Last Updated : 17 Dec, 2018 08:46 AM

 

Published : 17 Dec 2018 08:46 AM
Last Updated : 17 Dec 2018 08:46 AM

அமைச்சர்கள் தங்கள் திருவாயை மூடினால் அதிமுக- அமமுக இணைப்பு சாத்தியமாகும்!: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

அதிமுக - அமமுக இணைப்புக்கு அச்சாரமிடுவதுபோலப் பேசிப் பரபரப்புக்கு வித்திட்ட தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்தும் அதிமுக தொண்டர்களை உள்ளிழுக்கும் உத்தியுடனேயே பேசிவருகிறார். டி.டி.வி.தினகரனின் ஊதுகுழல் என்று அழைக்கப்படும் தமிழ்ச்செல்வனுடன் பேசியதிலிருந்து...

கள்ளக்குறிச்சி பிரபு அதிமுகவுக்கும், செந்தில் பாலாஜி திமுகவுக்கும் போகிறார்கள். அமமுக தேய்கிறதா?

அவங்களுக்கு வருத்தம் இருந்தது உண்மைதான். சோதனையான நேரத்துல கொஞ்சம் பொறுத்துத்தான் போகணும். அவசரப்பட்டுட்டாங்க. எதற்காகப் போனாங்கன்னு நீங்க அவங்ககிட்டதான் கேட்கணும்.

நீங்கள்தான் ‘ஆட்சி போனா, கட்சி தானா எங்க கைக்கு வந்துடும்’ என்று சொல்லிவந்தீர்கள். இப்போது திடீரென்று அதிமுக - அமமுக இணைப்பு பற்றிப் பேசக் காரணம் என்ன?

நாங்களா பேசல. பாஜகதான் அப்படிப் பேச வைக்குது. ரெய்டு மேல ரெய்டு, அப்புறம் விசாரணைன்னு சின்னம்மா குடும்பத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்குது. எங்களுக்கு மட்டுமில்ல, முதலமைச்சர், அமைச்சர்கள்னு அந்தப் பக்கத்துலயும் குடைச்சல் கொடுக்குறாங்க. நிபந்தனைகளை ஏத்துக்கிட்டா இணைப்புக்கு நாங்களும் தயார்தான்.

நீங்கள் பாஜகவுக்குப் பயந்து பேசுவதுபோலத் தெரியவில்லையே? பின்னணியில் வேறு கணக்கு ஏதும் இருக்கிறதா?

இன்னிக்கு இருக்கிற சூழல்ல நாடாளுமன்றத் தேர்தல் எப்ப வந்தாலும் அதிமுக ஜீரோன்னு நிரூபணமாகிடும். நாங்க தனிச்சு நின்னாலும் ஜீரோதான், அதையும் ஒப்புக்கிறேன். பாஜக நிலையைச் சொல்லவே வேண்டாம். நோட்டாவுக்கும் பின்னால இருக்காங்க. திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியடையாமத் தடுக்கணும்னா, நாங்க இணைஞ்சு ஆகணும்கிறதுதான் கணக்கு. அமமுகவைத் தொடங்கும்போதே அதிமுகவை மீட்பதுதான் லட்சியம்னு சொன்னோம். அதுக்காகச் சில தியாகங்களைச் செஞ்சா என்ன தப்புன்னு கேட்குறேன்.

பன்னீர்செல்வத்தையே விழுங்கிவிட்டு, அதிமுக என்றால் இனி பழனிசாமிதான் என்ற அளவுக்கு இந்த ஓராண்டில் கட்சிக்குள் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார் பழனிசாமி. இந்த நேரத்தில் அவரை நீக்கிவிட்டால், அதிமுக – அமமுக இணைப்பு நடக்கும் என்று நீங்கள் சொல்வது பேராசையில்லையா?

பழனிசாமி அரசுக்கு, மக்கள்கிட்டேயும் தொண்டர்கள்கிட்டேயும் என்ன செல்வாக்கு இருக்குதுன்னு பத்திரிகையாளர்களுக்கே தெரியும். மத்திய அரசாங்கத்துக்கும் தெரியும். ஏன், அவருக்கே நல்லாத் தெரியும். உளவுத்துறை அவர்கிட்டதான இருக்கு. தொண்டர் பலமும் இல்லை, மக்கள் செல்வாக்கும் இல்லை. பவர் பாலிடிக்ஸை வெச்சி ஓட்டிக்கிட்டு இருக்காங்க. இந்த அதிமுகவை நம்பி, தேர்தலைச் சந்திச்சா தோல்வியைத்தான் சந்திப்போம்னு பாஜகவும் உணர்ந்திடுச்சி. மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் தினகரனுக்குத்தான்ங்கிற உண்மை தெரிஞ்சவங்க, பழனிசாமியை ஒருபொருட்டாவே நினைக்க மாட்டாங்க.

ஜெயக்குமார் பேட்டி பார்த்தீர்களா, ‘விருந்துக்கே அழைக்கவில்லை. அதற்குள் வாழையிலை கிழிந்திருக்கிறது என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அவர் வேண்டுமானால் வரட்டும். டிடிவி, சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருக்கிறாரே?

இப்படியே வாய்க்குப் பத்தாத பேச்சா பேசிக்கிட்டு இருந்தா, பிரச்சினை எப்படி அடைபடும்? ஜெயக்குமார், கடம்பூர் ராஜு மாதிரியான மந்திரிகள் எல்லாம் அவங்க திருவாயை மூடிக்கிட்டிருந்தாலே, அதிமுக பலமாகிடும். ‘எனக்குப் பிறகு நூறாண்டுகள் அதிமுக இருக்கும், நாட்டை ஆளும்’னு அம்மா சட்ட சபையில் அறிவிச்சாங்க. அதை அவங்க மறந்திருக்கலாம். நாங்க ஞாபகம் வெச்சிருக்கோம். திமுக ஒரு நோஞ்சான் கட்சி. அதிமுக அதைவிட நோஞ்சான்கள் கையில இருக்கிறதால, திமுக பலமா இருக்குறது மாதிரி தெரியுது. அதிமுகவுக்கு ஒரு பலமான தலைவர் வேணுங்கிற நேரத்துல, தினகரன் வேணாம், சசிகலா வேணாம்னு சொல்றது புத்திசாலித்தனமா? தமிழக அரசியல், வரலாறு தெரிஞ்ச யாரா இருந்தாலும் எங்க முடிவை வரவேற்பாங்க. ஊரு ரெண்டுபட்டதாலதான், கூத்தாடிங்களுக்குக் கொண்டாட்டமாப் போச்சு.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னவர் டிடிவி. அதிமுக இணைப்புக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

வடக்கே எப்படியோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பாஜக ஜீரோதான். ஜிஎஸ்டி, பணமதிப்புநீக்கம், மதவெறிப் பிரச்சாரம் என்று ஏகப்பட்ட கெட்ட பேர் வேற வாங்கி வெச்சிருக்காங்க. அதோடு கூட்டணி வைப்பது சரிவராது. அதற்குப் பதில், வேறு சில கட்சிகளோடு தனித்து நின்றால், கௌரவமான தோல்வியாவது கிடைக்கும்.

தினகரனின் மனசாட்சி நீங்கள் என்றும், அவர் சொல்லவிரும்புவதை உங்களைவிட்டுச் சொல்லவைப்பார் என்றும் கூறுகிறார்கள். ஆக, இந்தக் கருத்துகள் எல்லாம், சசிகலா, தினகரனின் கருத்துகள் என்று சொல்லலாமா?

மனசாட்சியோ, கினசாட்சியோ. எதார்த்தத்தைச் சொல்றேன்.

ஒரு கற்பனைக் கேள்வி. நீங்கள் சொல்வதெல்லாம் நடந்து அதிமுகவும் அமமுகவும் இணைந்துவிடுவதாகவே வைத்துக்கொள்வோம். அடுத்து முதல்வராகப்போவது யார்?

ஹா... ஹா... ஹா... நீங்களா இருக்கலாம். ஏன் நானாக்கூட இருக்கலாம். அதிமுகவுல ஆளா இல்ல? ஓபிஎஸ், இபிஎஸ் எல்லாம் முதல்வரா ஆனாங்க. யாருக்கு வேணும்னாலும் வாய்ப்பு குடுக்கிற கட்சிதான் இது!

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x