Published : 05 Nov 2017 11:21 AM
Last Updated : 05 Nov 2017 11:21 AM

ஞாயிறு அரங்கம்: சரியும் பொருளாதாரமும் சமாளிக்கத் தெரியாத அரசும்!

 

பா

ஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், பொருளாதார நிலைமை தான் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது. ஒரு பக்கம் பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணம் என்றால், இன்னொரு பக்கம் பொதுச் சரக்கு - சேவை வரி விகிதம் அமல் செய்யப்படும் முறை காரணமாக இருக்கிறது. கடந்த சில காலாண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சி வீதம் சரிந்துகொண்டே வருவது அரசின் நிர்வாகத் திறமையைப் பறை சாற்றுகிறது. அரசின் மீதான குற்றச்சாட்டுகளைத் திசை திருப்ப, ‘மன்மோகன் சிங் அரசு எடுத்த நடவடிக்கைகளால்தான் இந்த நிலைமை’ என்று பாஜக குற்றஞ்சாட்டுகிறது.

மன்மோகன் சிங் ஆட்சி செய்தபோது பொருளாதாரம் எப்படி இருந்தது, அவர் அதை எப்படிச் சீர்படுத்தினார் என்று பார்ப்போம். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமராக மன்மோகன் அறிவிக்கப்பட்டபோது சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அரசின் செலவுக்கும் வரவுக்கும் இடையிலான நிதிப் பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் 4%-க்கும் அதிகமாக இருந்தது. ‘இந்தத் துறைதான் வேண்டும்’, ‘இந்தப் பொருட்களுக்கெல்லாம் விலையை உயர்த்தக் கூடாது’, ‘இந்த வரி விகிதங்களையெல்லாம் குறைத்தாக வேண்டும்’ என்று தொடர்ந்து நிபந்தனை விதிக்கும் கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசுக்கு அவர் தலைமை வகித்தார்.

மன்மோகனின் முதல் ஐந்தாண்டுக் காலத்தில் கச்சா பெட்ரோலியத்தின் விலை 2004 முதல் 2008 வரையில் தொடர்ந்து உயர்ந்து 100%-ஐத் தாண்டியது. உலக அளவில் நிதித் துறை கடுமையான சரிவைச் சந்தித்து, அமெரிக்கா விலேயே பல வங்கிகள் திவாலாகின. பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்ந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 100 டாலரையும் தாண்டியது. எண்ணெய் விலை ஏறியதால் பணவீக்க விகிதமும் எகிறியது. அதன் காரணமாக வங்கிகள் தரும் கடனுக்கான வட்டி வீதமும் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் உயர்ந்து கொண்டே வந்தது.

இப்போதைய அரசின் நிலையைப் பாருங்கள். கூட்டணி யாக இருந்தாலும் பாஜகவுக்கு மட்டுமே பெரும்பான்மை இடங்கள் கிடைத்தன. தோழமைக் கட்சிகள் அடங்கிக் கிடக்கின்றன. முதல் மூன்று ஆண்டுகளில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை குறைந்துகொண்டே வந்தது. கடந்த முப்பதாண்டுகளில் இருந்திராத அளவு, வங்கிக் கடனுக் கான வட்டி வீதம் குறைந்திருக்கிறது. அரசின் நிதிப் பற்றாக்குறையோ வரம்புக்குள் இருக்கிறது. இப்படி பணம் கையில் இருந்தும், பற்றாக்குறை கட்டுக்குள் இருந்தும், ஜிடிபியை உயர்த்தவோ, தனியார் முதலீட்டுக்கு ஊக்குவிப்பு தரவோ, ஏற்றுமதிகளுக்குப் புத்துயிர் ஊட்டவோ, நுகர்வை அதிகப் படுத்தவோ முடியாமலிருக்கிறது மத்திய அரசு.

வருவாய் அதிகம்

மன்மோகனின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி வீத சராசரி 8%; வியாபார ஏற்றுமதி 2004-ல் 7,600 கோடி டாலராக இருந்து 2014-ல் 31,750 கோடி டாலர்களுக்கு உயர்ந்தது. கணினித் துறையில் மென்பொருள் ஏற்றுமதி 10,000 கோடி டாலர்களுக்கு உயர்ந்தது. இதில் அயல்பணி ஒப்படைப்பு வேலைகளும் அடக்கம். இதே காலகட்டத்தில் நேரடி வரிகள் மூலமான வருவாய் ரூ.1,05,089 கோடியிலிருந்து ரூ.6,38,543 கோடி டாலர்களாக உயர்ந்தது. வரலாற்றிலேயே முதல் முறையாக நேரடி வரிகள் மூலமான வருவாய், மறைமுக வரிகள் மூலமான வருவாயைவிட அதிகமாக இருந்தது. (நேரடி வரிகள் பணக்காரர்களும் நிறுவனங்களும் செலுத்துவது. மறைமுக வரி வருவாய் எல்லோரும் நுகர்வின்போது செலுத்துவது.) இதற்கு நேர்மாறாக இப்போது மறைமுக வரிகள் மூலமான வருவாய்தான் அதிகமாக இருக்கிறது. மொத்த உற்பத்தி மதிப்பில் 10.5% அளவுக்கு மறைமுக வரி வருவாய் மதிப்பு உயர்ந்து விட்டது. இப்போதைய அரசு சாமானியர்களின் வரிச் சுமை பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திக்கொண்டே வருகிறது.

கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை உயர்வு ஒருபுறம், அதனால் ரூபாயின் மாற்று மதிப்பு சரியும் நிலை இன்னொரு புறம். இவற்றுக்கிடையே சாமானியர்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று ‘பெட்ரோ பாண்டுகள்’ என்கிற கடன் பத்திரங்களை வெளி யிட்டு அதில் கிடைத்த வருவாயிலிருந்து அரசு எண்ணெய் நிறுவனங்களின் பற்றாக்குறையை இட்டு நிரப்பினார் மன்மோகன். இதனால் எண்ணெய் விலை உயர்வின் சுமை சாமானியர்களின் தோள்களுக்கு மாற்றப்படவில்லை.

மன்மோகன் சிங்கின் பொருளாதார மேதமைக்கு இன்னொரு சான்று 2015 டிசம்பரில் கையெழுத்தான ஜப்பானிய-இந்திய செலாவணி மாற்று ஒப்பந்தமாகும். சர்வதேச அளவில் நிதிச் சந்தை பலவீனமாக இருந்தபோது, 2008-ல் 300 கோடி டாலர் நிதியுடன் இந்த மாற்று நடைமுறையை மன்மோகன் தொடங்கினார். 2012 டிசம்பரில் அதை மேலும் 3 ஆண்டுகளுக்கு 1,500 கோடி டாலர்கள் மதிப்புக்கு நீட்டித்தார். 2008-ல் உலக அளவில் பொருளாதாரம் மந்தநிலையை எட்டியதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.51 என்று சரிந்தது. அதற்கு முன்னால் அது ரூ.39 ஆக இருந்தது. 2013-ல் அமெரிக்க ஃபெடரல் வங்கி டாலர்களைச் சந்தையிலிருந்து குறைத்துக்கொள்ள முடிவுசெய்தபோது ரூபாயின் மதிப்பு மேலும் 20% சரிந்தது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் நடுவில் இந்திய ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பு மேலும் சரியாமல் காத்தது ஜப்பானுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான்.

வேலைவாய்ப்பு, கல்வி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைசிறந்த திட்டமாக ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தைக் குறிப்பிடலாம். 2006 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. கிராமங்களில் வாழும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்களுக்கு வாழ்வாதாரமும் பொருளாதாரப் பாதுகாப்பும் அளிக்க இத்திட்டம் முதல் கட்டத்தில் 200 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. 2008-ல் நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட்டது. 2010-11-ல் 625 மாவட்டங்களுக்கு இது பரவியது. ஊரக வளர்ச்சியை உறுதிசெய்ய மிகச் சிறந்த திட்டம் என்று உலக வங்கியின் உலக வளர்ச்சி அறிக்கை (2014) இதைப் புகழ்ந்து பாராட்டியிருக்கிறது.

மன்மோகன் இதை ‘மக்கள் நலத் திட்டம்’ என்பதைவிட, கிராமப்புறத் தொழிலாளர் சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்வதற்கான நடவடிக்கையாகவே கொண்டுவந்திருக்கிறார்; ஏழைகளுக்கு நியாயமான குறைந்தபட்சக் கூலி கிடைப்பதற்கான கருவியாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டம் அமலான சில ஆண்டு களிலேயே, கிராமப் பகுதிகளில் முறையான தொழில்பயிற்சி பெறாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட ஊதியம் உயர்ந்தது. இது வேலைவாய்ப்பு உறுதி திட்டத் தொழிலாளர்களுடன் நின்றுவிடவில்லை, மற்ற தொழிலாளர்களுக்கும் ஊதியம் உயர்ந்தது. 2012-ல் ‘கிரிசில்’ நடத்திய ஆய்வில் கிராமப்புறங்களில் நுகர்வு அதிகரித்ததும் தெரியவந்தது. ஏழைக் குடும்பங்களுக்கு மூல வருவாய் ஈட்டும் வாய்ப்பாக (40%) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அமைந்தது, ஆந்திரத்தில் உலக வங்கியின் ஏழைகள் நலனுக்கான பிரிவு நடத்திய ஆய்வில் வெளிப்பட்டது. விவசாய வேலையில்லாத மே-ஜூன் கோடைப் பருவத்தில் பட்டினி இல்லாமல் சாப்பிடவும், மேலும் வறுமையில் ஆழ்ந்துவிடாமல் காப்பாற்றவும் இது உதவியிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியின் தோல்விகளில் இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் ஒன்று என்று பாஜகவினர் வசைபாடினர். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பெரும்பாலான கிராமங்களில் மக்கள் இந்தத் திட்டத்தின் கீழ்தான் வேலைவாய்ப்பு கோரி அரசுக்கு மனுச் செய்தனர். பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய சீர்குலைவின் போது கிராமப்புறப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப் படாமல் இந்தத் திட்டம்தான் உதவியிருக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ‘கல்வி பெறும் உரிமைச் சட்டம்’ 2009-ல் நிறைவேற்றப்பட்டது. ஆறு வயது முதல் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அறிவிக்கப்பட்டதால், கோடிக்கணக்கான குழந்தைகள் கல்வி பெற்று படிப்படி யாக முன்னேற முடிந்தது. எல்லா மாவட்டங்களிலும் கட்டிடங்கள் உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. தனியார் கல்வி நிலையங்கள் வழங்கிய ஊதியத்தைவிட அதிக சம்பளத்தில் அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

சிறந்த நிர்வாகி

மலையின் ஒரு பகுதி வழியாக சிகரத்தை நோக்கி நம்மை மேலேற வைத்தார் மன்மோகன் சிங். இப்போது நாம் எதிர்ப்புறம் வழியாகக் கீழே சரிந்துகொண்டிருக்கிறோம். பொருளாதாரம் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது; ஏற்றுமதி சரிந்துவிட்டது. வங்கிகளிடமிருந்து தொழிலதிபர்களும் வியாபாரிகளும் பெறும் கடன் அளவு சுருங்கிவிட்டது.

தனியார் முதலீடு அருகிவிட்டது. பணமதிப்பு நீக்கமும், அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட பொது சரக்கு - சேவை வரி திட்டமும் பொருளாதார வளர்ச்சியை மேலும் வீழ்த்திவிட்டன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது வறண்டுவிட்டது. 30,000 பேர் வேலை தேடினால் 400 பேருக்கு மட்டுமே சொல்லிக்கொள்கிறார் போன்ற வேலை கிடைக்கிறது.

மன்மோகனின் அரசுக்கும் இப்போதைய அரசுக்கும் அடிப்படையாக இருக்கும் ஒரு வித்தியாசம், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ள அணுகுமுறைதான். மன்மோகனின் நடவடிக்கைகள் அமைதியானவை, அனைவரையும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுபவை, அறுவைச் சிகிச்சை போன்றவை, சாமானியர்களைப் பாதுகாப்பவை; இப்போதைய அரசு எடுக்கும் நடவடிக்கை கள் ஆரவாரமானவை, ஆலோசனைகளைக் கேட்காமல் தாங்களே முடிவெடுப்பவை, வேதனையைத் தருபவை, துயரப்படும் ஏழைகள் மீது கடுகளவுகூட கரிசனம் இல்லாதவை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அறிவாளிகளும் பத்திரிகையாளர்களும் அவரைத் திட்டித் தீர்த்தார்கள்; ஆனால் வரலாறு அவரைச் சிறந்த நிர்வாகி என்றே கருணையுடன் பதிவு செய்யும்!

(கட்டுரையாளர் இந்திய தேசிய

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்.)

தமிழில்: சாரி, ©: தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x