Last Updated : 04 Aug, 2023 05:46 PM

4  

Published : 04 Aug 2023 05:46 PM
Last Updated : 04 Aug 2023 05:46 PM

பொது சிவில் சட்டத்துக்கு கோவா முன்னுதாரணம் அல்ல. ஏன்? - ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் | பகுதி 2

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூறி இருக்கின்றன; அதேநேரத்தில், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் சமுதாய இணக்கம் ஏற்படாது என்று எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை என்கிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணலின் இரண்டாம் தொகுப்பு இது...

சொத்துரிமையும் பொது சிவில் சட்டமும்: “பொது சிவில் சட்டம் குறித்து யோசிக்கும் முன், நமது வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த சட்டங்கள் எப்படி இருந்தன என்றால், ஒரு குடும்பத்தில் அப்பாவின் சொத்துகள் பிள்ளைக்குத்தான் என்று இருந்தது. அந்தக் குடும்பத்தின் பெண்ணை, 14, 15 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அந்தப் பெண், வேறொரு வீட்டிற்குச் சென்று விடுகிறார். அப்பாவும் பிள்ளையும்தான் ஒன்றாக இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு சமூக சூழலில் சட்டம் எப்படி இருந்தது என்றால், சமுதாய வாழ்க்கை முறை எப்படி இருந்ததோ அப்படித்தான் சட்டமும் இருந்தது. அதன் காரணமாகத்தான் அப்பாவின் சொத்து பிள்ளைக்கு என்று இருந்தது.

'இதுபோன்ற சட்டத்தை மாற்ற வேண்டும். பெண்களுக்கு சம நீதி; சம உரிமை இருக்க வேண்டுமானால், அப்பாவின் சொத்து பிள்ளைக்கு மட்டும்தான் என்பது சரியல்ல. பெண்ணுக்கும் இருக்க வேண்டும். தற்போது முழு உரிமை இல்லாத சொத்தாகத்தான் நாம் பெண்ணுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அப்படித்தான் சட்டம் இருக்கிறது. எனவே, அதை மாற்ற வேண்டும்' என்று நினைத்து 1956-ல் இந்துக்களுக்கு இருந்த தனிச் சட்டத்தை நாம் மாற்றினோம். இதில், இந்து திருமணச் சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், இந்து வாரிசு உரிமைச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தோம். இவை இந்துக்கள் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்; பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் சட்டத்தை இயற்றினோம்.

இதேபோல், நமது நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சட்டம் கொண்டு வர முடியுமா என்றால், அந்த சமயத்தில் அவர்களுக்குத் தனியாக சட்டம் இருந்தது. சொத்துக்களை எப்படி பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களிடம் சட்டம் இருந்தது. தந்தையின் சொத்து எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும், அதில் யாருக்கு எத்தனை பாகம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் சட்டமாக இருந்தது. அதேபோல், மகனின் சொத்தில் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பாகம் இருந்தது. ஆனால், இந்துக்கள் விஷயத்தில் அப்படி அல்ல. இறந்து போன இந்து மகனின் சொத்தில் அப்பாவுக்கு உரிமை இல்லை. அம்மாவுக்குத்தான் உரிமை. இஸ்லாத்தில் அப்பாவுக்கும் உரிமை, அம்மாவுக்கும் உரிமை.

ஷரியத்தில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்கும் மனநிலை முக்கியம்: பொது சிவில் சட்டத்துக்காக நாம் சட்டத் திருத்தம் கொண்டு வருவதாக இருந்தால், இஸ்லாத்தில் சொல்லப்பட்ட இந்த விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாமா என்பது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும். அதாவது, ஷரியத் சட்டத்தில் வலுவாக உள்ளவற்றை நாம் எடுத்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கும் நிலை இருக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தவரும் எந்தச் சட்டத்தில் வலு இருக்கிறது என்பதை ஆரோக்கியமான முறையில் ஆராயக்கூடிய நிலை இருக்க வேண்டும். பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்காமல் பண்பட்ட நிலையில் சட்டங்களை பார்க்க சமூகத்தால் எப்போது முடிகிறதோ அப்போதுதான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்துக்களுக்கான சட்டத்தில் 7 வயது வரை பெண்ணுக்கு அம்மாதான் பாதுகாவலர்; 7 வயதுக்குப் பிறகு அப்பாதான் பாதுகாவலர். இது ஓர் அபத்தமான சட்டம். ஏனெனில், அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டால், குழந்தையை தனது கட்டுப்பாட்டுக்குள் அப்பா எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சட்டம் பிறகு மாற்றப்பட்டது. 7 வயதுக்குப் பிறகு அப்பாதான் பாதுகாவலர் என்று சட்டம் சொன்னாலும், பெண் குழந்தை அம்மாவிடம்தான் இருக்க வேண்டும் என்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டு சட்டம் மாற்றப்பட்டது. 7 வயது வரைதான் அம்மா பாதுகாவலர் என்பதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பருவமடையும் வரை அம்மாதான் பாதுகாவலர். ஏனெனில், பெண் குழந்தைகளுக்கு அந்த காலகட்டம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அதை அம்மா மூலம் புரிந்துகொள்வது என்பது மிகவும் அவசியம். எனவே, பாதுகாவலர் குறித்துப் பேசும்போது இஸ்லாத்தில் உள்ள வலு குறித்து பார்க்க வேண்டும். இதை ஆழமாக புரிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டும். ஆனால், அந்த பக்குவமற்ற நிலைதான் தற்போது உள்ளது.

கோவா பொது சிவில் சட்டம் - ஒரு பார்வை: நமது நாட்டில் பொது சிவில் சட்டம் ஏதாவது ஒரு பகுதியில் அமல்படுத்தப்பட்டு, அது வழி வழியாக இருந்தது என்றால், அது கோவாதான். கோவாவை ஆட்சி செய்த போர்ச்சுக்கல், அப்போது பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணித்தது. இயலாமை காரணமாக அப்போது மக்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தற்போது நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். கோவாவில் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் அறிவித்ததைப் போல, திடீர் என எல்லாவற்றையும் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று இந்திய அரசு சொல்லப் போகிறதா? அப்படி சொன்னால் அது ஜனநாயகமாக இருக்க முடியாது.

மற்றொறு முக்கிய விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். கோவாவில் பொது சட்டம் அமலில் இருப்பதால், அங்கு மத வித்தியாசம் இல்லாமல் மக்கள் சந்தோஷமாக, நாட்டின் பிற பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள் என்று ஓர் ஆய்வு முடிவை அரசால் கொண்டு வர முடியுமா? அப்படி கொண்டு வரட்டும். நான் ஒப்புக்கொள்கிறேன். அதுபோல ஒரு நிரூபணமும் இல்லை; நம்பிக்கையும் இல்லை. சட்டத்தை பொதுவாக்கினால்தான் ஒரு இந்து, ஒரு முஸ்லிமை சகோதரனாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று யாராவது சொல்ல முடியுமா?

கோவாவின் வரலாறு காரணமாக அங்கு பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. 400 வருட வரலாறு அது. அந்த 400 வருட வரலாற்றை ஒரே நாளில் மாற்றப் பார்ப்பது சரியல்ல. அதுவும் கோவா எனும் ஒரு சிறிய நிலப்பகுதியில் மட்டுமே பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதுபோல் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அப்போதைய பிரிட்டீஷ் ஆட்சியால் கொண்டு வந்திருக்க முடியுமா என்றால், நிச்சயம் கொண்டு வந்திருக்க முடியாது. கொண்டு வந்திருந்தால் பெரிய கலவரம் நிகழ்ந்திருக்கக் கூடும். அதனால்தான், அப்போது நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வரவில்லை.

நீதிமன்றங்களும் பொது சிவில் சட்டமும்: அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதால், அதை அனுசரித்து நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது நீதிமன்றத்தின் பணியல்ல; அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று கூறியது.

பொது சிவில் சட்டம் கூடாது என்பதோ, அதை வலியுறுத்தும் சட்டப்பிரிவு 44-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதோ வாதமல்ல. இட ஒதுக்கீடு 15 வருடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது, இந்தி தேசிய மொழியாக இருக்க வேண்டும், 15 வருடங்களுக்குப் பிறகு அதுதான் அலுவலக மொழியாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் சட்டத்தில் சொல்லப்பட்டது. அவ்வாறு சொல்லப்பட்டதன் காரணம், அது அப்போதைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பின்படி சமூகம் மாறிவிட்டதா என்றால் மாறவில்லை.

அதுபோலத்தான் பொது சிவில் சட்டமும். அதேநேரத்தில் சட்ட ரீதியாக அநீதி எங்காவது ஒரு இடத்தில் இருந்தால், அப்போதெல்லாம் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அது உண்மைதான். அதேநேரத்தில், பொது சிவில் சட்டம் கொண்டு வராவிட்டால் சமுதாயத்தில் இணக்கம் ஏற்படாது என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறதா? எங்கும் யாரும் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அதைவிட முட்டாள்தனம் வேறு இல்லை. அத்தகைய அரசியல் புரிதல், சமூக புரிதல் இல்லாதவர்களை நாம் நீதிபதிகளாக உட்காரவைக்கவில்லை.

பொது சவில் சட்டம் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. அதை கொண்டுவர வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கான தருணம் மிகவும் முக்கியம். தற்போதைய அரசு பொது சவில் சட்டத்தைக் கொண்டு வந்தால் பிளவு இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். தனிச்சட்டம்தான் சிறுபான்மையினருக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு. அவர்களின் பாதுகாப்புக்கு நாம் வேறு எதையும் செய்ய வேண்டாம். சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டிய அவசியம் இருக்கிறது.

மக்கள் தொகை மாற்றமும் பொது சிவில் சட்டமும்: இஸ்லாத்தில் ஆண்கள் 4 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என சட்டம் அனுமதிப்பதால் அந்த மதத்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கிறதே என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. நாட்டில் மதங்களின் சதவீதத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அது மிகவும் ஆபத்து என்று சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி சொல்கிறார். ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை தற்போது எனக்கு இல்லை. இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால் நாட்டின் தன்மை மாறிவிடும் என்று கூறுவது தேவையற்ற ஒரு பயம். இந்து மதத்தை பிடித்துக்கொள்வதன் மூலமாகத்தான் நாம் நமது நாட்டின் பெருமையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றி இருக்கிறோம் என்று நினைப்பதில் இருந்து வரக்கூடிய தவறு அது.

மத ரீதியாக மக்கள் தொகை மாறுவதால் நாட்டின் இயல்பு மாறிவிடும் என்று கூறுவதை நான் நம்பவில்லை. அதுபோன்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்க, முஸ்லிம் ஆண்கள் 4 மனைவி வைத்துக்கொள்வதுதான் காரணம் என்பது அடிப்படையில் தவறான கருத்து. உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் இது குறித்த புள்ளி விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி, முஸ்லிம்களைவிட இந்துக்கள்தான் ஒரு மனைவிக்கும் அதிகமாக மனைவிகளை கொண்டிருக்கிறார்கள். சட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு இஸ்லாமியரும் 4 மனைவியை வைத்திருக்கிறார்களா என்றால் அப்படி இல்லை. ஒவ்வொருவரும் ஒரு மனைவியைத்தான் வைத்திருக்கிறார்கள். ஒருவர் 4 மனைவி வைத்துக்கொள்ளலாம் என்பது சமூகத்தில் அந்தக் காலத்தில் எப்போதோ ஏற்பட்டது.

ஓர் அரசு ஊழியர் இறந்துவிட்டால் பிரச்சினை எங்கு வருகிறது என்று காவல் துறைக்கோ, நீதிமன்றத்திற்கோ சென்று பார்த்தால், இந்துக்கள் மத்தியில்தான் வருகிறது என்பது புரியும். இறந்த ஒருவருக்கு பலர் உரிமை கோருவதால்தான் இந்தப் பிரச்சினை. இதுதான் தற்போதைய உண்மையான நிலை. சிறுபான்மையினரின் மக்கள் தொகை அதிகமாகிறதா என்றால் அதுவும் ஆகவில்லை. இந்தியாவில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் வகையில்தான் இந்துஸ்தானம் என்பது இருக்க முடியும் என்பது முட்டாள்தனம். இந்தோனேஷியா சென்று பார்த்தால் தெரியும். அவ்வளவு இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய அந்த நாட்டில் அவர்கள் பேசக்கூடிய இந்து நாகரிகம், அவர்களுக்குத் தெரிந்த ராமாயணம், மகாபாரதம் இங்கு நமக்கு தெரிவதில்லை. அவர்கள் அத்தனை பேரும் முஸ்லிமாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும், மத ரீதியாக வேறாகப் போனாலும், கலாச்சார ரீதியாக இந்து மதத்தின் வலுவை அவர்களால் பார்க்க முடிகிறது.

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பும் பொது சிவில் சட்டமும்: பொது சிவில் சட்டம் இல்லாததால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. நான் கேட்கிறேன். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்றால் சம உரிமை வேண்டும் என்பதற்கான கோரிக்கை முஸ்லிம் பெண்களிடம் இருந்து வர வேண்டும். மாறாக, நான் உனக்கு உரிமை கிடைக்கச் செய்கிறேன் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. உன்னைவிட எனக்கு கெட்டிக்காரத்தனம் இருக்கிறது, உன்னால் உன்னை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை, நான் பாதுகாப்பு கிடைக்கச் செய்கிறேன் என்று சொல்வதைப் போன்றது இது. இதில் எந்த நியாயமும் இல்லை.

மாற்றம் தேவை என்றால் அதை அவர்கள் சொல்ல வேண்டும். நாட்டில் சட்டங்கள் மாறி இருக்கின்றன என்றால், அவர்கள் என்ன வழக்கு போடாமல் இருந்தார்களா? தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று வழக்குப் போட்டது ஷா பானு என்ற இஸ்லாமியப் பெண்மணிதான். வேறு யாரும் போடவில்லை. இஸ்லாத்தில் என்ன குறை இருக்கிறதோ அந்த குறையை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி அதற்கு இருக்கிறது; பரிகாரம் கேட்பதற்கு அதில் வழி இருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அது அவர்களின் தலைவர்கள் மூலமாகத்தான் ஏற்பட வேண்டும். அந்த மதத்துக்கு வெளியே இருப்பவர்கள் சொல்வதால் மாற்றம் வராது. அந்த மதத்தில் படித்தவர்கள், கெட்டிக்காரர்கள் குறைந்த எண்ணிக்கையில் இல்லை. அவர்கள் மூலமாகத்தான் மாற்றம் ஏற்பட வேண்டும். அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேறொருவர் முனைவது அபத்தம்.

அதனால்தான் ஈவெராவின் வாதத்தில்கூட ஒரு நியாயம் இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்கிறாயே, உன்னால் தேவாலயத்தின் முன் சொல்ல முடியுமா, மசூதியின் முன் சொல்ல முடியுமா என்றெல்லாம் நாம் கேள்வி கேட்டிருக்கிறோம். ஆனால், அவரின் கவலை எல்லாம், அவரது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றியதுதான். அதை அவர் வெளிப்படையாக சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அப்படித்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பழங்குடி மக்களும் பொது சிவில் சட்டமும்: பழங்குடி மக்களிடையே பல்வேறுவிதமான சட்டங்கள் இருந்தன. எனவே, இந்துக்களுக்கான சட்டம் எதுவும் பழங்குடி மக்களுக்கு பொருந்தாது. கணவன் இருக்கும்போதே ஒரு பெண் வேறொரு ஆணோடு தொடர்பில் இருக்க முடியும். அதை மாற்ற ஒரு சட்டம் கொண்டு வந்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு கிடையாது. ஏனெனில், அவர்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் இருக்கிறது.

பழங்குடி மக்களுக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும்படி சட்டம் கொண்டு வரும் துணிவு அரசுக்கு இருக்காது. அரசு அப்படி சொன்னால் பழங்குடி மக்கள் பழங்குடி மக்களாக இருக்க மாட்டார்கள். காடுகளில் வாழும் மக்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. அரசால் அங்கெல்லாம் செல்லவே முடியாது. அந்த காடுகளுக்கும் மேடுகளுக்கும் செல்ல முடியுமா? அவர்களை மாற்றினால்தான் நாடு செழிப்படையும் என்று சொன்னால் அதைவிட பொய் வேறு இருக்க முடியாது.

எத்தகைய புரிதல் தேவை? - சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலில் அவர்கள் மீது ஒரு சட்டத்தை திணிப்பது கூடாது. அப்படி ஒரு சட்டத்தை திணிப்பதன் மூலம்தான் நாட்டில் இணக்கம் ஏற்படும் என்பதும் பெரும் பொய். அதை நாம் நம்பக்கூடாது. தற்போதைய ஆட்சியாளர்களின் எண்ணம் சரியில்லை. சிறுபான்மையினரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு அவர்களிடம் திட்டமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் சமுதாயம் சரியாகிவிடும் என்று கூறுவது உண்மையாக இருக்காது.

நமது நாட்டில் பொது சிவில் சட்டம் இல்லாததற்கு வரலாறுதான் காரணம். ஒரே நாட்டில் பல்வேறு விதமான சட்டங்கள் இருப்பது ஒன்றும் அபூர்வமான விஷயம் கிடையாது. பல்வேறு தனிச்சட்டங்கள் இருந்தாலும் ஒரே ஆட்சியைக் கொண்டு வர முடியும், நிர்வாகம் செய்ய முடியும் என்பது நமது நாட்டில் நிதர்சனமாக நடந்த விஷயம். நமது ராஜாக்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இந்துத்துவம் என்பதைத்தாண்டி இந்தியத்துவம் என்பதாக நமது சிந்தனை இருக்க வேண்டும். நாம் மேம்பட வேண்டும். அரவணைத்துச் செல்லக்கூடிய தன்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அப்படித்தான் இருந்தோம். அதனால்தான் பார்சிகள் இங்கு வந்தார்கள். நாம் நமது மதத்துக்கு எந்த பெயரும் கொடுக்காமல் இருந்ததற்கு காரணமே, நமது வாழ்க்கை முறை வேறு விதமாக இருந்தது. நாம் அதை மறந்துவிடக்கூடாது” என்கிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன்

> முந்தைய அத்தியாயம்: பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x