Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

360: வெற்றியாளர்கள் இவர்கள்தான்!

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கும் தமிழரசி அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய இலக்கிய விருது – 2021 பரிசளிப்பு விழா கடந்த டிசம்பர் 4 அன்று நடைபெற்றது. குறும்பட்டியலுக்குத் தேர்வாகியிருந்த ஐந்து நாவல்களிலிருந்து கனகராஜ் பாலசுப்பிரமணியத்தின் ‘அல் கொஸாமா’ நாவல் முதலாவது பரிசான ரூ. ஒரு லட்சத்தைத் தட்டிச்சென்றது. வாசு முருகவேலின் ‘மூத்த அகதி’ நாவல் இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றது. நாராயணி கண்ணகியின் ‘வாதி’ நாவல் மூன்றாவது பரிசாக ரூ.25 ஆயிரம் பெற்றது. அபுல் கலாம் ஆசாதின் ‘உடல் வடித்தான்’ நாவலும் கணேசகுமாரனின் ‘சொர்க்கபுரம்’ நாவலும் ஆறுதல் பரிசாகத் தலா ரூ.10 ஆயிரம் பெற்றன. விருதுபெற்ற நாவல்கள் உட்பட நெடும் பட்டியலில் இடம்பெற்ற 10 நாவல்களின் வெளியீடும் அன்றே நடைபெற்றது. போட்டிக்கு வந்த 81 நாவல்களிலிருந்து நெடும் பட்டியல், குறும் பட்டியல், இறுதியில் பரிசுக்குரியவை ஆகியவற்றை எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள் என்று 19 பேர் அடங்கிய குழு ஒன்று தேர்ந்தெடுத்திருக்கிறது. போட்டி அறிவிப்பிலிருந்து தொடங்கி பரிசு விழா வரை பிரம்மாண்டம்தான். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்!

ஆங்கிலத்தில் பூவிதழ் உமேஷ்

கவிஞரும் சிறார் இலக்கியருமான பூவிதழ் உமேஷ் தனது முதல் ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிடவுள்ளார். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் பெரும்பாலும் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ‘எ பீஸ் ஆஃப் மூன்ஷைன் அட் டின்னர்’ (A Piece of Moonshine at Dinner) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தைப் புதுடெல்லியில் உள்ள ரைட்டர்ஸ்கிராம் பதிப்பகம் வெளியிடுகிறது. பூவிதழ் உமேஷுக்கு வாழ்த்துகள்!

ரிஷான் ஷெரீபுக்கு இரண்டு விருதுகள்

சிங்களத்திலிருந்து தமிழுக்குப் பல முக்கியமான நூல்களை மொழிபெயர்த்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். அவர் மொழிபெயர்த்த ‘அயல் பெண்களின் கதைகள்’ (வம்சி பதிப்பகம் வெளியீடு) நூலுக்கு 2020-க்கான இலங்கை அரசின் ‘அரச இலக்கிய விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மொழிபெயர்த்த கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ நாவலுக்கு (பூபாலசிங்கம் புத்தக சாலை வெளியீடு) 2021-க்கான ‘அரச இலக்கிய விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. இன்று எதிரெதிர் துருவங்களாக ஆகிவிட்ட தமிழ், சிங்களச் சமூகங்களுக்கிடையே இலக்கியத்தின் மூலம் பாலம் அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ரிஷான் ஷெரீப் பாராட்டுக்குரியவர். ஒரே நேரத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x