சில நாட்கள் தனிமையாக இருப்போம்னு அப்போ தோணுச்சு. செல்போனை வீட்லயே வைத்துவிட்டு, ஒரு பேக்கை எடுத்து மாட் டிட்டு எங்கே போகலாம் என்ற இலக்கே இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கினேன்.

கையில் கொஞ்சம் பணமும், பேக்ல 2 செட் சட்டை பேண்ட் மட்டும்னு புறப்பட்ட பயணம் அது. இப்போ எல்லோரும் இந்த மாதிரி பயணத்தை ‘சோலோ ட்ரிப்’னு சொல்றாங்க. மேகாலயா, சிரபுஞ்சின்னு என்னோட கால்கள் நினைத்த இடங்களுக்கெல்லாம் பயணித்தன. இரண்டு, மூன்று நாட்கள்னு தொடங்கி, 10 நாட்கள்னு அந்த தனிமைப் பயணம் நீண்டது.

அந்தப் பயணத்தில் சிரபுஞ்சிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். பூமியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் உயரத்தில் இருக்குற மலை கிராமம் அது. அந்தக் கிராமத்துக்கு போய் சேர்ந்தப்போ மாலை 6 மணி. அங்கே இருந்து மற்றொரு ஊருக்கு கீழ்ப்புறமாக இறங்க வேண்டும் என்றாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். மேல்நோக்கி ஏற வேண்டுமென்றாலும் 2 மணி நேரம் ஆகும். பனிப்பொழிவு வேறு. இரவு அங்கேயே தங்கிவிடலாம்னு தங்கினேன். அடுத்த நாள் காலை கண்முன் அந்தக் கிராமம் அப்படி ஓர் அழகாகத் தெரிந்தது. அந்த அழகு இரண்டு நாட்கள் தங்க வைத்தது.

அப்போதான் ஒரு முக்கியமான விஷ யத்தை அறிந்தேன். அந்த ஊருக்கு போவதற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பே, ‘இனி ரூ.500 நோட்டும், ரூ.1000 நோட்டும் செல்லாது’ என்ற பண மதிப்

பிழப்பு சட்டத்தை மத்திய அரசு அறிவித் திருந்தது. அது நவம்பர் 8-ம் தேதி. இப்படி அறிவித்தபோது எப்படியும் இந்தியா வல்லரசாகிவிடும் என நம்பிய ஆட்களில் நானும் ஒருவன். ஆனால், சில நாட்களில், வாரங்களிலேயே நாமெல்லாம் எப்படி சிரமப்பட்டோம், பாதிக்கப்பட்டோம் என்பது நமக்குத்தான் தெரியும்.

இப்படி ஒரு அறிவிப்பை மத்திய அரசு சொன்ன விஷயமே தெரியாமல் அந்த மலை கிராமத்து மக்கள் இருந்தனர். அதுவும் டிசம்பர் முதல் வாரம் வரைக்கும். ஒரு மாதம் ஆகியும் ஒரு செய்தியை தெரிந்துகொள்ளாததோடு, அடிப்படையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் இயல்பாக, சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

பிறகுதான் தெரிய வந்தது. அவர்களுக்கு ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு எல்லாம் பெரிய தேவையே இல்லை. அவர்களது வாழ்க்கையோட மொத்த தேவையும் ரூ.100-க்குள் முடிந்துவிடும் விதமானது என்பதும் தெரிந்தது.

6-ம் வகுப்பு படிக்கும்போதே என் தாத்தா என்னிடம், ‘புத்தகம் படிக்கணும்? அரசியல் பற்றி தெரிந்துகொள்ளணும்?’னு கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அதுவே, 10-ம் வகுப்பு படிக்கும்போது பல மாதிரி பொது விஷயங்கள் தெரிந்தவனாக இருந்தேன். இப்படி வளர்ந்ததால் என் கூட

சுற்றும் சக இளைஞர்கள் எல்லோருமே எல்லாவற்றையும் தெரிஞ்சி வைத்திருக் கணும்னு நினைப்பேன். அப்படி இருந்த என் எண்ணத்தை சுக்குப்பொடியாக்கியது அந்தக் கிராமம்.

‘இக்னோரென்ஸ் இஸ் ப்லிஸ்’னு (ignorance is bliss) ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் சொல்வாங்க. அதாவது ‘அறியாமை ஒரு சிறந்த வரம்’னு. அப்போ வரைக்கும் அறியாமை என்ற வார்த்தையே பிடிக்காதவனாக இருந்த எனக்கு, அந்தக் கிராமத்தில் இருந்த கணம் ரொம்பவும் பிடித்த ஒரு விஷயமாக தோணுச்சு.

இன்றைக்கு நெகட்டிவ் எண்ணங்கள் அதிகமாக சூழ்ந்திருக்கிற இந்த உலகத் தில் எதைப் பற்றி பேசினாலும் அது பிரச் சினையாகவே முடிகிறது. ஏன், மாங்கு மாங்குன்னு சண்டைப் பிடிக்கணும்? நமக்கு என்ன தேவையோ அதுக்கு மட்டும் போராடினால் போதும். அப்படி இருந்தால் தான் வாழ்க்கையில் அமைதி. சந்தோஷம் இருக்கும். அதுக்கு உதாரணமாகத்தான் அந்த மலை கிராமத்தைப் பார்க்கிறேன்.

‘பூனை கண்ணை மூடிட்டா உலகமே இருண்டுச்சுன்னு நினைக்குமாம்’னு ஊர்ல பேசிப்போம். அந்த மாதிரி சில விஷயங்களில் கண்களை மூடிக்கொள்வது நல்லது. அது நிம்மதியைக் கொடுக்கும்.

குழந்தைக்கு இன்று முதல் பிறந்தநாள்னு சமூக வலைதளத்தில் பதிவிட்டால் உடனே, ‘எல்லைப் பகுதியில் போர் நடக்குது. உனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் கேட்குதா?’ன்னு ஒருவர் கமெண்ட் பதிவு செய்வார். ஆகவே, முதலில் அந்த மாதிரி பதிவுகளை நாம் பதிவிடாமல் இருப்பது நல்லது. அப்படியே பதிவிட்டாலும் அதற்கு கீழே உள்ள தேவையில்லாத நூற்றுக்

கணக்கான கமெண்ட்களை படிக்காமல் இருந்துவிட வேண்டும். எல்லாவற்றுக்கும், ‘அய்யய்யோ.. இப்படியா?’ன்னு கவலைப்பட அவசியமில்லை.

எனக்கு அந்தக் கிராம மக்கள் சொல்லிக்கொடுத்த வாழ்க்கை இதுதான். எல்லாருக்கும் எல்லாமும் தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை அங்கே சென்று திரும்பிய நாள்முதல் நான் பின்பற்றுகிறேன். விருப்பம் இருந்தால் நீங்களும் பின்பற்றுங்கள்!

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x