Last Updated : 19 Dec, 2017 10:23 AM

 

Published : 19 Dec 2017 10:23 AM
Last Updated : 19 Dec 2017 10:23 AM

இரு மாநிலங்கள், இரு வெற்றிகள்… இருவேறு பின்னணிகள்!

 

 

குஜராத்

 

 

guj1jpg100 

 

இந்தியாவின் மேற்கு எல்லை மாநிலம் என்றாலும், இந்தியாவைத் தீர்மானிக்கும் மைய மாநிலங்களில் ஒன்று குஜராத். பாஜக - காங்கிரஸ் இரண்டும்தான் பிரதான கட்சிகள் என்றாலும், 30 ஆண்டுகளாக காங்கிரஸுக்குத் தண்ணி காட்டும் மாநிலம். சட்ட மன்றத்தில் உள்ள 182 தொகுதிகளில் ஏற்கெனவே ஆட்சியிலிருந்தபோது 115 - 61 என்ற எண்ணிக்கையில் காங்கிரஸைப் போலக் கிட்டத்தட்ட இரு மடங்கு பலத்தில் இருந்த பாஜக இம்முறை வென்றிருந்தாலும் 99 - 80 என்ற எண்ணிக்கை அதன் பலம் சரிந்துவருவதையே காட்டுகிறது!

மாநிலத்தின் பின்னணி

1,96,024 ச.கி.மீ. பரப்பளவு, 6.03 கோடிப் பேரை மக்கள்தொகையாகக் கொண்ட பெரிய மாநிலங்களில் ஒன்று குஜராத். 33 மாவட்டங்களாக நிர்வகிக்கப்படுகிறது. மக்களில் 89% இந்துக்கள். பிரதான மொழி குஜராத்தி. இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி குஜராத்தி; சம்ஸ்கிருதம் மற்றும் உள்ளூர் பிராகிருத மொழிகளின் கலவை இது என்பதால், இந்தியோடு இயல்பான இணைவை குஜராத் கொண்டிருக்கிறது. எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 79 %. நபர்வாரி வருவாய் ரூ.2,14,285. தேசிய சராசரி வருமானமான ரூ.1,12,432-ஐக் காட்டிலும் இது அதிகம்.

வளமான மாநிலம் குஜராத். 1,600 கி.மீ. நீளமுள்ள வளமிக்க கடற்கரையும் துறைமுகங்களும் குஜராத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் பலம் சேர்ப்பவை. சபர்மதி, தாபி, மாஹி, நர்மதை நான்கு ஆறுகளும் மாநிலத்தின் விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை. தவிர, கால்நடை வளர்ப்பு, கறிக்கோழி, முட்டை உற்பத்தியிலும் மாநிலம் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. நாட்டிலேயே மிகப் பெரிய கூட்டுறவுப் பால் பண்ணை (அமுல்) குஜராத்தில்தான் இருக்கிறது.

வரலாற்றுரீதியாகவே பெரும் வணிகப் பின்னணியைக் கொண்ட மாநிலம் இது (சிந்துசமவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னமான லோதால், தோலவீரா, கோலா தாரோ இங்குதான் உள்ளன). கால்சைட், ஜிப்சம், மாங்கனீஸ், லிக்னைட், பாக்சைட், சுண்ணாம்பு, அகேட் எனப் பல வகைக் கனிமங்களும் கிடைப்பதால், இவை சார்ந்த தொழில்கள் அதிகம். நாட்டின் மொத்த வங்கி நிதியில் 26% குஜராத்திலேயே உள்ளது என்ற ஒரு வரித் தகவல் குஜராத்திகளின் வணிக, செல்வ, அரசியல் பலத்தைக் காட்டக் கூடியது.

கடந்த கால வரலாறு!

காந்தி, ஜின்னா இருவருமே குஜராத்திகள்! சுதந்திரத்துக்குப் பின் நேருவுக்கு இணையான ஆளுமையாகத் திகழ்ந்த வல்லபபாய் படேல், இந்திராவுக்குப் போட்டியாக உருவெடுத்த மொரார்ஜி தேசாய் இருவரும் குஜராத்திகள்! நாட்டின் மிகப் பெரிய பெருநிறுவனங்களான டாடா, ரிலையன்ஸ் குழுமங்களின் நிறுவனர்களும் குஜராத்திகள்! தேசிய இயக்கத்தில் குஜராத்திகள் ஆழ்ந்த தாக்கம் பெற்றார்கள். தமிழகத்தைப் போலவே குஜராத்திகளும் இனப் பெருமிதம் கொண்டவர்கள் என்றாலும், மாநிலக் கட்சிகள் பெரிதாக வளராமல் போனதற்கும், குஜராத்தி பெருமிதம் இந்துத்துவ அரசியலோடு பிணைக்கப்பட்டதற்குமான காரணங்கள் அதன் வரலாற்றுப் பின்புலத்தில் இருக்கின்றன.

பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்து, 1960 மே முதல் தேதி அன்று மொழிவாரி மாநிலமாகப் பிறந்தது குஜராத். ஆரம்பத்தில் காங்கிரஸே ஆதிக்கம் செலுத்தியது. ஜீவ்ராஜ் நாராயண் மேத்தா (1960-63), பல்வந்த்ராய் மேத்தா (1963-65), ஹிதேந்திர கன்னையாலால் தேசாய் (1965-71), கண்ஷியாம் ஓசா (1972-73), சிமன்பாய் படேல் (1973-74), பாபுபாய் படேல் (1975-76) ஜனதா, மாதவ்சிங் சோலங்கி (1976-77) என்று அனைவரும் காங்கிரஸ் முதல்வர்கள்.

குஜராத்தின் திருப்புமுனை 1973-75 காலகட்டம். ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டமாகத் தொடங்கிய ‘நவநிர்மாண் சமிதி இயக்கம்’ காங்கிரஸ் அரசுக்குத் தலைவலியாக மாறியபோது அதன் பின்னணியில் முக்கியப் பங்காற்றியவர்கள் சங்கப் பரிவாரத்தினர். விளைவாக மத்தியில் ஜனதா ஆட்சி வந்தபோது குஜராத்திலும் காட்சி மாறியது.

பாபுபாய் படேல் (1977-80) முதல்வரானார். தொடர்ந்து, மாதவ் சிங் சோலங்கி (1980-85; 1989-90), அமர்சிங் சவுத்ரி (1985-89), சிமன்பாய் படேல் (1990-95) என்று காங்கிரஸ்காரர்கள் ஆட்சியே நடந்தாலும், பாஜகவின் முதல் முதல்வரான கேசுபாய் படேலுக்கு (1995) நிலைமை மாறியது.

சுரேஷ் மேத்தா (1995-96), இடையில் சின்ன மாற்றம், பின் கேசுபாய் படேல் (1998-2001) என்று சென்றுகொண்டிருந்த குஜராத் 2001-ல் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பாஜகவின் கோட்டையானது. இன்று வரை அது தொடர்கிறது.

பேசப்பட்ட விஷயங்கள்!

மோடி பாஜக போன்ற ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், டெல்லியால் நிர்வகிக்கப்பட்டவர் அல்ல. ஒரு வலுவான தலைவரைப் பெற்றிருக்கிறோம் என்ற பெருமிதம் குஜராத்திகளுக்கு இருந்தது. மோடி பிரதமரான பின்னர் அவருக்கு இணையான இடத்தில் வைக்கத்தக்கவராக ஆனந்தி பென் படேலோ, விஜய் ரூபானியோ இல்லை என்ற எண்ணம் உருவானது. மோடி குஜராத்துக்கு வெளியே சென்றதும் அதுவரை அழுத்தப்பட்டிருந்த எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.

நாடு முழுக்க ‘குஜராத் வளர்ச்சி’ என்று மோடி பேசிக்கொண்டிருந்தபோது, “குஜராத் வளர்ச்சி எல்லோருக்குமானது என்றால், விவசாயிகள் கடன் சுமையில் ஆழ்வது ஏன்? கல்வி - சமூக நலத் துறைகளில் குஜராத் முதலீடு குறைவாக இருப்பது ஏன்?” என்றெல்லாம் காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பத் தொடங்கின. கிராமப்புறங்களில் சூழ்ந்த வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுடைமைச் சமூகமான படேல் சமூகத்தைக் கிளர்ச்சியை நோக்கித் தள்ளியது. அடுத்து, தாக்கோர் சமூகத்திடம் எதிர்ப்புக் குரல் எதிரொலித்தது. இடையே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை அங்கும் எதிர்க் குரலை உண்டாக்கியது. ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கோர், ஜிக்னேஷ் மேவானி மூன்று இளைஞர்களும் காங்கிரஸோடு கை கோத்தபோது களம் சூடுபிடித்தது.

பாஜக சார்பில் பிரதமர் மோடியே களத்தில் இறங்கினார். காங்கிரஸுக்குப் புத்துயிர்ப்பு அளிக்கும் வகையில் களம் புகுந்த ராகுல் காந்தியையும் நேரு குடும்பத்தையுமே பிரச்சாரத்தின் மைய இலக்காக்கினார். “ஊழல் கட்சி, குடும்ப அரசியல் கட்சி, வாரிசு அரசியல் கட்சி” என்று சாடினார். ஒருகட்டத்தில் வழக்கம்போல இந்துத்துவ ஆயுதத்தையும் பாகிஸ்தான் எதிர்ப்பு ஏவுகணைகளையும் பாஜக கையில் எடுத்தது.

எது தீர்மானித்தது?

பாஜக அரசு மீதான அதிருப்தி தேர்தலின்போதே வெளிப்பட்டது; வாக்கு எண்ணிக்கையில் பாஜக அடைந்திருக்கும் சரிவும் அதைத் தெளிவாகக் காட்டுகிறது. என்றாலும், காங்கிரஸால் இந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து முழுமையான ஓட்டுகளாக மாற்ற முடியவில்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாஜகவில் மாநில அளவில் ஒரு வலுவான தலைவர் இன்று இல்லை என்றால், காங்கிரஸும் அதே பிரச்சினையை எதிர்கொள்கிறது. பாஜகவின் வளர்ச்சி முழக்கத்தைக் கேள்விக்குள்ளாக்க முடிந்தாலும், மாற்று முழக்கத்தை அதனால் உண்டாக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் மோடிக்கு இன்னும் தனித்த செல்வாக்கு ஒன்று இருக்கிறது என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது!

 

 

 

இமாச்சல பிரதேசம்

 

hima1jpg100 

 

இந்தியாவுக்குக் கிரீடம்போல ஜம்மு-காஷ்மீர் இருக்கிறது என்றால், அதற்கும் கீழே முகமாக இருப்பது இமாசல பிரதேசம். தமிழ்நாடு, கேரளம்போல வடக்கில் அடிக்கடி ஆட்சி மாறுகிற மாநிலம் என்றால் இமாசலம். காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி. சட்ட மன்றத்தில் உள்ள 68 தொகுதிகளில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே 36 - 27 என்ற எண்ணிக்கையில் பலமான எதிர்க்கட்சியாகத்தான் இருந்தது பாஜக. ஆளும் காங்கிரஸுக்கு எதிரான வெற்றி எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், 43 - 21 என்ற எண்ணிக்கையில் காங்கிரஸை பாஜக பின்னுக்குத் தள்ளியிருப்பது குறிப்பிடத்தகுந்த வெற்றி!

மாநிலத்தின் பின்னணி

55,673 ச.கி.மீ. பரப்பளவு, 68.64 லட்சம் பேரை மக்கள்தொகையாகக் கொண்ட சின்ன மாநிலம் இமாசலம். 12 மாவட்டங்களாக நிர்வகிக்கப்படுகிறது. மக்களில் 95% இந்துக்கள், பெரும்பாலானவர்களின் மொழி இந்தி. எழுத்தறிவு பெற்றோர் 83%, நபர்வாரி வருவாய் ரூ.1,30,067. தேசிய சராசரி வருமானமான ரூ.1,12,432-ஐக் காட்டிலும் இது அதிகம்.

மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த மாநிலமான இமாசலத்தில் வற்றாத ஜீவநதிகளுக்குக் குறைவில்லை. சந்திரபாகா என்கிற செனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், யமுனா ஆகியவை முக்கியமான நதிகள். புனல் மின்உற்பத்தியே மாநிலத்தின் தேவைக்கும் அதிகமான மின்சாரத்தைக் கொடுப்பதால், பிற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை விற்று வருவாய் ஈட்டுகிறது இமாச்சலம். பழத்தோட்டங்கள், கோதுமை, பார்லி, சோளம் என வயல்களில் நிறைந்திருக்கும் பசுமை, விவசாயிகளைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. பழத்தோட்டங்களில் 50%-க்கும் மேல் ஆப்பிள் தோட்டங்கள்தான்.

வளம் மிக்க மாநிலம் என்பதால், சாலை வசதி, மின்வசதி, தகவல் தொடர்பு வசதிகளில் முன்னேறிய மாநிலம் இது. சின்னச் சின்னதாக பத்து சொச்சம் நகரங்கள்தான் இருக்கின்றன. மக்கள்தொகையில் 10% பேர்தான் நகரவாசிகள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கிராமங்கள். 90% பேர் கிராமங்களில் வசிக்கிறார்கள் என்றாலும், கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான பாரதூர வேறுபாடுகள் குறைவு. விளைவாக மக்கள் நலத் திட்டங்கள், அதற்கான அறிவிப்புகள், செயல்திட்டங்கள் இமாசலத் தேர்தலில் தாக்கம் செலுத்தும்!

கடந்த கால வரலாறு!

இந்தி மாநிலம் என்பதால், மாநிலக் கட்சிகளுக்கோ, மாநிலம்சார் அரசியலுக்கோ இங்கு பெரிய இடம் இல்லை. காங்கிரஸும் பாஜகவுமே மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன. இமாச்சலத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் - குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் எண்ணிக்கை மிகவும் குறைவு (2.18%). எண்ணிக்கை அடிப்படையில் வலுவான சமூகமான (32.72%) தாக்கூர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இங்கு முதல்வர் பதவியில் அதிகம் செல்வாக்கு செலுத்துபவர்கள்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் சிங் பார்மர் நீண்ட காலம் முதல்வராக இருந்தார். பிறகு தாக்கூர் ராம்லால் முதல்வரானார்.

காங்கிரஸுக்கு அடுத்து, 1977 -1980 காலகட்டத்தில், அதாவது மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிசெய்த காலத்தில் சாந்த குமார் முதல்வராக இருந்தார். ஜன சங்கத்தைச் சேர்ந்த இவர் பின்னர் பாஜகவின் பிரதான தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தவர். பாஜக சார்பில் 1990-1992 காலகட்டத்தில் முதல்வராக இருந்தார். பாஜகவை இங்கு வளர்த்தெடுத்ததில் இவருக்கு முக்கியமான பங்குண்டு. வாஜ்பாய் அபிமானி. தொண்டர்களிடையே பெருமதிப்பைப் பெற்றவர். மோடியை வெளிப்படையாக விமர்சித்ததால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டவர்.

அடுத்து, காங்கிரஸ் மீண்டும் தலையெடுத்ததில் முக்கியமான பங்கு வீரபத்ர சிங்குக்கு உண்டு. இவர் 1983 - 1990, 1993 - 1998, 2003 - 2007, 2012 - 2017 என்று பல முறை முதல்வர் பதவியை வகித்தவர். இவருக்குச் சரியான சவால் என்றால், பாஜகவில் உருவான பிரேம் குமார் தூமல். 1998 - 2003, 2007 - 2012 இரு காலகட்டங்களில் முதல்வர் பதவி வகித்தவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர். “ஏனைய இடங்களில் பிரதமர் மோடி பெயராலேயே நாங்கள் முன்னிற்கிறோம் என்றால், இமாச்சலத்தில் மட்டும் தூமல் பெயராலேயே நாங்கள் முன்னிற்கிறோம்” என்று பாஜக தலைவர் அமித் ஷா வெளிப்படையாக மேடைகளில் பேசும் அளவுக்கு தூமலுக்குச் செல்வாக்கு அதிகம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தூமல் தன்னுடைய தொகுதியில் தோற்றது நகைமுரண்!

பேசப்பட்ட விஷயங்கள்

இரு கட்சிகளும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், மாநிலத்தில் இரு கட்சிகளுக்கு இடையிலும் போக்குகளில் பெரிய வேறுபாடு இல்லை. உதாரணமாக, ஊழல் இங்கு அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம். ஆனால், காங்கிரஸ் - பாஜக இரு தரப்பினர் மீதுமே கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. குடும்ப அரசியல் ஒரு பிரச்சினை. ஆனால், வீரபத்ர சிங் - பிரேம் குமார் தூமல் இருவருடைய மகன்களும் அரசியலில் தீவிரமாகச் செயல்படுகிறவர்கள். வாரிசு அரசியலும் இங்கே காலூன்றிவிட்டது.

“இமாசலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, அரசுப் பணிகளில் சுணக்கம், திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வர் அக்கறை காட்டுவதில்லை, நிதி நிர்வாகம் மோசம்” என்பது பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுகள். அதேபோல, “சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவோம். மாநிலத்தை எல்லா வழிகளிலும் தன்னிறைவு காணவைப்போம். எங்களை ஆட்சியில் அமர்த்தினால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் உதவியோடு மேலும் பல திட்டங்களை விரைந்து கொண்டுவருவோம்” என்று பாஜக பிரச்சாரம் செய்தது.

“எங்களுடைய ஆட்சியில்தான் கல்வி, வேளாண்மை, தோட்டக்கலை, மருத்துவம், பொது சுகாதாரத் துறைகள் பெரும் வளர்ச்சியை அடைந்தன. இது இப்படியே தொடரவும் மேலும் வளரவும் காங்கிரஸுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. அதேபோல, “சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறையினர் மூலம் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதுடன் நிர்வாகத்தில் கவனம் செலுத்தவிடாமல் நெருக்கடி தரும் நடவடிக்கைகளிலும் பாஜக ஈடுபட்டுவருகிறது” என்றும் அது குற்றம்சாட்டியது.

எது தீர்மானித்தது?

தேர்தல் முடிவைத் தீர்மானித்த முக்கியமான விஷயம் என்றால், ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலைதான். பொதுவாகவே, மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கை அதிகம் பிரதிபலிக்கும் மாநிலம் இமாச்சலம். அரசுகளை மாற்றிமாற்றிக் கொண்டுவரும் வழக்கத்தையும் கொண்டவர்கள் இமாச்சல வாக்காளர்கள். ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலின்போது இங்குள்ள நான்கு தொகுதிகளிலும் பாஜகவே வென்றது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகள், விசாரணைகள், அது தொடர்பான பேச்சுகள் மக்கள் மத்தியில் பாஜக கூறிவந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான சந்தேகத்தை வலுவாக்கின. காங்கிரஸ் மீதான அதிருப்தியை இது மேலும் வளர்த்தெடுத்தது. காங்கிரஸ் தலைமை மாநிலத்தில் கட்சியின் போக்கில் பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவராத சூழலில், பாஜக ஆட்சிக்கு வரும் சூழல் கனிந்தது. விளைவு தேர்தலில் எதிரொலித்திருக்கிறது!

 

- வ.ரங்காசாரி

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x