Published : 02 Apr 2024 09:12 AM
Last Updated : 02 Apr 2024 09:12 AM

வெயிலில் வாடி வதங்கும் கைக்குழந்தைகள் - தேர்தல் ஆணையம் தடை விதிக்குமா?

படங்கள்: ர.செல்வ முத்துகுமார், தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: தேர்தல் பிரச்சாரத்துக்கு பெண்கள் கைக்குழந்தைகளையும் அழைத்து வருவதால், கொளுத்தும் கோடை வெயிலில் படாதபாடு படுகின்றனர். எனவே, சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது போல, கைக்குழந்தைகளை அழைத்து வருவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலிலும் தற்போது பிரச்சாரம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் கூட்டம் கூட்டவும், கோஷம் எழுப்பவும், கொடி பிடிக்கவும் அரசியல் கட்சியினர் பெண்களை அதிகளவில் அழைத்துச் செல்கின்றனர்.

இதில் பல பெண்கள் தங்களது கைக்குழந்தைகளையும் தூக்கி வருகின்றனர். இதனால் தற்போது வாட்டி வதைக்கும் வெயிலில் குழந்தைகளும் வாடி வதங்கி விடுகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குழந்தைகளை தங்களது கைகளில் தூக்கி வைத்துக் கொள்வதும், வாகனத்தில் வைத்துக் கொள்வதும் அனுமதிக்கப்படாது. பிரச்சாரத்தில் குழந்தைகளை பாட வைப்பது, பேச வைப்பது போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், பிரச்சாரத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்தால், அது விதிமீறல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை பிரச்சாரத்துக்கு அழைத்து வருவதற்கும் தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சியில் நேற்று ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் கூறியது: 3 மணி நேரம் பிரச்சாரத்துக்கு வந்தால் ரூ.200 தருவார்கள். குழந்தையை விட்டு வரலாம் என்று பார்த்தால் எனது மாமியாரும் பிரச்சாரத்துக்கு வந்துவிட்டார். 2 பேர் வரும்போது ரூ.400 கிடைக்கிறது. பெரிய கட்சி, நாள் கணக்கு என்றால் அதற்கான கூலியும் அதிகரிக்கும். எனவே தான் வேறு வழியின்றி குழந்தையை தூக்கி வருகிறோம் என்றார்.

இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியது: பிரச்சாரத்துக்கு பெரும்பாலும் கட்சியினரே வருகின்றனர். யாருக்கும் பணம் செலவு செய்வதில்லை. பிரச்சாரத்துக்கு வருபவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி மட்டுமே செய்து தருகிறோம். மேலும் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது எனக்கூறினாலும் பெண்கள் கேட்பதில்லை என்றார்.

எது எப்படியோ சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த தடை உள்ளதுபோல, குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோருக்கு தண்டனை என தேர்தல் ஆணையம் அறிவித்தால் தான் இதுபோன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் நிகழாது என்பது நிதர்சனம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x