Last Updated : 28 Aug, 2023 07:52 PM

8  

Published : 28 Aug 2023 07:52 PM
Last Updated : 28 Aug 2023 07:52 PM

“நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பொது சிவில் சட்டம் வலுப்படுத்தும்” - ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஜெய்சந்திரன்

''பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால் இந்திய சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது. அதேநேரத்தில், இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை இது ஒன்றிணைக்கும்; இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை வலுப்படுத்தும்'' என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டர் ஜெய்சந்திரன். பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது:

பிரிவு 44 என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அங்கமான வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் இருக்கக்கூடியது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்கிறது இந்தப் பிரிவு. பொது சிவில் சட்டத்தை பிரிவு 44-ல் சொல்லியுள்ளபடி கொண்டு வருவதற்கு சமூகத்தின் சில பிரிவினர் 2 முக்கிய எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுமானால், அது இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மத சுதந்திரத்துக்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறும் என்பது ஒரு குற்றச்சாட்டு. சிறுபான்மையினரை குறிவைக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்பது இரண்டாவது குற்றச்சாட்டு.

அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழுவில் நடத்தப்பட்ட விவாதங்களைப் படித்ததில் இருந்து ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும். முன்னேறிய முஸ்லிம் நாடுகளில்கூட ஒவ்வொரு சிறுபான்மை சமூகமும் தனிச்சட்ட பாதுகாப்பைக் கொண்டிருக்கவில்லை. துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினர் அரசால் பாதுகாக்கப்பட்ட பிரத்தியேக உரிமைகளைப் பெற அனுமதிக்கப்படவில்லை.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய இடைக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கென ஷரியத் சட்டம் அல்லது சிறப்புச் சட்டம் கொண்டு வர முயன்றபோது, இஸ்லாமியர்களான கோஜாக்கள், குச்சி மேமன்கள் ஆகியோர் அதிருப்தி அடைந்தனர். இந்த காலகட்டத்தில், பெரும்பான்மை இந்துக்கள் கூட நவீன இந்திய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத சில பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றி இருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்துக்களால் பின்பற்றப்பட்டு வந்த பெண்களுக்கான சொத்துரிமை, திருமணம் மற்றும் தத்தெடுப்பு தொடர்பாக இருந்த சில சட்டங்கள், இன்றைய நவீன சிந்தனையால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் எம். ஜெய்சந்திரன்

எனவே, பொது சிவில் சட்டத்தை இயற்றுவது இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான கொடுங்கோன்மையாக இருக்கும் என்று கற்பனையிலும் கூற முடியாது. இந்துக்கள் மயூகா சட்டத்தைப் பின்பற்றி வந்தார்கள். இந்தியாவின் சில பகுதிகளில் இந்த சட்டம் நடைமுறையில் இருந்தது. இதேபோல், மிதாக்‌ஷரா சட்டமும் இந்தியாவின் சில பகுதிகளில் பின்பற்றப்பட்டது. வங்காளத்தில் தயாபக சட்டம் பின்பற்றப்பட்டது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதால் இந்திய சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது என்று கூற முடியும். அதேநேரத்தில், இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை இது ஒன்றிணைக்கும்; இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை வலுப்படுத்தும்.

பிரிவு 44-ல் உள்ள பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுமானால், அது பிரிவு 25-ல் சொல்லப்பட்டுள்ள மத சுதந்திரத்துக்கான உத்தரவாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வாதத்தை நிறுவ முடியாது. ஏனெனில், பிரிவு 25-ன் உட்பிரிவு 1, மத சுதந்திரத்தையும், உட்பிரிவு 2 மத நடைமுறைகளுடன் தொடர்புடைய மதச்சார்பற்ற செயல்பாடுகளையும் காப்பாற்றுகிறது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவதை இந்து சமூகத்தின் சில பிரிவுகள் எதிர்க்கலாம் என்பது உண்மையாக இருக்கலாம். வாரிசு உரிமை, வாரிசு ஆகியவை தொடர்பான தனிச் சட்டங்கள் இந்து மதத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பது இதற்கு அடிப்படையாக இருக்கும். அப்படியானால், பெண்களுக்கான சமத்துவத்துக்கான அடிப்படை உரிமை மீறப்படும்.

மத நடவடிக்கைகளின் சில அம்சங்களில் மதத்தை கொண்டு வராமல் இருப்பது விவேகமானதாக இருக்கும். இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொள்ள விரும்பினால், அனைத்து சமூக நடவடிக்கைகளிலும் மதத்தை ஈடுபடுத்துவது பொருத்தமானதாக இருக்காது. அப்படிச் செய்தால்தான் மொழி, கலாசார வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியா வலிமையான நாடாக உருவெடுக்க முடியும். நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் அவர்களின் மதம் என்ன என்பதைத் தாண்டி பொது சிவில் சட்டம் நன்மை பயக்கும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே நமது நாடு வலுவாக வளர முடியும்; வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நிற்க முடியும்.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய உச்ச நீதிமன்றம், அதன் பல தீர்ப்புகளின்போது வலியுறுத்தியுள்ளது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் மொகம்மது அகமது கான் Vs ஷா பானோ பேகம் வழக்கில் 1985-ல் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து. மதம் மற்றம் மத எல்லைகளைத் தாண்டி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர இந்திய அரசு இப்போதுதான் முடிவு செய்துள்ளது. இது ஒரு சரியான நடவடிக்கை. இந்திய அரசியல் சாசனத்தை வடித்தவர்களின் கனவை இது நனவாக்கும்.

பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள் கொண்ட நாடு இந்தியா. இத்தகைய வேறுபாடுகளுடன் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து உள்ள நமது நாட்டின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருந்திருக்க முடியாது. பொது சிவில் சட்ட அமலாக்கம் இந்தியாவின் வலிமையையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் எப்போதும் வலுப்படுத்தும் என்று நம்புவோம்.

> முந்தைய அத்தியாயம்: பெண்களை பாகுபாடுகளில் இருந்து ‘பொது சிவில் சட்டம்’ விடுவிக்கும் என்பது அபத்தம்: உ.வாசுகி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x