Last Updated : 31 Jul, 2023 01:35 PM

25  

Published : 31 Jul 2023 01:35 PM
Last Updated : 31 Jul 2023 01:35 PM

பொது சிவில் சட்டம் | “மத்திய அரசின் நோக்கம் சரியானது அல்ல” - முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர நினைக்கும் தற்போதைய மத்திய அரசின் நோக்கம் சரியானது அல்ல என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது..

அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இல்லையா? - இந்தக் கேள்வியை டாக்டர் அம்பேத்கர் அரசமைப்பு அவையில் நவம்பர் 1948-இல் கேட்கிறார். அதற்கான பதிலையும் அவர் கூறுகிறார். சொத்துகள் விற்பனை, அடமானம் போன்ற அனைத்து சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும் பொதுவான சட்டமே உள்ளது. பணம் கடனாக கொடுப்பது சம்பந்தமான பண பரிவர்த்தனைக்கான சட்டங்களும் பொதுவானதே. இதுபோல எண்ணற்ற கணக்கில் அடங்காத பொதுவான சிவில் சட்டங்கள் இந்திய நாடு முழுவதும் அமலில் உள்ளன. ஆனால் திருமணம், வாரிசு உரிமை போன்ற மிக மிக குறுகிய பகுதிகளில்தான் பொதுவான சிவில் சட்டம் இல்லை. இந்த மிகக் குறுகிய பகுதிகளில், அவரவர் மதம் சார்ந்த சட்டம் மற்றும் பழக்க வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன.

அதாவது, திருமணம், வாரிசுரிமை போன்ற பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் பொதுவான சிவில் சட்டமே இந்தியா முழுவதும் அமலில் உள்ளது என்று டாக்டர் அம்பேத்கர் பதில் அளிக்கிறார். எதிர்காலத்தில் சுதந்திர இந்திய அரசு மேற்சொன்ன திருமணம், வாரிசுரிமை போன்ற பகுதிகளிலும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் என்றும், அதற்கான ஏற்பாடே அரசமைப்புச் சட்டத்தின் கூறு 44 என்றும் கூறுகிறார் அண்ணல் அம்பேத்கர்.

அரசமைப்புச் சட்டம் கூறு 44-ஐ அடிப்படையாகக் கொண்டு, அரசு பொது சிவில் சட்டத்தை இயற்றும்போது, அந்த பொது சிவில் சட்டத்தை அனைத்து குடிமக்கள் பேரிலும் அரசு திணிக்கும் என்று அரசமைப்புச் சட்டத்தின் கூறு 44 கூறவில்லை என்கிறார் டாக்டர் அம்பேத்கர். எனவே, அரசமைப்பு அவையில் தெரிவிக்கப்பட்ட அச்சத்திற்கு அடிப்படை இல்லை என்றார். மேலும், நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து கொண்டிருந்த பிரித்தானிய அரசு ,1937-ஆம் ஆண்டில் ஷரியத் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னால், இந்தியா முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், அந்தந்த பகுதிகளில் இந்து மக்கள் மத்தியில் நிலவிய பழக்கவழக்கங்களின் படியே சொத்துகளை அவர்களின் குடும்பங்களில் பிரித்துக் கொண்டார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார் அண்ணல் அம்பேத்கர்.

1937-ஆம் ஆண்டில் சரியச் சட்டத்தை கொண்டு வந்த பிரித்தானிய அரசு, வலுக்கட்டாயமாக இஸ்லாமியர்கள் பேரில் அந்த சட்டத்தை திணிக்கவில்லை என்றும், இஸ்லாமியர்களுக்கு விருப்புரிமை அளிக்கப்பட்டது என்றும் டாக்டர் அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். 1937-ஆம் ஆண்டைய ஷரியத் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமியர்கள், அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்று விருப்புரிமையை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாதவர்களுக்கு அச்சட்டம் பொருந்தாது. பதிவு செய்யாதவர்களுக்கு, ஏற்கனவே அவர்கள் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களின் அடிப்படையில் குடும்ப சொத்துக்களை பிரித்துக் கொள்ளலாம். இது போன்ற ஒரு ஏற்பாட்டின் படி, விருப்புரிமையின் அடிப்படையிலேயே எதிர்கால இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அரசு கொண்டு வரும். இந்தியா முழுவதும் உள்ள குடிமக்கள் மீது திணிக்காமல் விருப்புரிமை அடிப்படையிலேயே அதை அமுல்படுத்தும் என்று தெளிவாக அரசமைப்பு அவையில் கூறுகிறார் அண்ணல் அம்பேத்கர்.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 44-இன் விவாதத்தின்போது கலந்து கொண்ட கே. எம். முன்சி, இந்து குடும்பங்களில் சொத்துகளை பிரித்துக் கொள்வது இந்து மதத்தின் பழக்கவழக்கங்களின் படி தான் இருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு சமமாக சொத்துரிமை அளிக்க இந்து மதத்தில் இடமில்லை என்றும், எனவே பொது சிவில் சட்டத்தை ஏற்க முடியாது என்றும், இந்துக்களில் சனாதான பிரிவினர் கூறுவதை சுட்டிக்காட்டுகிறார். அரசமைப்புச் சட்ட வரைவு குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் செயல்பட்ட போது, அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக செயல்பட்டவர் கே.எம்.முன்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தருணத்தில் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 44, அரசமைப்புச் சட்டத்தின் பகுதி மூன்றில் சேர்க்கப்படாமல் அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கில் சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுவது அவசியம். அரசமைப்புச் சட்டத்தின் பகுதி மூன்று, அடிப்படை உரிமைகள் பற்றியது. அரசமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கு, அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் பற்றியது. அடிப்படை உரிமைகளை கோரி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்று அவைகளை பெறலாம். ஆனால், வழிகாட்டும் நெறிமுறைகளை அமல்படுத்துமாறு கோர இயலாது.

அரசமைப்புச் சட்டம் நான்கில் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 47, மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் பகுதியில் சேர்க்கவில்லை. மதுவை ஒழிப்பதற்கான சட்டம் எதையும் அரசு கொண்டு வரவில்லை. அதேபோன்றதுதான், பொது சிவில் சட்டமும்.

அரசமைப்பு அவை தான் இந்தியாவின் முதல் நாடாளுமன்றமாகவும் செயல்பட்டது. அப்போது ஜவஹர்லால் நேரு பிரதமர். அவரது தலைமையில் அமைச்சரவை இருந்தது. அந்த அமைச்சரவையில் டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சர். அந்த நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர், இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கான திருமணம் சம்பந்தப்பட்ட சட்டம், வாரிசு உரிமைச் சட்டம், தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கான மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்து திருமண சட்டம் என்பது விவாகரத்து, மற்றும் ஜீவனாம்சம் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. சொத்துகளை எப்படி பிரித்துக் கொள்வது என்பதே இந்து வாரிசு உரிமைச் சட்டம்.

இந்த மேற்சொன்ன மசோதாக்களின் மேல் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்குக் கூட அனுமதிக்கவில்லை இந்து சனாதனிகள். பெண்கள் சொத்தில் சம உரிமை பெறுவதற்கான உரிமை, விவாகரத்து பெறுவதற்கான உரிமை, ஜீவனாம்சம் பெறுவதற்கான உரிமை போன்றவற்றை சனாதனிகள் கடுமையாக எதிர்த்தனர். எனவே, மேற்சொன்ன மசோதாக்கள் சட்டங்களாக ஆகவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் பாலின சமத்துவம் - ஆண் பெண் சமத்துவம் - அடிப்படை உரிமை என்றும் பாலின பாகுபாடு சட்ட விரோதமானது என்று கூறியிருந்தும், ஆண்களுக்கு இணையான உரிமையை இந்து பெண்களுக்கு குடும்ப விவகாரங்களில் தருவதற்கு சனாதனிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்சொன்ன மசோதாக்களை விவாதித்து சட்டமாக்குவதற்கு அண்ணல் அம்பேத்கர் கடும் முயற்சி எடுத்தார். ஆனால் அவரது முயற்சியை ஒவ்வொரு முறையும் சனாதனிகள் கடுமையாக எதிர்த்து முறியடித்து விட்டனர். இந்து மதத்தைச் சார்ந்த பெண்களுக்கு அவர்களது குடும்பங்களில் ஆண்களுக்கு இணையாக சொத்து கிடைப்பதற்கும், திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் பெறுவதற்கும் டாக்டர் அம்பேத்கர் செய்த முயற்சிகள் தோல்வி அடையவே, அவர் 27.9.1951இல் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், 1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த பொழுது இந்து திருமண சட்டம், இந்து வாரிசு உரிமைச் சட்டம், இந்துக்கள் தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டம் ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்து பெண்கள் விவாகரத்து பெறுவதும், விவாகரத்து பெற்ற பெண்கள் மறுமணம் செய்து கொள்வதும், விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் இந்து திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சாத்தியமாயிற்று . திருமணம் தெய்வீகத் தன்மை கொண்டது, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் உபதேசித்த இந்துமதம், இந்து ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்வதை ஆதரித்தது. இந்து ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்தியது இந்து திருமணச் சட்டம்.

பின்னர், பல காலங்களில் இந்து திருமணச் சட்டத்தில் பல திருத்தங்களை நாடாளுமன்றம் செய்தது. 1955 இல் பெண்ணின் திருமண வயது 15 என்றும், ஆணின் திருமண வயது 18 என்றும் இந்து திருமண சட்டத்தில் இருந்தது. பின்னர், பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் திருமண வயது 21 என்றும் திருத்தப்பட்டது. தற்சமயம் விவாகரத்து வழங்கப்படும் வழக்குகளில் கணிசமான வழக்குகள், கணவனும் மனைவியும் விருப்பப்பட்டு(mutual consent) அளிக்கும் விவாகரத்துக்கான பொதுவான மனுக்களை அடிப்படையாகக் கொண்ட வழக்குகளே. விவாகரத்துக்கான பொதுவான மனுவை கணவனும் மனைவியும் விருப்பப்பட்டு அளிக்கும் ஏற்பாடு, முதலில் 1955இல் இந்து திருமண சட்டம் கொண்டுவரப்பட்டபோது இல்லை. பின்னர் இந்து திருமணச் சட்டத்தில் நாடாளுமன்றம் திருத்தம் கொண்டு வந்து இந்த ஏற்பாட்டைச் செய்தது.

விதவைகளுக்கு சொத்துரிமையை உறுதி செய்தது இந்து வாரிசு உரிமைச் சட்டம். மூதாதையர் சொத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு உரிமை அளிக்காவிட்டாலும், தந்தையின் சொத்தில் மகனுக்கு இணையான உரிமையை மகளுக்கும் அளித்தது. இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005 இல் நாடாளுமன்றம் செய்த திருத்தத்தின் மூலம், பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையாக மூதாதையர் சொத்தில் உரிமை அளிக்கப்பட்டது. இந்த திருத்தம் 2005இல் கொண்டு வருவதற்கு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது நாடாளுமன்றத்திற்கு.

மகனோ மகளோ இல்லாத விதவையின் சுய சம்பாத்திய சொத்து, அந்த விதவையின் பெற்றோருக்கு செல்லாமல் அவளது மறைந்த கணவனின் பெற்றோருக்கு செல்லும் என்பதே இப்போதைய இந்து வாரிசு உரிமைச் சட்டம். இந்த அநீதியை நீக்கி விதவையின் பெற்றோருக்கு சொத்து செல்லும் விதத்தில் இந்து வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று 21ஆவது சட்ட ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த திருத்தம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்பதை நாம் அறியோம்.

பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் இப்பொழுது நடைபெறுவதற்குக் காரணம், ஜூன் 14 ,2023 அன்று 22 ஆவது இந்திய சட்ட ஆணையம் பொது அறிவிப்பின் மூலம் பொது சிவில் சட்டம் பற்றிய கருத்துக்களை மக்களிடம் கோரியதனால் தான். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சவ்கான் தலைமையில் அமைந்த 21 ஆவது இந்திய சட்ட ஆணையம், இதேபோன்று 2016 ஆம் ஆண்டு குடிமக்களிடம் பொது சிவில் சட்டம் பற்றிய கருத்துக்களைப் பெற்றது. பின்னர் 31ஆகஸ்ட் 2018 இல், 21 வது சட்ட ஆணையம் அதனுடைய அறிக்கையை அரசுக்கு அளித்தது. மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே 21 வது சட்ட ஆணையம் அதன் பணியை செய்தது. 21 வது சட்ட ஆணைய அறிக்கையில், இப்பொழுது பொது சிவில் சட்டம் அவசியமும் அல்ல; விரும்பத்தக்கதும் அல்ல (neither necessary nor desirable) என்று கூறப்பட்டுள்ளது .

இப்போதைய உடனடி தேவை, ஒவ்வொரு மத பிரிவினருக்கும் மற்றும் குழுக்களுக்கும் தனித்தனியே திருமண சட்டம், வாரிசு உரிமைச் சட்டம், தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டம் போன்றவைகளை நாடாளுமன்றம் தனித்தனியாக இயற்ற வேண்டும்(codify) என்று அந்த அறிக்கை பரிந்துரை செய்தது. பின்னர் அந்த சட்டங்களில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. மத பிரிவினருக்கும் மற்றும் குழுக்களுக்குமான ஏற்கனவே இருக்கும் தனித்தனி திருமண சட்டம், வாரிசு உரிமைச் சட்டம், தத்தெடுத்தல் சம்பந்தமான சட்டம் போன்றவைகளில் உரிய திருத்தங்களை நாடாளுமன்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரை செய்தது. அதாவது இந்து திருமண சட்டம் மற்றும் இந்து வாரிசுரிமைச் சட்டம் போன்றவற்றில் திருத்தங்கள் செய்தது போல, மற்ற பிரிவினருக்கான சட்டங்களிலும் நாடாளுமன்றம் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதே பரிந்துரை.

இதற்கிடையில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டங்களை நாடாளுமன்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரை செய்தது. அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்வதற்கு தடை செய்து சட்டம் (bigamous marriage prohibition act) இயற்றுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் அனைத்து குடிமக்களுக்கான பொதுவான சட்டங்களில் - குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம், சிறப்பு திருமண சட்டம் போன்றவற்றில் - உரிய திருத்தங்கள் செய்து அந்த சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரை செய்தது. மேற்சொன்னவற்றை செய்வதே, பொது சிவில் சட்டம் உருவாவதற்கான வழிமுறை என்றும் மிகத் தெளிவாக கூறியது அந்த 21 வது சட்ட ஆணையத்தின் அறிக்கை.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட 21 வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தி, அதன் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான வழிமுறையை செய்ய தயாராக இல்லை மோடியின் அரசு. 22 ஆவது சட்ட ஆணையத்திற்கும் பொது சிவில் சட்டம் பற்றி அறிக்கை அளிக்க கோரி உள்ளது மோடி அரசு. அதன் விளைவாக 22 வது சட்ட ஆணையம், குடிமக்களின் கருத்தை கோரியுள்ளது. 22 ஆவது சட்ட ஆணையம் ஜூன் 14, 2023 அன்று குடிமக்களிடம் கருத்தைக் கேட்டு அறிவிப்பு வெளியிட்டதும், பழங்குடி மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சி தான் வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வருகிறது. அந்த மாநிலங்களில் உள்ள அரசுகள் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.

உடனே நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான பாஜகவை சேர்ந்த சுசில் மோடி, வர இருக்கும் பொது சிவில் சட்டத்தில் பழங்குடி மக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார். மோடி அமைச்சரவையில் உள்ள எஸ்.பி. சிங் பகல் என்ற அமைச்சரும் அதையே கூறினார். பட்டியல் இனத்து மக்களின் ஜனத்தொகையில் பாதி அளவு உள்ள பழங்குடி மக்களுக்கு, பொது சிவில் சட்டம் பொருந்தாது என்று மோடி அரசு கூறுவதன் மூலம், அந்த சட்டம் பொதுவான சிவில் சட்டம் என்ற தகுதியையே இழந்து விடுகிறது அல்லவா?

அதேபோல, பாஜக கூட்டணியில் இருந்த அகாலி தளம், சீக்கியர்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டார்கள் என்று கூறியது. ஆம் ஆத்மி கட்சி பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக கூறினாலும், அக்கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வர், பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறினார். அவ்வாறு கூறாமல் போனால் ஆம் ஆத்மி கட்சியை சீக்கியர்கள் நிராகரித்து விடுவார்கள். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். அதேபோல பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றன. இந்திய அளவிலும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பிஹாரில் ஆட்சி செய்யும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி என பல்வேறு கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றன. பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் எவரும், அரசமைப்புச் சட்டத்தின் கூறு 44-க்கு எதிரான கருத்தைக் கொண்டவர்கள் அல்லர்.

அதாவது 21-வது சட்ட ஆணையம் கூறியபடி, அனைத்து தரப்பாரின் சம்மதத்துடன் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தைத்தான் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. எனவே, மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொது சிவில் சட்டம் என்பதை சிறுபான்மையினருக்கு எதிரான ஓர் ஆயுதமாக பயன்படுத்த நினைக்கிறதே அன்றி, பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஏற்கும் வகையில் கொண்டு வருவது என்பது அதன் நோக்கம் அல்ல.

முந்தைய அத்தியாயம்: பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருப்பதால், இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், இந்து முன்னணி மாநில துணைத் தலைவருமான ஜி. கார்த்திகேயன். அதை வாசிக்க > பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் ஏன்? - மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x