Last Updated : 09 Jun, 2018 09:21 AM

 

Published : 09 Jun 2018 09:21 AM
Last Updated : 09 Jun 2018 09:21 AM

பாரதி ஆய்வா? ஆய்வு பிரதியா?

பா

ரதி குறித்த ஆய்வில் 1960-ம் ஆண்டிலிருந்து ஈடுபட்டுவருபவர் சீனி.விசுவநாதன். பாரதி குறித்த அரிய தகவல்களையும், அச்சில் வராத எழுத்துகளையும் பதிப்பித்திருக்கிறார். ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’, ‘பாரதி நூற்பெயர்க் கோவை’ போன்ற நூல்கள் இவரது சாதனைகள். தமிழ்நாடு அரசின் 2004-ம் ஆண்டுக்கான ‘பாரதியார் விருது’ம் பெற்றிருக்கிறார். மகாகவி பாரதியாரைப் பணிவதையே வாழ்க்கைப் பயனாகக் கொண்டுள்ள பாரதி அன்பனாகத் தன்னை முன்னிறுத்தும் சீனி.விசுவநாதனிடமிருந்து 32 பக்க சுற்றறிக்கையொன்று ‘இந்து தமிழ்’ அலுவலகத்துக்கு வந்திருந்தது. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பதிப்பித்து சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘பாரதி விஜயம்’ நூலின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை இந்தச் சுற்றறிக்கை முன்வைக்கிறது.

“நான் கண்டறிந்த பல செய்திகள் ‘பாரதி விஜயம்’ நூலில் கையாடப்பட்டிருக்கின்றன. அப்படி இல்லையென்று கூறுவாரானால், அதற்கான தகுந்த ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும். பதிப்பாசிரியர் தனது வரலாற்றுப் பெட்டக நூலில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டியுள்ள சின்னச்சாமி ஐயர் நிறுவிய ‘காட்டன் ஜின் பாக்டரி’ வரலாறு, எட்டயபுர வரலாறு, ‘இந்தியா’, ‘சுதேசமித்திரன்’, ‘ஞானபாநு’, ‘மெட்ராஸ் நேடிவ் பேப்பர் ரிப்போர்ட்ஸ்’ ஆகியவை பற்றிய இன்னபிற தரவுகளை எங்கே, எப்போது பார்வையிட்டுத் திரட்டினார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். புது தகவல் என்று கடற்கரய் பெருமிதத்தோடு தெரிவிக்கும் செய்திகள் பலவும் ஏற்கனவே என்னாலும், பல ஆய்வாளர்களாலும் கண்டறியப்பட்டவையே. எனது கட்டுரைகள் தவிர, பல்வேறு மூத்த அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் கண்டறியப்பட்ட தகவல்களும்கூட ‘பாரதி விஜயம்’ நூலில் இணைக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற வரலாற்றுப் பிழைகளும், முன்பின் முரணான தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.” இவை கடற்கரயின் மீது சீனி.விசுவநாதன் வைக்கும் குற்றச்சாட்டுகளுள் பிரதானமானவை.

இதுகுறித்து சீனி.விசுவநாதனிடம் பேசினோம். “இதுபோன்ற பதிப்புகளில் ஈடுபடும்போது எங்கிருந்து, எந்த பக்கத்திலிருந்து எடுத்திருக்கிறேன் என்று குறிப்பிடுவதுதான் சரி; போகிறபோக்கில் தானே கண்டறிந்ததுபோல எழுதுவது முறையல்ல. இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல; யாரும் செய்யக் கூடாதது, ஒருபோதும் நடக்கக் கூடாதது. பதிப்பாசிரியரிடமிருந்தோ, வெளியீட்டாளரடமிருந்தோ இதுவரை எவ்வித பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆதாரமற்ற பகுதிகளை அப்புத்தகத்திலிருந்து நீக்கும் வரை நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன்” என்றார் சீனி.விசுவநாதன். தவிரவும், எண்ணற்ற ஒற்றுப்பிழைகளோடு புத்தகம் வெளிவந்திருப்பது அவர்களின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது என்றார்.

முதலில், ‘பாரதி விஜயம்’ நூலை வெளியிட்ட ‘சந்தியா’ நடராஜனுக்கு ஒரு பக்கக் கடிதம் ஒன்றைதான் சீனி.விசுவநாதன் அனுப்பியிருக்கிறார். அதன் நகல் ஒன்றை பதிப்பாசிரியர் கடற்கரய்க்கும் அனுப்புகிறார். ஆனால், இருவரிடமிருந்தும் நேரடியான பதில் ஏதும் வரவில்லை. மாறாக, ‘சந்தியா’ நடராஜனின் வழக்கறிஞரிடமிருந்து சீனி.விசுவநாதனுக்குக் கடிதமொன்று அனுப்பப்படுகிறது. சீனி.விசுவநாதனின் குற்றச்சாடுகளை மறுப்பதாகவும், “நியாயப்படுத்த முடியாத, குறும்புத்தனமான, தவறான திசைதிருப்பும் செயல்” எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான், சீனி.விசுவநாதன் விரிவான 32 பக்க சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்.

அந்த அறிக்கையை மையப்படுத்தி அ.ராமசாமி எழுதிய ‘சட்டகப் பார்வை’ என்ற கட்டுரை அம்ருதா இதழில் வெளியானது. அது விவாதமானது. இது குறித்து அ.ராமசாமியிடம் பேசியபோது, “சீனி.விசுவநாதன் அனுப்பிய கடிதத்தில் நஷ்டஈடு எதுவும் கேட்கவில்லை. இப்படி நடந்திருப்பது சரியா என்றுதான் கேட்கிறார். அதற்கு வக்கீல் நோட்டிஸ் மாதிரியான ஒன்றை அனுப்பியிருப்பது ஏற்புடையதாக இல்லை. சீனி.விசுவநாதனிடமிருந்து நிறைய பகுதிகளை எடுத்திருக்கிறார்கள். சீனி.விசுவநாதனிடமிருந்து மட்டுமல்ல நிறைய பேரிடமிருந்து எடுத்திருக்கிறார்கள். ‘நானே தேடினேன், நானே கண்டுபிடித்தேன்’ என அதில் உரிமை கோருவது சரியில்லை. எதற்கும் பதில் இல்லை. கடற்கரய் பேசுவதற்குப் பதிலாக ‘சந்தியா’ நடராஜன் பின்னால் கடற்கரய் மறைந்துகொள்கிறார். இப்படி ஒரு நிலைப்பாட்டைக் கடற்கரய் எடுப்பது முறையாகாது. ‘பாரதி விஜயம்’ நூல் வெளிவந்த புதிதில் சிலர் பாராட்டும்போது, அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இப்போது பிரச்சினைக்குப் பிறகு சத்தமே இல்லை. தன் புத்தகம் என்று சொல்லிக்கொள்ளக்கூட தயங்குவார்போல தெரிகிறது” என்றார்.

பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்திருக்கும் இச்சமயத்தில் கடற்கரயிடம் பேசினோம். “ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் இதற்குப் பதில்சொல்வது சரியாக இருக்காது. விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

பாரதியை யாரும் உரிமைகோரிட முடியாது. அதேநேரத்தில், இப்படியான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தர வேண்டியதும் கடற்கரயின் கடமை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆய்வு மேற்கொள்கையில், அதற்கான தகவல்களைச் சுட்டும்போதும், மேற்கோள் காட்டும்போதும் எங்கிருந்து பெறப்பட்டன போன்ற விவரங்களைக் குறிப்பிடுவது உலக அளவிலே ஆய்வுலகுக்கான அடிப்படை விழுமியம். அடுத்தவர் உழைப்பைத் தன்னுடையாக்குவது தமிழகப் பல்கலைக்கழக ஆய்வுகளில் மிக இயல்பானதாகவே ஆகிவிட்டது. இப்போது அது பதிப்புத் துறைக்கும் நீள்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x