Last Updated : 25 Aug, 2023 05:55 PM

7  

Published : 25 Aug 2023 05:55 PM
Last Updated : 25 Aug 2023 05:55 PM

பெண்களை பாகுபாடுகளில் இருந்து ‘பொது சிவில் சட்டம்’ விடுவிக்கும் என்பது அபத்தம்: உ.வாசுகி

''பல்வேறு மதங்களைச் சார்ந்த பெண்களை பாகுபாடுகளில் இருந்து பொது சிவில் சட்டம் விடுவிக்கும் என்கிற கருத்து அபத்தமானது. ஒரே மாதிரியான என்பதற்கும் சமத்துவம் என்பதற்கும் ஆழமான வேறுபாடு உள்ளது'' என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி. இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது:

பொது சிவில் சட்டம் என்பது மேலோட்டமாகப் பார்க்கும்போது வரவேற்கத் தகுந்ததாகத் தெரியலாம். ஆனால் எந்த ஒரு நிகழ்வையும், அதை செய்யப் போவது யார்? அவர்களுக்கு இருக்கும் நோக்கம் என்ன? தற்கால அரசியல் சூழல் என்ன? என்பன போன்ற பல விஷயங்களோடு இணைத்துப் பார்த்தால் தான் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். “விவரங்களில் இருந்து உண்மையை தேடு” என்று புரட்சியாளர் மாவோ சொன்னது இதற்குப் பொருந்தும்.

ஆர்.எஸ்.எஸ் / பாஜக / இந்துத்துவ அமைப்புகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல், கடந்த காலத்தில் அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை அவர்களின் வசீகர சொல்லாடல்களைத் தாண்டிப் பார்த்தால் ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற கோட்பாடுகளை ஏற்க மறுப்பவர்களாகத்தான் அவர்கள் தெரிகிறார்கள். சிறுபான்மை வெறுப்பு அரசியல் அதிகம் முன்னுக்கு வருகிற காலகட்டமாக இது உள்ளது. உயர் சாதிய பிராமணிய கோட்பாட்டையே அவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள். மனுஸ்மிருதி தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் பெண்கள், பட்டியலின, பழங்குடியின மக்கள் உள்ளிட்டவர்கள் சம உரிமைக்குத் தகுதி அற்றவர்கள் என்றாகிறது.

ஒரே நாடு ஒரே கலாச்சாரம் போன்ற முழக்கங்கள் அதிகம் முன்வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் பெரும்பான்மைவாத (majoritarianism) அரசியலை அவர்கள் உயர்த்திப் பிடிக்கிறார்கள். பொது சிவில் சட்டத்தின் சாதக பாதக அம்சங்களை, மேலே கூறிய யதார்த்தத்தில் இருந்து பிரித்துப் பார்த்து எடை போட முடியாது.

நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்ற பின்னணியில், மூன்று முக்கிய முழக்கங்கள் முன்னிறுத்தப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்குவது, ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது என்பவையே அவை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டு அதனுடைய சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு விட்டது. ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது, அநேகமாக வரும் ஜனவரியில் முற்றுப்பெறும். எனவே தற்போது மூன்றாவது அம்சத்தை கையில் எடுத்துள்ளனர். ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னும் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஒட்டியே அவர்கள் பிரச்சாரம் அமையும். 2014-இல் வளர்ச்சி, வேலை வாய்ப்பு. 2019ல் புல்வாமா, தேச பாதுகாப்பு. 2024 இல் மேற்கூறிய மூன்று முழக்கங்கள்.

இத்தகைய சூழ்நிலையில் தான், இந்திய சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் பற்றிய கருத்துக்களை பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடமிருந்து வரவேற்று அறிவிக்கை வெளியிட்டது. 21வது சட்ட ஆணையம் 2018ல் முழுமையாக ஆய்வு செய்து பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு தற்போது தேவையானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என முடிவு செய்தது. ஐந்தாண்டுகளில் அதை மாற்றுவதற்கான அவசியம் என்ன?

பல்வேறு மதங்களைச் சார்ந்த பெண்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகள் கிடைக்கும், அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் (directive principles) ஒன்றாக இது சொல்லப்பட்டுள்ளது, டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது இதை ஆதரித்திருக்கிறார் போன்றவை பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான அரசின் முக்கிய வாதங்களாக முன்வைக்கப்படுகின்றன. அது வழிகாட்டும் நெறிமுறையாகத் தான் வைக்கப்பட்டு இருக்கிறது என்பதே, அதைத் திணிக்கும் நோக்கம் அன்றைய அரசியல் நிர்ணய சபைக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

வழிகாட்டும் நெறிமுறையில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு ஏற்க வேண்டும், தொழிலாளிகளுக்கு வாழ்க்கையில் ஊதியம் அளிக்கப்பட வேண்டும் போன்றவற்றைக் கூறலாம். ஆனால் அரசாங்க நடவடிக்கைகள் இவற்றுக்கு நேர் எதிரான பாதையில் தான் போய்க் கொண்டுள்ளன. மற்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு இதை மட்டும் வழிகாட்டும் நெறிமுறையில் உள்ளது என்பதற்காக ஏன் கையில் எடுக்கிறார்கள் என்பதில் தான் அரசியல் உள்ளது.

டாக்டர் அம்பேத்கர் பொதுவாக மதம் சார்ந்து பாகுபாடு இருக்கக் கூடாது என்கிற கோணத்திலிருந்து இதனை அணுகி இருக்கிறார். இந்து கோட்பாட்டு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் நடத்திய போராட்டம் இதற்கு ஒரு உதாரணம். அந்த சட்டத்தை வரவிடாமல் நான்கு ஆண்டுகள் தடுத்ததில் இந்துத்துவ, இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் கொண்ட அரசியல் நிர்ணய சபை பிரதிநிதிகளுக்கு பங்கு உண்டு. பாகுபாடுகளில் இருந்து பல்வேறு மதங்களைச் சார்ந்த பெண்களை பொது சிவில் சட்டம் விடுவிக்கும் என்கிற கருத்து அபத்தமானது. ஒரே மாதிரியான என்பதற்கும் சமத்துவம் என்பதற்கும் ஆழமான வேறுபாடு உள்ளது. இத்தகைய சட்டங்களை தரப்படுத்த எதனை அளவுகோலாக வைப்பார்கள்? இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை மட்டுமே இலக்காக்குவார்கள் என்று புரிகிறது. இதனால் பாலின பாகுபாடுகள் நீங்கப் போவது கிடையாது.

இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் உடன்கட்டை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் வந்திருக்கவே முடியாது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் முதல் நகல் பாஜக ஆட்சியில் தான் முன்வைக்கப்பட்டது. மனைவியை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தால் மட்டுமே அது குடும்ப வன்முறை என்கிற மிக மிக குறுகலான வரையறையைத் தான் பாஜக முன் வைத்தது. பெண்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களால் அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது வரை குழந்தை திருமணங்களை ஊக்குவிக்கக் கூடிய கருத்தியல் தான் இவர்கள் மத்தியில் நிலவுகிறது.

நானே குழந்தை திருமணம் தான் செய்து கொண்டேன் என தமிழ்நாடு ஆளுநரே வெளிப்படையாக பெருமை பேசுவதை எதில் சேர்ப்பது? பெண்களுக்கு அரசியல் நல்லதல்ல என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திருமண உறவில் ஆண்கள் வேலை பார்த்து வருமானம் ஈட்ட வேண்டும், பெண்கள் வீட்டுப் பணிகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெண்ணடிமைத்தன சித்தாந்தத்தை முன் வைக்கிறார். இவையெல்லாம் மனுவாத கருத்துக்களே.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் பாதுகாக்கப்படுகிறார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா-வில் சிறுமியை மிகக் கொடூரமாக கும்பல் வல்லுறவு செய்து கொலை செய்த குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டார்கள். மற்போர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி பிரிஜ் பூஷண் சிங் கடைசி வரை பாதுகாக்கப்பட்டார்.

பல ஆசிரமப் பெண்களை வல்லுறவு செய்த ஆசாராம் கைது செய்யப்படுவது இந்து கலாச்சாரத்துக்கு விடப்படும் சவால் என இந்துத்துவ அமைப்புகள் பகிரங்கமாக கூறின. பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்பது வேறு விஷயம். எனவே பொது சிவில் சட்டத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நாங்கள் களையப் போகிறோம் என்று இவர்கள் சொல்வது நகைப்புக்குரியது மட்டுமல்ல, விஷமத்தனமானது.

சம உரிமையின் அடிப்படையிலான சமமான சட்டம் என்பதே சரியான புரிதலாக இருக்கும். அண்மைக்காலத்தில் வந்திருக்கக்கூடிய சில சட்டங்கள் அனைத்து மதங்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்களாக வந்துள்ளன. உதாரணமாக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், குழந்தை திருமண தடை சட்டம் போன்றவற்றை கூறலாம். சிறப்பு திருமண சட்டமும் இதைப் போலத்தான். எனவே சிவில் அம்சங்கள் குறித்த புதிய சட்டங்களை அனைத்து மதங்களுக்கும் பொருந்தக்கூடியதாகக் கொண்டு வரலாம்.

அனைத்து மதச் சட்டங்களிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அவற்றில் மாற்றங்கள் வேண்டுமா என்றால் வேண்டும். ஆனால் அவற்றை அதிரடியாகச் செய்ய முடியாது. மதக் கோட்பாட்டு நம்பிக்கை என்பதோடு இது இணைந்தது. கியூபாவில் குடும்ப நல சட்டம் கொண்டு வந்தபோது அதற்கான முன் தயாரிப்புகள் பல கட்டங்களில் செய்யப்பட்டன. சட்ட முன்வரைவு மட்டும் 22 முறை மாற்றப்பட்டது. ஒவ்வொரு நகலும் மக்கள் மத்தியில் விரிவான விவாதத்துக்கு விடப்பட்டது. லட்சக்கணக்கான ஆலோசனைகள் வந்தன. அவற்றில் கணிசமானவை இணைக்கப்பட்டன. இறுதியாக மக்கள் வாக்களித்து மூன்றில் இரண்டு பங்கு ஆதரவோடு அது சட்டமாக்கப்பட்டது.

அந்தந்த சமுதாயத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் ஜனநாயக ரீதியாக விவாதித்து என்ன மாற்றம் தேவை, எப்படி தேவை என்கிற ஆலோசனைகளை உருவாக்கி ஒரு நிகழ்முறையின் (process) மூலமே உண்மையான சமத்துவத்துக்கான மாற்றங்களைக் கொண்டு வர முடியும். முதலில் இந்து மதம் சார்ந்த சட்டங்களில் இந்து ஆண்களுக்கும் இந்து பெண்களுக்கும் சமத்துவம் வேண்டும். அதேபோலத்தான் இதர மதங்களுக்கும்.

அடுத்து இந்தியாவின் பெருமையே அதன் பன்மைத்துவம் தான். சிவில் சட்டங்களில் பாகுபாடு இல்லாமையை உறுதிப்படுத்த முடியுமே தவிர நூல் பிடித்தாற் போல, எந்திரகதியாக மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. வட கிழக்கு பிராந்தியம் போல பல பல இனக்குழுக்கள் ஒன்றாக வாழும் பகுதிகள் உள்ளன. பழங்குடியின மக்களுக்கான பண்பாடும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவையெல்லாம் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

உள்துறை அமைச்சர் பழங்குடி இன மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் எனக் கூறியதாக அவரைப் பார்த்த தூது குழுக்கள் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளன. உள்துறை அமைச்சகம் இதுவரை அதை மறுக்கவில்லை. இந்து மதம் சார்ந்த சட்டங்களை பிராமணியக் கோட்பாடுகளுக்கு இசைவது போல மாற்றக்கூடும். எஞ்சி இருப்பது இஸ்லாமிய சட்டங்கள் தான். நரி செத்தாலும் கோழி மீது தான் கண்!

மக்களுக்கு முன் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. கடுமையான விலை உயர்வு, படிப்புக்கான வேலை கிடைப்பதில் தடைகள், நீட் தற்கொலைகள், கொடூரமான வன்முறைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்க்கை நடத்துவதே சவாலாக ஆகிக் கொண்டிருக்கிறது. இதில் வெறுப்பு அரசியலை விதைத்து மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதற்கு பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவு வகுப்பு வாத அரசியலுக்கு வேண்டுமானால் பொது சிவில் சட்டம் தேவைப்படலாம். ஆனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அது பேராபத்து. அடிப்படை பிரச்சினைகளிலிருந்து நமது கவனத்தை திசைதிருப்பும் இத்ததகைய தந்திரத்தை அடையாளம் கண்டு நிராகரிப்பது இன்றைய அவசர தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x