Last Updated : 17 Aug, 2023 01:02 PM

14  

Published : 17 Aug 2023 01:02 PM
Last Updated : 17 Aug 2023 01:02 PM

சமூக நீதி மேம்பட பொது சிவில் சட்டம் அவசியம்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சதீஷ்குமார்

"நமது தேசத்தில் அடிப்படை உரிமையும் சமூக நீதியும் மேம்பட வேண்டுமெனில் பொது சிவில் சட்டம் நடைமுறை சட்டமாக ஆக்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியம். இதனை நன்கு உணர்ந்த தேசியவாதிகள், பொது சிவில் சட்டத்தை விரைவாக சட்டமாக்கவே முயல்வார்கள்" என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சதீஷ்குமார். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது:

நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் பொது சிவில் சட்டம். இது நடைமுறை சட்டமாக ஆக்கப்படாமல், அரசின் நேரடி கொள்கை நெறிமுறைகளாக இன்றளவும் நமது அரசியல் சாசனத்தில் "ஷால் எண்டவர்" என்று ஒரு வருங்கால கட்டாய முயற்சியாகவே நிற்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிதான். அன்று அவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட அந்த சூழ்ச்சி, இன்றளவும் நம்மை பீடித்துக் கொண்டிருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர், பொது சிவில் சட்டத்தை அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்தபோது சிறுபான்மை அமைப்பினை சேர்ந்த உறுப்பினர்களான இஸ்மாயில் சாஹப், நஸ்ருதீன் அஹமது, போக்கர் சாஹிப் பஹதூர் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொது சிவில் சட்டத்தில் சில வகுப்பினருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அத்தகைய சட்டம் வருமுன், சில வகுப்பினரின் முன் அனுமதி பெறவேண்டும் என்றும் தெரிவித்தனர். இவர்களின் இத்தகைய கருத்துக்களை எதிர்த்தும் பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும் அண்ணல் அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி போன்றவர்கள் வைத்த விவாதங்கள் இன்றைய நாளில் அதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

சிறுபான்மை உறுப்பினர்கள் கொண்டுவந்த திருத்தங்கள், நாளைய சுதந்திர இந்தியாவை மேலும் பிளவு படுத்தும் என்று அவர்கள் கடுமையாக எச்சரித்தனர். "பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த உரிமையியல் நடைமுறைச் சட்டத்தையும், இந்திய தண்டனைச் சட்டம் போன்றவற்றையும் எதிர்க்காத சிறுபான்மையினர், சுதந்திர இந்தியாவின் வருங்கால சாசனத்தில் பிளவினை திணிப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். இறுதியில், அண்ணல் அம்பேத்கர் பொது சிவில் சட்டம் என்பது வளமான வருங்கால இந்தியாவின் ஆக்கப்பூர்வ கனவு என்று அறுதியிட்டுக் கூறி, அது சுதந்திர இந்தியாவில் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்று உறுதிபடக் கூறினார். ஆனால், இன்று நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னும், பொது சிவில் சட்டம் ஒரு விவாதப் பொருளாகவே இருக்கிறது.

தேசத்தின் வருங்கால கொள்கை நெறிமுறைகளாக சொல்லப்பட்டவை, ஆக்கப்பூர்வ சட்டங்களாக மாறும்வரை அதனை நீதிமன்றங்களில் உரிமையாகக் கோர முடியாது என்று ஷரத்து 37 கட்டுப்படுத்துகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில், நெறிமுறை கொள்கைகள், நாட்டின் ஆளுகைக்கு அடிப்படையானவை என்று ஷரத்து 37 பொது சிவில் சட்டத்தின் முக்கியவத்துவத்தை தெளிவுபடுத்துகிறது.

அதனால் தான், நமது தேசத்தலைவர்களும், அரசியல் ஆன்றோர்களும், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பகுதி 4 எனப்படும், வருங்கால நேரடி நெறிமுறைகளை, நாட்டின் நேர்மையான கடப்பாடுகள் (பாசிடிவ் ஆப்ளிகேஷன்ஸ்) என வடிவமைத்து, பகுதி 3ல் உள்ள அடிப்படை உரிமைகளை எதிர்மறை கட்டளைகள் (நெகட்டிவ் இன்ஜன்க்ஷன்) என்று வடிவமைத்துள்ளனர். பொது சிவில் சட்டத்தை உள்ளடக்கிய பகுதி 4 எனும் கொள்கை நெறிமுறைகள், நேர்மறை கட்டளையாக ( பாசிட்டிவ் இன்ஸ்டிரக்‌ஷன்ஸ்) வலியுறுத்தியதன் அவசியத்தை இப்போதாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனத்தின் பகுதி 3 ல் சொல்லப்படும் அடிப்படை உரிமைகள், ஒரு இந்திய குடிமகனின் பாதுக்காப்பு கருதியது என்றால், பகுதி 4 சொல்லும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட நெறிமுறைகள் தேசத்தின் சமூக, பொருளாதார, சமத்துவ நீதியை உறுதிசெய்யும் கோட்பாடுகள் ஆகும். நமது தேசத்தில் அடிப்படை உரிமையும் சமூக நீதியும் மேம்பட வேண்டுமெனில் பொது சிவில் சட்டம் நடைமுறை சட்டமாக ஆக்கப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியமானது. உண்மையில் இதனை நன்கு உணர்ந்த தேசியவாதிகள், பொது சிவில் சட்டத்தை விரைவாக சட்டமாக்கவே முயல்வார்கள்.

பொது சிவில் சட்டத்தை சட்டமாக்க வேண்டும் என்று நமது உச்சநீதிமன்றமும் தனது பல தீர்ப்புகளில் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறது. ஆனால், பொது சிவில் சட்டம் என்பது ஷரத்து 14 ன் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்ற தவறான கருத்து சிலரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த ஆபத்தை உணர்ந்த உச்சநீதிமன்றம், 1992இல் நடந்த "மோஹினி ஜெயின் - கர்நாடக அரசு" வழக்கில், அடிப்படை உரிமைகளும், நேரடி கொள்கை நெறிமுறைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்று தீர்ப்புரைத்தது. அதுபோலவே, 1984ல், "முக்தி மோர்ச்சா - இந்திய யூனியன்" வழக்கில், நேரடி நெறிமுறைகளுக்கு உட்பட்டு வரும் எந்த சட்டத்தையும், நீதிமன்றத்தால் தடுத்திட முடியாது என்று உணர்த்தியது.

1984 ல் "ஜோரன் தீங்கே - எஸ்.எஸ்.சோப்ரா" வழக்கில், திருமணச் சட்டம் பற்றி கூறும்போது, திருமணம் உள்ளிட்ட உரிமையியல் சட்டங்கள், நாட்டில் ஒரே சீராக இல்லை என்பதால் பொது சிவில் சட்டத்தை விரைவாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அதுபோலவே, 1985 இல் நடந்த ஷா பானோ வழக்கின்போது, பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என்ற கருத்து நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது. ஆனால், இந்த வழக்கின் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வை, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த சட்டம், மீண்டும் பொது சிவில் சட்டம் என்னும் கனவை கிடப்பில் எறிந்துட்டது.

1995 இல் "சரளா முத்கல் - இந்திய யூனியன்" வழக்கில், உச்சநீதிமன்றம், பொது சிவில் சட்டத்தை ஆய்வு செய்து, 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் ஆவணம் தாக்கல் செய்யும்படி, அன்றைய இந்திய பிரதமருக்கு உத்தரவிட்டதும், ஆனால் அதனை அன்றைய மத்திய அரசு நிராகரித்ததும், பொது சிவில் சட்டத்தின் நடைமுறைக்கு விழுந்த பெருத்த அடி என்றுதான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து, 2003 இல், "ஜான் வல்லமாட்டம்" வழக்கில், இதுவரை பொது சிவில் சட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் இருக்கிறதே என்று உச்சநீதி மன்றம், தனது ஆழ்ந்த கவலையை பதிவு செய்தது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தனது 72 வயதில், தனது கணவனால், நிற்கதியின்றி வெளியேற்றப்பட்டு ரூ.20/- மட்டுமே மாதாந்திர உரிமைத்தொகையாக கிடைக்கப்பெற்ற ஷா பானோ வழக்கில், நமது உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்ட வரலாறு உற்று நோக்கப்பட வேண்டும். "பாகிஸ்தானில் பொது சிவில் சட்டம் இல்லாத காரணத்தால், நடுத்தர வயது இஸ்லாமிய பெண்கள், கைகளில் குழந்தைகளோடு, நடுத்தெருவில் நிற்கதியாக நிற்பதாக அந்நாட்டு சட்ட ஆணையம் 1955 இல் தாக்கல் செய்த அறிக்கையை, நமது உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டியது.

வழக்கறிஞர் எஸ். சத்தீஷ்குமார்

இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், எகிப்து, சூடான், இந்தோனேஷியா, மலேசியா, துருக்கி மற்றும் பன்மத நாடான அமெரிக்கா போன்ற நாடுகளில் ஷரியத் சட்டங்களை புறம்தள்ளி, பொது சிவில் சட்டம் எனும் பொது உரிமையியல் முறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்றால், இந்தியாவில் இதுவரை ஏன் சாத்தியமாகவில்லை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியல்லவா?

பழமைவாதிகளின் பிடியில் இருந்து விடுபட்டு, மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியோடு, கைகோர்த்து பயணிக்க முனையும், இதுபோன்ற இஸ்லாமிய நாடுகளை காணும்போது, இந்து மக்கள் பெரும்பான்மையோடும், பிற மதத்தவர்கள் சிறுபான்மையோடும் இருக்கும் நமது நாட்டில் இந்த பொது சிவில் சட்டம், ஒரு மெய்ப்படா கனவாகவே இருக்கிறது என்றால் இதற்கு காரணமாக இருப்பவர்களை இப்போதாவது நாம் அடையாளம் காண வேண்டும். ஜீவனாம்சத்திற்காக பல வருடம் போராடிய ஷா பானோ, மும்முறை தலாக் சொன்னதால் வீதிக்கு வந்த ஷாயாரா பானோ போன்ற பெண்களின் அவல நிலை இனி எந்த பெண்ணிற்கும் இந்த நாட்டில் வர விடக்கூடாது.

மத சட்டங்களை புறந்தள்ளிவிட்டு, இந்திய குற்றவியல் சட்டங்களை, இந்திய தண்டனைச் சட்டங்களை ஏற்றுகொள்வோர், நமது நாட்டின் வளர்ச்சி, அமைதி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்தை ஆதரித்தே ஆகவேண்டும். பொது சிவில் சட்டத்தால், சிறுபான்மை சமூகம் பெரும் நன்மைகள் என்பது வருங்காலத்தில் அவர்களது குடும்பம், மத நம்பிக்கை மற்றும் வாழ்வியலுக்கு அரணாகவும் அமையும் என்பதே நிதர்சன உண்மை.

> முந்தைய அத்தியாயம்: இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச் சுதந்திர உரிமையை ‘பொது சிவில் சட்டம்’ அழித்துவிடும்: பி.வில்சன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x