Published : 13 Jul 2022 08:40 PM
Last Updated : 13 Jul 2022 08:40 PM

‘டைம்’ இதழின் உலகின் சிறந்த 50 இடங்கள் பட்டியலில் கேரளா, அகமதாபாத்

நியூயார்க்: 2022-ம் ஆண்டில் உலகின் ஆகச் சிறந்த 50 இடங்கள் என்று டைம் இதழ் வெளியிட்டுள்ள பட்டியிலில் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் அகமதாபாத் நகரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உலகின் சிறந்த இடங்கள்: டைம் இதழால் வெளியிடப்பட்டும் உலகின் சிறந்த இடங்களுக்கான இந்தப் பட்டியல், உலகெங்கிலும் உள்ள டைம் இதழின் சிறப்பு நிருபர்கள் மற்றும் பங்களிப்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சிறந்த இடங்களின் பட்டியலில், ஐக்கிய அரபு அமிரகத்தின் ராஸ் அல் கைமா, உட்டாவின் பார்க் சிட்டி, சியோல், ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப், ஆர்க்டிக், ஸ்பெயினின் வலென்சியா, பூட்டானின் டிரான்ஸ் பூட்டான் பாதை, சர்வதேச விண்வெளி நிலையம், பொகோடா, ஜாம்பியாவில் உள்ள லோயர் ஜாம்பேசி தேசிய பூங்கா, இஸ்தான்புல் மற்றும் ருவாண்டாவின் கிகாலி போன்றவை இடம் பிடித்துள்ளன.

இந்திய நகரங்கள்:

கேரளா: இந்தியாவிலுள்ள மிக அழகான இடங்களில் கேரளாவும் ஒன்று. கண்கவர் கடற்கரைகள், பசுமையான பேக்வாட்டர்கள், கோயில்கள், அரண்மனைகளுக்காக பிரபலமாக அறியப்படும் கேரளா ''கடவுளின் தேசம்'' எனவும் அழைக்கப்படுகிறது.

ஒரு புதிய தங்கும் அனுபவத்தை தருவதற்காக கேரளா இந்தாண்டு இந்தியாவில் மோட்டர் ஹோம் சுற்றுலாவை ஊக்கப்படுத்தியுள்ளது. இதற்காக அம்மாநிலத்தின் முதல் கேரவேன் பூங்காவான "கேரவேன் மேடோவ்ஸ்" இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலமான வாகமானில் திறக்கப்பட்டுள்ளது என்று டைம் இதழ் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் ஏற்கனவே வெற்றியடைந்துள்ள படகு வீடுகளைப் போல, இந்த கேராவேன்களும் சிறந்த சுற்றுலா அனுபவத்தினைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கேரளாவின் தனித்துவமான கடற்கரை மற்றும் இடங்களை கண்டு அனுபவிக்க தொடங்கி உள்ளனர்.

2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3.8 மில்லியனைத் தொட்டுள்ளது என்றும், கடந்த 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2.2 மில்லியனாக இருந்ததாகவும் கேரளா சுற்றுலாத்துறை கடந்த மாதம் தெரிவித்திருந்தது.


அகமதாபாத்: அகமதாபாத் நகரினைப் பற்றி டைம் இதழ் கூறும்போது, ''யுனஸ்கோவால் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரம். சபர்மதி நதிக்கரையில், 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் காந்தி ஆஸ்ரமம் முதல், 9 நாட்கள் கொண்டாடப்படும் உலகின் நீண்ட நடனத்திருவிழாவான நவராத்திரி வரை பண்டைய அடையாளங்கள் மற்றும் சமகால புதுமைகளையும் ஒருசேரப்பெற்றிருக்கும் இந்த நகரம் கலாச்சாரச் சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா அகமதாபாத் நகரம்.

இது குஜராத் மாநிலத்தின் அறிவியல் நதரமும் கூட. கடந்த ஆண்டு இங்கு மூன்று பெரிய தீம் பார்க்-கள் பொழுதுபோக்கு நிலையங்கள் திறக்கப்பட்டன. அதில் 20 ஏக்கர் அளவில் உள்ளூர் தாவரங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையிலான இயற்கை பூங்கா, செஸ் விளையாடுவதற்கும், யோகா செய்வதற்கும் புதிய இடங்களை உள்ளடக்கியுள்ளது. அங்கு புதிய ரோபோட்டிக்ஸ் கண்டுபிடிப்புகளை கொண்டாடும் வகையில் ஒரு ரோபாட்டிக் கேலரியும் உள்ளது.

மேலும் இந்த அறிவியல் நகரில் இந்தியாவில் மிகப் பெரிய புதிய நீர்வாழ் உயிரினங்களின் பூங்கா உள்ளது. அதில் உலகெங்கிலுமுள்ள நீர்வாழ் உயிரினங்களைப் பற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x