Published : 24 Jun 2021 05:50 am

Updated : 24 Jun 2021 07:04 am

 

Published : 24 Jun 2021 05:50 AM
Last Updated : 24 Jun 2021 07:04 AM

சுகாதாரத்துக்குப் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

new-government

தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்று 50 நாட்களை நெருங்குகிறது. அதன் முன்னால் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மக்களிடமும் ஏராளமான எதிர்பார்ப்புகள் உள்ளன. கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவது அரசின் முதல் முக்கியப் பெரும் பணி. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான், இதர வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கரோனாவின் மூன்றாவது அலை இன்னும் சில வாரங்களில் பரவக்கூடும். அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தொற்றியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, குழந்தைகளைக் காத்திட மருத்துவக் கட்டமைப்பை அதிகரித்திட வேண்டும். குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளை அதிகரித்திட வேண்டும். இதில் அலட்சியம் கூடாது.

கரோனா இறப்புகள்


கரோனா இறப்புகளைக் குறைப்பது அரசுக்குத் தற்போது உள்ள முக்கியக் கடமை. இரண்டாம் அலையில் இறப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, இளம் வயதினரும், இணைநோய் அற்றவர்களும், கர்ப்பிணிகளும் இறப்பது அதிகரித்துள்ளது. இது கவலை அளிக்கிறது. இந்த இறப்புகளைக் குறைக்க வேண்டும். இறப்புகளைக் குறைத்திட நோயாளிகள் கால தாமதமாகச் சிகிச்சைக்கு வரும் நிலையையும், சிகிச்சை கிடைப்பதில் உள்ள கால தாமதங்களையும் போக்கிட வேண்டும்.

சமூக வலைதளங்களில் வலம்வரும் தவறான தகவல்கள் மக்களை அறிவியல்ரீதியான செயல்பாட்டிலிருந்து திசைதிருப்புகின்றன; தவறான நம்பிக்கையை உருவாக்குகின்றன. இதனால், தடுப்பூசி போடுவதைச் சிலர் தவிர்க்கவும் செய்கிறார்கள். இத்தகைய போக்கு, தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தடுக்கப்படக்கூடிய, கரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பையும் மரணத்தையும் தடுப்பதற்குத் தடங்கலாக உள்ளது. அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் முறையைக் குறைத்துவிட்டுத் தொற்றாளர்களை கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் அனுமதிக்க வேண்டும். அவர்களை மருத்துவக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்.

நோயாளிகளின் முதல் வருகையிலேயே, குறைந்த செலவில் எளிதில், எங்கும் செய்யப்படக்கூடிய சிபிசி (Complete Blood Count) மற்றும் சிஆர்பி (C Reactive Protein) உள்ளிட்ட ரத்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனைகளை, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் (Serial CBC, CRP in CCC) மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம், நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும். நோயாளிகளின் நோய் தீவிரமடைகிறதா, குறைகிறதா, நிலையாக உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட முடியும். அதன் மூலம் பலருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்படுவதையும், மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுப்பதையும் தடுக்க முடியும். ஆக்ஸிஜன் தேவை, தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் தேவை போன்றவற்றைக் குறைக்கலாம். பெரும்பாலான இறப்புகளையும் தடுக்க முடியும்.

மருத்துவப் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நூறு படுக்கைகளுக்கும் அதிகமாக உள்ள தனியார் மருத்துவமனைகளை அரசு தற்காலிகமாகத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அவற்றின் மூலம் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாகத் தரமான சிகிச்சையை அரசு வழங்கிட வேண்டும். அதே சமயம், தொலைநோக்குடன், மக்கள்தொகைக்கேற்ப அரசு மருத்துவக் கட்டமைப்புகளை அதிகரித்திட வேண்டும். மதுரை அருகே அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உருவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும்.

காப்பீட்டுத் திட்டம்

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் வேண்டும். அந்தத் திட்டம் குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் லாபத்தை அதிகரிக்க உதவுவதாகவே உள்ளது. பல தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதலாகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ளன. மருத்துவமனைகளுக்கான நேரடி நிதி ஒதுக்கீடு குறைந்துவருகிறது. காப்பீடு அட்டை இல்லாதவர்கள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மருத்துவ ஊழியர்கள் காப்பீட்டுத் திட்ட வருவாய் மூலம், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுதல், மருத்துவ சேவையையும், ஊழியர்களின் உரிமைகளையும் பாதிக்கிறது. மருத்துவக் காப்பீட்டுக்காக இதுவரை தமிழ்நாடு அரசு செலவழித்த தொகையைக் கொண்டு 10 மருத்துவக் கல்லூரிகளையே உருவாக்கியிருக்க முடியும்.

எனவே, மருத்துவக் காப்பீட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, அந்த நிதியைப் புதிய அரசு மருத்துவமனைகளை உருவாக்கிடவும், ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளையும் மனித வளத்தையும் மேம்படுத்திடவும் பயன்படுத்திட வேண்டும்.

பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் மருத்துவக் காப்பீட்டை ஊக்கப்படுத்துவது தவறு. அமெரிக்காவில் ஏற்பட்ட லட்சக்கணக்கான மரணங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு மருத்துவ முறையும் மிக முக்கியக் காரணம். அதிலிருந்து புதிய அரசு பாடத்தைக் கற்க வேண்டும். அமெரிக்க பாணியை நாம் பின்பற்றக் கூடாது.

மருந்து, மருத்துவக் கருவிகள்

தமிழ்நாடு அரசே நேரடியாகப் பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும் உற்பத்திசெய்திட வேண்டும். செங்கல்பட்டு அருகே ஒன்றிய அரசுக்குச் சொந்தமான, எச்எல்எல் பயோடெக் (HLL biotech) நிறுவனத்தின் மூலம், கரோனா தடுப்பூசியை உற்பத்திசெய்யத் தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொள்வது வரவேற்புக்குரியது. மருத்துவக் கருவிகளின் உற்பத்திக்காக, செங்கல்பட்டில் எச்எல்எல் மெடி பார்க் (HLL MEDI PARK) நிறுவனமானது ஒன்றிய – மாநில அரசுகளால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. இந்நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்கிட வேண்டும்.

பொதுத் துறை மூலம் மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும் உற்பத்திசெய்தால், அவற்றை மக்களுக்குக் குறைந்த விலையில் தரமாக வழங்க முடியும். தேவையானவற்றைக் குறுகிய காலத்துக்குள் உற்பத்திசெய்திட முடியும். மருந்து உத்தரவாதம் இருக்கும். தமிழ்நாட்டின் தேவை போக மீதியைப் பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் விற்கவும் முடியும். அரசுக்கு நிரந்தர வருவாயும் கிட்டும். எனவே, இது குறித்துப் புதிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

மருத்துவ மனித வளம்

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்கிட வேண்டும். அவர்களது ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மூலம் மாநிலத்தில் மருத்துவ ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டிஎம், எம்சிஎச் போன்ற உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டு மருத்துவர்களே சேர்க்கப்பட்டுவந்தனர். இந்நிலை மாறி, ஒட்டுமொத்த இடங்களும் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்தவருக்கும் பொதுவானதாக மாற்றப்பட்டுவிட்டன. இந்த இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே மீண்டும் முழுமையாகக் கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.

தொடர்புக்கு: daseindia@gmail.com


New governmentபுதிய அரசுகரோனா இறப்புகள்மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள்கரோனாகரோனா மூன்றாவது அலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x