Published : 02 Apr 2024 10:25 AM
Last Updated : 02 Apr 2024 10:25 AM

ஐம்பது ஆண்டு காலத் தேர்தல்கள்: ஓர் ஆய்வுப் பார்வை!

தேர்தல் முடிவுகளைக் கூர்மையாக ஆராயும்போது பல அரிய தகவல் கள் கிடைக்கும். குறிப்பிட்ட காலத் தொகுப்பிலான முடிவுகளிலிருந்து கிடைக்கும் தரவுகள் நமக்குப் புதிய பார்வையைக் கொடுக்கும். அந்த வகையில், 1971 முதல் 2019 வரை - ஏறத்தாழ 50 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள 13 மக்களவைத் தேர்தல்களில், குறைந்தது ஒரு மக்களவை உறுப்பினராவது தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று வரை இடைவிடாது களமாடிக்கொண்டிருக்கும் கட்சிகளின் வாக்கு வங்கியின் அளவையும், அக்கட்சிகளின் செயல்பாட்டையும் ஆய்வு செய்ததில் சுவாரசியமான தரவுகள் கிடைக்கின்றன.

சின்னங்களும் வேட்பாளர்களும்: ஒரு கூட்டணியில் உள்ள ஒரு சிறிய கட்சி, தனது சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணியின் பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால், அது பெரிய கட்சியின் வெற்றியாகவே கணக்கில் வைக்கப்படுகிறது. உதாரணமாக, 2019 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த து.ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவரை திமுக எம்.பி-யாகவே தேர்தல் ஆணையமும் மக்களவையும் கணக்கில் கொண்டுள்ளன.

அதேபோல, கூட்டணி அமைத்துக் கட்சிகள் போட்டியிடும்போது, கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் உழைத்தாலும், ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகள் யாவும், அந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் பெயரிலேயே கணக்கில் கொள்ளப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் 13 மக்களவைப் பொதுத் தேர்தல்களில் நின்று எம்.பி-யாக வெற்றிபெற்றவர்கள் மொத்தம் 507 பேர். இவர்களில் 151 பேர் காங்கிரஸ் கட்சியையும், 135 பேர் திமுகவையும், 128 பேர் அதிமுகவையும் சேர்ந்தவர்கள்.

இது தவிர, ஒற்றை இலக்கத்துக்கு மேல் எம்.பி-க்களை அனுப்பிய கட்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் (23), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (16), பாமக (15), மதிமுக (12) ஆகிய கட்சிகள் அடங்கும்.

இந்த 50 ஆண்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி-க்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய கட்சிகள் பாஜக (8), மார்க்சிஸ்ட் கட்சி (6), காங்கிரஸ் (4), சுயேச்சைகள் (3), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2). இவை தவிர 4 கட்சிகள் ஒரே ஒரு எம்.பி-யைத் தேர்வுசெய்து அனுப்பியுள்ளன.

வாக்கு சதவீதம்: இந்த 50 ஆண்டுகளில் மக்களவைப் பொதுத் தேர்தல்களில் தமிழ்நாட்டில் மட்டும் பதிவான வாக்குகள் 34 கோடியே 80 லட்சம் (துல்லியமாகச் சொல்வதானால் 34,80,48,039).

அசோகா பல்கலைக்கழக அரசியல் தரவுகள் ஆய்வு மையம் தொகுத்துள்ள தேர்தல் தரவுகளின் அடிப்படையில், இந்தப் புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவ்வப்போது மக்களவைக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்குகள் இந்த எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்த 34.8 கோடி வாக்குகளில், ஒரு கோடிக்கு மேல் பெற்ற கட்சிகளையும் அவை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையையும் பார்க்கலாம். 1971-க்குப் பின் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், தமிழ்நாட்டில் மொத்தம் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றும் ஒரு எம்.பி சீட் கூடப் பெறாத கட்சிகள் 6. அவை: புதிய தமிழகம், சுதந்திரா கட்சி, ஜனதா தளம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக. 11.22 லட்சம் பெற்ற நோட்டாவையும் கணக்கில் கொள்ளலாம்.

வாக்கு வங்கியின் முக்கியத்துவம்: இவற்றிலிருந்து யாருக்கு எவ்வளவு வாக்கு வங்கி உள்ளது என்பதைக் கணக்கிட வேண்டும். ஆனால், வாக்கு வங்கி என்பது நிரந்தர வைப்புத்தொகைபோல நிலையானது அல்ல. புற அரசியல் அழுத்தங்களால் அலைக்கழிக்கப்படுவதும், புதிய சமூக அரசியல் பொருளாதார விழுமியங்களால் ஈர்க்கப்படுவதும் ஆகும்.

ஓர் அரசின் 5 அல்லது 10 ஆண்டு கால நிர்வாகம் அளித்திருக்கும் உற்சாகம் அல்லது விரக்தி, நடைப்பயணங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் ஏற்படுத்தும் ஈர்ப்பு, உத்தரவாதங்களை அள்ளித் தெளிக்கும் தேர்தல் அறிக்கைகள், சமூக ஊடகங்களில் திடீரென ‘வைர’லாகும் விவாதங்கள், அனல் பறக்கும் பிரச்சாரங்கள் என எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் ஆற்றல் பெற்றதுதான் வாக்கு வங்கி.

கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற பெரும் அரசியல் நிகழ்வுகள் ஏராளம்: நெருக்கடிநிலைப் பிரகடனம், ஆட்சிக் கலைப்பு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெருந்தலைவர்களின் மரணங்கள், மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கம், நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி, பொருளாதாரத் தளத்தில் தாராளவாதமும் உலகமயமாக்கலும் ஏற்படுத்திய தாக்கங்கள், பணமதிப்பு நீக்கம், பாபர் மசூதி இடிப்பும் ராமர் கோயில் கட்டுமானமும் என இந்திய, தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் உலுக்கிச் சென்ற நிகழ்வுகள் ஏராளம்.

ஆனால், இந்தப் பேரலைகளிலும் ஒரு கட்சி குறைந்தபட்ச வாக்குகளை இடையறாது பெறுகின்றதென்றால், அதை அக்கட்சியின் குறைந்தபட்ச உத்தரவாத வாக்கு வங்கியாகக்கருதலாம். என்றாலும், தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தலா மூன்று தேர்தல்களில், ஒருவரைக்கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை. திமுக - 1989, 1991, 2014 தேர்தல்களிலும், அதிமுக – 1996, 2004, 2009 ஆகிய தேர்தல்களிலும் ஒரு எம்.பி-யைக்கூட மக்களவைக்கு அனுப்ப இயலாமல் தோற்றன.

1998, 1999 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்கள் தவிர, 1971-க்குப் பின் நடைபெற்ற எல்லா மக்களவைத் தேர்தல்களிலும் ஒரே கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளுக்கு 80% முதல் 90% இடங்களை அள்ளித் தருவது தமிழ் நாட்டு வாக்காளர்களின் வழக்கமாகவும் இருந்து வந்துள்ளது.

திமுக அணி பெருமளவில் மக்களவைத் தொகுதிகளை வென்ற தேர்தல்கள் ஆறு (1971, 1980, 1996, 2004, 2009, 2019). அதிமுக அணியாகப் பெருமளவில் தொகுதிகளை அள்ளிய தேர்தல்கள் நான்கு (1977, 1984, 1989, 1991). தனித்தே பெருவாரியான தொகுதிகளை அதிமுக அள்ளியது 2014 மக்களவைத் தேர்தலில்.

இவை தவிர, சாதிகளின் செல்வாக்கு, வாக்குக்குப் பணமளிக்கும் போக்கு, அதிதீவிரப் பிரச்சாரம், தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து கோப அலைகளோ, அனுதாப அலைகளோ அற்ற ஒரு தேர்தலின் போக்கையும், வாக்கு வங்கியின் செல்வாக்கையும் வரலாற்றின் போக்கில் இழுத்துச் செல்லுமா என்பதைப் பார்க்கவே வெகுமக்களுடன் ஆய்வுலகமும் காத்திருக்கிறது.

- தொடர்புக்கு: arulselvan.senthivel@pondiuni.ac.in

To Read in English: A psephological study of half-a-century trends

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x