Published : 02 Apr 2024 09:01 AM
Last Updated : 02 Apr 2024 09:01 AM

முதல்வர்கள் வரிசையில் செந்தில் பாலாஜி! - ஸ்டாலின் பேச்சால் ஆதரவாளர்கள் நெகிழ்ச்சி

முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வர்களுக்கு இணையாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் ஸ்டாலின் உயர்த்திப் பேசியது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் நேற்று முன் தினம் இரவு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஈரோடு, நாமக்கல்லுடன், கரூர் தொகுதி வேட்பாளருக்கும் சேர்த்து ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். இந்த கூட்டத்திற்கு ஈரோடு மட்டுமல்லாது, கரூர், நாமக்கல்லில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் பிரதமர் மோடி செய்கிறார்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரைக் கைது செய்துள்ளனர் இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டிலும் - மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் - அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கிடைக்கவில்லை.

மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள். பா.ஜ.க.வின் அத்தனை சதிச் செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டார். அதேபோல் தனது பேச்சின் தொடக்கத்திலும், ‘இங்கு வரவில்லை என்றாலும், தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களைப் பெற்றிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன்’, என்று முதல்வர் குறிப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சால், செந்தில்பாலாஜி மீதான பாசமும், அன்பும் முதல்வருக்கு குறையவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் சோர்ந்து போயிருந்த அவர்களுக்கு முதல்வரின் இந்த பேச்சு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அதே நேரத்தில், அமைச்சர்கள் முத்துசாமி, சக்கர பாணி, சாமி நாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா என பலரும் இந்த தொகுதிகளில் தேர்தல் பணியில் இருக்கையில், சிறையில் உள்ளவருக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்ற கலகக்குரலும் திமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x