Last Updated : 31 Jan, 2024 06:19 AM

 

Published : 31 Jan 2024 06:19 AM
Last Updated : 31 Jan 2024 06:19 AM

மக்களவை மகா யுத்தம் | திருப்புமுனையாகும் பிஹார் அரசியல் களம்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘டாஸ்’ போடுவதற்குச் சற்று முன்பு, ஒரு அணியின் கேப்டன், திடீரென எதிரணியில் சேர்ந்து விளையாட ஆயத்தமானால் எப்படி இருக்கும்? பிஹாரில் நிதீஷ் குமார் நிகழ்த்தியிருக்கும் அரசியல் ‘பல்டி’ அப்படிப்பட்டதுதான்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே மீண்டும் திரும்பி, மீண்டும் (!) முதல்வராகியிருக்கிறார். ஆனால், இதில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கிறது. ‘இண்டியா’ கூட்டணியின் ‘கேப்ட’னாக நிதீஷ் நியமிக்கப்படவே இல்லை. நிதீஷ் நிம்மதியிழந்து வெளியேற அது முக்கியக் காரணம். கூடவே பாஜகவின் அஸ்திரங்கள், காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மீதான அதிருப்தி என வேறு சில காரணிகளும் உண்டு.

பின்னணி என்ன? - 2022 ஆகஸ்ட் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி மகாகட்பந்தன் கூட்டணி சார்பில் மீண்டும் முதல்வரான நிதீஷ் குமார், 2023 ஜூன் மாதத்தில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணிதிரட்டத் தொடங்கினார். பின்னர், ‘இண்டியா’ என நாமகரணம் சூட்டப்பட்ட அந்தக் கூட்டணிக் கட்சிகளின் மொத்த வாக்குவிகிதம் 38% எனப் பேசப்பட்டது.

பாஜகவின் வாக்கு சதவீதம் 37% தான். இண்டியா கூட்டணியின் முதல் கூட்டத்தைப் பிஹார் தலைநகர் பாட்னாவில்தான் நிதீஷ் நடத்தினார். ஒருவகையில், அக்கூட்டணியின் மாதிரி வடிவமாக பிஹார் அரசும் - அரசியல் களமும் இருந்தன.

இதற்கிடையே, 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பிஹார் முதலமைச்சர் பதவி, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருப்பதால், பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் நிதீஷ் பரிதவிப்பில் இருந்தார்.

தவிர, இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகத் தான் நியமிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். கடைசியாக நடந்த இண்டியா கூட்டணிக் காணொளிக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளராக நிதீஷை நியமிக்க சோனியா காந்தி தீர்மானித்திருந்த நிலையில், மம்தா பானர்ஜியின் அபிப்ராயத்துக்காகக் காத்திருக்கலாம் என்று ராகுல் காந்தி கூறியது நிதீஷை அதிருப்திக்கு உள்ளாக்கியது என்கிறார்கள்.

ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தால் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாகும் என்று நிதீஷ் நினைத்திருந்தார். மல்லிகார்ஜுன கார்கேயை மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் முன்னிறுத்தியதை அவர் ரசிக்கவில்லை.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி பாஜகவுக்கு ஏற்கெனவே நிதீஷ் சவால்விட்டிருந்த நிலையில், பிஹாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு (1977இல்) வழங்கிய கர்பூரி தாக்கூருக்குச் சமீபத்தில் பாரத ரத்னா விருதை பாஜக அறிவித்தது. அதை வரவேற்றதுடன் மோடியின் புகழ் பாடவும் தொடங்கினார் நிதீஷ். ஆர்ஜேடி ஆத்திரமடைந்தது. இண்டியா கூட்டணியும் கலகலத்தது. காட்சி மாறியது.

காங்கிரஸுக்குச் சவால்கள்: காங்கிரஸின் பிடிவாதமான அணுகுமுறையால் மேலும் பல சிக்கல்கள் விளைந்தன. கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் தேர்வுசெய்யப்படவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கெனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தல்களில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் தனியாகக் களம் கண்டது முக்கியக் காரணமாக முன்வைக்கப்படுகிறது.

படுதோல்விக்குப் பிறகாவது தொகுதிப் பங்கீடு விஷயத்தில் துரிதம் காட்டவோ, இலகுவாக நடந்துகொள்ளவோ காங்கிரஸ் முயலவில்லை என்கிறார்கள். விளைவு, ராகுல் காந்தியின் ‘நியாய யாத்திரை’ மேற்கு வங்கத்துக்குள் நுழைவதற்கு முன்னர், மம்தா பானர்ஜி 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்தார். பிஹாரில் நுழைவதற்கு முன்னர் நிதீஷ் தனது பழைய அணிக்குத் தாவிவிட்டார்.

காங்கிரஸின் செல்வாக்குக் கணிசமாகச் சரிந்துவிட்ட உத்தரப் பிரதேசத்தில், அக்கட்சிக்கு 11 இடங்களை வழங்குவதாக சமாஜ்வாதி கட்சி கூறுகிறது; ஆனால், குறைந்தபட்சம் 15 இடங்களாவது வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டுகிறது. பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள். குஜராத், ஹரியாணா மாநிலங்களில் தங்களுக்குக் கணிசமான இடங்களைக் காங்கிரஸ் தந்தால்தான் பஞ்சாப், டெல்லியில் அக்கட்சிக்குத் தொகுதிகளை ஒதுக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி. இப்படி நிறைய சிக்கல்கள்!

பலன் பெறும் பாஜக: மறுபுறம் குடியுரிமைத் திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், லாலுபிரசாத் யாதவ் - ஹேமந்த் சோரன் போன்ற தலைவர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கைகள் எனஅடுத்தடுத்து அஸ்திரங்களை ஏவி எதிர்க்கட்சிகளைத் தவிக்கவிடுகிறது பாஜக. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் 23 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்குத் தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சி நியமித்துவிட்டது.

இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட், ஹரியாணா வரிசையில் மிச்சமிருந்த பிஹாரும் இப்போது பாஜகவின் கைக்குள் சென்றுவிட்டது. ஏற்கெனவே ராமர் கோயில் திறப்புவிழா மூலம் சாதிகளைக் கடந்து இந்து மதத்தினரைக் கவர்வதில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய நிதீஷ் இப்போது தங்கள் பக்கம் இருப்பதால் ஓபிசி அரசியலில் எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய சவாலை உருவாக்கியிருக்கிறது. ஆக, ‘கமண்டல்’, ‘மண்டல்’ என இரண்டு அஸ்திரங்கள் பாஜக வசம் இருக்கின்றன.

ஐக்கிய ஜனதா தளத்துக்கு மாநிலங்களவையில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், நிதீஷின் அணி மாற்றத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 114 உறுப்பினர்கள் என மாநிலங்களவையில் வலிமை கூடுகிறது. அது மட்டுமல்ல, பெருந்தலை நிதீஷே பாஜக பக்கம் சென்றுவிட்ட நிலையில், வேறு சில கட்சிகளும் பாஜக பக்கம் ஈர்க்கப்பட சாத்தியம் அதிகம்.

நிதீஷின் எதிர்காலம்: அடிக்கடி அணி மாறியதால் அரசியல் வட்டாரத்தில் கேலிப்பொருளாகியிருக்கிறார் நிதீஷ். மேலும், பாஜக அப்படியொன்றும் அவரை நிம்மதியாக வைத்திருக்காது என்றே சொல்லலாம். 2020 தேர்தலில் லோக் ஜனசக்திக் கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானின் துணையுடன் ஓர் அரசியல் சதுரங்கம் ஆடிய பாஜக, அதன் மூலம் நிதீஷின் ஐக்கிய ஜனதா கட்சியின் வெற்றி விகிதத்தை வெகுவாகக் குறைத்தது.

அவரை மீண்டும் முதல்வராக்கினாலும், அவரால் வெறுக்கப்படும் தார்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரைத் துணை முதல்வர்களாக்கி அழுத்தம் கொடுத்தது; இந்த முறையும், நிதீஷைச் சகட்டுமேனிக்கும் விமர்சித்துவந்த சாம்ராட் செளத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகிய இருவரையும் துணை முதல்வர்களாக்கியிருக்கிறது பாஜக.

தவிர, நிதீஷின் வரவால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா போன்ற சிறிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வரலாம்.

இண்டியா கூட்டணியின் சாதகங்கள்: காங்கிரஸால் அதிருப்தி அடைந்திருந்தாலும் கூட்டணியை விட்டு வெளியேறாத மம்தா பானர்ஜி, இப்படியெல்லாம் நிதீஷ்குமார் செய்யக்கூடும் என முன்பே தெரிந்திருந்ததால்தான் அவரை ஒருங்கிணைப்பாளராக முன்னிறுத்தவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். நிதீஷ் வெளியேறியதால், பிஹாரில் இனி காங்கிரஸ் - ஆர்ஜேடி - இடதுசாரிகள் இடையே தொகுதிப் பங்கீடு எளிதாகும்.

நிதீஷ் போல் அல்லாது, நம்பகத்துக்குரியவர் என்பதால் மல்லிகார்ஜுன கார்கேயின் பங்கு இனி முதன்மையாக இருக்கும் என நம்பப்படுகிறது. நிதீஷைச் சீண்டும் வகையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு, 4 லட்சம் பணி நியமனங்கள், சுகாதாரத் துறை மேம்பாடு என மகாகட்பந்தன் ஆட்சியின் முக்கியச் சாதனைகளுக்குச் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டது ஆர்ஜேடி. தேர்தல் களத்தில் இதைச் சொல்லி ஆதரவு திரட்டவும் அக்கட்சி திட்டமிடுகிறது. மொத்தத்தில் மக்களவைத் தேர்தலில் பிஹார் அரசியல் களம்தான் திருப்புமுனையாகியிருக்கிறது.

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x