Last Updated : 20 Apr, 2024 08:31 PM

10  

Published : 20 Apr 2024 08:31 PM
Last Updated : 20 Apr 2024 08:31 PM

2009, 2014, 2019-ஐ விட தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு: தேர்தல் ஆணைய பொறுப்பும், சில கேள்விகளும்

நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்.19) அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால், வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகி உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 3 மக்களவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளோடு ஒப்பிடுகையில், இம்முறை குறைவாகவே வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு குறைந்ததன் காரணம் என்ன? - சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழா என்று இந்திய மக்களவைத் தேர்தல் வருணிக்கப்படுகிறது. சுமார் 100 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று தங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்க வாக்களிக்கிறார்கள் என்பதால், இது மிகையான வர்ணனை அல்ல. உண்மையில் இது உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாதான். ஆனால், இந்த வர்ணனை அதற்குரிய தகுதியை முழு அளவில் இல்லாவிட்டாலும் பெருமளவில் பெற, பதிவாகும் வாக்குகளின் சதவீதம் முக்கியமல்லவா?

100 சதவீத வாக்குப்பதிவு என்ற முழுமையான இலக்கை இப்போதைக்கு எட்ட முடியாவிட்டாலும், அதை நோக்கிய நகர்வு முக்கியம்தானே? இதற்கான பொறுப்பு வாக்காளர்களிடமும் இந்திய தேர்தல் ஆணையத்திடமும்தானே இருக்கிறது? உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா வெற்றி பெற வேண்டுமானால், வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிக்க முன்வர வேண்டும், வாக்களிக்க முன்வருபவர்கள் எளிதான முறையில் வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இது அடிப்படை அல்லவா?

100 சதவீத வாக்குப்பதிவை எட்டாவிட்டாலும், தேர்தலுக்குத் தேர்தல் தொடர்ச்சியான முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு 'மிகப் பெரிய ஜனநாயகத்துக்கு' முக்கியமல்லவா? ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? இந்தத் தேர்தலில் என்ன நடந்தது?

தமிழகத்தில் கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 73.02%. 2014-ல் பதிவான வாக்குகள் 73.74%. 2019-ல் பதிவான வாக்குகள் 72.47%. 2024-ல் பதிவான வாக்கு 69.46%.

2014 தேர்தலோடு 2019 தேர்தலை ஒப்பிட்டால் 1.27% வாக்குகள் குறைவு. 2019 தேர்தலோடு 2024 தேர்தலை ஒப்பிட்டால் 3.01% குறைவு. இந்த தொடர் சரிவு சொல்லும் செய்தி என்ன? வாக்காளர்களிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் முனைப்பு குறைந்து வருகிறது என்பதைத்தானே இது காட்டுகிறது?

இம்முறை, வாக்குப்பதிவு குறைந்ததற்கு தேர்தல் ஆணையம்தான் காரணம் என பெரும்பாலான வாக்காளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சரியாக தயார் செய்யவில்லை என்றும், தகுதி உள்ள வாக்காளர்கள் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அத்தொகுதியின் வேட்பாளரும், பாஜகவின் தமிழக தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தென் சென்னை தொகுதியிலும் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அத்தொகுதியின் வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இதே குற்றச்சாட்டை பெருமளவில் முன்வைக்கின்றனர். தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனில் இருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து சென்னை வந்த பால்ராஜ் என்பவரின் பெயர், பட்டியலில் இல்லை என்பதால் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். "வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. இது குறித்து கேட்டால் முறையாக பதில் அளிக்காமல் அழைக்கழிக்கிறார்கள்" என பால்ராஜ் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதேபோல், நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரும் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முடியாமல் திரும்பி இருக்கிறார். “என்னுடைய ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த தேர்தல்களில் என்னுடைய வாக்கை பதிவு செய்தேன். ஆனால், இந்த முறை வாக்குச்சாவடியில் என்னுடைய பெயர் விடுபட்டுவிட்டது என்கிறார்கள். என் மனைவி பெயர் உள்ளது. அவருக்கு வாக்கு உள்ளது. என்னுடைய பெயர் விடுபட்டது என்கிறார்கள். இருந்தாலும் ஜனநாயக உரிமையை நிறைவேற்ற வந்தேன். அது நடக்கவில்லை எனும்போது மன வேதனையாக உள்ளது.

எங்கே எப்படி தவறு நிகழ்ந்தது என தெரியவில்லை. வாக்களிக்க முடியவில்லை என்ற வேதனையுடன் சொல்கிறேன். தயவு செய்து அனைவரும் அவரவரின் வாக்குகளை செலுத்தி விடுங்கள். நானும் அடுத்த தேர்தலில் என்னுடைய வாக்கை பதிவு செய்துவிடுகிறேன்” என வேதனையுடன் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பல இடங்களில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாதது மற்றொரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. "பூத் சிலிப் கிடைக்காத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதற்காக வாக்குச்சாவடிகளில் ஊழியர்கள் இருப்பார்கள். இந்தத் தேர்தலில் அவ்வாறு எந்த ஊழியரும் வாக்குச்சாவடியில் இல்லை. இதனால், பூத் சிலிப் இல்லாமல் வந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் இருந்து தொலைவில் முகாமிட்டிருந்த அரசியல் கட்சியினரிடம் சென்று பூத் சிலிப் வாங்கி வருமாறு வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். சிலர் அவ்வாறு சென்று பூத் சிலிப் வாங்கி வந்து வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்" என்கிறார் மதுரையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர்.

"வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில்தான் அமைக்கப்படுகின்றன. ஒரு பள்ளியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்களிக்க வருபவர்கள், தங்கள் வாக்கை செலுத்த எந்த வாக்குச்சாடிக்குச் செல்ல வேண்டும் என்பது குறித்து வழிகாட்ட நுழைவு வாயிலில் அதிகாரிகள் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லததால், வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அலைக்கழிக்கப்படும் நிலை இருந்தது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.

இவை ஒருபுறம் என்றால், அரசின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் விடத்தண்டலம் கிராமத்தில், சாலையை சீரமைக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு, விழுப்புரம் அருகே வேடம்பட்டு கிராமத்தில் தனியார் மருந்து கழிவுத் தொழிற்சாலையை மூடக் கோரி தேர்தல் புறக்கணிப்பு, அரியலூர் திருக்கை ஊராட்சியைச் சேர்ந்த கொண்டியங்குப்பம் கிராமத்தினர், கூடலூர் கிராமத்தில் வாக்குப்பதிவு மையம் அமைத்ததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தினர் மீன் பதப்படுத்தும் ஆலைகளை அகற்றக் கோரி தேர்தல் புறக்கணிப்பு, திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல் மற்றும் மருத்துவாம்பாடி கிராமங்களைச் சேர்ந்த பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகள் கோரி தேர்தல் புறக்கணிப்பு, தேனிமலையில் வசிக்கும் காட்டு நாயக்கன் சமுதாயத்தினர், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் வளையபட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு, சேலம் மாவட்டம் ஏற்காடு செங்கலத்துப்பாடி மலைக் கிராமத்தில் மயானவசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் கருக்கனஹள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டப் பாலம் கோரி தேர்தல் புறக்கணிப்பு என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் பல கோடி ரூபாய் மதிப்பில் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டன. நவீன வாக்குச்சாவடிகள், அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள் என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இருந்தும், தேர்தல் ஆணையம் பல்வேறு விஷயங்களை கவனிக்கத் தவறிவிட்டது. வாக்காளர் பட்டியலை சரியாக தயார் செய்திருக்க வேண்டும், பூத் சிலிப்பை முழுமையாக விநியோகித்திருக்க வேண்டும், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் அலைக்கழிக்கப்படாத நிலை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், தேர்தல் புறக்கணிப்பை தடுக்க முன்கூட்டியே ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். இவற்றைச் செய்யாததால், இம்முறை வாக்குப்பதிவு குறைய தேர்தல் ஆணையமே முக்கிய காரணம் என்ற பரவலான குற்றச்சாட்டு அதன் மீது விழுந்துள்ளது.

ஆனால், இவற்றை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, நகர்ப்புற வாக்காளர்களிடம் சுணக்கம் இருந்ததாகவும், வெயில் காரணமாக பலர் வாக்களிக்க முன்வரவில்லை என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். இந்த காரணங்கள் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டியவை அல்லதான். ஆனால், இந்த காரணங்களைக் கூறி தேர்தல் ஆணையம் தனது தவறை மறைக்க முடியாது. வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக இருந்தது மட்டுமின்றி, பதிவான வாக்குகளைச் சொல்வதிலும் தேர்தல் ஆணையம் இம்முறை மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

நேற்று (ஏப்.19) இரவு 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 69.46% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. வழக்கமாக அடுத்து வரும் வாக்கு விகிதம், முந்தயதைவிட கூடுதலாக இருக்கும். ஆனால், இம்முறை குறைவாக இருந்தது.

இது குறித்து பத்திரிகைகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று (ஏப்.20) காலை 11 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார், மாறாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், முந்தைய அறிக்கையில் இடம்பெற்ற விவரங்களே மீண்டும் இடம் பெற்றிருந்தன.

இந்த மக்களவைத் தேர்தல் 2 ஆண்டு கால கடுமையான தயாரிப்புகளின் உச்சம் என்கிறது தேர்தல் ஆணையம். இந்த உச்சத்தின் லட்சணம் இதுதானா என்ற கேள்வியும் எழாமலில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x