Published : 01 Apr 2018 10:51 AM
Last Updated : 01 Apr 2018 10:51 AM

வாழ்க்கையும் போராட்டமும் வேறு வேறல்ல!

மத்தியிலும், மாநிலத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி பெரும் நெருக்கடியில் இருக்கிற சூழலில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். சவாலான சூழலில் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணன். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக் கோரி முதல்வர் வீட்டின் முன் மறியலில் ஈடுபட்டு கைதானவர், அடுத்து குரங்கணி தீ விபத்து நடந்த பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பியவர் ஆவடியில் ஓ.சி.எஃப் தொழிற்சாலை மூடப்படுவதற்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டக் களத்துக்குச் சென்றார். “நமக்குத் தெரிஞ்சது மக்கள் அரசியல்தான். அப்படின்னா களத்துலதானே நிக்கணும்!” என்கிறார்.

 

அரை நூற்றாண்டாக கட்சிப் பணியாற்றிவரும் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்ததே ஒரு சுவாரசியமான வரலாறு. ராணுவ வீரரான தந்தை, பாலகிருஷ்ணனையும் ராணுவத்திலோ காவல் துறையிலோ சேர்க்கவே விரும்பினார். இவரோ, எல்லைக்கு வெளியே இருக்கும் எதிரிகளுக்கு எதிராக அல்ல, உள்நாட்டு ஆதிக்க சக்திகளால் வதைபடும் தொழிலாளர்களுக்காகவும், அப்பாவி மக்களுக்காகவும் போராடத் தீர்மானித்தார்.

அண்ணா மீது ஈர்ப்பு

“1965-ல் இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அறிஞர் அண்ணா மீது எங்களுக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது. அவர் முதல்வரான பிறகு, கீழ்வெண்மணி சம்பவத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிதம்பரத்தில் ஒரு பெரிய தீப்பந்த ஊர்வலம் நடத்தியது. விவசாயிகள் பிரச்சினையில் அக்கட்சியினரின் போராட்டம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

மிக விரைவிலேயே அண்ணா மறைந்துவிட்ட சூழலில், அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. கல்லூரியில் பேராசிரியர்கள் சிலருடனான உரையாடல்கள், வாசிப்பு எனப் படிப்படியாக ஈர்க்கப்பட்ட எனக்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் சரியான தேர்வாகத் தோன்றியது” என்கிறார் பாலகிருஷ்ணன்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கம் சார்பில், கல்லூரியில் மாணவர்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னின்றார். 1972-ல் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். தீவிர தலைக்காயம். அப்போது போடப்பட்ட தையல்கள் இன்றும் அவர் தலையில் இருக்கின்றன. 1973-ல் மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது போராட்டங்களுக்குப் பயந்து எம்.ஏ. சீட் கொடுக்கத் தயங்கியது கல்லூரி நிர்வாகம். அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் சீட் கொடுத்தே ஆக வேண்டிய சூழல். ஆனால், வாய்ப்பு கிடைத்தும், தொடர் போராட்டங்களால் படிப்பைத் தொடர முடியாமல் போனது.

தலைமறைவுக் காலம்!

1975-ல் அவசர நிலைக் காலத்தின்போது, தலைமறைவாக வாழ நேர்ந்தது. “இப்போது போல, அப்போது அதிக ஊடகங்கள் கிடையாது. கடலூர்க்காரனான என்னை சென்னையில் யாருக்கும் தெரியவில்லை. அதனால் பயமின்றி எனது பணிகளைத் தொடர்ந்தேன்” என்று தலைமறைவு வாழ்க்கையை சாதாரணமாக சொல்லிச் சிரிக்கிறார்.

1982-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரானபோது இவருக்கு 32 வயது. 1989-ல் கடலூர் மாவட்டச் செயலாளர் ஆனார். 1992-ல் விசாரணைக் கைதியாக காவல்நிலையத்தில் இருந்த தனது கணவனைக் காண வந்த பத்மினி, காவல் துறையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பத்மினியின் நீதிக்கான போராட்டத்தில் பாலகிருஷ்ணன் முக்கியப் பங்காற்றினார். “பல வருடங்களாக நீடித்த போராட்டத்துக்குப் பணிந்து, கடைசியில் 10 போலீஸ்காரர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டார்கள். பிறகு அவர்களுக்குத் தண்டனை கிடைத்தது” என்கிறார் பாலகிருஷ்ணன்.

2011-ல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “சட்டமன்ற உறுப்பினர் பதவியை மக்கள் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் பணியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். அப்போது வேலையில்லா திண்டாட்டம், தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றோம். அரசாங்கத்தின் கொள்கைக்கு மாற்றாக பல யோசனைகளை சட்டமன்றத்தில் முன்வைத்தோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசு உடமையாக்க வேண்டும் என்று போராடி வெற்றிபெற்றோம். சிதம்பரத்தில் முதல் முறையாக தலித்துகளுக்கான கல்வி நிறுவனத்தை உருவாக்கிய சுவாமி சகஜனந்தாவுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க எங்கள் கோரிக்கைதான் தொடக்கப்புள்ளி!”

கவனம் கோரும் பெரும் பணிகள்

தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவும் சூழலில் அதைச் சரிசெய்வதற்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. “அடுத்துவரும் தேர்தலில் பாஜக-அதிமுகவை வீழ்த்த எது தேவையோ அதைச் செய்வோம். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது, காவிரி மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம்... இவற்றை எதிர்த்து ஒரு பெரிய இயக்கத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறோம். இன்று தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், தாய்மொழிக் கல்வியே இல்லாமல் போய்விடும் சூழல்... இவற்றுக்காக ஒரு வலுமிக்க இயக்கத்தை உருவாக்குவதையும் இளைஞர்களை ஈர்ப்பதையும் அதிமுக்கியமான பணிகளாகக் கருதுகிறோம்” என்கிறார்.

முன்னுதாரண குடும்பம்

பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சி ராணி, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். இவர்களது இரண்டு மகன்களும் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள். இருவரும் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்து இப்போது ஒருவர் வெளிநாட்டிலும் இன்னொருவர் வெளிமாநிலத்திலும் பணியில் இருக்கின்றனர். பாலகிருஷ்ணன் தன் பிள்ளைகளைச் சந்திப்பது ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறைதான். இயக்கமே குடும்பம் என்று மாறிவிட்ட பொதுவுடமைவாதிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x